Category Archives: பொது செய்திகள்

கோவிலை திறக்க வலியுறுத்தி ஜூன் 10 – ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை போராட்டம் – மாநிலத் தலைவர் அறிக்கை

08.06.2020
வணக்கம்.
ஆலயங்களை வழிபாட்டிற்கு உடனடியாக திறக்க வேண்டுமென்று வலியுறுத்தி ஜூன் 10 -ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை செய்யும் போராட்டம்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை

ஒரு மிகப்பெரிய, நீண்ட ஊரடங்கு காலத்திற்குப் பின் தற்போது மத்திய, மாநில அரசுகளால் படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், மத்திய அரசாங்கம் ஜூன் எட்டாம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்களை திறக்க அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் பல மாநிலங்களில் ஆலயங்கள் வழிபாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளன.

ஆனால் தமிழகத்தில் திரு, எடப்பாடியார் அரசு மட்டும் வழிபாட்டுத் தலங்களை திறக்காமல் உள்ளது. சமீபத்தில் நடந்த அனைத்து மத பிரதிநிதிகளின் கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று பக்தர்கள் நினைத்தனர். அதுவும் நடக்கவில்லை.

ஆலயங்களைத் திறந்தால் கொரானா பரவிவிடும் என்று அச்சமா? என்று பார்த்தோம். ஆனால் ஆலயங்களைவிட அதிகமாக கொரானா பரவக் காரணமாக இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளுக்கு, பல்வேறு வகையான தொழில்களுக்கு, பல்வேறு வகையான மக்கள் கூடும் இடங்களுக்கு குறிப்பாக டாஸ்மாக் போன்றவற்றிற்கு அரசாங்கம் விலக்கு அளித்திருக்கிறது. அவைகள் செயல்பாட்டுக்கும் வந்திருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் மக்கள் நீண்ட நாட்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்து வெளியில் வரும்பொழுது ஒரு மனத் தெளிவு கிடைக்கின்ற வகையிலே ஆலயங்களை நாடி இறைவனிடம் வேண்டுதல் என்பது இயல்பான ஒரு விஷயம்.

ஆனால் திரு. எடப்பாடியார் அரசு மக்கள் மனத் தெளிவிற்கு வழிவகுக்காமல், வழிபாட்டுக்கு தடைவிதித்து இருக்கின்றது. வழிபாட்டுத் தலங்களை விட வேகமாக பரவ வாய்ப்பு இருக்கும் இடங்களுக்கு எல்லாம் தளர்வுகளை தாராளமாக அளித்துள்ள அரசு ஏன் வழிபாட்டுத்தலங்கள் விஷயத்தில் மட்டும் அடம்பிடிக்கிறது? என்று தெரியவில்லை .

ஒருவேளை திரு.எடப்பாடியார் அரசாங்கம் தமிழகத்திலே கடவுள் மறுப்புக் கொள்கையை அமல்படுத்த வேண்டும், மக்கள் மனதிலே கொஞ்சம் கொஞ்சமாக பக்தி மார்க்கத்தை அகற்றவேண்டும், ஆலயம் செல்லுகின்ற பழக்கத்தை குறைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுகிறதோ? என்ற இந்து முன்னணி சந்தேகிக்கிறது.

கடந்த மே 26 ம் தேதி இந்து முன்னணி சார்பில் ஆலயங்களை திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் மனுக்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன. ஆனால் இவை எதற்கும் திரு.எடப்பாடியார் அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.

இதை கண்டித்து “கோவில்களை திறக்க வேண்டும்” என்ற கோரிக்கையை அரசாங்கத்திற்கு வலிமையாக கொண்டு சேர்க்கும் வகையில் வருகின்ற ஜூன் 10 ம்தேதி புதன்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்கள் முன்பும், பொது மக்களையும் ஒன்றிணைத்து இந்து முன்னணி சார்பில் ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனைப் போராட்டம் நடைபெறும்.

தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. இந்த ஆன்மீக பூமியிலே ஆன்மீகத்தை இழுத்து பூட்ட நினைக்கின்ற எடப்பாடியார் அரசு தவறை உணர்ந்து மனம் திருந்தி வழிபாட்டுத் தலங்களை உடனடியாக திறக்க வேண்டுமென்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

வணக்கம்
தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

மாநிலத் தலைவர் அறிக்கை – ஜனநாயக ரீதியில் முகநூலில் கோரிக்கை பதிவிற்கு இந்துமுன்னணி பொறுப்பாளர் மீது காவல்துறை வழக்கு- இந்துமுன்னணி கடும் கண்டனம்

06.06.2020இராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் அருகே இராதனூர் என்ற கிராமத்தில் கடந்த 31.5.2020 அன்று காளியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், முருகன், காளியம்மன், நாகநாதர் ஆகிய சிலைகளை சமூக விரோதிகள் உடைத்துள்ளனர்.அந்த ஊர் பெரியவர்கள் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் கே.இராமமூர்த்தி அவர்களை தொடர்பு கொண்டு விசயத்தை கூறவும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு போன் மூலம் சிலைகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது.அதன் பின்னர் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலர் ராமமூர்த்தி தனது முகநூல் பக்கத்தில் இராதனூரில் சிலைகளை உடைத்த பயங்கரவாதிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2.6. 2020 அன்று பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில் எந்த மதத்தை குறிப்பிட்டோ, வேறு யாரையும் குறிப்பிட்டு பதிவிடவில்லை. மேலும் தனது பதிவில் சட்டவிரோதமாக எதையும் குறிப்பிடவில்லை.இந்நிலையில் அவர் மீது மேற்படி முகநூல் பதிவுக்காக கடந்த 3.6..2020 தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்து முன்னணி இந்துக்களுக்காக வாதாட போராட பரிந்து பேசக் கூடிய அமைப்பு. அதன்படி இந்து கோவிலை உடைத்த பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டத்துக்கு உட்பட்ட வகையில் ஜனநாயக ரீதியில் முகநூலில் கோரிக்கையாக பதிவுசெய்து இருப்பதை வைத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் இந்துக்களுக்காக போராடக் கூடியவர்கள் மீது அடக்குமுறையை செய்வதுபோல் உள்ளது. அதனால் மேற்படி வழக்கை திரும்பப் பெற வேண்டும். இதுபோன்று தமிழகமெங்கும் இந்துக்களுக்காக போராடுபவர்கள் மீது அடக்குமுறை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பொய்யான வழக்குகளை பதிவு செய்வதை காவல்துறை கைவிட வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தாயகப் பணியில்காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்மாநிலத் தலைவர்

வழிபாட்டு தலம் திறப்பு சம்பந்தமான அரசின் சிறப்பு கூட்டத்திற்கு இந்து சமய மடாதிபதிகள் , சான்றோர்களை அழைக்க வேண்டும் – இந்துமுன்னணி மாநிலத் தலைவர்

02.06.2020
பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
தமிழ்நாடு அரசுதலைமைச் செயலகம்
சென்னை
அன்புடையீர் வணக்கம்:
பொருள்: வழிபாட்டு தலம் திறப்பு சம்பந்தமான சிறப்பு கூட்டத்திற்கு இந்து சமய மடாதிபதிகள் மற்றும் சான்றோர்களை அழைக்க வேண்டி – கோரிக்கை
கொரோனா நோயின் காரணமாக கடந்த 70 நாட்களாக தமிழகத்திலுள்ள திருக்கோவில்கள் பக்தர்களுக்கு வழிபாடு செய்ய முடியாமல் உள்ளது.
சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நான்காம் கட்ட ஊரடங்கு வழிகாட்டுதலில் மாநில அரசுகளே வழிபாட்டுத் தலங்கள் திறக்க முடிவு எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.
அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மற்றும் மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோயில்களை திறக்க அந்தந்த மாநில அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
ஆனால், தமிழக அரசாங்கம் தடை தொடரும் என்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நாளை ௦3.௦6.2020 மாலை 4 .45 க்கு தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் வழிபாட்டுத்தலம் திறப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கின்றது என்று அறிகின்றோம்.
இந்த கூட்டத்தில் இந்து மத சம்பந்தமாக முடிவெடுப்பதற்காக, ஆலோசனை சொல்வதற்கு தமிழகத்தில் முன்னோடி சைவ வைணவ மடாதிபதிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து கூட்டத்தில் கலந்து கொள்ள வைக்க வேண்டும். ஏதோ பெயருக்கு அடையாளம் தெரியாத இந்து மத பிரதிநிதி என்று யாரையோ அழைத்து கூட்டம் நடத்த கூடாது.
மேலும் இந்த கூட்டத்தில் இந்து முன்னணியும் கலந்து கொள்ள தயாராக இருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
வருகிற எட்டாம் தேதி முதல் திருக்கோவில் திறக்க ஆவண செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி வணக்கம்
தாயகப் பணிகளில்
காடேஸ்வராசி.சுப்பிரமணிம்
மாநிலத்தலைவர்
இந்து முன்னணி தமிழ்நாடு

பா.ஜ.க மூத்ததலைவர் திரு. K.N. லக்ஷ்மணன் அவர்களுக்கு அஞ்சலி – இந்துமுன்னணி மாநிலத் தலைவர்

02.06.2020

பா. ஜ.க.மூத்த தலைவர் திரு. K.N. லக்ஷ்மணன் அவர்களுக்கு அஞ்சலி

மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

பா.ஜ.கமுன்னாள் மாநில தலைவர், முன்னாள் மயிலை சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.என்.இலஷ்மணன் அவர்கள் ஜூன் 1 இரவு 09.05 மணியளவில் பாரத தாயின் திருவடியை அடைந்தார்.

அக்டோபர் 20,1930 பிறந்தவர். 1944 ம் ஆண்டு RSS ல் தன்னை இணைத்துக் கொண்டார்.

1957 ல் BMS நிறுவனர் ஸ்ரீ தந்தோபந்த் தெங்கடி தலைமையில் சேலத்தில் ஜனசங்கம் துவங்கபட்டபொது அதில் இணைந்தவர்.1980 ல் ஜனசங்கம் பாரதீய ஜனதா கட்சி ஆனது. 1984 முதல் 1989 வரை ; 1996 முதல் 2000 வரை மாநில தலைவராகஇரண்டு முறை இருந்தார்.

2001 முதல் 2006 வரை மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.2006 முதல் இன்று வரை தேசியப் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

நூற்றுக்கணக்கான போராட்டங்கள் சிறைவாசமாக மூன்று முதல் நான்கு ஆண்டுகள் அனுபவித்தவர்.

1967 ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஹிந்தி தடைசெய்யப்பட்டது.நமது குழந்தைகள் ஹிந்தி படிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்வயம்சேவகர்கள் அனைவரும் விருப்பம் தெரிவிக்க டில்லிக்கு சென்று C.B.S.E பாடத்திட்டத்தில் பள்ளியை துவங்க முக்கிய காரணமாக இருந்தவர்..

1969 ல் செவ்வாய்பேட்டை சுமார் 35 குழந்தைகள் வைத்து துவங்க ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளிகள் இன்று 24 ஊர்களில் 10 ஆயரம் குழந்தைகளுடன் செயல்பட்டு வருகிறது.

கல்லாக இருந்த தமிழகத்தில் RSS குடும்ப இயக்கங்கள் ஊன்றி தழைத்திட காரணமாக இருந்தவர்.

அன்னாரது ஆத்மா நற்கதி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். அவரது இழப்பு கட்சிக்கும், குடும்பத்திற்கும் பேரிழப்பு. அவர்கலுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

தமிழகத்தில் கோவில்களை திறக்கவேண்டி தமிழக முதல்வர் அவர்களுக்கு மாநிலத் தலைவர் கடிதம்

காடேஸ்வரா சி.சுப்ரமணியம்
மாநிலத் தலைவர்- இந்துமுன்னணி

01.06.2020

பெறுநர்:

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

சென்னை

அன்புடையீர் வணக்கம் ,

பொருள்: தமிழகத்தில் கோவில்களை திறக்கவேண்டி கோரிக்கை

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரொனா கொடிய நோயை தமிழக அரசு கடுமையாக போராடி கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது.நான்கு கட்டங்களாக மத்திய அரசும் , மாநில அரசும் ஊரடங்கை அமுல்படுத்தி தற்போது படிப்படியாக சில தளர்வுகள் கொடுத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆவன செய்து கொண்டிருக்கிறார்கள்.

நமது தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. நாயன்மார்கள், ஆழ்வார்கள் வாழ்ந்த பூமி. தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மக்களும் தெய்வபக்தி கொண்டவர்கள். தமிழகத்தில் எல்லா விதமான குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில்களை மையமாக வைத்தே இருக்கின்றது. இந்த காலகட்டத்தில் கடந்த 60 நாட்களாக கோவில்களிள் மக்கள் வழிபாடு செய்ய முடியாமல் இருக்கின்றனர். இந்த கொரோனாவால் பல்வேறு பொருளாதார பாதிப்புகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பவர்களுக்கு மனநிம்மதி கொடுக்கும் இடம் கோவில்கள்.

இந்த ஐந்தாவது கட்ட த்தில் மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளில் கோயில்கள் திறக்கலாம் என்று கூறியுள்ளது . இதனடிப்படையில் கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களில் கோயிலைத் திறக்க அந்தந்த அரசுகள் முடிவு செய்து இருக்கின்றனர்.

ஆனால் தமிழகத்தில் கோவில்களை திறக்க அனுமதிக்கப்படவில்லை. மற்ற மத வழிபாட்டு தலங்களை விட இந்து கோவில்களில் சுலபமாக சமூக இடைவெளி கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வழிபாடு செய்ய வசதி உள்ளது. ஆகவே மக்களின் உள்ளக் குமுறல்களை கொட்டுவதற்கான இட மான கோயில்களை உடனடியாக வழிபாட்டுக்கு திறந்துவிட இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்

நன்றி

தாயகப் பணிகளில்

காடேஸ்வரா சி.சுப்ரமணியம்

மாநிலத் தலைவர்

தலைமைச் செயலாளருக்கு கடிதம்- மதுரையில் 144 தடையை மீறி 600 இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகை நடந்தது சட்டவிரோதம்

அனுப்புநர்
V.P.ஜெயக்குமார்,
2/131, பிள்ளையார் கோயில் தெரு,
பரமன்குறிச்சி,
தூத்துக்குடி மாவட்டம்
9486482380

பெறுநர்
உயர்திரு.தலைமைச் செயலாளர் அவர்கள்
தமிழ்நாடு

ஐயா

இரண்டு தினங்களுக்கு முன் மதுரை மாவட்டம் SS காலனி அருகில் உள்ள அன்சாரி நகர் 4வது மற்றும் 5 வது தெருவில் இருக்கும் இஸ்லாமியர்கள் 144 தடை உத்தரவை மீறி சுமார் 600 க்கு மேற்பட்டோர் ஒன்றுகூடி ரோட்டில் தொழுகை நடத்திக் இருக்கின்றனர். தொழுகை நடத்துவதற்கு முன்னேற்பாடாக சாலை முழுவதும் தொழுகை நடத்த சிகப்பு கம்பளம் விரித்து டியூப்லைட் மற்றும் இதர சீரியல் லைட்டிங் வைத்து அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.
காவல் நிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் பகுதியில் இத்தனை ஏற்பாடுகளுடன் தொழுகை நடப்பது நிச்சயம் காவல்துறையினருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை 144 தடை உத்தரவு இந்துக்களுக்கு மட்டும்தான் என்று மதுரை மாநகர காவல்துறையினர் முடிவுசெய்து விட்டார்களோ! என்ற ஐயம் மதுரை மக்களிடையே எழுந்துள்ளது. ஒரு வேளை மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களும் மாநகர காவல்துறை கமிஷனர் அவர்களும் நீங்கள் தொழுகை நடத்துங்கள் நாங்கள் ஒரு வளக்குப் போட்டுக் கொள்கிறோம் என்று மறைமுகமாக பேசி முடிவெடுத்து கொண்டார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது!
உலகமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு போராடி வரும் சூழ்நிலையில் அரசு உயர் அதிகாரிகளான மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களும் மதுரை மாநகர கமிஷனர் அவர்களும் இவ்வாறு கவனக்குறைவாக நடந்துகொள்வது மிகவும் வருந்தத்தக்க செயலாகும்.

குறிப்பு : நேற்று மதுரை உயர்நீதிமன்றத்தில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை செய்வதற்கு அனுமதி வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் இன்று (22/05/2020) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

என்றும் தாயக பணியில்
V.P.ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணைத் தலைவர்

நகல்
1) மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள்

2) மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தனிப்பிரிவு

முதல்வருக்கு கடிதம்- கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர்

23.05.2020

பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
தமிழக அரசு- சென்னை
அன்புடையீர் வணக்கம்,
பொருள் : கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நடவடிக்கை கோரி – விண்ணப்பம்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயால் நாட்டில் பல்வேறு மக்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு இன்னல்கள் சந்தித்து வருகின்றார்கள்.
மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். தமிழகத்தில் காலங்காலமாக கோவில்களை மையமாக வைத்து பல்வேறு குடும்பங்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றார்கள்.
கடந்த 60 நாட்களாக ஊரடங்கு காரணத்தினால் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மூடப்பட்டுள்ளது. கோவில் திருவிழாக்கள் எதுவும் நடைபெறாத காரணத்தினால் திருவிழாக்கள், கோவில் கொடை சமயத்தில் மூன்று நாட்கள் ஐந்து நாட்கள், ஒரு வாரம், பத்து நாள் என அந்தந்த ஊர்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கரகாட்டம், ஒயிலாட்டம், குச்சிப்பிடி, கும்மியாட்டம், இசைக் கச்சேரி, நாடகம், வில்லுப்பாட்டு பொய்க்கால் குதிரை, பறையாட்டம், காவடியாட்டம், நாட்டுக்கூத்து கிராமிய நடன நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சிகள் மூலமாக பல்வேறு கலைஞர்கள் (தப்பாட்டம், மேளம் அடிப்பவர்கள், நாதஸ்வரம் வாசிப்பவர்கள், சின்ன சின்ன கலைகள்) மூலம் அன்றாட வருமானம் பார்த்து வந்தார்கள்.
கடந்த இரண்டு மாத காலமாக இந்த திருவிழாக்கள் நடைபெறாத காரணத்தினால் இந்த கலைகளை நம்பி வாழ்க்கை நடத்தி வந்த லட்சக்கணக்கான கிராமியக் கலைஞர்கள் அன்றாட உணவுக்கே பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள். இவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் இல்லை.
இந்த லட்சக்கணக்கான கிராமிய கலைஞர்களுக்கு அரசு உடனடியாக தலா ₹5000, அரிசி-பருப்பு, அத்தியாவசியப் பொருட்களும் உடனே வழங்கி கிராமியக் கலைஞர்களின் சிரமங்களைப் போக்க உதவி செய்ய வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுகொள்கிறேன் .
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநில தலைவர்
இந்து முன்னணி

உடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் கோவில்களைத் திறக்க வேண்டும். வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26 ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம்- மாநிலத் தலைவர் அறிவிப்பு

22.05.2020

பத்திரிகை அறிக்கை..

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர் இந்துமுன்னணி

தமிழகத்தில் உடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் கோவில்களைத் திறக்க வேண்டும். இல்லையெனில் வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26 ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெறும்

கோவில்கள் மனிதனுக்கு நிம்மதியும், நம்பிக்கையும் கொடுப்பதாகும் மனிதர்கள் கடவுள் நம்பிக்கையை வைத்து வாழ்க்கையையே நடத்துகிறார்கள். மனிதனை எல்லா கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுவது கடவுள் நம்பிக்கைதான். ஆகவேதான் கோவில்கள் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

கொரோனா பயத்தில் இருந்தும் மக்களுக்கு நிச்சயம் வழிபாடு நல்ல நிம்மதியை கொடுக்கும். இந்துக்களுடைய வழிபாடு கூட்டு வழிபாடு கிடையாது. எனவே கோவில்களில் இந்துக்களை கட்டுப்படுத்துவது எளிதானது.

தமிழகத்தில் பெருங் கூட்டம் கூடும் கோவில்கள் (திருச்செந்தூர் ,பழனி ,திருவண்ணாமலை ,மதுரை ), மிதமான கூட்டம் கூடும் கோவில்கள், தனியார் நிர்வகிக்கும் கோவில்கள் , அரசு கட்டுப்பாட்டில் உள்ள கிராமக்கோவில்கள், நகரங்களில் உள்ள சிறுசிறு கோவில்கள், கிராமத்தில் உள்ள சிறிய தனியார் கோவில்கள், குலதெய்வ கோவில்கள் என கோவில்கள் பல வகையில் உள்ளன.

பெரிய கோவில்கள் தவிர மற்ற கோவில்கள் கூட்டம் வருவது மிகவும் குறைவு .கிராமங்களில் உள்ள கோவில்களில் நாள் முழுவதும் 10 பேர் கூட வராத கோவில்கள் உள்ளன. சில தனியார் கோவில்கள் நிறைய தன்னார்வ கொண்டவர்களுடன் கட்டுப்பாடாக நடத்தப்படுகிறது.

அதனடிப்படையில்
கிராம ப்புற கோவில்களையும், கூட்டம் வராத நகர்புற கோவில்களையும் உடனே திறக்கலாம் . மிகப்பெரும் கோவில்களுக்கு சமுக கட்டுபாடுடன், சமுக இடைவெளியை பின்பற்றி கோவில்கள் திறக்கலாம். சலூன் கடைகள் திறப்பதில் கடைபிடிக்கும் வழிமுறைகள் அரசு பின்பற்றலாம்.
உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கலாம்.

எனவே கோவில்கள் விஷயத்தில் அரசு ஒரு நல்ல பொருத்தமான முடிவை உடனே எடுக்கும் என்று பக்தர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

எனவே தமிழக அரசு கோவில்களின் நிலைமையையும் அங்கு வரும் கூட்டத்தின் தன்மையையும் பொருத்து ஒரு நல்ல முடிவு எடுத்து கோவில்கள் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்துமுன்னணி கோருகிறது. மேலும் மக்கள் மன உளைச்சல்களிலிருந்து விடுபட கோவில்கள் அவசியம்.

ஆகவே கோவில்களை அரசு உடனடியாக திறக்காவிட்டால் வழிபடும் உரிமைகளை மீட்க வருகின்ற மே 26 ம் தேதி அனைத்து கோவில்களின் வாசலிலும் கற்பூரம் ஏற்றி ,தோப்புக்கரணம் போட்டு வழிபாடு நடத்தும் போராட்டத்தை இந்துமுன்னணி முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

முதலமைச்சருக்கு கடிதம் -ஊரடங்கு கட்டுப்பாட்டில் ஆட்டோ இயங்க தக்க முன்னெச்சரிக்கைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் – இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம்

இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம்
இந்து முன்னணி பேரியக்கத்துடன் இணைக்கப்பட்டது.
59, ஐயா முதலித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 600 002. தொலைபேசி : 044 28457676, 9841769852

த. மனோகரன்
மாநில தலைவர்

மாண்புமிகு தமிழக முதல்வர்
உயர்திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,
சென்னை.

மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,வணக்கம்.

பொருள்: ஊரடங்கு கட்டுப்பாட்டில் ஆட்டோ இயங்க அனுமதி அளிப்பது வேண்டி.

தங்களின் தலைமையிலான தமிழக அரசும், மத்திய அரசும் கொரானா நோய் தொற்றின் பாதிப்பை குறைக்க பலவிதமான வழிமுறைகளை கையாண்டதின் விளைவாக, தமிழகத்திலும், பாரதத்திலும் கொரானா நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதற்கு, இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்கள் தலைமையிலான அரசு, பலவிதமான நிவாரண உதவிகள் செய்து வந்தாலும், பல லட்சம் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம், தொடரும் ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை தாங்கள் அறிவீர்கள். தாங்கள் அளித்த நிவாரண உதவிகள் கிடைத்தாலும், ஆட்டோ பராமரிப்பு, அதற்குரிய தவணை தொகை மற்றும் குடும்ப செலவினங்கள் ஆகியன தொழிலாளர்களை பெரும் கவலை கொள்ள வைக்கிறது.

எனவே, ஆட்டோ இயங்குவதற்கு தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். நோய் தொற்றை கட்டுப்படுத்தும் அரசின் வழிகாட்டுதலுக்கு நாங்கள் என்றும் துணை நிற்போம் என உறுதி கூறுகிறோம்.
நன்றி,

என்றும் தேசியப் பணியில்
த. மனோகரன்
மாநிலத் தலைவர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை காக்க தமிழக அரசு முன்வரவேண்டும்- இந்து இளைஞர் முன்னணி

16.05.2020
அனுப்புநர்:
C. P. சண்முகம்
மாநில ஒருங்கிணைப்பாளர்
இந்து இளைஞர் முன்னணி
+919150359693
பெறுநர்:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
தலைமைச் செயலகம்’சென்னை
பொருள்:இந்து இளைஞர் முன்னணி சார்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை காக்க
அரசாங்கத்திடம் சில கோரிக்கைகள்
மாணவர்களின் அழுத்தத்தைப்போக்கும் வகையில் ஆன்லைன் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்
இந்த ஆண்டுக்கான மாணவர்களின் கல்விக்கட்டணத்தையும், பயணச்செலவையும் அரசே ஏற்க வேண்டும்.
தனியார் பள்ளி கல்லூரிகளில் 50% கட்டணம் மட்டுமே வாங்கப்பட வேண்டும்.
இறுதியாண்டு முடிக்கும் அனைத்து துறை கல்லூரி மாணவர்களுக்கும் தகுந்த வேலை வாய்ப்பு கிடைக்க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க வழிமுறைகளை கண்டறிய வேண்டும
வருகின்ற தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக பள்ளி கல்லூரி மாணவர்களை தயார்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
தனியார் பள்ளிகளைப்போல அரசுப்பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படவேண்டும்.
மாணவர்கள்
வீட்டிலிருந்தபடியே ஆசிரியர்களுடன் கலந்துரையாட தகுந்த ஏற்பாடுகளை அரசு செய்யவேண்டும்.
அரியர்” வைத்துள்ள மாணவர்கள் அரியரை முடிக்கும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
வங்கிக்கடன் பெற்றுள்ள மாணவர்களின் இந்த ஆண்டுக்கான தவணைத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இந்த ஆண்டின் தேர்வுகளில் கடினமான கேள்விகளை தவிர்க்கவேண்டும்.
ஒருசில மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.
தற்போது நிலுவையிலுள்ள உதவித்தொகையை அரசு உடனே வழங்கிட வேண்டும்.
மற்றவர்களுக்கு வழங்குவதைப்போன்று மாணவர்களுக்கும் கொரோனாகால நிவாரணமாக நிதியுதவி வழங்கவேண்டும்.
நன்றி
நகல்
1.மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு.
2.உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு.
தாயகப்பணியில்
C.P.சண்முகம்
இந்து இளைஞர் முன்னணி