Monthly Archives: February 2018

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை

பத்திரிகை அறிக்கை

காஞ்சி காமகோடி மடத்தின் 69வது பீடாதிபதியாக எழுந்தருளி ஆன்மிக பேரொளியை கொடுத்து வந்த ஷ்ரீ ஜயேந்திரர் சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார். அவரது நினைவை போற்றுகிறோம்..

காஞ்சி காமகோடி மடத்தின் 69வது பீடாதிபதியாக எழுந்தருளி ஆன்மிக பேரொளியை கொடுத்து வந்த ஷ்ரீ ஜயேந்திரர் சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார். அவரது நினைவை போற்றுகிறோம்..
இருள்நீக்கியில் தோன்றிய காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியாக எழுந்தருளிய ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தமிழகத்தில் நாத்திகம், மதமாற்றம் போன்ற காரிருளை அகற்றிட இந்து சமுதாயத்தை ஒருங்கிணைத்து ஆன்மிக வழியில் பெரும்பங்காற்றியவர் அவர்.

இந்து முன்னணி இயக்கத்தின் ஆரம்ப காலம் முதலே உறுதுணையாக இருந்து, நமக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் என எண்ணி பார்க்கிறோம். திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் ஒரு லட்சம் பேரை முஸ்லீமாக மதமாற்ற செய்ய முயன்றபோதும், கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காட்டில் கிறிஸ்தவர்கள் செய்த கலவரத்தின் போதும் இந்து சமுதாயத்தில் நம்பிக்கையை ஏற்படுத்திட இந்து முன்னணி ஏற்பாடு செய்த பாதயாத்திரையில் பங்கேற்று சிறப்பான பணியை செய்தார். வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருப்பணியின் போது நேரிடையாக எழுந்தருளி அருளாசி வழங்கியவர்.

பல தாழ்த்தப்பட்ட காலனி பகுதியில் கோயில்கள் அமைவதற்கு பேருதவி செய்தவர். ஏழ்மை நிலையில் உள்ள இந்துக்கள் பசிப்பிணி போக்கவும், நோய் நீங்கவும், கல்வியில் மேம்படவும் அருந்தொண்டாற்றினார்.

ஆன்மீகப்பணியின் மூலம் எல்லா சமுதாயத்தினரின் அன்பையும், மதிப்பையும் பெற்று உலக அளவில் போற்றப்பட்டவராக திகழ்ந்தார்.

அயோத்தியில் ஷ்ரீராமர் ஆலயம் அமைந்திட எல்லா தரப்பு மக்களையும் சந்தித்து பேசி, நல்லுறவு காண அரும்பாடுபட்டார்.

சுவாமிகள் மீது அவதூறு பரப்பி, அவமானப்படுத்திட, பொய் வழக்கு போட்ட போது, இந்து முன்னணி இயக்கமானது தொடர் போராட்டங்களை நடத்தி காஞ்சி மடத்தின் பாரம்பரியத்தை காத்திட களத்தில் இறங்கி போராடியது.

சென்ற ஆண்டு சுவாமிகளின் ஜெயந்தி நாளன்றும் இந்து முன்னணி சார்பில் ஒரு குழு நேரில் அவ்விழாவில் கலந்துகொண்டு ஆசி பெற்றது.
இன்றளவும் இந்து முன்னணியின் வளர்ச்சிப் பணியை பாராட்டி, அருளாசி வழங்கி வந்தவர் காஞ்சி பெரியவர் அவர்கள்.

இன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஷ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மகாசமாதி அடைந்துவிட்டார். அவரது இழப்பு ஆன்மிக உலகிலும், பாரத தேசத்திற்கும் பேரிழிப்பாகும்.

அவரது அருளாசியோடு இந்து முன்னணி, இந்து சமுதாய மக்கள் பணியில் என்றென்றும் பாடுபடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சுவாமிகளுக்கு, இந்து முன்னணி சார்பில் இறுதி மரியாதை செய்து, வணங்குகிறோம்.

இந்துமுன்னணி முதல் மாநில தலைவர் ஐயா தாணுலிங்க நாடார் பிறந்த நாள் பிப்ரவரி 17 – சமுதாய சமர்பண தின விழா

இந்து முன்னணியின் முதல் தலைவர்
தாணுலிங்க நாடார் அவர்களின் வாழ்கைத் துளிகள்…

17-2-1915 அன்று கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி கிராமத்தில் பிறந்தார்.
இளமைப் பருவத்திலேயே இந்து உணர்வு மிக்கவராகத் திகழ்ந்தமையால் 1938 ஆம் ஆண்டு கேரள இந்து மிஷன் உபத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1943 ஆம் ஆண்டு காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ஐயா அவர்கள் பின்னர் அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1944 ஆம் ஆண்டு இராணுவ அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சட்டப்படிப்பை முடித்த ஐயா அவர்கள் 1946ஆம் ஆண்டு நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் சேர்ந்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்தார்.

1946 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்கத்தில் உறுப்பினரானார்.

1947 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்க ஐவர் போராட்டகுழுவில் ஒருவரானார்.

1948 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்ற உறுப்பினராக தென்தேடுக்கபபட்டு, மூன்றாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

1951 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த போது ஒரு பிரிவின் தலைவரானார்.

1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உபத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்றத்தில் பனம்பள்ளி கோவிந்தமேனன் முதல்வராக இருந்த போது, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக மூன்று ஆண்டுகள் பணி செய்தார். அந்த வேளையில் நாகர்கோவில் நகர் மன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார்.

1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறுமாதம் சிறை தண்டனை பெற்றார்.

1957 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றினார்.

1962 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.

1964 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகதேர்வு செய்யப்பட்டு ஐந்தாண்டு காலம் பணியாற்றினார்.

1971 ஆம் ஆண்டு குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் நிலவிய கிறிஸ்தவ மதவெறி அதிகாரப்போக்கைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதுடன், 14-2-1982 வரை பொது வாழ்விலிருந்தும் விலகி இருந்தார்.

14-3-1982 அன்று மண்டைக்காடு மதகலவரம் தொடர்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கூட்டிய சமாதானக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்.

16-3-1982 அன்று கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணியின் தலைவராக பொறுப்பேற்றார்.

1982 ஆம் ஆண்டு இறுதியில் தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவராக மாநில அமைப்பாளர் வீரத்துறவி இராமகோபாலன் அவர்களால் நியமிக்கப்பட்டார்.

13-2-1983 அன்று நாகர்கோவில் நடைபெற்ற இந்து ஒற்றுமை எழுச்சி மாநாட்டிற்கும் ஊர்வலத்திற்கும் அரசு விதித்த தடையை மீறிஊர்வலம் சென்று கைதாகி பாளையங்கோட்டை சிறையில் 27 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.

1984 ஆம் ஆண்டு இந்துக்களின் உரிமை காக்க மண்டைகாடு கடலில் குளிப்பதற்கு ஊர்வலமாக சென்றார்.

1984 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்துக்களுக்கு புத்துணர்ச்சி அளித்தார்.

13-7-1987 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மூஞ்சிறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் பைபிள் கொடுத்த செயலைக் கண்டித்தும் தலைமை ஆசிரியர் மீதுநடவடிக்கை எடுக்கவும் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். மறுநாள் தலைமைஆசிரியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

2-10-1987 அன்று நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விஜயதசமி விழாவில் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றும் பெருமை பெற்றார்.

1988 ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் ஹெட்கோவார் நூற்றாண்டு விழா செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

3-10-1988 அன்று திருநெல்வேலி மாவட்டம் ஏரலில் நடந்த RSS ஸ்டாதாபகர் டாக்டர் ஜி அவர்களின் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் சித்தரகுப்தன் எனது ஏட்டை புரட்டிக் கொண்டிருக்கிறான். எனவே இளைஞர்களே தேசப் பணியாற்ற வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தவாறு மேடையிலேயே காலமானார்.

அவரது பிறந்த நாளை இந்துமுன்னணி பேரியக்கம் சமுதாய சமர்பண தின விழாவாக அனைத்து கிளைக்கமிட்டி களிலும் நடத்தி வருகிறது.

தமிழக நலனுக்காகப் பிரார்த்தனை செய்வோம் – இராம கோபாலன் பத்திரிகை அறிக்கை

தை வெள்ளி அன்று மாலை வீடுதோறும் விளக்கேற்றி
தமிழக நலனுக்காகப் பிரார்த்தனை செய்வோம்..

திருச்செந்தூர் சுற்று மண்டபம் இடிந்து விழுந்து ஒரு பெண் காலமானதும், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் தீ விபத்து ஏற்பட்டதும் பக்தர்களின் மனங்களை பெரிய அளவில் பாதித்துள்ளது.

இறைவன் வாழும் இல்லங்களான கோயில்களில் ஏற்பட்டுள்ள இதுபோன்ற அசம்பாவிதங்களால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதே ஆன்மிக பெரியோர்களின் கருத்தாக இருக்கிறது.

கடந்த காலங்களில் சுனாமி, வெள்ளம், புயல் பாதிப்புகளினால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டதை நாம் மறந்திருக்க முடியாது.

அதுபோல், தமிழகம் பாதிக்கப்படாமல் இருக்க, இது போன்ற அசந்தர்பங்களில் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே சிறந்த வழியாகும்.

எனவே, வருகின்ற, தை வெள்ளியான பிப்ரவரி 9ஆம் தேதி மாலை அனைத்து இந்துக்களின் வீட்டின் வாசல்களிலும் கோலமிட்டு, வீட்டின் முன்பு தீபம் ஏற்றி அன்னை மீனாட்சியையும், திருச்செந்தூர் முருகப்பெருமானையும் தமிழக நலனுக்கு வேண்டுவோம்.

இந்த நற்செயலுக்கு, மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு, தமிழகம் பாதுகாப்பாக இருப்பதற்கு எல்லா இந்து ஆன்மிக அமைப்புகளும், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.

கூட்டுப் பிரார்த்தனை, அனைவரும் ஒரே சமயத்தில் பிரார்த்தனை செய்வது நல்ல பலனையும், மக்களிடையே நேர்மறை சிந்தனையையும் ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்ததே.

தமிழக நலனுக்காக எல்லோர் வீடுகளிலும் 9-2-2018 வெள்ளி அன்று மாலை வீட்டின் வாசலில் கோலமிட்டு, தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஆலயத்தை சீரழிக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாட்டிற்கு உதாரணம் மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை

இராம கோபாலன்

நிறுவன அமைப்பாளர்

இந்து முன்னணி, தமிழ்நாடு

59, ஐயா முதலித் தெரு,

சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.

தொலைபேசி: 044-28457676

3-2-2018

பத்திரிகை அறிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து இந்த சமய அறநிலையத்துறையின் நிர்வாக சீர்கேட்டிற்கு எடுத்துக்காட்டாகும். மீனாட்சியின் திருக்கோயில் யுனஸ்கோவால் உலக கலை பொக்கிஷமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதை புலனாய்வுத் துறை அடிக்கடி எச்சரித்து வருகிறது. அப்படியிருக்கையில் கோயில் வழியில் கடைகளை வைத்து வியாபாரத்தலமாக மாற்றியது எந்த வகையில் நியாயம்? தீ விபத்து நடந்தால் எப்படி தடுப்பது என்பதற்குக்கூட எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை என்பதை பார்க்கும்போது, இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் சீர்கேட்டினை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்துக்களின் ஆலயச் சொத்துக்களை பராமரிக்க, பாதுகாக்கத்தான் இந்து சமய அறநிலையத்துறை நிறுவப்பட்டது. ஆனால், எந்த நோக்கத்திற்காக இது துவக்கப்பட்டதாக தமிழக அரசாங்கம் கூறியதோ அந்த நோக்கமே இன்று சிதைவு பட்டுவிட்டது. கோயில் நிலங்கள், வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து எந்த தகவலும் இந்து சமய அறநிலையத்துறையிடம் இல்லை. மேலும் இத்துறை எடுத்துக்கொண்டதற்குப் பிறகு பல கோயில்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது எந்த நடவடிக்கையும் அரசோ, இந்து சமய அறநிலையத்துறையோ தடுக்கவில்லை. கோயில் குளங்கள், மேலும் நூற்றுக்கணக்கான வருட கோயில்கள் கூட ஆக்கிரமிப்பு, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இடிக்க உத்திரவிடும்போது, அவற்றைப் பாதுகாக்கும் செயலிலும் அத்துறை அதிகாரிகள் ஈடுபடுவதில்லை.

காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் உற்சவர் சிலை செய்த விஷயம் முதல் ஏராளமான ஊழல், சிலை, ஆபரணங்கள் திருட்டுகள், முறைகேடுகள் முதலியவற்றில் கோயிலை பாதுகாக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே முறைகேடில் ஈடுபட்டு வழக்குகளை சந்திக்கும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். எனவே, இந்து சமய அறநிலையத்துறையை உடனடியாக கலைக்க தமிழக அரசு உத்திரவிட வேண்டும். கோயில்களை, கோயில் சொத்துக்களை நிர்வகிக்க தனித்து இயங்கும் வாரியத்தை ஏற்படுத்த தமிழக அரசு முன் வரவேண்டும்.

இந்து கோயில்கள், இந்து சமுதாயத்தின் சொத்து, ஆன்மீக கேந்திரங்கள். கோயில் அழிந்தால், நமது பாரம்பரியம், பழக்க வழக்கம், வரலாறு, கலை நுணுக்கம், கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு, இலக்கியம் எல்லாம் அழிந்துபோகும். எனவே, கோயில்களைக் காக்க இந்து சமுதாயம் போராட வேண்டிய நேரமிது. இந்து சமய அறநிலையத்துறையை ஆலயத்தை விட்டு வெளியேற்றி, நமது கோயில்களை காக்க இந்துக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்.

நமது கோயில், நமது உரிமை, இதனை மீட்டெடுக்க வேண்டியது ஒவ்வொரு இந்துவின் கடமை. மதச்சார்பற்ற அரசுக்கு கோயிலில் என்ன வேலை? மசூதி சொத்து முஸ்லீம்களிடமும், சர்ச் சொத்து கிறிஸ்தவர்களிடம் இருக்கிறது. அவற்றினை மேம்படுத்த, பராமரிக்க அரசு பொது நிதியிலிருந்து கோடிக்கணக்கில் நிதியை தருகிறது. ஆனால், இந்துகளின் கோயில் பணத்தில் தனக்கு வருவாயை பெருக்கிக்கொள்வதுடன், கொள்ளையடிக்கவும் துணைபோகிறது! வரும் வருவாயில் பங்கு போடுகிறது தமிழக அரசு. அதற்கு ஏதுவாக அரசியல்வாதிகளை அறங்காவலர்களாக நியமிக்கிறது!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தைத் தடுக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்யாத கோயில் நிர்வாகத்தினர் மீது தக்க நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். கோயில் பாதுகாப்பு கருதி இனி எந்த கோயில் உள்ளும் எந்தவிதமான வியாபார கடைகள் அமைப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. கோயில் நிர்வாகத்திலிருந்து, தமிழக அரசு வெளியேற வேண்டும் என்றும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)