Monthly Archives: August 2019

இராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும்

இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
26-8-2019
தேசிய தலைவர்களை மதிப்பதும், சமூக ஒற்றுமை ஏற்படுத்த வேண்டியதும் அனைவரின் பொறுப்பு..
நேற்று வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையை சில சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தியுள்ளதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும். அனைவரும் அனைத்து தேசத் தலைவர்களையும் மதிக்கும் பண்பு வளர வேண்டும்.
இப்படி சமூகத்தில் பதட்டத்தில் ஏற்படுத்திய சமூக விரோதிகளை காவல்துறை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை காரணமாக்கி இந்து சமூகத்தில் பிளவை ஏற்படுத்தி, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளுவதை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
சமூகத்தில் நம்பிக்கையை அரசும், அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் ஏற்படுத்த வேண்டும். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பை வளர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.
சமூக விரோதிகளை தனிமைப்படுத்துவதன் மூலம் இதற்கு தீர்வு காண முடியும். சாதி சண்டைக்குப் பின்னால் உள்ள சதியை கண்டுபிடித்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமீபத்தில் இலங்கை மூலம் பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியிருக்கிறார்கள் என உளவுத்துறை தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வரும் வேளையில், இதபோன்ற சம்பவம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நடக்கும் சதியோ என்ற சந்தேகம் எழுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, இந்த சந்தர்ப்பத்தில் எடுக்கும் நடவடிக்கை முன் உதாரணமாக இருக்க தமிழக அரசு தனிக் கவனம் கொடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
நிறுவன அமைப்பாளர்

வீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .

14-8-2019

பத்திரிகை அறிக்கை

தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது.

அந்த சுற்றறிக்கையில்(RC No.30311/M/S1/2019, dt. 31.7.2019), சாதிய அடையாளமாக அணிந்து வரும் கயிறு, காப்பு சாதிய அடையாளமாக இருக்கிறது. இதனை ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர்கள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பார்த்தாக கூறப்பட்டதாக தெரிவிக்கிறது. இதனை ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர்கள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பார்த்தாக கூறப்பட்டதாக தெரிவிக்கிறது.

மேலும், விளையாட்டு துறையில் வைக்கப்படும் நெற்றி திலகம், கைகளில், தலையில் அணியும் ரிப்பன் போன்றவற்றில் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு முதலாவை மீது நடவடிக்கை எடுக்கக் குறிப்பிடுகிறது. உண்மையில் அவ்வாறு இருக்கும் இடங்களில் நல்லிணக்கத்தோடு அதனை கையாள கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துவதை வரவேற்கிறோம்.

ஆனால், பள்ளி திறந்து நடந்து வரும் வேளையில் இப்போது இதனை வெளியிட்டிருப்பதன் மூலம் சில சந்தேகங்கள் எழுகின்றன.

1. ஆடி மாதம் காப்புக் கட்டி விரதம் இருக்கும் மாதமாகும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்த வழக்கம் இருக்கிறது. இதனை தடுத்து, அடுத்த தலைமுறை, இந்து சமய பக்தியில் இணைந்துவிடக்கூடாது என்பதற்காகவா?

2. வருகின்ற ஆகஸ்ட் 15 முதல் சகோதரத்துவத்தை கொண்டாடும் வகையில் கட்டப்படும் ராக்கி எனும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை தடுக்கும் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதா இந்த சுற்றறிக்கை..?

3. பள்ளிகளில் கிறிஸ்தவ மாணவ, மாணவிகள் சிலுவை அணிந்தும், முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப், மாணவர்கள் குல்லாய் அணிந்து வருகிறார்கள். இதுபோன்றவை, மாணவர்களிடம் வேறுபாடு இல்லாமல் இருக்க செய்யப்படும் சீருடைக்கு எதிரானது இல்லையா? இது மதத்தின் அடையாளமாகவில்லையா? இதற்கு கல்வித்துறையின் பதில் என்ன?

4. சில அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் கையில் கட்டியிருக்கும் சாமி கயிறு எனப்படும், காசி, திருப்பதி கயிறுகளை பள்ளி தலைமையாசிரியர் அவர்களே வலுக்கட்டாயமாக வெட்டியிருக்கிறார்கள். இது, மாணவர்களிடம் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

5. பள்ளி மாணவர்கள் பொது வீதியில் அடித்துக்கொள்கிறார்கள். இதற்கு சாதியோ, மதமோ காரணமாக இருப்பதில்லை. அவர்களின் வெறுப்புணர்வு, நம்பிக்கையின்மையும், ஈகோவும் காரணமாக அமைகின்றன. அதனைத் தடுக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?

6. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, பான்பாராக் போன்ற பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. அது மட்டுமல்ல, பல அரசு பள்ளி மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகியும் வருகிறார்கள். இதற்கு என்ன தீர்வை அரசு அதிகாரிகள் கண்டுள்ளனர்?!

7. பள்ளிகளில் மதத்தை திணிக்கும் உள்நோக்கோடு இலவசமாக பைபிள் கொடுக்கப்படுவதை இந்து முன்னணி தடுத்து பிடித்துக்கொடுத்துள்ளது. அதிகாரிகள், எங்களது புகார் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?

9. தமிழக அரசு நடத்தும் கல்லூரி, பள்ளி விடுதிகளில் மாணவர்கள் அல்லாத பல நூறு பேர், மாணவர்கள் போர்வையில் தங்கியுள்ளதாகவும், அவர்கள் நகர்புற நக்சல்கள் என்பதாகவும், அவர்கள் மாணவர்களிடையே மூளை சலவை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பட்டியலை சரிபார்த்து, முறைகேடாக தங்கியுள்ளவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. நமது பாரம்பரியமான நெற்றியில் திலகமிட்டு வரவேற்பதை தடுக்கும் பொருட்டு, அதனை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைக்கும் இந்த சுற்றறிக்கை ஆபத்தானது என எச்சரிக்கிறோம்.

எனவே, மாணவர்களிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமதர்ம பார்வையை ஆசிரியர்கள் ஏற்படுத்த வலியுறுத்தவும். ஒழுக்கம், கட்டுப்பாடு, பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்த ஆசிரியர்கள், பெற்றோர், தன்னார்வு தொண்டு நிறுவனங்களை இணைத்து கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தி நல்லதொரு மாற்றத்தை கல்வித்துறையில் ஏற்படுத்திட கேட்டுக்கொள்கிறோம்.

இதுபோன்ற சுற்றறிக்கை மதமாற்றும் வேலையை கல்வித்துறையில் செய்து வரும் மதத் தரகர்கள் பயன்படுத்தி, மத வெறுப்பை ஏற்படுத்துவார்கள் என்பதை தங்களின் கவனத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே, இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

நிறுவன அமைப்பாளர்

வீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்..

6-8-2019
இந்து முன்னணி ஆரம்ப காலம் முதலே வலியுறுத்தி வரும் 12 அம்ச கோரிக்கைகளில், காஷ்மீர் தனி அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை நீக்க வேண்டும் என்பதும் ஒன்று. காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு பாரத தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்திருக்கிறது, ஆகவே இதனை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்திருக்கிறது.
நாடு சுதந்திரம் அடைந்தபோது, பாரதம் வெட்டிப் பிளக்கப்பட்டு, ரத்த ஆறு பெருக்கெடுத்தது. அதனால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தவன். காஷ்மீர் இந்துக்கள் விரட்டி அடிக்கப்பட்ட பாதிப்பை உணர்ந்தவன் என்பதால், மத்திய அரசு தற்போது எடுத்துள்ள இந்த முடிவை நான் மனதார பாராட்டுகின்றேன், வரவேற்கிறேன்.
அப்போதைய உள்துறை அமைச்சரான சர்தார் பட்டேல், நாடு முழுவதும் இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்தார். காஷ்மீரை இணைப்பதில், பிரதமராக இருந்த நேரு கையாண்டு, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தார். காஷ்மீர் மாநிலத்திற்கு தனிக்கொடி, தனி சட்டம், சலுகை என்பதையேல்லாம் அவர் ஒப்புக்கொண்டார். அங்கு செல்வதற்கு இந்தியர்கள் பர்மிட் வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தது. காஷ்மீர் பெண்கள் இந்தியர்களை திருமணம் செய்துகொண்டால் சொத்தில் உரிமை கோர முடியாது, அதுவே, பாகிஸ்தானியரை திருமணம் செய்துகொண்டால் உரிமை உண்டு என்பதுபோன்ற பல குளறுபடிகள் இருந்தன. அதே சமயம், பாரதம், காஷ்மீர் வளர்ச்சிக்கு அள்ளிக் கொடுத்த நிதிகளை எல்லாம் காஷ்மீரை ஆண்ட மூன்று குடும்பங்களும், பயங்கரவாத குழுக்களும் சுரண்டிக் கொழுத்தன. இந்துக்கள் அதிகமாக வாழும் ஜம்முவோ, புத்த மதத்தினர் அதிகம் வாழும் லடாக் பகுதியோ முன்னேறவேயில்லை. பயங்கரவாதத்தால் காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய தொழிலான சுற்றுலா ஒட்டுமொத்தமாக முடங்கிப்போனது.
காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து, இந்தியர்கள் அங்கு செல்வதற்குக்கூட பர்மிட் (அனுமதி) வாங்க வேண்டும் என்பதை எதிர்த்து, பாரதிய ஜனதாக கட்சியின்(அப்போது பாரதிய ஜனசங்கம் என்று பெயர்) நிறுவனத் தலைவர் திரு. சியாம்பிரசாத் முகர்ஜி தடையை மீறி போராட்டம் நடத்தி சிறை சென்றார். சிறையில் மர்மமான முறையில் அவர் உயிரிழந்தார். அவரது உயிர்தியாகத்திற்கு பலன் இப்போது தான் கிடைத்துள்ளது.
தனி நாடு போல காஷ்மீர் இருந்ததால், இந்தியாவிற்கு எதிரான, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் கடந்த 72 ஆண்டுகளாக அங்கு பெரும் நாசத்தை ஏற்படுத்தி வந்தன.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் 370வது பிரிவை நீக்கியிருக்கிறது மத்திய அரசு. மேலும், ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசின் நேரடி ஆளுமையின் கீழ் வருவதற்கு மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு இந்திய குடியரசு தலைவர் அவர்கள் ஒப்புதல் தந்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி, மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா ஆகியோருக்கு இந்து முன்னணி மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறது.
இந்த விஷயத்தில் திமுக மற்றும் வைகோ போன்றவர்கள் மக்களை திசைத்திருப்ப தேசவிரோதமாக பேசுவதைக் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக கட்சிகள் தவிர, நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதிலிருந்து காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் செய்வது வெற்று அரசியல் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
இனி காஷ்மீர் மாநிலத்தில் அமைதி நிலவும், அது வளர்ச்சியை நோக்கி செல்லும் மாநிலமாக, பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்ட மாநிலமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை இந்திய மக்கள் அனைவரும் வரவேற்போம். நல்லதொரு துவக்கமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு, இந்த நடவடிக்கை அமையட்டும்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
நிறுவன அமைப்பாளர்