இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
28-2-2017
மத சம்பிரதாயத்தில் தலையீட நீதிமன்றத்திற்கோ, அரசிற்கோ அதிகாரம் இல்லை..
பட்டாசு தொழிற்சாலையை நசிந்துபோக செய்துவிடாதீர்கள்!
பட்டாசு மற்றும் வெடி வெடிப்பது என்பது இந்து மதத்தின் சம்பிரதாயம். தீபாவளி, கோயில் திருவிழா போன்றவற்றில் தொன்று தொட்டு வரும் பாரம்பரியம். இது இந்துக்களின் வழிபாட்டில் ஒரு பகுதியாக தென் தமிழகத்திலும், வட தமிழகத்தில் மனிதர்களின் இறுதி ஊர்வலத்திலும் எந்நாளும் நிகழ்த்தப்படுகிறது.
வறட்சி மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் பட்டாசு தொழிற்சாலைகள் மூலமாகத் தான் லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பையும், வருமானத்தை வருடம் முழுவதும் பெறுகிறார்கள். இதற்கு மத்திய, மாநில அரசுகள் எந்த உதவியும் செய்வதில்லை, அவர்களும் எதிர்பார்ப்பது இல்லை. ஆனால், இந்தத் தொழிலால் வரி மூலம் அரசாங்கத்திற்கும் ஏராளமான வருவாய் கிடைத்து வருகிறது.
முதலில் தீபாவளிக்கு கட்டுப்பாடு விதித்த நீதிமன்றம், தற்போது பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு கடைகளின் லைசென்சுக்கு புதிய சட்டத்திருத்தம் அறிவிப்பதன் மூலம் ஒட்டு மொத்த கடைகளும், வியாபாரத்தையும் சீரழித்துவிடும் என அஞ்சுகிறோம். இதன் மூலம் உள்நாட்டு சுதேசி வியாபாரமானது துடைத்தெறியப்பட்டு, சீன பட்டாசு வருகை பெருகிவிடும் என்பது யதார்த்தமான உண்மை.
புதிய வரைவு சட்டமானது பல லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கிவிடும். மக்களின் வழிபாட்டு உரிமையில் தலையீடுவது அரசியல் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கை. இதனை அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த நடவடிக்கையால் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
ஆபத்து எதில் தான் இல்லை, பாதுகாப்பிற்குத் தகுந்த வழிமுறைகளை வலியுறுத்தலாம். சில இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால், அங்குள்ள பாதுகாப்பு குறைபாடுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கலாம். அதைவிட்டு ஒட்டுமொத்த வியாபாரத்தையும் முடக்குவது என்பது எந்தவிதத்தில் நியாயம். இதன் மூலம் இந்துக்களின் வழிபாட்டு உரிமையை தடுப்பதையும் இந்து முன்னணி கடுமையாக எதிர்த்து ஜனநாயக வழியில் மக்களை ஒருங்கிணைத்து அறப்போராட்டம் நடத்தும் என எச்சரிக்கிறோம்.
நீதிமன்றங்கள், மக்களின் உணர்வுகளையும், அரசியல் சாசனம் தரும் வழிபாட்டு சுதந்திரத்தை மதித்தும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இழப்பது ஆபத்தானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.
சுதேசி பட்டாசு தொழிலை காத்திட சிவகாசியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இந்து முன்னணி ஆதரித்தது. தமிழக அரசு, புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள `வரைவு சட்டத்திருத்த விதி’யை ரத்து செய்து, பட்டாசு வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் கருத்துகளைக் கேட்டு, நடைமுறைக்கு ஏற்ற சட்ட முன்வரைவை கொண்டு வர வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)