Monthly Archives: September 2020

வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் – இயக்கப்பணியே நாம் அவருக்கு செய்யும் வீர அஞ்சலி. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை

30.09.2020

இந்துமுன்னணி பேரியக்கத்தின் நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சளித்தொல்லை காரணமாக சென்னை ராமச்சந்திரமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல் பரிசோதனையில் கொரானா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. இரண்டாவதாக எடுத்த பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவரை நோய் தாக்கத்திலிருந்து மீட்க கடந்த இரு தினங்களாக மருத்துவர்கள் கடுமையாக போராடினர்.

இயல்பிலேயே போர்க் குணமிக்கவர் கோபால் ஜி. 1984 ல் பயங்கரவாதிகளின் தாக்குதலில் மறு அவதாரம் எடுத்தவர்.

அந்த மனோதிடம் அவரை நிச்சயம் மீட்டு விடும் என்று நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இந்துமுன்னணி , RSS உள்ளிட்ட அனைத்து இந்து இயக்கங்களின் ஊழியர்களும் எதிர்பார்த்தனர்.

ஆனால் இம்முறை அவரது வயது (94) காரணமாக சிகிச்சைகள் பலனளிக்கவில்லை.

வீரத்துறவி இராம கோபாலன் 19-9-1927 ல் தஞ்சை மாவட்டம் சீர்காழியில் பிறந்தவர்.

1945ல் RSS – ல் சேர்ந்தார்.

டிப்ளமோ , ஏ.எம்.ஐ.ஈ. படித்து முடித்த பிறகு மின்சாரத் துறை வேலையை உதறிவிட்டு முழுநேர RSS தொண்டரானார் (பிரச்சாரக்).

RSS இயக்கத்தின் பிராந்த பிரச்சாரக் (மாநில அமைப்பாளர்) என்ற பொறுப்பு வரை படிப்படியாக தமிழகம் முழுவது RSS வேலைகள் வளரக் காரணமாக இருந்தவர்.

1948 ல் RSS தடை செய்யப்பட்ட போதும் , 1975 எமர்ஜென்சி நேரத்திலும் தமிழகத்தில் RSS பேரியக்கத்தை வழிநடத்தியவர்.

தமிழகத்தில் நிலவிய அசாதாரண இந்து விரோத சூழ்நிலையை கருத்தில் கொண்டு 1980 ம் ஆண்டு RSS ன் வழிகாட்டுதலில் இராம.கோபாலன் உருவாக்கிய இயக்கம் தான் இந்து முன்னணி .

இந்து முன்னணி வளர்ச்சிக்காக இராம கோபாலன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். தமிழகத்தில் அவர் கால் படாத ஊர்களே கிடையாது.

1984- ல் மதுரை ரயில் நிலையத்தில் இவர் மீது கொடூரத் தாக்குதல் நடந்தது. இதில் இவரது கழுத்திலும் தலையிலும் பலத்த வெட்டு. தழும்பை மறைக்க அன்றிலிருந்து காவித் தொப்பியணிய ஆரம் பித்தார் .

ஆனால் இவை எல்லாம் அவரது தேசப் பணியை முடக்கவில்லை. பல மடங்கு உற்சாகத்துடன் இந்துமுன்னணி பேரியக்க கிளைகளை விதைத்தார்.

இன்று தமிழகம் முழுவதும் ஆல்போல் தழைத்து; அருகு போல இந்துமுன்னணி வேரோடியிருப்பதற்கு காரணம் கோபால் ஜி தான்.

அவர் வேறு, இயக்கம் வேறு அல்ல. இந்துமுன்னணி தான் கோபால் ஜி; கோபால் ஜி தான் இந்துமுன்னணி.

அவரைப் போலவே செயல்திறம் மிக்க , எதிர்பார்ப்பற்ற , தேசபக்தி கொண்ட எண்ணற்ற மாவீரர்களை, ஊழியர்களைக் கொண்ட இயக்கமாக இந்துமுன்னணி வளர்ந்திருக்கிறது.

தேசத்திற்காக, தர்மத்திற்காக தனது வாழ்வையே அர்பணமாக்கிக் கொண்டவர் கோபால் ஜி .

தனக்கென ஒரு வாழ்க்கை என்ற ஒன்று அவரிடத்தில் இல்லை. இயக்கமே அவரது வீடு. தொண்டர்களே அவரது உறவினர்கள் .

இத்தகைய மாபெரும் மகான் இன்று இல்லை. அவரது வாழ்வே நமக்கு பாதை.
இயக்கப்பணியே நாம் அவருக்கு செய்யும் வீர அஞ்சலி.

அவரவர் பகுதிகளில் வீர அஞ்சலி, மௌன அஞ்சலி நிகழ்ச்சி நடத்திடுவோம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

திரை இசையில் சாதனை படைத்த திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் மறைவுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது – வீரத்துறவி இராம.கோபாலன்

25.09.2020

பத்திரிகை அறிக்கை

திரை இசையில் சாதனை படைத்த திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் மறைவுக்கு

இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது..

திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. தனது வாழ்நாளில் திரைப்பட பாடல்கள், பக்தி இன்னிசை பாடல்கள் மூலம் மக்களின் மனங்களில் என்றும் வாழ்பவர் எஸ்.பி.பி.

திருஅண்ணாமலையாரை போற்றி அவர் பாடிய பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவியது. அதனை கேட்காத தமிழ் உள்ளங்களே இல்லை எனக் கூறலாம்.

பல விருதுகளை பெற்ற எஸ்.பி.பி. அவர்கள் 42 ஆயிரம் பாடல்கள் பாடி என்றும் மக்களின் உள்ளங்களில் வாழ்கிறார்.

எஸ்.பி.பி. உடல்நிலை பாதிக்கப்பட்டபோது திரை உலகம் மட்டுமல்லாது அனைத்து மக்களும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். இதன் மூலம் அவர் மீது மக்கள் அனைவரும் வைத்திருந்த அன்பு வெளிப்பட்டது.

அன்னாரது மறைவு இசை உலகிற்கு ஈடு செய்யமுடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம்.

நன்றி,

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்,

(இராம கோபாலன்)

நிறுவன அமைப்பாளர்

புரட்டாசி சனிக்கிழமை – தரிசனத்திற்கு விடாமல் கோவிலை பூட்டும் திட்டமா? மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை

12.09.2020கடந்த ஐந்து மாதங்களாக உலகம் முழுவதும் பரவி வருகின்ற கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் முழுவதும் திருக்கோயில்கள் அனைத்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு திறந்து விடப்படவில்லை.இந்த நிலையில் கடந்த வாரம் முதல் அனைத்து கோயில்களும் பக்தர்கள் வழிபாட்டிற்கு திறந்து விடப்பட்டது. அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் வரிசையாக நின்று சமூக இடைவெளியுடன் வழிபட்டு வருகின்றார்கள்.இந்த சூழ்நிலையில் தமிழ் மாதமான புரட்டாசி மாதம் வருகின்றது. இந்த புரட்டாசி மாதம் வைணவ சமயத்தின் சிறப்புமிக்க மாதம், இந்த புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமை விசேஷமானது. இந்நாளில் பெருமாளை வணங்குவது நன்மை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.இந்த புரட்டாசி சனிக்கிழமை பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்கு, அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுக்கலாம் என்று அரசு கூறியிருக்கிறது.ஆனால் சில மாவட்டங்களில் சில ஆட்சியாளர்கள் இந்த புரட்டாசி சனிக்கிழமை ஆலயத்தை மூடுவதற்காக முயற்சி செய்வதாக தகவல் வருகின்றது. இந்த விசேஷ காலகட்டத்தில் கொரோனா பிடியிலிருந்து மக்கள் மனநிம்மதி பெற ஆலய தரிசனம் சிறந்தது என பக்தர்கள் எண்ணுகின்றார்கள்.ஆகவே, உடனடியாக தமிழக அரசு ஏற்கனவே உள்ளது போல அனைத்து சனிக்கிழமைகளிலும், அனைத்து வைணவத் திருத்தலங்களிலும் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆவண செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.வணக்கம் தாயகப் பணியில்காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

மாணவர்கள் எதிர்காலம் கருதி கட்டணங்களில் சலுகைகள் தரவேண்டும் இந்து இளைஞர் முன்னணி கோரிக்கை – ஒருங்கிணைப்பாளர் திரு.C.P. சண்முகம் பத்திரிக்கை அறிக்கை

01.09.2020

கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பாராட்டுக்குரியது.மாணவர்கள் சார்பில் இந்து இளைஞர் முன்னணி இதனை வரவேற்கிறது.

அதே வேளையில் அரியர் தேர்விற்கு கட்டணம் செலுத்த முடியாமல் விண்ணப்பிக்காது விட்டுவிட்ட மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என இந்து இளைஞர் முன்னணி சார்பில் கோருகிறோம்.

மேலும் கல்லூரியில் புதிதாக முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கான நுழைவுக்கட்டணத்தை எளிய தவணை முறைகளில் செலுத்த வழிவகை செய்யவேண்டும்.

கொரோனா பாதிப்பால் வருமானம் இழந்து கட்டணம் செலுத்த இயலாத மூன்றாமாண்டு அல்லது இறுதி பருவத் தேர்வு எழுதுகின்ற தொழில்நுட்ப / மருத்துவ கல்லூரி மாணவர்களின் பருவத்தேர்வு கட்டணங்களை அரசே ஏற்று அவர்களுக்கு சலுகை காட்ட முன்வரவேண்டும் எனவும் இந்து இளைஞர் உன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

வணக்கம்.

தாயகப் பணிகளில்

CP. சண்முகம்
ஒருங்கிணைப்பாளர்
இந்து இளைஞர் முன்னணி