16-5-2019
பத்திரிகை அறிக்கை
மத விரோதத்தைத் தூண்ட, மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்த
தேர்தல் நடத்தை விதி அனுமதிக்கிறதா?!
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தபின் சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்க தேர்தல் அதிகாரியே நேரடியாக நடவடிக்கை எடுக்கலாம், அல்லது சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம் என்பது நடைமுறை. கடந்த மாதம் திராவிட கழக தலைவர் வீரமணி, இந்துக்களின் தெய்வமான கிருஷ்ணரை தரக்குறைவாக பொது தளத்தில் பேசினார், பேட்டி அளித்தார். இது குறித்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் தேர்தல் ஆணையரை நேரடியாக சந்தித்து புகார் மனு அளித்தனர். ஆனால், வீரமணி தேர்தல் பிரச்சாரம் செய்வதை தடுக்கக்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, ஆணையரிடம் புகார் கொடுத்த பின்னரும் தொலைக்காட்சி/சமூக ஊடகங்களில் பேட்டி அளித்த வீரமணி அப்படித்தான் பேசுவேன், என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் என்றார். மற்ற மாநிலங்களில் முதல்வர், அமைச்சர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் யார் தேர்தல் பிரச்சாரத்தில் தவறுதலாக ஒரு வார்த்தை பேசினாலும், அவர்கள் பிரச்சாரத்திற்கு தேர்தல் அதிகாரிகள் தடைவிதிக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனையானது.
அதன் தொடர்ச்சியாக, திரைப்பட நடிகரும், மக்கள் நீதி மையம் என்ற கட்சித் தலைவருமாக இருக்கும் கமலஹாசன் அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில், சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து, காந்தியை கொன்ற கோட்சே தான் அவர் எனப் பேசினார். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டித்து 30 காவல்நிலையங்களில் புகார் கொடுத்துள்ளது. பல இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளது.
இதுவரை நாம் கொடுத்துள்ள புகார்கள் மீது தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கை என்ன? அப்படியென்றால், தேர்தலில் மத துவேஷத்தை தூண்டும்படி பேசினால் நடவடிக்கை எடுக்காமல் பொது அமைதி கெடுவதை தேர்தல் கமிஷனும், காவல்துறையும் வேடிக்கை பார்க்க நினைக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
மகாத்மா காந்திஜி, கோட்சே ஆகிய இருவரும் இந்து தான். இதில் எங்கிருந்து மத தீவிரவாதம் வருகிறது? ராஜீவ் காந்தியைக் கொன்றது எந்த தீவிரவாதம்? திருபுவனம் ராமலிங்கத்தை கொன்றது எந்த தீவிரவாதம்? இந்து இயக்க தலைவர்களை வெட்டிக் கொன்றார்களே அது எந்த தீவிரவாதம்? இதையெல்லாம் கமலஹாசன் இதுவரை ஏன் பேசவில்லை?
கமலஹாசன் மக்களை திசைத்திருப்ப மத பிரிவனையை ஏற்படுத்தி தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள இப்படி பேசுகிறார். இது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானது. இதுபோல் மற்றவர்களும் பேச ஆரம்பித்தால், தேர்தல் கமிஷனும், காவல்துறையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா? என்பதே நமது கேள்வி.
நேற்றும், மதுரை திருப்பரங்குன்றத்தில் பேசிய கமலஹாசன் தனது கருத்தை நியாயப்படுத்தி பேசியிருக்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வழியில் போராடிய இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத பிரச்சாரத்தை காவல்துறையும், தேர்தல் கமிஷனும் வேடிக்கை பார்க்கும் என்றால், மக்கள் ஜனநாயக ரீதியில் போராடுவதைத் தவிர வேறு வழி என்ன? மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தேர்தல் கமிஷன், கமலஹாசன், வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
இச்செய்தியினை தங்கள் பத்திரிகையின் அனைத்துப் பதிப்புகளிலும் வெளியிட வேண்டுகிறோம்.