இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
2-8-2018
பத்திரிகை அறிக்கை
திரு. பொன். மாணிக்கவேல், ஐ.ஜி. அவர்களை, சென்னை உயர்நீதி மன்றம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்குத் தலைமைக்கு நியமித்து, முழுமையான விசாரணை மேற்கொள்ளவும், அவருக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கிடவும் அறிவுறுத்தியிருந்தது.
அதன் பிறகு, பொன் மாணிக்கவேல் அவர்களின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்தன. இதுவரை 1204 சுவாமி சிலைகள் திருடு போனது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் 56 சிலைகள் கண்டெடுக்கப்பட்டநிலையில் இவை எந்த கோயில் சிலைகள் என்பதைகூட உறுதி செய்ய முடியாத நிலையில் கோயில் நிர்வாகம் உள்ளது. காரணம் சிலைகள் காணமல்போனபோது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்ற கேள்வி எழும் என்ற பயம் காரணமாகவே நிர்வாகம் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், புதிதாக செய்யப்பட்டுள்ள பஞ்சலோக திருமேனிகளில் சுமார் 7000ஆம் திருமேனிகள் போலியானவை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்கள், கூடுதல் ஆணையர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய மரகதலிங்கங்கள் காணாமல் போயிருக்கின்றன.
இப்படி தோண்ட தோண்ட பூதாகாரமாக எழும் முறைகேடுகள், ஊழல்கள் ஆகியன மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் அவர்கள் மீது பக்தர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு பொன் மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லை, எனவே, சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற உயர்நீதி மன்றத்தில் மனு செய்துள்ளது.
விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றாலோ, திறம்பட கையாளவில்லை என்றாலோ சி.பி.ஐ. விசாரணை கேட்கலாம். இந்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் விரைவாக வெளிவந்துகொண்டுள்ள நிலையில், வழக்கை நீர்த்துப்போகவும், இழுத்தடிக்கவும், திசைதிருப்பவும் சி.பி.ஐ. விசாரணையை தமிழக அரசு கேட்கிறது என்பதை பாமரனும் புரிந்துகொள்ள முடியும்.
தமிழக எதிர்க்கட்சியான திமுக, இதனைக் கண்டிக்க முன் வரவில்லை. காரணம், இந்தக் குற்றச் செயல்கள் திமுக தலைமையிலான அரசு இருந்தபோதும் நடைபெற்றது வெளிச்சத்திற்கு வர இருக்கிறது என்பதாலேயே அக்கட்சி மௌனம் சாதிக்கிறது.
தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறீர்கள். இவ்வழக்கு சரியான திசையில் போய் கொண்டிருப்பதை, இவ்விசாரணையை முடக்கவோ, தொய்வு அடையவோ செய்தால், மக்கள் தங்கள் மீதுதான நம்பிக்கை இழப்பார்கள். எனவே, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரும் மனுவை திரும்பப் பெற கேட்டுக்கொள்கிறோம்.
இறைவன் திருமேனி செய்ததில் நடைபெற்ற முறைகேட்டிற்காக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டபோது, இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் சங்கம் அலுவலகத்திற்கு உள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தியது. இப்போது இவ்வழக்கை நீர்த்துபோக செய்ய தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணை கேட்பதை இச்சங்கம் வரவேற்றுள்ளது. இதிலிருந்தே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இம்முறைகேட்டில் ஈடுபட்டு இந்து ஆலயங்களை சீரழித்தது என்பதை ஒப்புக்கொள்வதுபோல் இருக்கிறது.
இதனால் தான், இந்து முன்னணி, உலக அளவில் ஊழல், முறைகேட்டில் முதலிடத்தில் இருப்பது இந்து சமய அறநிலையத்துறை என்றும், அத்துறையை ஆலயத்தைவிட்டு வெளியேற்றி, இந்து கோயில்களை இந்துக்களே நிர்வகிக்கத் தனித்து இயங்கும் வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கோருகிறது.
தமிழக அரசு சிலை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோருவதை ஏற்க முடியாது. இந்தக் கோரிக்கையை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கக்கூடாது என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. தொடர்ந்து பொன் மாணிக்கவேல் அவர்கள் விசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனைப் பெற்றுத்தந்திட வேண்டும். களவாடப்பட்ட அனைத்து இறைவன் திருமேனிகளும் கண்டுபிடித்து மீட்கப்பட வேண்டும்.
இந்தப் புனிதமான திருப்பணிக்கு திரு.பொன். மாணிக்கவேல் அவர்களுக்கு இந்து முன்னணி துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திரு. பொன் மாணிக்கவேல் அவர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து, இந்த விசாரணை முழுமையாக நிறைவேற அரசும், நீதிமன்றமும் ஆவண செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
துணிச்சலுடனும், திறமையுடனும் செயல்பட்டு வரும் திரு. பொன். மாணிக்க வேல் அவர்களுக்கு ஆன்மிக பக்தர்கள் அனைவரும் தார்மீக ஆதரவை நல்கிட வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
நன்றி,
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)