Tag Archives: இராம.கோபாலன்

வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் – இயக்கப்பணியே நாம் அவருக்கு செய்யும் வீர அஞ்சலி. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை

30.09.2020

இந்துமுன்னணி பேரியக்கத்தின் நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சளித்தொல்லை காரணமாக சென்னை ராமச்சந்திரமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல் பரிசோதனையில் கொரானா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. இரண்டாவதாக எடுத்த பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவரை நோய் தாக்கத்திலிருந்து மீட்க கடந்த இரு தினங்களாக மருத்துவர்கள் கடுமையாக போராடினர்.

இயல்பிலேயே போர்க் குணமிக்கவர் கோபால் ஜி. 1984 ல் பயங்கரவாதிகளின் தாக்குதலில் மறு அவதாரம் எடுத்தவர்.

அந்த மனோதிடம் அவரை நிச்சயம் மீட்டு விடும் என்று நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இந்துமுன்னணி , RSS உள்ளிட்ட அனைத்து இந்து இயக்கங்களின் ஊழியர்களும் எதிர்பார்த்தனர்.

ஆனால் இம்முறை அவரது வயது (94) காரணமாக சிகிச்சைகள் பலனளிக்கவில்லை.

வீரத்துறவி இராம கோபாலன் 19-9-1927 ல் தஞ்சை மாவட்டம் சீர்காழியில் பிறந்தவர்.

1945ல் RSS – ல் சேர்ந்தார்.

டிப்ளமோ , ஏ.எம்.ஐ.ஈ. படித்து முடித்த பிறகு மின்சாரத் துறை வேலையை உதறிவிட்டு முழுநேர RSS தொண்டரானார் (பிரச்சாரக்).

RSS இயக்கத்தின் பிராந்த பிரச்சாரக் (மாநில அமைப்பாளர்) என்ற பொறுப்பு வரை படிப்படியாக தமிழகம் முழுவது RSS வேலைகள் வளரக் காரணமாக இருந்தவர்.

1948 ல் RSS தடை செய்யப்பட்ட போதும் , 1975 எமர்ஜென்சி நேரத்திலும் தமிழகத்தில் RSS பேரியக்கத்தை வழிநடத்தியவர்.

தமிழகத்தில் நிலவிய அசாதாரண இந்து விரோத சூழ்நிலையை கருத்தில் கொண்டு 1980 ம் ஆண்டு RSS ன் வழிகாட்டுதலில் இராம.கோபாலன் உருவாக்கிய இயக்கம் தான் இந்து முன்னணி .

இந்து முன்னணி வளர்ச்சிக்காக இராம கோபாலன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். தமிழகத்தில் அவர் கால் படாத ஊர்களே கிடையாது.

1984- ல் மதுரை ரயில் நிலையத்தில் இவர் மீது கொடூரத் தாக்குதல் நடந்தது. இதில் இவரது கழுத்திலும் தலையிலும் பலத்த வெட்டு. தழும்பை மறைக்க அன்றிலிருந்து காவித் தொப்பியணிய ஆரம் பித்தார் .

ஆனால் இவை எல்லாம் அவரது தேசப் பணியை முடக்கவில்லை. பல மடங்கு உற்சாகத்துடன் இந்துமுன்னணி பேரியக்க கிளைகளை விதைத்தார்.

இன்று தமிழகம் முழுவதும் ஆல்போல் தழைத்து; அருகு போல இந்துமுன்னணி வேரோடியிருப்பதற்கு காரணம் கோபால் ஜி தான்.

அவர் வேறு, இயக்கம் வேறு அல்ல. இந்துமுன்னணி தான் கோபால் ஜி; கோபால் ஜி தான் இந்துமுன்னணி.

அவரைப் போலவே செயல்திறம் மிக்க , எதிர்பார்ப்பற்ற , தேசபக்தி கொண்ட எண்ணற்ற மாவீரர்களை, ஊழியர்களைக் கொண்ட இயக்கமாக இந்துமுன்னணி வளர்ந்திருக்கிறது.

தேசத்திற்காக, தர்மத்திற்காக தனது வாழ்வையே அர்பணமாக்கிக் கொண்டவர் கோபால் ஜி .

தனக்கென ஒரு வாழ்க்கை என்ற ஒன்று அவரிடத்தில் இல்லை. இயக்கமே அவரது வீடு. தொண்டர்களே அவரது உறவினர்கள் .

இத்தகைய மாபெரும் மகான் இன்று இல்லை. அவரது வாழ்வே நமக்கு பாதை.
இயக்கப்பணியே நாம் அவருக்கு செய்யும் வீர அஞ்சலி.

அவரவர் பகுதிகளில் வீர அஞ்சலி, மௌன அஞ்சலி நிகழ்ச்சி நடத்திடுவோம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

திரை இசையில் சாதனை படைத்த திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் மறைவுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது – வீரத்துறவி இராம.கோபாலன்

25.09.2020

பத்திரிகை அறிக்கை

திரை இசையில் சாதனை படைத்த திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் மறைவுக்கு

இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது..

திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. தனது வாழ்நாளில் திரைப்பட பாடல்கள், பக்தி இன்னிசை பாடல்கள் மூலம் மக்களின் மனங்களில் என்றும் வாழ்பவர் எஸ்.பி.பி.

திருஅண்ணாமலையாரை போற்றி அவர் பாடிய பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவியது. அதனை கேட்காத தமிழ் உள்ளங்களே இல்லை எனக் கூறலாம்.

பல விருதுகளை பெற்ற எஸ்.பி.பி. அவர்கள் 42 ஆயிரம் பாடல்கள் பாடி என்றும் மக்களின் உள்ளங்களில் வாழ்கிறார்.

எஸ்.பி.பி. உடல்நிலை பாதிக்கப்பட்டபோது திரை உலகம் மட்டுமல்லாது அனைத்து மக்களும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். இதன் மூலம் அவர் மீது மக்கள் அனைவரும் வைத்திருந்த அன்பு வெளிப்பட்டது.

அன்னாரது மறைவு இசை உலகிற்கு ஈடு செய்யமுடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம்.

நன்றி,

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்,

(இராம கோபாலன்)

நிறுவன அமைப்பாளர்

குன்றிருக்கும் இடமெல்லாம் குருசு ✝️ இருக்கும் இடமா?? அச்சிறுப்பாக்கத்தில் அராஜகம்

காஞ்சி மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மலைக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது.

அங்கு 1200 ஆண்டுகள் பழமையான வஜ்ரகிரீஸ்வரர் கோயில் உள்ளது.

இந்த மலையின் புனிதத்துவத்தை கெடுப்பதற்காக கிறிஸ்தவர்கள் கோவிலின் அருகிலேயே உள்ள குன்றில் சிலுவையை நட்டு மரியே வாழ்க என்று எழுதி மலையைச் சுற்றியுள்ள பொதுமக்களை கட்டாய மதமாற்றம் செய்தனர்.

இந்த சதிக்கு பல வெளிநாட்டு மிஷனரிகள் பண உதவி செய்தன.

அதே வஜ்ரகிரி மலையில் சிவ சிவ என்று எழுதியதற்காக இந்துக்கள் மீது வனத்துறை அதிகாரி கிறிஸ்தவர் என்பதால் அபராதம் விதித்தார்.

கிறிஸ்தவர்கள் மலையை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கினர். அந்தப்பகுதியின் பஞ்சாயத்து தலைவரை கைக்குள் போட்டுக் கொண்டு பல வகைகளிலும் பணம் கொடுத்து மலை ஆக்கிரமிப்புக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.

இந்துமுன்னணி இயக்கம் சார்பாக தொடர்ந்து பலமுறை வீரத்துறவி தலைமையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியது .

மேலும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக புகார் செய்தது.

கோட்டாட்சியர் ,வட்டாட்சியர் , வருவாய்த்துறை அதிகாரி, கிராம நிர்வாக அதிகாரி என அத்தனை அதிகாரிகளையும் சந்தித்து புகார் கொடுக்கப்பட்டது.

அந்த நேரத்திலேயே தடுப்பது போன்று கண்துடைப்பு செய்த அதிகாரிகள், கிறிஸ்தவர்கள் இரவில் கட்டிடங்கள் கட்டும்போது கண்டும் காணாமல் இருந்தனர்.

ஆகவே கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டே இருந்தனர்.

ஐஏஎஸ் , ஐபிஎஸ் என அத்தனை கிறிஸ்தவ அதிகாரிகளும் அநீதிக்கு துணை போயினர்.

நீதிக்கு ஒரு இந்து அதிகாரியும் துணையில்லை தொடர்ந்து இந்துமுன்னணி இயக்கம் புகார் கொடுப்பதும், போராடுவதுமாக ஆண்டுகள் கடந்து போயின.

நீதிமன்றத்தை நாடி வழக்கு நடத்தும் வழக்கறிஞர்களுக்கு பணம் கொடுக்கக் கூட இல்லாத சூழ்நிலையில் இந்துக்கள் தவித்தனர்.

தற்போது கிறிஸ்தவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள இடம் சுமார் 65 ஏக்கர் – இரண்டாயிரம் கோடிக்கு மேற்பட்டது.

இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தற்போது வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் ஆசியுடன் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

அநீதிக்கு எதிரான போராட்டக் களத்தில் இந்துமுன்னணி…

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.

இது சம்பந்தமாக உதவி செய்பவர்கள் கீழே இருக்கும் தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

+919841305887

+919843354364

+919944238345

இராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும்

இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
26-8-2019
தேசிய தலைவர்களை மதிப்பதும், சமூக ஒற்றுமை ஏற்படுத்த வேண்டியதும் அனைவரின் பொறுப்பு..
நேற்று வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையை சில சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தியுள்ளதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும். அனைவரும் அனைத்து தேசத் தலைவர்களையும் மதிக்கும் பண்பு வளர வேண்டும்.
இப்படி சமூகத்தில் பதட்டத்தில் ஏற்படுத்திய சமூக விரோதிகளை காவல்துறை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை காரணமாக்கி இந்து சமூகத்தில் பிளவை ஏற்படுத்தி, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளுவதை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
சமூகத்தில் நம்பிக்கையை அரசும், அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் ஏற்படுத்த வேண்டும். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பை வளர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.
சமூக விரோதிகளை தனிமைப்படுத்துவதன் மூலம் இதற்கு தீர்வு காண முடியும். சாதி சண்டைக்குப் பின்னால் உள்ள சதியை கண்டுபிடித்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமீபத்தில் இலங்கை மூலம் பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியிருக்கிறார்கள் என உளவுத்துறை தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வரும் வேளையில், இதபோன்ற சம்பவம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நடக்கும் சதியோ என்ற சந்தேகம் எழுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, இந்த சந்தர்ப்பத்தில் எடுக்கும் நடவடிக்கை முன் உதாரணமாக இருக்க தமிழக அரசு தனிக் கவனம் கொடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
நிறுவன அமைப்பாளர்

இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம்,  கவலை அளிக்கிறது.. 

இந்து முன்னணி, தமிழ்நாடு

59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
19-7-2019
பத்திரிகை அறிக்கை
நேற்று அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம்,
கவலை அளிக்கிறது..
அத்திரவரதர் தரிசன ஏற்பாடுகள் குறித்து, கடந்த ஞாயிறு அன்று இந்து முன்னணி சார்பாக, ஒரு கடிதத்தை முதல்வரின் பார்வைக்கு அனுப்பிவைத்தோம். அதன் பிறகும் எந்தவித நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் செய்யாமல், பத்திரிகையாளர்களை அழைத்து வாய்பந்தல் போட்டது.
48 நாட்கள் நடக்கும் ஒருவைபத்திற்கு ஏற்ப நிர்வாக செயல்படவில்லை. நேற்று நான்கு பக்தர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்கள்., இது மிகுந்த கவலை அளிக்கிறது. அவர்களது ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம்.
இது குறித்து விரிவாக பேச வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் மேம்போக்காக கேள்வியை கேட்டதும், அதற்கு தமிழக முதல்வரின் சாதாரண பதிலும் அதிர்ச்சியை அளிக்கிறது.
திருப்பதியில் வருடந்தோறும் தரிசனம் நடக்கிறது. இதற்கு தினமும் சராசரியாக 70,000 பக்தர்கள் வருகிறார்கள். ஆனால், காஞ்சியில் 48 நாட்கள் தான் தரிசனம். அதனால், லட்சக்கணக்கில் தானே வருவார்கள் என்பதுகூட அரசுக்குத் தெரியாதா? கும்பமேளாவிற்குக் கோடிக்கணக்கில் மக்கள் வருகிறார்கள். அதுவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது. அத்திவரதரோ 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தருகிறார் எனும்போது சிந்தித்து, அதற்கேற்ற ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டாமா?
மாவட்ட கலெக்டர், வயோதிகர்கள், கர்ப்பிணி பெண்கள் தரிசனத்திற்கு வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார் என தமிழக முதல்வர் சட்டசபையில் கூறியிருப்பது, எத்தனை அலட்சியமான பதில்.
மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படவில்லை.
பேருந்து நிறுத்தத்திலிருந்து ஊருக்குள் வரவும் திரும்பிப்போகவும் மக்கள் படாதபாடு பட வேண்டியுள்ளது. உள்ளூர் பஸ் வசதி போதவில்லை. ஆட்டோக்கள் அடிச்சவரைக்கும் லாபம் என கட்டணத்தை உயர்த்தி வாங்குகிறார்கள். இது மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியுமா? தெரியாதா?
வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் ஏற்பாடுகூட இல்லை. வரதரை தரிசிக்கும் அறையில் போதுமான காற்றோட்டம் இல்லை. அங்கு மின்விசிறி, காற்று வெளியேற்ற மின்சாதனமும் இல்லை. இத்தனை பிரச்னைகளுக்கு இடையில் பக்தர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி லட்சக்கணக்கில் வந்து தரிசனம் செய்து செல்லுகிறார்கள்.
மேலும் இதுபோன்ற அசம்பாவிதம் மீண்டும் நடைபெறாமல் இருக்க தமிழக முதல்வர் நேரிடையாக தலையிட்டு, தகுந்த ஏற்பாடுகளை செய்துத்தர அக்கறை காட்ட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

இராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்

14.07.19
பத்திரிகை அறிக்கை

வரலாற்று சிறப்புமிக்க அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்..
நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார் அத்தி வரதர். அவரை தரிசிக்க சாதாரண பொது மக்கள் முதல் பாரதத்தின் முதல் குடிமகன் வரை பல முக்கிய பிரமுகர்களும் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தினசரி சுமார் ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது, கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் இதுவரை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளார்கள்.

இதுபோல, கடந்த வருடம் உத்திர பிரதேச மாநிலத்தில் கும்பமேளா நடைபெற்றது. மிகச் சிறந்த ஏற்பாடுகளை அந்த மாநில அரசு செய்திருந்ததை கண்ணாரக் கண்டோம். அங்கு ஏற்பாடு செய்த அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு, அதிவிரைவாக இங்கும் அதுபோன்ற ஏற்பாடுகளை செய்யலாம்.

அத்தி வரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வரும் பக்தர்களுக்கு அவசியமான வசதிகள் செய்து தருவதில் குறைபாடு உள்ளது என்பதை தமிழக முதல்வரின் கவனத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே,

1. தேவையான அளவிற்கு மொபைல் டாய்லெட் வசதி, மற்றும் அங்காங்கே குடிநீர் வசதி செய்து தர வேண்டும். வரிசையில் நிற்பவர்களுக்கு குடிநீர் தர ஏற்பாடு. (வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.)

2. தரிசனத்திற்கு நிற்பவர்களுக்கும், ஆங்காங்கே நிற்பவர்களுக்கும் தேவையான பந்தல் அமைக்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் பலர் மயக்கமடைகிறார்கள்.

3. வரிசையில் நிற்பவர்கள் பசியாறிட, பிஸ்கெட் போன்ற சிறு உணவுகள் விற்பனைக்காவது ஏற்பாடு செய்யலாம். அல்லது சேவை நிறுவனங்கள் மூலம் பிரசாதமாக வினியோகம் செய்யச் சொல்லலாம்.

4. தரிசன வரிசையில் போய், கோயில் உள் வரிசை வரும்போது, சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ளதுபோல மூன்று வரிசையாக தரிசிக்க ஏற்பாடு செய்தால், காலதாமதம் வெகுவாக குறையும், விரைவாக, அதிகமான பக்தர்கள் தரிசிக்க வசதி ஏற்படும்.

5. மருத்துவர்கள் குழுவை ஏற்பாடு செய்தும், வயதானவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்ால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அந்தந்த பகுதிகளில் ஆம்புலன்ஸ் வசதியும் அவசியம்.

6. வயதானவர்கள், நோயாளிகள் தரிசினம் செய்ய வேண்டும் என்ற பக்தியில் வருகிறார்கள். அவர்களுக்கும், கைக்குழந்தையோடு வருபவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் உடனடியாக செல்வதற்கான பேட்டரி கார் வசதி, அழைத்து செல்ல தன்னார்வ தொண்டர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் வரவதற்கும், போவதற்கும் ஏற்பாடு தேவையான அளவில் இருப்பது அவசியம்.

7. தன்னார்வ தொண்டர்களை இணைத்து முழு சேவைக்கான ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.

இவை தவிர, ஒரு குழு அமைத்து, அவ்வவ்போது ஏற்படும் குறைபாடுகளை களைந்து, சிறப்பான ஏற்பாடுகளை செய்துதந்து, அத்தி வரதரின் பேரருளையும், தமிழக மக்களின் அன்பையும் தாங்கள் பெற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை

இராம கோபாலன், நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676

12-4-2019

பத்திரிகை அறிக்கை

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்..
நாடு நலம்பெற்று சிறந்து விளங்க பிரார்த்தனை செய்வோம்..

நமது நாட்டில் இருவகை காலக்கணக்குகள் நடைமுறையில் உள்ளன. இவை இரண்டும் வானியியல் முறையில், அறிவியல் பூர்வமானது. அதில் ஒன்று சந்திரனை மையமாகக்கொண்டது, அந்த வருடத் துவக்கத்தை யுகாதி எனக் கொண்டாடுகிறோம். அடுத்து, சூரியனின் சுற்றை மையமாகக் கொண்டது, அதுவும் பாரதத்தின் பல பகுதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நமது தமிழகம், அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பின்பற்றுகிறோம். அதனைத்தான் நாம், தமிழ்ப் புத்தாண்டு என தமிழ்நாட்டில் கூறுகிறோம்.

புத்தாண்டு தினத்தில் குடும்பத்தோடு கோயிலுக்கு செல்வது, பெரியோர்களிடம் ஆசி பெறுவது நமது பழக்கம். காரணம், வருடம் முழுவதும் சிறப்பானதாக அமையவும், நேர்மறை எண்ணங்களை வளப்படுத்தவும் நமது முன்னோர்கள் ஏற்படுத்திய வழிமுறை இது.

ஆங்கிலப் புத்தாண்டு, கேளிக்கைகளில் ஈடுபட்டு, கூத்தடிப்பது. இது நாகரிகம் என்ற பெயரில் பண்பாடற்ற முறையில் கொண்டாடப்படுவதை நாம் காண்கிறோம். அது அவர்கள் வழி. ஆங்கில வருட காலக்கணக்கில், அறிவியலுக்கு பொருந்தாத பல விஷயங்கள் இருந்தாலும், கிறிஸ்தவர்கள், உலகின் பல பகுதிகளை ஆக்கிரமித்ததின் விளைவாக இது பல நாடுகளிலும் திணிக்கப்பட்டது. இதனை நமது வருங்கால சமுதாயத்திற்கு புரிய வைக்க வேண்டியது நமது கடமை.

வருகின்ற புத்தாண்டிற்குப் பிறகு, நமது தேசத்தின் ஜனநாயகத் திருவிழா, அதாவது பாராளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. இந்தத் தேர்தலில் நமது நாட்டில் வளமான ஆட்சியை நடத்தி காட்டி, தேசத்திற்கு பெருமை சேர்த்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஆட்சி தொடரவும் புத்தாண்டு தினத்தில் நாம் அவசியம் பிரார்த்தனை செய்வோம். நாடும் நாமும், நமது குடும்பத்தினர் எல்லோரும் நன்றாக வாழ இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

இராம.கோபாலன் அறிக்கை- தேர்தல் கமிஷனும், காவல்துறையும் திராவிட கழக கி. வீரமணியின் அடாவடி பேச்சை வேடிக்கை பார்க்கலாமா?

இராம கோபாலன் நிறுவன அமைப்பாளர்

பத்திரிகை அறிக்கை

தேர்தல் கமிஷனும், காவல்துறையும் திராவிட கழக
கி. வீரமணியின் அடாவடி பேச்சை வேடிக்கை பார்க்கலாமா?

நேற்று (4.4.2019) திருச்சி கீரைக்கடை பகுதியில் திருச்சி பாராளுமன்றம் திமுக கூட்டணியை ஆதரித்து, திராவிட கழக நடத்திய பொதுக்கூட்டத்தில் தி.க.வின் பொறுப்பாளர் அன்புக்கரசு, அந்த அமைப்பின் தலைவர் கீ. வீரமணி, திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் ஆகியோர் இந்து தெய்வமான கிருஷ்ணரை அவதூறாக, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தோட சம்பந்தப்படுத்தி, பக்தர்களின் மனங்கள் புண்படும்படி பேசியதை அடுத்து, இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக திரண்டு, ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதனை பொறுக்கமுடியாமல், திராவிட கழகத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். காவல்துறை வேடிக்கை பார்த்ததோடு, வழக்கும்போல் இரு தரப்பிலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது.

திராவிட கழக வீரமணி இரு வாரங்களுக்கு முன்னர், சென்னையில் அவரது அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் இதே போன்று பேசினார். அது சமூக வளைதளங்களிலும், தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் வெளியானதை அடுத்து, இந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் பல காவல்துறை அலுவலகங்களிலும் புகார் மனு கொடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. ஆனால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே, முகமது நபியை பற்றி இணையதளத்தில் வந்த செய்தியை பகிரப்பட்டபோது, பாய்ந்து வந்து இதே காவல்துறை வழக்கு பதிவு செய்து கல்யாணராமன் என்பவரை சிறையில் அடைத்தது. ஆனால், திராவிட கழகத்தின் தலைவர் பேசியதற்கு எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. இப்படி காவல்துறை பாரபட்சமாக நடப்பது வெட்கக்கேடானது.

தேர்தல் நடத்தை விதிமுறையில் தெளிவாக, மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதும், புண்படுத்தி பேசுவதும் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும்போது, ஏன் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்கவும், இதுபோல் தொடர்ந்து பேசி வரும் திராவிட கழகத்திற்கு அனுமதியும் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அனுமதி வழங்குகிறார்கள்? என்பது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், திமுகவின் தலைவர் ஸ்டாலின், தங்கள் கட்சி எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என்று பேசினார். அதனை அக்கட்சியின் தலைவர்கள் பலரும் தேர்தல் பரப்புரையில் பேசினர். ஆனால், திராவிட முன்னேற்றக்கழகம் திருந்தாத கட்சி. திராவிட கழகத்திற்கு மேடை அமைத்து, இந்து தெய்வங்களை, நம்பிக்கைகளை கொச்சை படுத்துவதை வேடிக்கை பார்க்கும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கு, இந்துக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்துக்கள் விழிப்படைந்துவிட்டார்கள். இவர்களின் கேவல புத்திக்கு தேர்தலில்தான் தகுந்த பாடம் புகட்டவேண்டும். அரசியல்வாதிகளுக்கு ஓட்டு எனும் ஆயுதத்தால் தண்டிக்கும் போதுதான், இனி ஒரு காலமும் இந்துக்களின் நம்பிக்கைகளை, தெய்வங்களை கொச்சை படுத்தும் துணிவு வராது.

எனவே, திமுக கூட்டணியில் இருக்கும் தன்மானமுள்ள, சுயமரியாதை உள்ள, தெய்வ நம்பிக்கை உள்ள இந்துக்கள் அக்கட்சியின் தலைவர்களுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தங்கள் மதத்தை குறித்து தவறான கருத்து தெரிவித்தால், அந்த கட்சியின் தலைமைக்கு எதிராக குரல் கொடுக்கவும் தயங்குவதில்லை. இந்துக்கள் அடிமைகளோ, சூடு சொரணை அற்றவர்களோ அல்ல என்பதை இந்த தேர்தல் நேரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியில் உள்ள இந்துக்களும், அவர்தம் குடும்பத்தாரும், தெய்வ நம்பிக்கை உள்ளவர்களும் இதனைக் கண்டிக்க முன்வரவேண்டும்.

எனவே, வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுகவின் கூட்டணிக்கு இந்துக்கள் ஓட்டு எனும் சக்தியால் புத்தி புகட்டுவோம். தேர்தல் சுமுகமாக, அமைதியாக நடைபெறுதை சீர்குலைக்கவே திக, திமுக கூட்டு சதி செய்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. இந்து தெய்வமான கிருஷ்ண பரமாத்வாவை கேவலப்படுத்தி பேசிய வீரமணி கும்பல் மீது தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அந்த அமைப்பின் தேர்தல் பரப்புரைக்கு உடனடியாக முற்றிலுமாக தடை விதிக்கவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

சசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன்

17-11-2018
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி மலையேறி கொண்டிருந்த இந்து ஐக்கிய வேதிகா (கேரள இந்து முன்னணி) தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், இருமுடி கட்டியாகிவிட்டது என்றால், அவர்கள், எந்தத் தடைகளையும் தாண்டி சபரிமலை நோக்கி நடை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது மரபு. கேரள இந்து ஐக்கிய வேதிகா தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள், இருமுடி எடுத்து நடைபயணமாக சபரிமலை சென்று கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் மரக்கூட்டம் எனும் பகுதியில் வைத்து கைது செய்துள்ளது கேரள காவல்துறை. இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 13 பேரும் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசே காரணம். இது தனி மனித சுதந்திரத்தையும், மத வழிபாட்டு உரிமையையும் பறிக்கும் செயல். இந்து சம்பிரதாயத்தைக் கேவலப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளால் மக்கள் கொந்தளித்துபோய் உள்ளனர். இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சபரிமலையின் புனிதம் காக்க நடைபெறும் போராட்டம், ஜனநாயக ரீதியாலானது. இந்த மக்கள் போராட்டத்தை முடக்க கம்யூனிஸ்ட் கட்சி நினைக்கிறது. இதற்காக, தீய நோக்கமும், தகாத செயல்பாடும் கொண்ட பெண்கள் இவர்கள் எனத் தெரிந்தும், அவர்களை சபரிமலைக்கு கொண்டு செல்ல முனைப்பு காட்டுகிறது. இது பக்தர்களின் மனங்களை புண்படுத்தி, சபரிமலை புகழைக் கெடுக்க நடக்கும் சர்வதேச சதி!
எல்லா வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மக்கள், பக்தர்கள் ஏற்கவில்லை. இது பாலின பாகுபாடு இல்லை என்றும், இந்தத் தீர்ப்பு மத வழிபாட்டில் தலையிடும் செயல் எனவும், மேல் முறையீடு (சீராய்வு) மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான சீராய்வு மனு என்பதால், உச்சநீதி மன்றம், தனது தீர்ப்பினை நிறுத்தி(ஸ்டே) வைக்க ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். இதுதான் நியாயமான செயல்பாடாகும்.
கிராமத்தில் ஒரு கதை உண்டு, ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரியாக இருந்தான். அந்த கிராமத்தில் அவன் வைத்ததே சட்டம் என்று செயல்பட்டான். ஒரு பெண் குற்றம் இழைத்ததாக பழி சுமத்தி, அவளை வீதியில் நிர்வாணமாக அழைத்து செல்ல உத்திரவிட்டான். அமைதியான கிராமத்தினர் அவனுக்கு முடிவு கட்ட நினைத்தனர். அவனுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தனர். கிராமத்தினர் அனைவரும், வீதியின் இருபுறமும் நிற்போம். அந்தப் பெண்ணை அழைத்து செல்லும்போது அனைவரும் நமது கண்களை மூடிக்கொள்வோம். அவனது கூலிப்படை அப்பெண்ணை வேண்டுமானால் நிர்வாணப்படுத்தலாம், நமது கண்களை திறக்க வைக்க முடியாது என்று கூறி செயல்பட்டனர். கிராமத்தினரின் அமைதியான இந்த செயல்பாட்டால், அந்த கொடுங்கோலன் வெட்கி தலைகுனிந்து, கிராமத்தைவிட்டே ஓடிபோனான் எனக் கூறுவார்கள். அதுபோலத்தான், பக்தர்கள் ஜனநாயக வழியில், அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்கின்றனர். ஆனால், இடதுசாரி கட்சிகளும், இடதுசாரி சார்பு ஊடகங்களும் அறப்போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்த தொடர்ந்து இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்கமாட்டோம் என கேரள மாநில அரசாங்கமும், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளும் நடந்துகொள்வது ஆபத்தானது. மக்கள் உணர்வுகளை மதிக்க மறுக்கின்ற அரசை, மக்கள் ஜனநாயக ரீதியாக தூக்கி எறிவார்கள் என்பது நிச்சயம்.
பல லட்சம் மக்கள், பல இன்னல்களை சந்தித்த போதும் தொடர்ந்து உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அறப்போராட்டம் நடத்தி வருவதை கருத்தில் கொண்டு, உச்சநீதி மன்றம் உடனே தனது தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது.
கேரள நீதிமன்றம் தலையிட்டு, கைது செய்யப்பட்ட திருமதி. சசிகலா டீச்சர் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய, கேரள மாநில அரசிற்கு உத்திரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சில மாதங்களாக கேரளாவில் நடைபெற்று வரும் அசாதாரணமான சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் விதத்தில் இருப்பதை கவனத்தில் கொண்டு, கேரள உயர்நீதிமன்றம் மற்றும் மாநில கவர்னர் ஆகியோர் பொது அமைதியை ஏற்படுத்தவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் மாநில அரசு செயல்பட அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

உச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை

24-10-2018
ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக கருதப்பட்டு வருவது நீதிமன்றங்கள்.  அப்படி நீதிமன்றத்தை அணுகியபோது, மக்களின் உணர்வுகளையும், பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் அறிந்து தீர்ப்பு கூறிய உயர்ந்த நீதிபதிகள் இருந்துள்ளனர்.
ஆனால், சமீப காலங்களில் அடுத்து அடுத்து வந்த தீர்ப்புகளான, ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது, தகாத உறவு குற்றமில்லை என்றது, ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்பது உள்பட பல தீர்ப்புகள் இந்துக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. இப்படிப்பட்ட தீர்ப்புகள் இந்த நாட்டின் பண்பாட்டை, கலாச்சாரத்தை சீர்குலைத்துவிடும் என்ற அச்சம் பெரும்பாலான மக்களிடம் எதிரொலிக்கிறது என்பது, மறுக்க முடியாத உண்மை.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பது குறித்த தீர்ப்பு நேற்று வந்துள்ளது. தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும். அதே சமயம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய நாட்களில் இரவு 11.55 மணியிலிருந்து 12.30 மணி வரை வெடிக்கலாம். இப்படிப்பட்ட தீர்ப்புக்குக் காரணம், ஒன்று இவ்வழக்கை எதிர்த்து வாதாடிய வழக்கறிஞர்கள் சரியாக கையாளவில்லை, அரசு வழக்கறிஞர்கள் மக்களின் கருத்தை, பாரம்பரியமாக தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்கள் குறித்து முறையாக நீதிபதிக்கு எடுத்துக் கூறவில்லை? அல்லது மாண்புமிகு நீதியரசர்களாக இருப்பவர்களுக்கு இந்நாட்டு மக்களின் உணர்வுகளை அறியாத வெளிநாட்டினரா? என்ற கேள்விகள் எழுகின்றன!
கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தினங்களில், நள்ளிரவில் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது, அவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்தே என்றால், இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி திருநாளில் அதிகாலை நேரத்திலும் பட்டாசு வெடிக்க அனுமதித்திருக்க வேண்டாமா? கண்டிப்பாக தீபாவளி இரவு நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை! ஒரு மதத்தின் நம்பிக்கையை ஏற்போம், பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்ற இரட்டை நிலைப்பாடு, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிடும். மக்களின் கடைசி நம்பிக்கையாக இருந்த நீதிமன்றங்கள் இன்று, அவநம்பிக்கையின் முதலிடமாக மாறுவது ஆபத்தானது என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது.
கிறிஸ்தவ மதத்தின் கோட்பாட்டிலோ, கிறிஸ்தவ நாடுகளிலோ கூட நள்ளிரவில் பட்டாசு வெடிப்பது என்பது கிடையாது. சமீப காலமாகத்தான் இவ்வழக்கம் கிறிஸ்தவர்களிடம் ஏற்பட்டு வருகிறது. அதற்கு மதிப்பளித்த உச்சநீதி மன்றம், கலியுகத்திற்கு முந்தைய யுகத்தில் தோன்றிய நரகாசுர வதம் பற்றியும், அவனின் சம்ஹாரமான – அரக்கனின் அழிவை அப்போதிலிருந்து மக்கள் கொண்டாடி வருவதையும் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை?!
ஒவ்வொரு ஆண்டும், பட்டாசு குறித்து தவறுதலான கருத்துகள் பரப்பட்ட வருகின்றன. ஏதோ ஒரு வகையில் வழக்கு போடப்பட்டு வருகிறது.. குழந்தை தொழிலாளர்கள் பட்டாசு தொழிலில் உள்ளனர் அதனால் பட்டாசு வாங்குவதைத் தவிர்ப்போம், காசைக் கரியாக்கலாமா?, புகை இல்லாத தீபாவளி, கிரீன் பட்டாசு என்பன போன்ற கருத்துக்கள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன.  கிறிஸ்தவ பள்ளிகளில், தீபாவளி கொண்டாட மாட்டோம் என மாணவர்களை சபதம் செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள். சில வெளிநாட்டு கம்பெனிகள் இதனை விளம்பரமாக பரப்புகிறது. இவ்வாறு நடப்பதெல்லாம் ஒரு திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. கடந்த ஆண்டு பாரதத்தின் தலைநகரமான டெல்லியில் பட்டாசு விற்கத் தடையில்லை, கொண்டு வர தடை என நீதிமன்றம் கூறியது வேடிக்கையாக இருந்தது!
இவை, பட்டாசு தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கி, மீண்டும் சிவகாசி போன்ற தமிழகத்தின் கடைக்கோடி நகரங்களை பாலைவனமாக்க நடக்கும் சதியோ என்ற கவலை நமக்கு வருகிறது.
ஒரிரு நாட்கள் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுகிறது என்றால், வருடம் முழுவதும் பூச்சி கொல்லி மருந்து, கொசு மருந்து, பெட்ரோல், டீசல் புகை எனும் நச்சு மருந்தால், காற்று மாசு சூழ்ந்து வருவது குறித்து ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை? இவற்றோடு ஒப்பிடும்போது, பட்டாசு புகையால் வரும் மாசு குறைவு, நன்மை அதிகம் என்ற உண்மை நன்கு விளங்கும்.
எனவே, உச்சநீதி மன்றம், பட்டாசு வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாடுகளை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சியை உடனே எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. நமது பாரம்பரிய விழாக்கள், பண்டிகைகள் குறித்து போடப்படும் வழக்குகளில் இன்னமும் அரசு வழக்கறிஞர்கள் அதிக கவனம் கொடுத்து வாதாடி மக்களின் உணர்வுகளை, உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். வருகின்ற தீபாவளி திருநாள் எந்தவித இடர்பாடும் இல்லாமல் மக்கள் கொண்டாட, இந்து முன்னணி இயக்கம், மக்களை ஒருங்கிணைத்து ஜனநாயக வழியில் போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
 என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)