Tag Archives: இராம.கோபாலன்

வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை- இந்து சமய அறநிலையத்துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது

இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து கோயில்களை, கோயில் சொத்துக்களைப் பராமரிக்க அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இத்துறையில் இருப்போர் மீது ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தத் துறை எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ, அதற்கு நேர்மாறாக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முறைகேடுகள், ஊழல் நிறைந்தத் துறையாக அது விளங்கி வருகிறது.
மக்களும், மன்னர்களும், செல்வந்தர்களும் வாரிவாரி கொடுத்த சொத்துக்களும், காணிக்கைகளும், கொள்ளையர்களின் கையில் சிக்கிய கதையாக போயுள்ளது. தோண்டத் தோண்ட, பத்மநாபபுறம் கோயிலைவிட வற்றாத செல்வத்தால் நிறைந்திருந்த தமிழகத் திருக்கோயில் சொத்துக்கள், கடலில் கொட்டியதுபோல ஆகிவிட்டது.
எந்தத் துறையிலும் இத்தகைய விபரீதத்தை காண முடியாது. பல அரசுத் துறை அதிகாரிகள் மீதும் புகார் வந்தால், லஞ்ச ஒழிப்புத் துறை, வருமான வரிச் சோதனை போன்றவற்றால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவை குற்ற பின்னணி கொண்டிருந்தால், கைது நடவடிக்கையையும் நீதிமன்றம் அனுமதிக்கின்றது. ஆனால், எந்தத் துறையிலும் ஊழல் செய்தவர்கள், லஞ்சம் பெற்றவர்கள், முறைகேடாக செயல்பட்டவர்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள் போன்றவர்களுக்கு ஆதரவாக ஊழியர் சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்ததில்லை. எல்லா அரசுத் துறைகள் ஊழியர்களும் சங்கம் வைத்துள்ளார்கள். குற்றம் சாட்டப்பட்ட நபர், அவரே, தான் நிரபராதி என்று நிரூபித்து விடுதலையாவதோ, அல்லது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தண்டனை பெறுவதோ நடைபெறுகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை, முறைகேட்டிற்காக விசாரிக்க அழைத்து சென்றபோதே இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது இந்த ஊழியர் சங்கம். மேலும், பா.ஜ.க. முக்கிய தலைவர் ஹெச். ராஜா, வேடசந்தூர் பொதுக்கூட்டத்தில் பேசியதை திரித்து, வதந்தியை பரப்பினர். இதற்காக எந்த அறிவிப்பும் செய்யாமல், அனுமதியும் பெறாமல் கோயில் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது சட்டவிரோத செயல். இதற்காகவே இவர்கள் மீது வழக்குப் போட்டிருக்க வேண்டும். மேலும் ஹெச். ராஜாவைக் கண்டித்து, நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அதற்காக கோயில் மண்டபங்களில் ஊழியர் சங்கத்தினர் தங்கவும், காலையில் குளித்து தயாராவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு யார் அனுமதி அளித்தனர்? அப்படி வந்தவர்கள், தங்கள் சொந்த காரியமாக விடுப்பு எடுத்துள்ளனர். சொந்த காரியம் என கூறிவிட்டு இப்படி நடந்துகொள்ளலாமா?
அதைவிட அவமானகாரமான விஷயம், உண்ணாவிரத பந்தலில் வைக்கப்பட்டிருந்த பாதாகையில் தமிழ்நாடு அறநிலையத் துறை என்று இருந்துள்ளது. அதில் `இந்து சமய’ என்ற வாசகம் இல்லை. அப்படியானால், இவர்கள் யாருக்காக பணி செய்கிறார்கள் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம். அந்த கூட்டத்தில் பேசிய பலரும் கோயிலை அழிக்க வேண்டும் என பேசி வருவர்கள். உதாரணமாக, திமுகவின் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழகத்தின் அருள்மொழி போன்றோர் அக்கூட்டத்தில் பேசியுள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை பாதுகாக்கும், பராமரிக்கும் பணியில் இல்லை, கோயிலை அழிக்கவே அவர்களுக்கு கோயில் வருமானத்திலிருந்து சம்பளம் பெறுகிறார்கள் என்பதைத் தான் இந்து முன்னணி பல ஆண்டுகளாக சுட்டிக்காட்டி வருகிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு இருக்கின்றனர். நாத்திக எண்ணம் கொண்டோர், அரசியல்வாதிகளுக்கு விசுவாசியாக இருக்கின்றனர். இவர்கள் எல்லாம், கோயில் சொத்துக்கள் கொள்ளைப் போக துணையிருக்கின்றனர். பக்திமானாக இருக்கும் சிலர் பேராசையாலோ அல்லது அச்சுறுத்தலாலோ, சிலை கடத்தல் முதல் ஊழல் வரை பல முறைகேட்டிற்குத் துணை போயிருக்கின்றனர்.
இந்துக்கள் விழிப்படைந்துவிட்டனர். வெகுண்டெழுந்து போராடத்துணிந்துவிட்டனர். கோயில் என்பது இறைவன் இருக்கும் வீடு. அதனை அரசியல் களமாக்கி, அழிக்கத் துடிப்போரை விரட்டி அடிக்கவும் தயங்கமாட்டார்கள். தமிழக அரசு, ஊழியர்களின் தீய நடத்தைக்காகவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க போராடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறையை கலைத்துவிட்டு, தற்காலிகமாக வக்ஃப் வாரியம் போல தனித்து இயங்கும் வாரியம் அமைத்து, அதன்பின், கோயில்கள், கோயில் சொத்துக்கள் பாதுகாக்க நிரந்தரமான தீர்வை ஏற்படுத்திட ஒரு குழுவை ஏற்படுத்தி நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்து முன்னணி தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

இந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை

24-9-2018
இந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- பத்திரிக்கை அறிக்கை
இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து கோயில்களைப் பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என அரசு கூறிக்கொண்டது.

இந்து சமயப் பணி செய்யும் துறையாக இது இருக்கிறது. இதற்காக பிரத்யேக தேர்வு நடத்தி, இந்துக்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை பணி என்பது அரசு பணி என்பது மட்டுமல்ல. இந்து சமயப்பணி என்பதால், அதில் பணியாற்றுபவர்களுக்கு இந்து சமயத்தின் மீது பற்றும், நம்பிக்கையும், ஈடுபாடும் இருத்தல் அவசியம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அத்தகைய பணியில் சேர்ந்தவர்கள் தங்களது மதம் சம்பந்தமான உண்மையான விவரத்தை மறைத்திருந்தால் அது குற்றமாகும்.

அப்படியில்லாமல், வேலையில் சேர்ந்தபின்னர் இந்து சமயத்தைவிட்டு வேற்று மதத்திற்கு மாறியிருந்தால், தார்மீக ரீதியில் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் பணியிலிருந்து விலகியிருக்க வேண்டும். தனக்கும் உண்மையாக இல்லாமல், தான் செய்யும் பணிக்கும் உண்மையாக இல்லாதவர்களை இந்து சமய அறநிலையத்துறை, பணியிலிருந்து நீக்குவது கடமையாகும்.

அதுதான் இந்து சமய அறநிலையத்துறையின் சட்டத்திட்டங்களின்படி சரியான நடவடிக்கையாக இருக்கும்.

சமீபத்தில், பா.ஜ.க. மாநிலப் பொறுப்பாளர் திரு. கே.டி. ராகவன் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் மறைமுக (Crypto) கிறிஸ்தவர்கள் பற்றி கணக்கெடுக்கப்பட வேண்டும் என்று கருத்தினைத் தெரிவித்தார்.

அதற்குக் கண்டனம் தெரிவித்து அகில இந்திய கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கடிதம் ஊடகங்களில் வந்துள்ளது. இதிலிருந்து கிறிஸ்தவ மதத்தின் திட்டமிட்ட சதியானது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

கிறிஸ்தவர்கள், சாமி பிரசாதம் எனக் கொடுத்தால்கூட வாங்க மாட்டார்கள். ஆனால், பக்தர்கள் அளிக்கும் காணிக்கையில் இருந்து தரப்படும் ஊதியத்தை பெறலாமா?

இந்து முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையான, இந்து கோயில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கு, இந்தப் பிரச்சனை வலுசேர்ப்பதாக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சுமார் 40,000 கோயில்களை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறை, சில ஆயிரம் கோயில்களில் தான் நித்திய பூஜை நடைபெறுகிறது. பல்லாயிரம் கோயில்களில் வழிபாடு, விளக்கு இல்லை, விழாக்கள் போன்றவை நடைபெறுவதில்லை, முறையாக கும்பாபிஷேகமும் நடைபெறாமல் சீரழிக்கப்படுகின்றன. சுமார் 1000 கோயில்கள் காணாமல் போயிருக்கின்றன. இதுபோன்ற முறையற்ற நடவடிக்கைகளுக்கு, இந்த மறைமுக, மதமாறிய கும்பலும் காரணமாக இருக்கலாம்.
இது இந்து திருக்கோயில்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்.

எனவே, இந்து சமய அறநிலையத்துறை இது குறித்த முறையான விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். அப்படி மறைமுக கிறிஸ்தவர்களாக இருப்போரை உடனடியாக பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கையை, ஒளிவு மறைவின்றி எடுக்க தயக்கம் காட்டக்கூடாது என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

விநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்

இராம கோபாலன், நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு

பத்திரிகை அறிக்கை

விநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி
எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை
பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்..

விநாயகர் பெருமான் முழுமுதற்கடவுள், அவரது அருளைப் பெற விநாயகர் சதுத்தியை உலகம் எங்கும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். விநாயகர் பெருமான் தமிழ்நாட்டின் செல்ல கடவுள். தமிழகத்தின் மூளை முடுக்குகளிலும், தெரு முக்கிலும், ஆற்றங்கரை ஓரத்திலும் எங்கும் வியாபித்திருப்பவர் விநாயகர். எங்கும் காணமுடியாத சிறப்பு இதுவாகும்.

அதுபோல தமிழ்நாட்டில் எழுதத் துவங்குவோர் எல்லோரும் முதலில் பிள்ளையார் சுழி எனும் எழுத்திற்கு அவசிமான சுழி (பூஜ்யம்), வளைவு, கோடு என இவற்றை உகாரம், அகராம், மகாரம் என்ற மூன்று சேர்த்து போடும் உ எனும் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவது என்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது.

நல்ல காரியம் ஒருவர் ஆரம்பித்து வெற்றிகரமாக நடக்கும்போது, மக்கள், இந்த நல்லகாரியத்திற்கு இவர்தான் பிள்ளையார் சுழி போட்டவர் என்ற சொல்வாடையிலிருந்து, விநாயகரில் துவங்கப்படும் எந்த காரியமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருவது புலானாகிறது.

தமிழகத்திற்கும் விநாயகருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. தமிழையும், அறத்தையும் வளர்த்த ஔவையார், நம்பியாண்டார் நம்பி போன்றோருக்கு அருள்புரிந்தவர் விநாயகர். தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர், காவிரியை கமண்டலத்தில் அடைத்து வைத்தபோது, காக்கை வடிவில் வந்து தட்டிவிட்டு, காவிரி தமிழகத்திற்கு பெருக்கெடுத்து ஓட வைத்தவர் பிள்ளையார். ஷ்ரீரங்கநாதர் தமிழகத்தில் எழுந்தருளி அருள்வதற்கு விநாயகரின் லீலையே காரணம் என பல ஆன்மிக சம்பவங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி திருவிழாவை ஊர் திருவிழாவாக, தெரு விழாவாக மாற்றி இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தும் பணியை 34 ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் துவக்கியது. இன்று தமிழகம் எங்கும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு, சுமார் 30,000 ஊர்வலங்கள் நடைபெற்று வருகிறது. இதன் நோக்கம், இந்து சமுதாயத்தில் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் களைந்து சமுதாய ஒற்றுமை ஏற்பட வேண்டும், இந்து சமய நம்பிக்கை வலிமைபெற வேண்டும் என்பதே.

இந்து சமுதாய ஒற்றுமை, எழுச்சி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை தமிழகம் எங்கும் கொண்டாடிட விநாயகர் பெருமான் நல்லருள் துணை நிற்கட்டும். தமிழக மக்கள் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று சிறப்பாக வாழ விநாயகர் சதுர்த்தி திருநாளில் எல்லாவல்ல விநாயகப் பெருமானின் கருணையை வேண்டுகிறேன்.

வீரத்துறவி பத்திரிகை அறிக்கை – 35ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி சமுதாய ஒற்றுமைப் பெருவிழா

பத்திரிகை அறிக்கை
35ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பெருவிழா..
சமுதாய ஒற்றுமைப் பெருவிழா..
வீட்டிலும், கோயில்களிலும் கொண்டாடி வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை, வீதியில் வைத்து கொண்டாட வைத்து, மக்களுக்கு சுதந்திர உணர்வை ஏற்படுத்தி வெற்றி கண்டார் பாலகங்காதிர திலகர்.

அதுபோல தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில், இந்து சமுதாய ஒற்றுமைக்கும், எழுச்சிக்கும் முப்பத்திநான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய விநாயகரை வைத்து திருவல்லிக்கேணியில் துவக்கிய விநாயகர் சதுர்த்தி திருவிழாவானது தமிழகம் முழுவதும், ஒரு லட்சத்திற்கு மேல் விநாயகர் வைத்து வழிபடும் மக்கள் விழாவாக நடைபெற்று வருகிறது.

இந்த மாபெரும் வெற்றிக்கு விநாயகர் பெருமானின் அருளும், மக்களின் ஆதரவும் தான் காரணம். இந்த ஆண்டு, இவ்விழாவானது இரண்டு லட்சத்தை அடையப்போகிறது.

இந்து சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைந்து, மக்களை ஒற்றுமைப்படுத்தும் பெருவிழாவாக விநாயகர் சதுர்த்தி திருவிழா அமைகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் அங்கே வாழும் இளைஞர்கள், தாய்மார்கள் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றனர். இதனால், பகுதி வாழ் பொதுமக்களிடம் இணக்கமான சூழலும், ஒருமைப்பாட்டுணர்வும், தேசபக்தியும் ஏற்பட்டு வருகிறது.

முதலில் சாதாரணமாக விழா குழு ஒன்றை அமைத்து நடைபெற்று வந்தது. தற்போது குழுவினர் மொத்தமும் காப்புக் கட்டி, ஐயப்பனுக்கு மாலை போடுவதுபோல விநாயகருக்குப் பிரார்த்தனை செய்து மாலை அணிந்து, விழா ஆரம்பிப்பதற்கு முன்னரே விரதத்தைத் தொடங்கி, விழா முடியும் வரை விரதம் இருக்கிறார்கள்.

விசர்ஜன ஊர்வலம் சீராக செல்ல, பாதுகாப்பு அணியென சீருடை அணிந்த இளைஞர்கள் ஊர்வலத்தினரை ஒழுங்குப்படுத்தி அமைதியான முறையில், கட்டுப்பாடான வகையில் ஊர்வலம் செல்ல வழி செய்கிறார்கள்.

கேரள மாநிலம் முழுவதிலும், தமிழகத்தில் சில மாவட்டங்களிலும் ஏற்பட்ட, மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட ஆர்.எஸ்.எஸ். சேவாபாரதி அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் இடைவிடாது சேவையாற்றி வருகின்றார்கள். அவர்களுடன் இணைந்து, இந்து முன்னணி பொறுப்பாளர்களும் சேவைப்பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இயல்பு நிலை திரும்பி மக்கள் நிம்மதியோடு வாழ்ந்திட விநாயகப் பெருமானைப் பிரார்த்திப்போம்.
வருடத்திற்கு ஒரு முறை, நாள் கணக்கில் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தியால் மக்களிடையே ஏற்படும் நல்ல மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, மகராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் அரசும், நீதிமன்றமும், காவல்துறையும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதை நாம் பார்க்கிறோம்.
அதுபோல, இந்த ஆண்டு, தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவிற்கு தமிழக அரசும், காவல்துறையும், அரசு அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
ஊடக நண்பர்களும், தேசிய, தெய்வீக சிந்தனை கொண்ட ஆன்மிக பெரியோர்களும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்புடன் நடைபெற ஆதரவை வழங்கிட வேண்டுகிறோம்.
தமிழகத்திலும், கேரள மாநிலத்திலும், பாரத தேசத்திலும், உலகத்திலும் உள்ள எல்லா மக்களும், எல்லா நலன்களையும் பெற்று, அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை ப்ரார்த்திக்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)