வீரத்துறவி பத்திரிகை அறிக்கை – 35ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி சமுதாய ஒற்றுமைப் பெருவிழா

பத்திரிகை அறிக்கை
35ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பெருவிழா..
சமுதாய ஒற்றுமைப் பெருவிழா..
வீட்டிலும், கோயில்களிலும் கொண்டாடி வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை, வீதியில் வைத்து கொண்டாட வைத்து, மக்களுக்கு சுதந்திர உணர்வை ஏற்படுத்தி வெற்றி கண்டார் பாலகங்காதிர திலகர்.

அதுபோல தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில், இந்து சமுதாய ஒற்றுமைக்கும், எழுச்சிக்கும் முப்பத்திநான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய விநாயகரை வைத்து திருவல்லிக்கேணியில் துவக்கிய விநாயகர் சதுர்த்தி திருவிழாவானது தமிழகம் முழுவதும், ஒரு லட்சத்திற்கு மேல் விநாயகர் வைத்து வழிபடும் மக்கள் விழாவாக நடைபெற்று வருகிறது.

இந்த மாபெரும் வெற்றிக்கு விநாயகர் பெருமானின் அருளும், மக்களின் ஆதரவும் தான் காரணம். இந்த ஆண்டு, இவ்விழாவானது இரண்டு லட்சத்தை அடையப்போகிறது.

இந்து சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைந்து, மக்களை ஒற்றுமைப்படுத்தும் பெருவிழாவாக விநாயகர் சதுர்த்தி திருவிழா அமைகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் அங்கே வாழும் இளைஞர்கள், தாய்மார்கள் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றனர். இதனால், பகுதி வாழ் பொதுமக்களிடம் இணக்கமான சூழலும், ஒருமைப்பாட்டுணர்வும், தேசபக்தியும் ஏற்பட்டு வருகிறது.

முதலில் சாதாரணமாக விழா குழு ஒன்றை அமைத்து நடைபெற்று வந்தது. தற்போது குழுவினர் மொத்தமும் காப்புக் கட்டி, ஐயப்பனுக்கு மாலை போடுவதுபோல விநாயகருக்குப் பிரார்த்தனை செய்து மாலை அணிந்து, விழா ஆரம்பிப்பதற்கு முன்னரே விரதத்தைத் தொடங்கி, விழா முடியும் வரை விரதம் இருக்கிறார்கள்.

விசர்ஜன ஊர்வலம் சீராக செல்ல, பாதுகாப்பு அணியென சீருடை அணிந்த இளைஞர்கள் ஊர்வலத்தினரை ஒழுங்குப்படுத்தி அமைதியான முறையில், கட்டுப்பாடான வகையில் ஊர்வலம் செல்ல வழி செய்கிறார்கள்.

கேரள மாநிலம் முழுவதிலும், தமிழகத்தில் சில மாவட்டங்களிலும் ஏற்பட்ட, மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட ஆர்.எஸ்.எஸ். சேவாபாரதி அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் இடைவிடாது சேவையாற்றி வருகின்றார்கள். அவர்களுடன் இணைந்து, இந்து முன்னணி பொறுப்பாளர்களும் சேவைப்பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இயல்பு நிலை திரும்பி மக்கள் நிம்மதியோடு வாழ்ந்திட விநாயகப் பெருமானைப் பிரார்த்திப்போம்.
வருடத்திற்கு ஒரு முறை, நாள் கணக்கில் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தியால் மக்களிடையே ஏற்படும் நல்ல மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, மகராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் அரசும், நீதிமன்றமும், காவல்துறையும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதை நாம் பார்க்கிறோம்.
அதுபோல, இந்த ஆண்டு, தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவிற்கு தமிழக அரசும், காவல்துறையும், அரசு அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
ஊடக நண்பர்களும், தேசிய, தெய்வீக சிந்தனை கொண்ட ஆன்மிக பெரியோர்களும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்புடன் நடைபெற ஆதரவை வழங்கிட வேண்டுகிறோம்.
தமிழகத்திலும், கேரள மாநிலத்திலும், பாரத தேசத்திலும், உலகத்திலும் உள்ள எல்லா மக்களும், எல்லா நலன்களையும் பெற்று, அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை ப்ரார்த்திக்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *