All posts by Admin
இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..
இந்து முன்னணி, தமிழ்நாடு
கர்மவீரர் வழி நடப்போம்
பள்ளி செல்லணும் பிள்ளைகளே!
நல்ல பாடம் படிக்கணும் பிள்ளைகளே!
துள்ளித் துள்ளி ஆடிடணும்! நீ
சுறுசுறுப்பாக இருந்திடணும்!
அம்மா, அப்பா மகிழ்ந்திடணும்! நீ
அனைவரும் போற்ற உயர்ந்திடணும்!
நம்மால் இயன்ற உதவிகளை நாம்
நலிந்தோருக்குச் செய்திடணும்!
மதிய உணவுத் திட்டத்தால் ஏழை
மாணவர் படிக்கச் செய்தவரை,
நதிகளில் அணைகள் அமைத்தவரை,
நன்றியுடன் நீ நினைத்திடணும்!
ஆட்சியில் இருந்த போதிலுமே -ஓர்
அகந்தை மனதில் அண்டாது,
காட்சி அளித்த தலைவர் அவர் – காம
ராஜர் சரிதம் மறக்காதே!
பதவிகள் தேடி வருகையிலும் – மனம்
பதறாது உழைத்த பேராளர்!
நிதமும் மக்கள் நலம் கருதி – தன்
குடும்பம் மறந்த தவசீலர்!
எளிமை வாழ்வு, உயர் உள்ளம்- சொல்
என்றும் மாறாப் பெருந்தன்மை,
தெளிந்த பார்வை, செயலூக்கத்தால்
தேசம் காத்த தலைவர் அவர்!
நாட்டுக்காக வாழ்ந்தவரை – நாம்
என்றும் மறக்கக் கூடாது!
வீட்டுக்காக படித்திடணும்! பின்
நாட்டை நாமும் காத்திடணும்!
மாணவப் பருவம் படிப்பதற்கே! கல்வி
வாழ்வில் உயர வழிகாட்டும்!
காமராஜரின் கருத்து இது- உன்
கல்வியும் நாட்டுக்கு வழிகாட்டும்!
இன்று (ஜூலை 15) கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்
நன்றி
https://www.facebook.com/vamumurali
இராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்
14.07.19
பத்திரிகை அறிக்கை
வரலாற்று சிறப்புமிக்க அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்..
நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார் அத்தி வரதர். அவரை தரிசிக்க சாதாரண பொது மக்கள் முதல் பாரதத்தின் முதல் குடிமகன் வரை பல முக்கிய பிரமுகர்களும் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தினசரி சுமார் ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது, கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் இதுவரை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளார்கள்.
இதுபோல, கடந்த வருடம் உத்திர பிரதேச மாநிலத்தில் கும்பமேளா நடைபெற்றது. மிகச் சிறந்த ஏற்பாடுகளை அந்த மாநில அரசு செய்திருந்ததை கண்ணாரக் கண்டோம். அங்கு ஏற்பாடு செய்த அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு, அதிவிரைவாக இங்கும் அதுபோன்ற ஏற்பாடுகளை செய்யலாம்.
அத்தி வரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வரும் பக்தர்களுக்கு அவசியமான வசதிகள் செய்து தருவதில் குறைபாடு உள்ளது என்பதை தமிழக முதல்வரின் கவனத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே,
1. தேவையான அளவிற்கு மொபைல் டாய்லெட் வசதி, மற்றும் அங்காங்கே குடிநீர் வசதி செய்து தர வேண்டும். வரிசையில் நிற்பவர்களுக்கு குடிநீர் தர ஏற்பாடு. (வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.)
2. தரிசனத்திற்கு நிற்பவர்களுக்கும், ஆங்காங்கே நிற்பவர்களுக்கும் தேவையான பந்தல் அமைக்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் பலர் மயக்கமடைகிறார்கள்.
3. வரிசையில் நிற்பவர்கள் பசியாறிட, பிஸ்கெட் போன்ற சிறு உணவுகள் விற்பனைக்காவது ஏற்பாடு செய்யலாம். அல்லது சேவை நிறுவனங்கள் மூலம் பிரசாதமாக வினியோகம் செய்யச் சொல்லலாம்.
4. தரிசன வரிசையில் போய், கோயில் உள் வரிசை வரும்போது, சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ளதுபோல மூன்று வரிசையாக தரிசிக்க ஏற்பாடு செய்தால், காலதாமதம் வெகுவாக குறையும், விரைவாக, அதிகமான பக்தர்கள் தரிசிக்க வசதி ஏற்படும்.
5. மருத்துவர்கள் குழுவை ஏற்பாடு செய்தும், வயதானவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்ால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அந்தந்த பகுதிகளில் ஆம்புலன்ஸ் வசதியும் அவசியம்.
6. வயதானவர்கள், நோயாளிகள் தரிசினம் செய்ய வேண்டும் என்ற பக்தியில் வருகிறார்கள். அவர்களுக்கும், கைக்குழந்தையோடு வருபவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் உடனடியாக செல்வதற்கான பேட்டரி கார் வசதி, அழைத்து செல்ல தன்னார்வ தொண்டர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் வரவதற்கும், போவதற்கும் ஏற்பாடு தேவையான அளவில் இருப்பது அவசியம்.
7. தன்னார்வ தொண்டர்களை இணைத்து முழு சேவைக்கான ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.
இவை தவிர, ஒரு குழு அமைத்து, அவ்வவ்போது ஏற்படும் குறைபாடுகளை களைந்து, சிறப்பான ஏற்பாடுகளை செய்துதந்து, அத்தி வரதரின் பேரருளையும், தமிழக மக்களின் அன்பையும் தாங்கள் பெற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
ஈரோட்டிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க இந்து முன்னணி தீர்மானம்.
ஈரோடு மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று திங்கள்கிழமை மாலை இந்து முன்னணி அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் திரு. பா. ஜெகதீசன் அவர்களின் தலைமையில் ,மாவட்ட பொதுச்செயலாளர் திரு. ப. சக்தி முருகேஷ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் திரு.J.S.கிஷோர்குமார் அவர்கள் கலந்து கொண்டார். இதில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் -1
சென்னை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கையாக தினமும் ஈரோட்டில்லிருந்து சென்னை செல்லும் அனைத்து இரயில்களிலும் குடிநீர் எடுத்து செல்லும் டேங்கர்கள் இணைத்து குடிநீர் எடுத்து சென்று சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கவேண்டும் என மாநில அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் – 2
ஈரோடு மாநகராட்சியில் நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணி, நிலத்தடியில் மின்சாரம் எடுத்து செல்லும் கம்பி பதிக்கும் பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி ஆகிய வளர்ச்சி பணிகள் அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகின்றன, இதில் ஏற்கனவே பணி நடைபெற்ற சாலையை முழுமையாக செப்பனிடாமல் மக்கள் பயன்படுத்தும் மீதி சாலைகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதால் வாகன ஓட்டிகளும் , பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஆகவே வளர்ச்சி பணியினை மக்களுக்கு இடையூர் இல்லாமல் மக்கள் செல்ல மாற்று வழித்தடத்தை ஏற்படுத்தி தந்து திட்டமிட்டு பணியினை விரைந்து முடிக்கும்மாரு மாநகராட்சியை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் – 3
ஆலய கட்டண தரிசனத்தை ரத்து செய்ய கோரி இந்து முன்னணி மாநிலம் தழுவிய ஜூலை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக நான்கு இடங்களில் மிக சிறப்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர்கள் கார்த்தி, வக்கீல் முரளி, சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சண்முகம், ரமேஷ் மற்றும் அனைத்து மாவட்ட பொருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
ஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர்
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று அபூர்வமான ஆராய்ச்சிகள் நடக்கும்போது பல பேர் வலைதளங்களில் பதிவிட்டார்கள் -“தீவிரவாதிக்கு மதம் இருக்க முடியாது; தீவிரவாதி செலுத்தப்பட்டவன்; அவனுக்கு எண்ணங்கள் இல்லை, உணர்ச்சிகள் இல்லை, சரி-தவறு என்கிற பேதங்கள் இல்லை. அவன் வில்லில் இருந்து எய்தப்பட்ட அம்பு’ – என்று.
தீவிரவாதியின் மதம் பற்றிப் பேசுவதைவிட, பாதிக்கப்பட்டவரின் மனம் பற்றிப் பேசலாம் – சிதறிய பின்னும் எழுந்து நின்ற மனங்கள் !
‘நாடியா முராட்’ போல…
சரியாக மூன்று வருஷம் முன்பு – 2016-ஆம் ஆண்டு மே மாதம், நாடியா முராட்-அமால் க்ளூனி சந்திப்பு நடந்தது. இருவரும் பெண்கள் என்பதைத் தாண்டி எந்த ஒற்றுமையும் இல்லாதவர்கள். இரு வேறு துருவங்கள்.
அமால் பிரமிக்க வைக்கிற பேரழகுப் பெண். சரியான உயரமும் விளம்பர மாடல்களின் உடல் அமைப்பும் கொண்டவர். அவர் அணியும் விலை உயர்ந்த ஆடைகளைப் பற்றிய தகவல்களைப் பகிர ஒரு இணையதளமே (“வெப்சைட்’) இருக்கிறது. ஆக்ஸ்போர்டு- இல் படித்து , நியூயார்க்கில் வழக்குரைஞர் தொழில் செய்யும் மாபெரும் பணக்காரப் பெண்.
இது போதாது என்று பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியை மணந்திருக்கிறார் (“யார் ஜார்ஜ் க்ளூனி என்று யோசிக்கிறீர்களா? – நம்ம “தல’ அஜித் மற்றும் நம் பிரபல நடிகர்களுக்கு “சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை’ சொல்லிக் கொடுத்த நடிகர், ஆஸ்கர் விருது பெற்றவர்). அமால் எங்கே போனாலும் ஆயிரம் பேராவது வந்து “ஆட்டோகிராப்’ கேட்பார்கள்.
நாடியா முராட்- யாராலும் கவனிக்கப்படாது கடந்து போகிறவர். ஏழை இராக்கியப் பெண். அதிகம் படிக்காதவர். சிறிய உடலமைப்பும், தலையைத் தூக்கி, கண்களைப் பார்த்துப் பேச முடியாத தயக்கமும் கொண்ட சிறு பெண்.
இந்த இரண்டு பேரும்தான் தீவிரவாதத்துக்கு எதிரான மாபெரும் போரை அறிவித்திருக்கிறார்கள்-இரண்டு தனி மனிதர்களாக இணைந்து!
இதன் பின்னணியைத் தெரிந்து கொள்ள நாடியாவின் வாழ்க்கையை நீங்கள் அறிய வேண்டும்.
இராக்கின் அழகான கிராமம் கோச்சோ. சிஞ்சார் என்கிற மலையின் பக்கத்தில் இருக்கிறது. “யஸீதி’ என்கிற மதத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் கிராம மக்கள். யஸீதிக்கள் மயில் வடிவில் பூமிக்கு ஒரு இறைத் தூதர் வந்தார் என்றும், அவர்தான் இந்த உலகுக்கு வண்ணங்களைத் தந்தார் எனவும் நம்பும் மக்கள். மயிலை வணங்குகிறவர்கள். சுற்றிலும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள். எல்லாரும் நேசமாய் வாழ்ந்தார்கள்-அந்தக் கிராமத்தை “ஐஎஸ்ஐஎஸ்’ தீவிரவாதிகள் ஒருநாள் சுற்றிவளைக்கும் வரை.
தீவிரவாதிகள் வந்தவுடன் ஆண்களும் பெண்களும் தனித் தனியாகப் பிரிக்கப் பட்டனர். 312 ஆண்கள் ஒரு மணி நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் நாடியாவின் 6 சகோதரர்களும் அடக்கம்.
பெண்களில் வயதான பெண்கள் தனியாகவும், இளம் பெண்கள் தனியாகவும் பிரிக்கப்பட்டனர். வயதான பெண்கள் உடனே கொல்லப்பட்டனர். நாடியாவின் அம்மா அப்போதுதான் இறந்திருக்க வேண்டும்.
இளம் பெண்கள் ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டு மோசூல் என்கிற நகரத்துக்குக் கொண்டு போகப்பட்டனர்-துப்பாக்கி முனையில். தன் குடும்பத்தில் ஏழு பேரை இழந்த நாடியாவுக்கு அழுவதற்கு நேரம் இல்லை அப்போது.
அன்று மோசூல் முழுவதும் “ஐஎஸ்ஐஎஸ்’ கட்டுப்பாட்டில் இருந்தது. அழைத்துவரப்பட்ட இளம் பெண்கள் ஏலம் விடப்பட்டனர் பாலியல் அடிமைகளாக… நாடியாவை ஏலத்தில் எடுத்தவன் ராட்சஸன் போல இருந்தான். அழுதாள் நாடியா-கொஞ்சம் சின்னவனாக இருந்த இன்னொருவனைத் தன்னை ஏலத்தில் எடுக்கச் சொல்லி. அவன் காலில் விழுந்து கதறினாள்.
எந்த ஓர் உயிரும், ஒரு வாழ்வும் இதைவிட கீழான நிலைக்குப் போக முடியாது என்று ஒரு புள்ளி உண்டா? உண்டென்றால் அன்று நாடியா அந்தப் புள்ளியில்தான் இருந்தாள்.
அந்த இரவில்தான் அவளுடைய உண்மையான தண்டனை ஆரம்பித்தது.
கிட்டத்தட்ட 90 நாள்கள். ஒரு பெண்ணின் உடலையும் மனதையும் ஆன்மாவையும் சுட்ட தீவிரவாதிகளின் கோர நடனம் அங்கே நடந்தது. கை மாறி மாறி ஏலத்தில் விடப்பட்ட நாள்கள். இரவா, பகலா என அறியாத பயங்கர நாள்கள். தப்பிக்க நினைத்தால் கொடும் தண்டனைகள் கொடுக்கப்பட்ட நீண்ட நாள்கள்.
ஒரு முறை, நெடுஞ்சாலையில் இருக்கும் டோல் பூத்தில் அடைக்கப்பட்டாள் நாடியா. சுற்றிப்போகும் வாகனங்களின் அதிர்வுக்கும், மோசூல் நகரின் தகிக்கும் பாலைவன வெப்பத்துக்கும் நடுவே, போகும் வரும் வண்டியில் இருப்பவர்கள் எல்லாம் அந்தச் சிறிய இடத்திற்குள் வந்து… போக…
சிதறிய ரத்தத்துக்கும் குமட்டி குமட்டி எடுத்திருந்த வாந்திக்கும் இடையே கிடந்தது அந்தப் பெண் உடல்.
கடைசியாக ஏலத்தில் எடுத்தவன் சாவின் விளிம்பில் இருந்த நாடியாவிடம் அறிவித்தான்-நாளை அவளை சிரியாவுக்கு கூட்டிப் போய் அங்கே ஏலத்தில் விடப்போவதாக…எழக்கூட முடியாமல் இருந்தவளை வீட்டில் வைத்து விட்டு கதவைப் பூட்டாமல் போனான் அவன் – சாகப் போகிறவளால் எப்படி தப்பிக்க முடியும் என்று…
உயிரின் கடைசித் துளி வாழும் இச்சை-அதுதான் நாடியாவுக்கு எழுந்து நிற்கும் சக்தியைக் கொடுத்திருக்க வேண்டும். எழுந்து வீட்டின் பின்னே வந்தாள். ஏழடி உயர “காம்பவுண்ட்’ சுவர் கொண்ட வீடு அது. 90 நாள்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருந்த 19 வயது சின்னஞ்சிறு பெண் நாடியா அந்த ஏழடிச் சுவரைத் தாண்டிக் குதித்தாள். அவள் உயரம் நாலடி சில அங்குலங்கள்தான்!
அப்புறம்…? அப்புறமென்ன…இரண்டரை மணி நேரம் இருட்டில் நடந்து, ஏதோ ஒரு வீட்டின் கதவைத் தட்டி அடைக்கலம் கேட்டு, அவர்கள் “ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்புக்கு எதிரானவர்கள் என்பதால் அவர்களால் காப்பாற்றப்பட்டு , எஞ்சியிருந்த ஒரே ஒரு அண்ணனைச் சந்தித்து, அகதிகள் முகாமில் வாழ்ந்து, தன்னைப்போல போர் அடிமைகளாய் “ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பினால் சிறை பிடிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்ற முடிவு எடுத்து, அமால் க்ளூனியைச் சந்தித்து, அவரின் உதவியுடன் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்குப் போய், தனக்கும் மற்ற பெண்களுக்கும் நேர்ந்ததைப் பேசி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி-பெண்களை அழிக்கும் “ஐஎஸ்ஐஎஸ்’ தலைமைக்கு எதிரான சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறாள் நாடியா. 2018-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவளும் அவள்தான்.
பரிசு பெற்றதற்கான பாராட்டுகளை ஏற்க நேரம் இல்லாமல் அவளும் அமால் க்ளூனியும் தொடர்ந்து தங்கள் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள்.
நாடியாவின் வாழ்க்கையை நினைக்கும் போதெல்லாம் எனக்கு அந்தச் சுவரைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது. அதன் அருகில் நின்று கொண்டு நாடியாவிடம் கேட்கவேண்டும் – “அந்த ஏழடிச் சுவரை நோக்கி ஓடும்போது என்ன நினச்சுக்கிட்டிங்க நாடியா?’
துரத்தப்படும் எல்லாருக்கும் அப்படி ஒரு சுவர் உண்டு. “ஏழடிச் சுவரைத் தாவிக் குதிக்க நாலடி உயரம் போதும்’ என்கிற புதிய பெளதிக விதிகள் பாதிக்கப்பட்டவர்களால் படைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
எது அமாலயும் நாடியாவையும் இணைத்தது? இரு வேறு உலகங்களைச் சேர்ந்த இரு பெண்கள் . ஒருத்தி பாதிக்கப்பட்டவள். இன்னொருத்தி பாதுகாப்பின் உச்சத்தில் வாழுகிறவள். “பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு முகம் உண்டு’ என்று எழுத்தாளர் அம்பை சொல்லுவார்.
“அவர்களுக்கென்று ஒரு குரல் உண்டு. அவர்களின் கைகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த முகத்தின் கண்களுக்கு கீழே இருக்கும் கரு வளையங்களை வருட வேண்டும்…’
அமால் அதைத்தான் செய்திருப்பார். அப்புறம்தான் அவர்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு போவதைப் பற்றிப் பேசியிருப்பார்கள்…
எனக்கும் அப்படிச் செய்ய வேண்டும் போல இருக்கிறது. புல்வாமாவில் இறந்த வீரர்களின் மனைவிகளின் கைகளை, குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் கைகளை, நியூஸிலாந்து கிறைஸ்ட்சர்ச் மசூதிகளில் தன் இனியவர்களை இழந்த பெண்களின் கைகளை, கொழும்பில் சிதறிய உடல்களின் அருகே அமர்ந்து கதறியழும் பெண்களின் கைகளை, இன்னமும் சிரியாவிலும் இராக்கிலும் பாலியல் அடிமைகளாய் விற்கப்படும் பெண்களின் கைகளை…
தீவிரவாதிக்கு மதம் உண்டா? எனக்குத் தெரியாது, ஆனால், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதம் இல்லை…உண்மையில் அவர்களுக்கு எதுவுமே இல்லை.
நாம் நம் கைகளை நீட்டினால் பிடித்துக்கொள்ள அவர்களுக்கு விரல்கள் மட்டும் உண்டு.
கட்டுரையாளர்: பட்டிமன்றப் பேச்சாளர்.
வீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…?
ஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை
மக்கள் நீதி மையம் கட்சியினுடைய தலைவராக இருக்கக் கூடிய திரைப்பட நடிகர் கமலஹாசன் அவர்கள் நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பொழுது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஹிந்து என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
திரு கமலஹாசன் அவர்கள் தன்னுடைய அரசியல் எவ்வளவு அபாயகரமாக இருக்கும் எவ்வளவு மதவெறி கொண்டதாக இருக்கும் தான் முன்னெடுக்க கூடிய அரசியல் வகுப்புவாத மதவாத அரசியல் என்பதை வெட்டவெளிச்சம் போட்டு நேற்று காட்டியுள்ளார்.
முஸ்லிம்கள் அதிகமாக கூடி இருக்கக்கூடிய இடத்தில் அவர்களுடைய ஓட்டுக்களை கவர வேண்டும் என்பதற்காக சம்பந்தமே இல்லாமல் முதல் தீவிரவாதி ஹிந்து என்று பிதற்றியுள்ளார்.
திரு கமலஹாசன் அவர்கள் தன்னுடைய விஸ்வரூபம் படத்திற்காக அனுபவித்த பிரச்சினைகளை மறந்துவிட்டார் போலும்.
நவகாளிப் படுகொலைகளில் ஹிந்துப் பெண்கள் 10 ஆயிரம் பேர் கற்பழிக்கப்பட்டதை மறந்து விட்டாரா? அந்த வரலாறு அவருக்கு தெரிந்த ஒன்று ,ஆனால் கேவலமாக அரசியல் செய்ய வேண்டி பேச வேண்டாத ஒரு விஷயத்தை பேசக் கூடாத இடத்தில் பேசி தனது அரசியல் முதிர்ச்சி இன்மையை காட்டியிருக்கின்றார் திரு கமல்ஹாசன்.
இப்படி பிதற்றி ஹிந்து சமுதாயத்தை கேவலப்படுத்தியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேற்கொண்டு அவர் பிரச்சாரத்தில் இதுபோன்று தொடர்ந்து இந்து விரோத கருத்துகளை சொல்லாமல் இருப்பதற்கு தேர்தல் கமிஷன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .
திரு கமலஹாசன் அவர்களுடைய இந்த தவற்றை உணர்ந்து உடனடியாக மன்னிப்பு கேட்டு தான் செய்த தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என இந்து முன்னணி எச்சரிக்கின்றது.
மேலும் இதுபோன்று கமலஹாசன் தொடர்ந்து ஹிந்து மத துவேஷத்தில் பிரச்சாரம் செய்தால் அவரை ஹிந்து முன்னணி மிகக் கடுமையாக எதிர்த்து அவர் செல்லும் இடங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு உள்ளாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்
கமலஹாசன் வரலாறு தெரியாதவர் அல்ல விவரம் தெரிந்த அவர் இவ்வாறு பேசியிருப்பது தனக்கு ஒரு மலிவான விளம்பரம் தேட வேண்டி தான் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று ஹிந்து முன்னணி கருதுகின்றது .
இன்றைக்கு அரசியல் வெளிச்சம் தன் மீது படவேண்டும் என்று சொன்னால் அவருக்கு ஹிந்து சமுதாயத்தின் உடைய நம்பிக்கைகளை பழிப்பது ஹிந்து கடவுளை தூற்றுவது ஹிந்துக்களை கேவலமாகப் பேசுவது என்பது ஒரு வாடிக்கையான விஷயம் ஆகிவிட்டது குட்டக் குட்டக் குனிந்து கொண்டிருக்க ஹிந்துக்கள் இளித்தவாயர்கள் அல்ல ஹிந்துக்கள் ஒன்றுதிரண்டு இதுபோன்ற அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்க கற்பிக்கின்ற சூழ் நிலை உருவாகிவிட்டிருக்கிறது.
இதனுடைய விளைவை ஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக சந்திக்க வேண்டி வரும் என்று இந்து முன்னணி எச்சரிக்கின்றது.
மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா ?
நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா ?
உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு இந்துமுன்னணி வருத்தம்
சிலை கடத்தல் குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் மகாதேவன் மற்றும் நீதியரசர் ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது
அப்போது நீதியரசர்கள் சாமி சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் கோவில்களை அரசு மூடிவிடலாமே என கருத்து தெரிவித்ததாக நாளிதழில் இன்று செய்தி வெளியாகி உள்ளது
நீதியரசர்களின் இந்த கருத்து மிகுந்த வருத்தத்திற்குரியது ஆகும்.
சிலை கடத்தல் வழக்கு உயர்நீதிமன்ற கண்காணிப்பினால் தான் நேர்மையாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெறுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு வருமானம் கிடைக்கிறது அப்படி இருக்கும் போது சாமி சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் தமிழக அரசு கோவில்களை மூடி விடலாமே என கேள்வி எழுப்பியுள்ளர்.
இந்து கோவில்களை தமிழக அரசு பராமரிக்க பாதுகாக்க தவறியதை நீதிமன்றம் சுட்டி காட்டியுள்ளது மிகச்சரியானது. அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.
ஆனால் அதற்காக கோவில்களை மூடிவிடலாமே என்ற கருத்து ஏற்புடையதல்ல.
ஏற்கெனவே தமிழக அரசு கட்டுபாட்டிலுள்ள பல கோவில்கள் பாழைடைந்து சிதிலமடைந்து மூடப்பட்டுள்ளது.
இந்து கோவில்கள் அனைத்தும் மன்னர்களாலும் மக்களாலும் கட்டப்பட்டுள்ளதே தவிர அரசாங்கத்தால் அல்ல. அதை மூடுவதற்கு அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.
சொல்லப்போனால் அரசு கோவில்களை தமிழக அரசு ஆக்கிரமித்து தன் கட்டுபாட்டில் வைத்துள்ளது.
எனவை தமிழக அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும். அதை இந்து ஆன்மீக குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறலாமே தவிர கோவில்களை மூடலாமே என்ற நீதியரசர்களின் கேள்வி மிகுந்த வருத்தத்திற்குரியது ஆகும்.
அரசின் இயலாமைக்காக இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கலாமா ?
எதிர்காலத்தில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கோவில்களை இழுத்து மூடுவதற்கு நீதிமன்றமே வழிகாட்டுவது போல் ஆகிவிடும்
கோவில்களை மூடலாமே என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு இந்துமுன்னணி சார்பில் வருத்தத்தை பதிவு செய்கிறோம்
V.P.ஜெயக்குமார்
மாநில துணைத்தலைவர்
இந்துமுன்னணி