Daily Archives: August 6, 2019

வீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்..

6-8-2019
இந்து முன்னணி ஆரம்ப காலம் முதலே வலியுறுத்தி வரும் 12 அம்ச கோரிக்கைகளில், காஷ்மீர் தனி அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை நீக்க வேண்டும் என்பதும் ஒன்று. காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு பாரத தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்திருக்கிறது, ஆகவே இதனை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்திருக்கிறது.
நாடு சுதந்திரம் அடைந்தபோது, பாரதம் வெட்டிப் பிளக்கப்பட்டு, ரத்த ஆறு பெருக்கெடுத்தது. அதனால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தவன். காஷ்மீர் இந்துக்கள் விரட்டி அடிக்கப்பட்ட பாதிப்பை உணர்ந்தவன் என்பதால், மத்திய அரசு தற்போது எடுத்துள்ள இந்த முடிவை நான் மனதார பாராட்டுகின்றேன், வரவேற்கிறேன்.
அப்போதைய உள்துறை அமைச்சரான சர்தார் பட்டேல், நாடு முழுவதும் இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்தார். காஷ்மீரை இணைப்பதில், பிரதமராக இருந்த நேரு கையாண்டு, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தார். காஷ்மீர் மாநிலத்திற்கு தனிக்கொடி, தனி சட்டம், சலுகை என்பதையேல்லாம் அவர் ஒப்புக்கொண்டார். அங்கு செல்வதற்கு இந்தியர்கள் பர்மிட் வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தது. காஷ்மீர் பெண்கள் இந்தியர்களை திருமணம் செய்துகொண்டால் சொத்தில் உரிமை கோர முடியாது, அதுவே, பாகிஸ்தானியரை திருமணம் செய்துகொண்டால் உரிமை உண்டு என்பதுபோன்ற பல குளறுபடிகள் இருந்தன. அதே சமயம், பாரதம், காஷ்மீர் வளர்ச்சிக்கு அள்ளிக் கொடுத்த நிதிகளை எல்லாம் காஷ்மீரை ஆண்ட மூன்று குடும்பங்களும், பயங்கரவாத குழுக்களும் சுரண்டிக் கொழுத்தன. இந்துக்கள் அதிகமாக வாழும் ஜம்முவோ, புத்த மதத்தினர் அதிகம் வாழும் லடாக் பகுதியோ முன்னேறவேயில்லை. பயங்கரவாதத்தால் காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய தொழிலான சுற்றுலா ஒட்டுமொத்தமாக முடங்கிப்போனது.
காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து, இந்தியர்கள் அங்கு செல்வதற்குக்கூட பர்மிட் (அனுமதி) வாங்க வேண்டும் என்பதை எதிர்த்து, பாரதிய ஜனதாக கட்சியின்(அப்போது பாரதிய ஜனசங்கம் என்று பெயர்) நிறுவனத் தலைவர் திரு. சியாம்பிரசாத் முகர்ஜி தடையை மீறி போராட்டம் நடத்தி சிறை சென்றார். சிறையில் மர்மமான முறையில் அவர் உயிரிழந்தார். அவரது உயிர்தியாகத்திற்கு பலன் இப்போது தான் கிடைத்துள்ளது.
தனி நாடு போல காஷ்மீர் இருந்ததால், இந்தியாவிற்கு எதிரான, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் கடந்த 72 ஆண்டுகளாக அங்கு பெரும் நாசத்தை ஏற்படுத்தி வந்தன.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் 370வது பிரிவை நீக்கியிருக்கிறது மத்திய அரசு. மேலும், ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசின் நேரடி ஆளுமையின் கீழ் வருவதற்கு மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு இந்திய குடியரசு தலைவர் அவர்கள் ஒப்புதல் தந்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி, மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா ஆகியோருக்கு இந்து முன்னணி மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறது.
இந்த விஷயத்தில் திமுக மற்றும் வைகோ போன்றவர்கள் மக்களை திசைத்திருப்ப தேசவிரோதமாக பேசுவதைக் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக கட்சிகள் தவிர, நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதிலிருந்து காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் செய்வது வெற்று அரசியல் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
இனி காஷ்மீர் மாநிலத்தில் அமைதி நிலவும், அது வளர்ச்சியை நோக்கி செல்லும் மாநிலமாக, பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்ட மாநிலமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை இந்திய மக்கள் அனைவரும் வரவேற்போம். நல்லதொரு துவக்கமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு, இந்த நடவடிக்கை அமையட்டும்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
நிறுவன அமைப்பாளர்