23.05.2020
பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
தமிழக அரசு- சென்னை
அன்புடையீர் வணக்கம்,
பொருள் : கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நடவடிக்கை கோரி – விண்ணப்பம்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயால் நாட்டில் பல்வேறு மக்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு இன்னல்கள் சந்தித்து வருகின்றார்கள்.
மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். தமிழகத்தில் காலங்காலமாக கோவில்களை மையமாக வைத்து பல்வேறு குடும்பங்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றார்கள்.
கடந்த 60 நாட்களாக ஊரடங்கு காரணத்தினால் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மூடப்பட்டுள்ளது. கோவில் திருவிழாக்கள் எதுவும் நடைபெறாத காரணத்தினால் திருவிழாக்கள், கோவில் கொடை சமயத்தில் மூன்று நாட்கள் ஐந்து நாட்கள், ஒரு வாரம், பத்து நாள் என அந்தந்த ஊர்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கரகாட்டம், ஒயிலாட்டம், குச்சிப்பிடி, கும்மியாட்டம், இசைக் கச்சேரி, நாடகம், வில்லுப்பாட்டு பொய்க்கால் குதிரை, பறையாட்டம், காவடியாட்டம், நாட்டுக்கூத்து கிராமிய நடன நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சிகள் மூலமாக பல்வேறு கலைஞர்கள் (தப்பாட்டம், மேளம் அடிப்பவர்கள், நாதஸ்வரம் வாசிப்பவர்கள், சின்ன சின்ன கலைகள்) மூலம் அன்றாட வருமானம் பார்த்து வந்தார்கள்.
கடந்த இரண்டு மாத காலமாக இந்த திருவிழாக்கள் நடைபெறாத காரணத்தினால் இந்த கலைகளை நம்பி வாழ்க்கை நடத்தி வந்த லட்சக்கணக்கான கிராமியக் கலைஞர்கள் அன்றாட உணவுக்கே பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள். இவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் இல்லை.
இந்த லட்சக்கணக்கான கிராமிய கலைஞர்களுக்கு அரசு உடனடியாக தலா ₹5000, அரிசி-பருப்பு, அத்தியாவசியப் பொருட்களும் உடனே வழங்கி கிராமியக் கலைஞர்களின் சிரமங்களைப் போக்க உதவி செய்ய வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுகொள்கிறேன் .
தாயகப் பணியில்
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநில தலைவர்
இந்து முன்னணி