ஆலயத்தை சீரழிக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாட்டிற்கு உதாரணம் மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை

இராம கோபாலன்

நிறுவன அமைப்பாளர்

இந்து முன்னணி, தமிழ்நாடு

59, ஐயா முதலித் தெரு,

சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.

தொலைபேசி: 044-28457676

3-2-2018

பத்திரிகை அறிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து இந்த சமய அறநிலையத்துறையின் நிர்வாக சீர்கேட்டிற்கு எடுத்துக்காட்டாகும். மீனாட்சியின் திருக்கோயில் யுனஸ்கோவால் உலக கலை பொக்கிஷமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதை புலனாய்வுத் துறை அடிக்கடி எச்சரித்து வருகிறது. அப்படியிருக்கையில் கோயில் வழியில் கடைகளை வைத்து வியாபாரத்தலமாக மாற்றியது எந்த வகையில் நியாயம்? தீ விபத்து நடந்தால் எப்படி தடுப்பது என்பதற்குக்கூட எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை என்பதை பார்க்கும்போது, இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் சீர்கேட்டினை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்துக்களின் ஆலயச் சொத்துக்களை பராமரிக்க, பாதுகாக்கத்தான் இந்து சமய அறநிலையத்துறை நிறுவப்பட்டது. ஆனால், எந்த நோக்கத்திற்காக இது துவக்கப்பட்டதாக தமிழக அரசாங்கம் கூறியதோ அந்த நோக்கமே இன்று சிதைவு பட்டுவிட்டது. கோயில் நிலங்கள், வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து எந்த தகவலும் இந்து சமய அறநிலையத்துறையிடம் இல்லை. மேலும் இத்துறை எடுத்துக்கொண்டதற்குப் பிறகு பல கோயில்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது எந்த நடவடிக்கையும் அரசோ, இந்து சமய அறநிலையத்துறையோ தடுக்கவில்லை. கோயில் குளங்கள், மேலும் நூற்றுக்கணக்கான வருட கோயில்கள் கூட ஆக்கிரமிப்பு, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இடிக்க உத்திரவிடும்போது, அவற்றைப் பாதுகாக்கும் செயலிலும் அத்துறை அதிகாரிகள் ஈடுபடுவதில்லை.

காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் உற்சவர் சிலை செய்த விஷயம் முதல் ஏராளமான ஊழல், சிலை, ஆபரணங்கள் திருட்டுகள், முறைகேடுகள் முதலியவற்றில் கோயிலை பாதுகாக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே முறைகேடில் ஈடுபட்டு வழக்குகளை சந்திக்கும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். எனவே, இந்து சமய அறநிலையத்துறையை உடனடியாக கலைக்க தமிழக அரசு உத்திரவிட வேண்டும். கோயில்களை, கோயில் சொத்துக்களை நிர்வகிக்க தனித்து இயங்கும் வாரியத்தை ஏற்படுத்த தமிழக அரசு முன் வரவேண்டும்.

இந்து கோயில்கள், இந்து சமுதாயத்தின் சொத்து, ஆன்மீக கேந்திரங்கள். கோயில் அழிந்தால், நமது பாரம்பரியம், பழக்க வழக்கம், வரலாறு, கலை நுணுக்கம், கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு, இலக்கியம் எல்லாம் அழிந்துபோகும். எனவே, கோயில்களைக் காக்க இந்து சமுதாயம் போராட வேண்டிய நேரமிது. இந்து சமய அறநிலையத்துறையை ஆலயத்தை விட்டு வெளியேற்றி, நமது கோயில்களை காக்க இந்துக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்.

நமது கோயில், நமது உரிமை, இதனை மீட்டெடுக்க வேண்டியது ஒவ்வொரு இந்துவின் கடமை. மதச்சார்பற்ற அரசுக்கு கோயிலில் என்ன வேலை? மசூதி சொத்து முஸ்லீம்களிடமும், சர்ச் சொத்து கிறிஸ்தவர்களிடம் இருக்கிறது. அவற்றினை மேம்படுத்த, பராமரிக்க அரசு பொது நிதியிலிருந்து கோடிக்கணக்கில் நிதியை தருகிறது. ஆனால், இந்துகளின் கோயில் பணத்தில் தனக்கு வருவாயை பெருக்கிக்கொள்வதுடன், கொள்ளையடிக்கவும் துணைபோகிறது! வரும் வருவாயில் பங்கு போடுகிறது தமிழக அரசு. அதற்கு ஏதுவாக அரசியல்வாதிகளை அறங்காவலர்களாக நியமிக்கிறது!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தைத் தடுக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்யாத கோயில் நிர்வாகத்தினர் மீது தக்க நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். கோயில் பாதுகாப்பு கருதி இனி எந்த கோயில் உள்ளும் எந்தவிதமான வியாபார கடைகள் அமைப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. கோயில் நிர்வாகத்திலிருந்து, தமிழக அரசு வெளியேற வேண்டும் என்றும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

பஸ் ஸ்டிரைக் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை

பஸ் தொழிலாளர்களுக்கும், தமிழக அரசுக்கும் இந்து முன்னணி வேண்டுகோள்..
அரசு பேருந்து தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில் பஸ் ஸ்டிரைக் தொடர்ந்து கொண்டுள்ளது.

தொழிலாளர்களின் ஓய்வோதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் ஏற்புடையதாக, நியாயமானதாக இருக்கிறது. தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்று, வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தை ஆண்டு, ஆளுகின்ற திமுக, அதிமுக அரசுகளின் தவறான நடவடிக்கைகளால் போக்குவரத்துத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் உள்ள இடதுசாரி தொழிற்சங்கங்களும் இதற்கு உடந்தயைாகவே செயல்பட்டு வந்துள்ளன.
பேருந்து வேலை நிறுத்தத்தால் கடந்த சில நாட்களாக தமிழத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. பலதரப்பட்ட மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வேலை நிறுத்தம் என்பது எப்படி இருக்கலாம் என்பதற்கும், அரசோ, நிர்வாகமோ முன் எச்சரிக்கையாக எப்படி செயல்படுவது என்றும், ஒரு வரைமுறையை உருவாக்க வேண்டும் என்ற கருத்து பொது மக்களிடமும், உண்மையான சமூக அக்கறையுடையோரிடமும் அலசப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்வோர் அதிகம். இந்நிலையில் தொடரும் பஸ் ஸ்டிரைக்கால் இது கேள்விக்குறியாகி உள்ளது. திட்டமிட்டு, பொங்கல் பண்டிகையை சீர்குலைக்க வேண்டும் என்ற தீய நோக்கில் சில தொழிலாளர் சங்கங்கள் ஸ்டிரைக் தொடரும் என அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது. மக்களுக்குத் தொல்லை தருவதால், மக்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் என்பதை தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, வருகின்ற பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட, சொந்த ஊருக்குச் சென்று திரும்பவும் தேவையான போக்குவரத்து சேவையை தமிழக அரசும், பேருந்து தொழிலாளர்களும் செய்து தர வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை இந்து முன்னணி தெரிவித்துக்கொள்கிறது
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

11.1.18

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு- வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை

9-1-2018
பாவை நோன்பு மாதமாகிய மார்கழி மாதத்தில், திருப்பாவை இயற்றிய, ஆழ்வார்களில் ஒருவராகிய ஆண்டாள் நாச்சியாரை கொண்டாட ராஜபாளையம் திருக்கோயிலில் விழா நடைபெற்றது. இவ்விழாவானது, பாரம்பர்யமிக்க தினமணி நாளிதழ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி. இதில் கலந்துகொண்டு பேசிய, வைரமுத்து,  ஆண்டாள் ஒரு தாசி என பேசியது பக்தர்களின் மனங்களை புண்படுத்தும் செயல். இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. வயிற்று பிழைப்பிற்காக தமிழ் மொழியை பேசி திரியும் வைரமுத்துவிற்கு, ஆண்டாள் நாச்சியாரைப் பற்றி பேச அருகதை உண்டா? நிச்சயம் கிடையாது. இதுபோன்ற அவதூறான கருத்தினை பேசிட எது இவருக்கு துணை நிற்கிறது, எது காரணம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இப்படி இவர் பேசிய இடம் திராவிட கழகத்தின் கூட்டமும் இல்லை, அது நாத்திக மேடையும் இல்லை.. அப்படியிருக்க இதுபோன்ற பண்பாட்டு மேடையில் இவரை பேச அழைத்து வந்தவர்களுக்கு கிடைத்த பரிசு தான் இவர் கூறிய கருத்து.
தமிழகத்தில் மட்டுமல்ல, இம்மாதத்தில் உலக முழுவதும் தமிழ் சமுதாயம் ஆண்டாளின் திருப்பாவை விழா கொண்டாடப்பட்டு வருவதை காண்கிறோம்.
ஔவையாரும், ஆண்டாளும் தமிழ் சமுதாயத்திற்கு செய்துள்ள சேவைக்கு, உலகம் உள்ள அளவும் தமிழர்களாகிய நாம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.
இந்துக்கள் தங்களை உணர்ந்துவிட்டார்கள். இதுபோன்ற நச்சு கருத்துகளுக்கு பதிலடி கொடுப்பார்கள்.  வைரமுத்து, தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இல்லையேல் அவரது கருத்திற்கு உரிய பதிலை அவருக்கு புரியும் மொழியில் மக்கள் அளிக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதை நினைவூட்டுகிறோம்.
தமிழுக்கும் பண்பாட்டிற்கும் சேவையாற்றி வந்தது தினமணி நாளிதழ். அதன் ஆசிரியர் திரு. வைத்தியநாதன் அவர்கள், வைரமுத்துவின் கீழ்த்தரமான கருத்தினை வெளியிட்டு, தமிழுக்கு துரோகம் செய்துள்ளதையும் கண்டிக்கிறோம்.
நாத்திக கூட்டமல்ல, இது இந்து விரோத கூட்டம்
திராவிடர் கழகத்தின் திருச்சி கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் மகள் கனிமொழி, திருப்பதி ஏழுமலையானைப் பற்றி விமர்சித்துள்ளார். இவரது பேச்சேல்லாம் கருப்பு சட்டை சிரூடையில், மேடைக்கு முன்னால் நிற்கும் சிலரின் கைத்தட்டலுக்காக இருக்கலாம்.
ஆனால், இவரது கருத்திற்கு இவரது தாய்கூட ஏற்கமாட்டார்கள் என்பது அவருக்கே தெரியும்.  2ஜி வழக்குத் தீர்ப்புக்கு முன்னர் எத்தனை கோயிலுக்குச் சென்று நேர்த்தி செய்தார்கள் என்ற பட்டியலும் இருக்கிறது.
கனிமொழி ஓன்று அரசியல்வாதியாக இருக்கட்டும், இல்லையேல் பகுத்தறிவு என்ற பெயரில் இந்து விரோத கருத்துக்களை பரப்பும் செயலை செய்யட்டும். இந்து விரோத கருத்தை கூறிக்கொண்டு செயல்படுவது, அவர், தான் ஏற்றுக்கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவி பிரமாணத்திற்கு எதிரானது என்பதை புரிந்துகொள்ளட்டும்.
உலக நாத்திக கூட்டமெனக்கூட்டிய திராவிடர் கழக வீரமணி, அதனை மூடநம்பிக்கையையே வியாபாரமாக நடத்தும் கிறிஸ்தவ மதப்போதகர் எஸ்றா சற்குணத்தை வைத்து துவக்கியதிலிருந்தே இது கடவுள் மறுப்பு கூட்டம் இல்லை, இந்து மத விரோதக் கூட்டம் என்பது உறுதியாகிறது.
கனிமொழி, இதே கருத்தை மற்ற மத நம்பிக்கையின் மீது கூறுவாரா? திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் தன்மானமுள்ள இந்துக்களே, `இப்படிப்பட்ட அறிவார்ந்த கருத்துகளை நீங்கள் ஏன் வேற்று மதங்களைப் பற்றியும் ஒரு விஷயத்திலாவது பேச கூடாது?’ எனக் கேளுங்கள். அப்படி தப்பித்தவறி பேசினால் என்ன நடக்கும் என்பதை அவர்கள் வாயாலேயே புரிய வையுங்கள்.  ஒன்று அவர்களது இந்துவிரோத செயல்பாட்டை மாற்றுங்கள், இல்லையேல் தன்மானத்தோடு, சுயமரியாதையோடு திமுகவைவிட்டு வெளியேறுங்கள் என திமுகவில் உள்ள இந்துத் தொண்டர்களிடம் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

மாநில செயற்குழு கூட்டம் – சென்னை

இந்துமுன்னணி பேரியக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் டிசம்பர் 30,31 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

மாநிலத்தலைவர் திரு. காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமை வகித்தார்.

ஹிந்து ஜாக்ரண் மஞ்ச் அகிலபாரத ஒருங்கிணைப்பாளர் திரு. அசோக்பிரபாகர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் மற்றும்வி ன் டிவி நிர்வாக இயக்குனர் திரு. தேவநாதன், தமிழ் திரைப்பட இயக்குனர் திரு. பேரரசு, சூரப்பட்டு சுலக்ஷ்னா மஹால் உரிமையாளர் திரு. கல்யாண சுந்தரம், கங்கா பவுண்டேஷன் தலைவர் திரு. செந்தில் குமார் ஆகியோர் திருவிளக்கேற்றி நிகழ்வினை துவக்கி வைத்தனர்.

மாநில, கோட்ட, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி திரு.இராம. கோபாலன்ஜி இரண்டாம் நாள் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. கோவில் சொத்து கொள்ளை போவதை தடுக்காமல், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத “இந்து அறநிலையத்துறையே பொறுப்போடு செயல்படு”.

2. இந்த ஆண்டு எந்தவித சிக்கலும் இல்லாமல் “ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு தயாராக வேண்டும்”.

3. திருப்பூர் மாவட்டம் ஊதியூர் உத்தண்ட வேலாயுதசுவாமி “கோவில் நிலத்தை மீட்க கோரிக்கை”.

4. ஆங்கிலப் புத்தாண்டு அன்று நள்ளிரவில் கோவில் நடை திறப்பதற்கு தடை விதிக்காத நீதிமன்றங்களில்- “நீதியின் மாண்பு காக்கப்பட வேண்டும் “.

5. மத்திய அரசின்” முத்தலாக் சட்டத்திற்கு வரவேற்பு”.

6. பழனி “பாதயாத்திரை செல்வோர்களுக்கு அரசே நடைபாதை அமைத்துக்கொடு”.

7.” திருமாவளவனின் இந்து விரோத பேச்சுக்கு கண்டனம்”.

8. R K நகர் தேர்தல் “ஜனநாயகமா? அல்லது பணநாயகமா?”.

9. அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத ஜெபகூடங்கள், தொழுகைக் கூடங்களை அகற்ற ” நீதிபதி வைத்தியநாதன் உத்தரவை அரசு அமல்படுத்த வேண்டும் “.

10. திருச்செந்தூர் கோவில் விபத்து” அறநிலையத்துறை அலட்சியத்திற்கு கண்டனம்”

மேற்கண்ட தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

காவல்துறை அதிகாரி திரு. பெரிய பாண்டியன் அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலி – வீரத்துறவி

பத்திரிகை அறிக்கை
குற்றவாளியை பிடிக்க சென்று பலியான காவல்துறை அதிகாரி
திரு. பெரிய பாண்டியன் அவர்களுக்கு
இதயபூர்வமான அஞ்சலி..
கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்து தப்பிய குற்றவாளிகளைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திரு. பெரிய பாண்டியன் அவர்கள், குற்றவாளிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை அளிக்கிறது. அவருடன் சென்ற கொளத்தூர் ஆய்வாளர் திரு. முனிசேகர் அவர்கள் காயமடைந்துள்ளார்.
எந்த மாநிலம் ஆனாலும், குற்றவாளிகளை பாதுகாப்போர் தேச விரோதிகள் தான். குற்றவாளிகளைப் பிடித்து விசாரணை நடத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பதும், திருட்டுப்பொருட்களை மீட்பதும் காவல்துறை அதிகாரிகள் கடமை. காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
இதனை ஊடகங்களும், நடுநிலை அரசியல் கட்சிகளும் கண்டிக்க முன் வரவேண்டும். இதுவே, ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் ஒரு குற்றவாளியை தனது தற்காப்பிற்காக சுட்டதாகக் கூறியபோது, மனிதபிமானம் பேசியவர்களே, காவல்துறை ஆய்வாளர் உயிரும் மனித உயிர்தானே? ஏன் மவுனம் காக்க வேண்டும். தமிழகத்திலும் குற்றவாளிகள் காவல்துறை அதிகாரிகளை தாக்குவதும், கொலை மிரட்டல் விடுப்பதும் தொடர்ந்துதான் வருகிறது. புழல் சிறை முதல் ஆம்பூர் முதலான பல சம்பவங்களில் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் யாரும் இதுவரை வாய் திறந்து கண்டிக்க முன் வரவில்லை என்பது வருத்தமான விஷயம். குற்றவாளியை பாதுகாக்கும் ஒரு வன்முறை கூட்டம், சிறையில் இருக்கும் பயங்கரவாதிகள் காவல்துறை அதிகாரிகளை கண்மூடித்தனமாக தாக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதைவிட கொடுமை, இதனை காவல்துறை உயர் அதிகாரிகளோ, மாநில அரசோ கவலையோடு அணுகி, தீர்வு காண முற்படுவதில்லை என்பதுதான்.
சட்டம் அதன் கடமையை செய்ய வேண்டும் என்பது சரி. அதே சமயம், குற்றவாளிகளுக்கு மனித உரிமை பேசப்போய் தான் குற்றவாளிகள் தைரியமாக இதுபோன்ற பயங்கரவாத செயல்களை செய்யவும் துணிகிறார்கள்.
குற்றவாளிகளையும், அவர்களுக்கு துணை நிற்போரையும் ஈவுரக்கமின்றி உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் நடக்காது.
கடமையை செய்ய சென்று பலியான திரு. பெரிய பாண்டியன் அவர்கள் ஆன்மா நற்கதி அடைய இந்து முன்னணி எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கொளத்தூர் காவல்துறை ஆய்வாளர் திரு. முனிசேகர் அவர்கள் விரைந்து குணமடைய தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இரு காவல்துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உரிய இழப்பிடு வழங்கவும், இது போல் இனிமேல் நடவாமல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய உதவிகளை காவல்துறை அதிகாரிகளுக்கு எல்லா மாநில அரசுகளும் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

திருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்-இராம.கோபாலன்

பத்திரிகை அறிக்கை

திருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்..

6.12.2017 அன்று சென்னை பெரம்பூரில், விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற தலித்-இஸ்லாமிய எழுச்சி நாள் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு, இந்தியாவில் உள்ள இந்து கோயில்களை இடித்துவிட்டு, அங்கு புத்தவிகார்களை கட்ட வேண்டும் என்று பேசியிருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

திருமாவளவன், தான் இந்துவா ? இல்லையா? என்பதைத் தெரிவிக்க வேண்டும். இவர், முஸ்லீம், கிறிஸ்தவ மதவாதிகளின் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறார்.

இந்து கோயில்களை இடித்து புத்தவிகாரம் கட்டுவேன் என்கிறார். இவை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று கூற வருகிறாரா? அப்படியானால் , வேளாங்கண்ணி, மயிலை சாந்தோம் சர்ச், சென்னை ஜார்ஜ் கோட்டை, புதுச்சேரி பெரிய சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா முதலானவற்றை அகற்றி இந்து கோயில்களாக மாற்ற ஆதரவு தெரிவிப்பாரா? அதுமட்டுமல்ல தமிழகத்தில் 3000 மேற்பட்ட கோயில்களை இடித்து, மசூதி, தர்கா, சர்ச் கட்டிவுள்ளதற்கு ஆதாரம் இருக்கின்றன. நாடு முழுவதும் 30,000 அதிகமான கோயில்கள் முகலாயர்களான முஸ்லீம்களால், ஆங்கிலேய, டச்சு, போர்சுக்கீசிய, பிரெஞ்சு கிறிஸ்துவர்களால் இடிக்கப்பட்டு மசூதி, சர்ச்களாக மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து, அவரது நிலைப்பாட்டை அறிவிக்கத் தயாரா? ஆனால், திருமாவளவன் குறிப்பிட்ட காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், ஷ்ரீரங்கம் ஆலயமும் பல்லாயிரம் கணக்கான ஆண்டுகளாக இந்து கோயிலாகத்தான் இருந்து வருகின்றன.

இப்படி பேசினால், முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகள் சந்தோஷப்படும் என நினைக்கிறார் திருமாவளவன், ஆனால், இலங்கை, மியான்மார் முதல் எல்லா நாடுகளிலும் புத்த மதத்தினர், முஸ்லீம்களை வெறுத்து ஒதுக்குகிறார்கள். மியான்மார் நாட்டில் பொது அமைதியை கெடுத்த ரோஹிங்கயா முஸ்லீம்களை அந்நாட்டு இராணுவம் அந்நாட்டைவிட்டே விரட்டயடித்துள்ளது. இதன் மூலம் புத்த மதத்தினர் எப்படி முஸ்லீம்களை புறக்கணிக்கிறார்களோ, அதுபோல இந்தியாவிலும் நடக்க வேண்டும் என மறைமுகமாக கூற வருகிறாரா?

எப்படியிருந்தாலும், திமுகவின் இந்துவிரோத ஆரம்ப காலம் போல் இப்போது இல்லை, இந்து விரோத பேச்சிற்கு இந்து சமுதாயம் கண்டிப்பாக பதிலடிக் கொடுக்கும்.

திருமாவளவன் அவர்கள், பிற்பட்ட சமுதாயத்தின் அரசியல் தளத்தை கையில் எடுத்தார். ஆனால், அதன்பின் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளை மதமாறிய கிறிஸ்துவர்கள் அபகரிப்பதையும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிப்போன, தாழ்த்தப்பட்டகளுக்கு அங்கு அநீதி இழைக்கப்படுவதையும் கண்டிக்க முன் வரவில்லை. கிறிஸ்தவ, முஸ்லீம்களின் கைக்கூலியாக எப்போது அவர் செயல்பட ஆரம்பித்தாரோ, அப்போதே, திருமாவளவன் யார்? என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.

தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. ஏற்கனவே அரசியல் கட்சி எனும் அங்கிகாரத்தையும் அவரது கட்சி இழந்துவிட்டது. அந்த கட்சிக்கு, வரும் தேர்தலில், இந்துக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும், ஆன்மிகப் பெரியோர்களும், அமைப்புகளும் திருமாவளவன் கருத்தினைக் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்துக்களின் புனிதமான கோயில்களை இடிப்போம் எனக் கூறும் திருமாவளவன் பேச்சுக்கு இந்து முன்னணி கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம்விளைவிக்கும் வகையிலும், மத மோதல்களை உண்டாக்கும் உள்நோக்கத்துடனும், இந்து கோயில்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பேசிய திருமாவளவன் மீது தமிழக அரசு, சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

8-12-2017

தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்

டிசம்பர் 6 – அயோத்தி ராம ஜென்ம பூமியில் ஸ்ரீ ராமனுக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்றும் அதற்காக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தீர்மானம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரி இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தின் 140க்கும் மேற்ப்பட்ட முக்கிய நகரங்களில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பேர் கலந்துகொண்டனர்.

தமிழகம் இந்து எழுச்சி பெற்ற மாநிலமாக உருவாகி வருகிறது என்பதை இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு உணர்த்துகிறது.

தமிழகம் என்றும் ஆன்மீகத்தின், தேசியத்தின் பக்கம் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது.

திரளாக கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் இந்துமுன்னணி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் வாழ்த்து மடல்

உயர்திரு. பாலசுப்ரமணிய ஆதித்தனார் அவர்கள்
தினத்தந்தி நாளிதழ்,
சென்னை.

அன்புள்ள திரு. பாலசுப்பிரமணிய ஆதித்தனார் அவர்களுக்கு வணக்கம்.
தினத்தந்தி நாளிதழ் (75ஆம் ஆண்டு) பவள விழாவிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்த நடுநிலை நாளேடாக என்றும் தினத்தந்தி திகழ்வது பாராட்டுக்குரியது. தமிழை தமிழருக்கு கற்றுத்தந்து, பாமரரையையும் உலக நடப்பு தெரிந்தவனாக ஆக்கிய பெரும் புரட்சியை தினத்தந்தி துவக்கக் காலத்திலிருந்து செய்து வருவதை எண்ணிப் பார்க்கிறேன். எளிய நடை, ஆழமான கருத்து, சிறப்பான வடிவமைப்பு என ஒரு பத்திரிகை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தினத்தந்தி முன்மாதிரியாக திகழ்ந்துகொண்டிருக்கிறது.
தினத்தந்தியின் மூன்றாம் தலைமுறை நிர்வாகத்தினராக தாங்கள், உங்கள் பாட்டானாரின் கனவை நினைவாக்குவது பெருமிதம் கொள்ள வைக்கிறது. தற்போது Dt next என்ற ஆங்கில பதிப்பை கொண்டு வந்ததும், தந்தி செய்தி தொலைக்காட்சி, துவங்கிய சில ஆண்டுகளிலேயே அசைக்கமுடியாத இடத்தை பிடிக்க வைத்ததும். இணையதள பத்திரிகையாக வெளியிட்டு வருவது போன்ற தொலைநோக்கு பார்வையுடன் அடுத்த தலைமுறைக்கு தினத்தந்தி கொண்டு சென்றதன் மூலம் பாரம்பரியத்தோடு, நவீன தொழிட்நுட்பம், மாறி வரும் சூழலுக்கு ஏற்ப சிறந்த மாற்றத்தை உருவாக்கியிருக்கிறீர்கள்.
இந்நன்னாளில், உங்கள் பாட்டனார், தந்தை முதலானவர்களின் பன்முகத்தன்மையை எண்ணிப் பார்க்கிறேன். அத்தகையதோர் வளர்ச்சியில் நீங்களும், உங்கள் மகனும் ஊடகத்துறையில் தொடர்ந்து வெற்றி நடைபோட எல்லாவல்ல திருச்செந்தூர் செந்திலாண்டவரை வணங்கி, ஆசிர்வதிக்கிறேன்.
தினத்தந்தியின் 75ஆம் ஆண்டு விழாவில் மாண்புமிகு பாரத பிரதமர் உயர்திரு. நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொள்வது தினத்தந்தியின் புகழ் மகுடத்திற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக இருக்கிறது.
தினத்தந்தி குழுமம் மேலும் மேலும் வெற்றிகள் பல பெற்று தேசத்திற்கு தொண்டாற்றிட எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
நிறுவன அமைப்பாளர்

மாநிலத் தலைவரின் தீபாவளி வாழ்த்துக்கள்

சீனப் பட்டாசுகளை புறக்கணிப்போம்.
சிவகாசி பட்டாசுகளை வெடிப்போம்…
பாரம்பரிய வழக்கத்தை கடைபிடிப்போம்..
இந்துமுன்னணி மாநிலத் தலைவர் திரு #காடேஸ்வரா_சுப்பிரமணியம் அவர்களின் #தீபாவளி வாழ்த்துச் செய்திகள்

வீடுகள் பலம் பெற சக்தி பூஜை கொண்டாடுவோம்

தர்மத்தை காக்க, அதர்மம் அகற்ற அன்னை ஆதிபராசக்தி தனது ஒன்பது அம்சங்களை வெளிப்படுத்தி அகிலத்தை காத்து ரட்சித்தாள். அதையே நவராத்திரி விழாவாக நாம் கொண்டாடுகிறோம்.

ஒன்பதாவது நாள் ஆயுதங்களை எல்லாம் பூஜித்து அன்னை வழிபட்ட தினத்தை ஆயுதபூஜை என்று கொண்டாடுகிறோம்.

குறிப்பாக தமிழகத்தில் வீடுகள், பணியிடங்கள், தொழிற்சாலைகள் என விசேஷமாக ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது.

பண்டைய காலத்தில் படைத் தொழிலும், விவசாயமும் முக்கியமானதாக இருந்தது.

எனவே வீட்டுக்கொரு உழவனும், மறவனும் இருந்தான். அவர்களது ஆயுதங்களை இந்த ஒன்பதாம் நாள் பூஜையில் வைத்து வணங்குவது வழக்கமாயிருந்தது.

ஆபத்து வந்தால் எதிர்த்துப் போரிடும் வல்லமையும், ஆயுதங்களும் அவர்களிடம் இருந்தது.

பிற்காலத்தில் பல்வேறு தொழில்கள் வளர்ச்சி பெற்றதால் ஆயுதபூஜையின் தன்மையும் மாறியது.

தற்போது கால்குலேட்டரையும், மௌஸையும் வைத்துக்கூட பூஜை செய்கிறார்கள்.

ஆனால் வீடுகள் பாதுகாப்பானதாக இருக்கிறதா?…

வீட்டை ஒரு கொள்ளையனோ, எதிரியோ தாக்கும் பட்சத்தில் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளக் கூடிய பலம் பொருந்திய வீடுகளாக, நமது வீடுகள் இருக்க வேண்டாமா?

ஒரு பாம்போ, விஷ ஜந்துவோ வந்தால்கூட அலறியடித்து ஓடும் சூழல் நமது வீடுகளில் உருவாகி வருகிறது.

எனவே இந்துக்களின் வீடுகள் பலம் மிக்கதாக, எத்தகைய ஆபத்துக்களையும், தாக்குதல்களையும் எதிர்த்து முறியடிக்கும் வல்லமை உள்ளதாக மாற வேண்டும்.

எனவே ஆயுத பூஜை அன்று நமது வீடுகளில் தொழில் சம்பந்தமான ஆயுதங்களுடன், நம்மை தற்காத்துக் கொள்ள தேவையான சில ஆயுதங்களையும் வைத்து வழிபடுவோம்.