பஸ் ஸ்டிரைக் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை

பஸ் தொழிலாளர்களுக்கும், தமிழக அரசுக்கும் இந்து முன்னணி வேண்டுகோள்..
அரசு பேருந்து தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில் பஸ் ஸ்டிரைக் தொடர்ந்து கொண்டுள்ளது.

தொழிலாளர்களின் ஓய்வோதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் ஏற்புடையதாக, நியாயமானதாக இருக்கிறது. தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்று, வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தை ஆண்டு, ஆளுகின்ற திமுக, அதிமுக அரசுகளின் தவறான நடவடிக்கைகளால் போக்குவரத்துத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் உள்ள இடதுசாரி தொழிற்சங்கங்களும் இதற்கு உடந்தயைாகவே செயல்பட்டு வந்துள்ளன.
பேருந்து வேலை நிறுத்தத்தால் கடந்த சில நாட்களாக தமிழத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. பலதரப்பட்ட மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வேலை நிறுத்தம் என்பது எப்படி இருக்கலாம் என்பதற்கும், அரசோ, நிர்வாகமோ முன் எச்சரிக்கையாக எப்படி செயல்படுவது என்றும், ஒரு வரைமுறையை உருவாக்க வேண்டும் என்ற கருத்து பொது மக்களிடமும், உண்மையான சமூக அக்கறையுடையோரிடமும் அலசப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்வோர் அதிகம். இந்நிலையில் தொடரும் பஸ் ஸ்டிரைக்கால் இது கேள்விக்குறியாகி உள்ளது. திட்டமிட்டு, பொங்கல் பண்டிகையை சீர்குலைக்க வேண்டும் என்ற தீய நோக்கில் சில தொழிலாளர் சங்கங்கள் ஸ்டிரைக் தொடரும் என அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது. மக்களுக்குத் தொல்லை தருவதால், மக்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் என்பதை தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, வருகின்ற பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட, சொந்த ஊருக்குச் சென்று திரும்பவும் தேவையான போக்குவரத்து சேவையை தமிழக அரசும், பேருந்து தொழிலாளர்களும் செய்து தர வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை இந்து முன்னணி தெரிவித்துக்கொள்கிறது
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

11.1.18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *