கவியரசர் கண்ணதாசன் அவர்கள் கல்கி வார இதழில் 1975இல் எழுதிய இந்து நாகரிகம் என்ற கட்டுரையிலிருந்து சில வரிகள்;
“முஸ்லிம்களும் ஆங்கிலேயர்களும் அடுத்தடுத்து வந்து வேருன்றிய காலம் அது.
அப்போதைய இந்து தன்னுணர்வு குறைந்தவனானான்.பிற மதத்தவரது பழக்க வழக்கங்களால் கவரப்பட்டான்.
முஸ்லிம்களிடமிருந்து குருமாவையும்,பிரியாணியையும் பெற்றுக்கொண்டான். கிருஸ்தவர்களிடமிருந்து விவஸ்தையற்ற கட்டுப்பாடற்ற சுக போகங்களைக் கற்றுக் கொண்டான்.
தனக்கென்று ஒரு தனி நாகரிகம் இருப்பதை அவன் மறந்து போனான்.நாளடைவில் அந்த மறதி வளர்ந்திருக்கிறதே தவிர குறைவில்லை.
வேறு எந்த மதமும் வாழ்க்கை நாகரிகத்தை போதிக்கவில்லை; இந்து மதம் ஒன்றே போதிக்கிறது.
சாப்பிடக் கூடியது எது, சாப்பிடக்கூடாதது எது, என்பதிலிருந்து எந்த ஆடைகளை எப்போது அணிய வேண்டும் என்பதுவரை அனைத்தையும் சொல்லிக் கொடுக்கிறது.
மேற்கத்திய நாகரிகம் மத நாகரிகமல்ல. அது மதம் பிடித்த நாகரிகம்.
ஆனால் ஓர் இந்துவின் நாகரிகம் தெய்வீக அடிப்படையில் அமைந்தது.
அது நம் குடும்பத்தைக் கோவிலாக்கியது. கணவனை தேவனாக்கியது.மனைவியைத் தேவியாக்கியது.
சுவாமி விவேகானந்தர் சொல்வது போல் “ஓர் இந்துவுக்கு சொந்த வீடு இருக்கக் கூடாது.
அப்படி ஒரு வீடு இருக்குமானால் அது அதிதிகளை(விருந்தினரை) வரவேற்று உபசரிப்பதற்காகவே”பிறரை வரவேற்று கருணை காட்டுவதே கோவில்.
ஆகவே இந்துவின் குடும்பம் ஒரு கோவில். அவன் தினமும் பூஜை செய்கிறான்.
காரணம் அன்றைக்கு தன்னை புனிதப்படுத்திக் கொள்கிறான். அவன் விபூதியை “திருநீறு ” என்கிறான்.
நாமத்தை “திருமண்” என்கிறான். அவற்றைத் தினமும் இட்டுக்கொள்கிறான்.
காரணம் இந்த உடல் தீயில் வெந்து “நீறாகப்”போகிறது. அல்லது மண்ணில் புதைந்து மண்ணாகப் போகிறது என்பதை தினமும் நினைத்துக் கொள்வதற்காகவே.
அப்படி நினைத்துக் கொள்வதன் மூலம் “சாகப்போகிற இந்த உடல் தவறு செய்யக்கூடாது” என்று சத்தியம் பூணுவதற்காகவே.
அவன் நீராடி உடலைக் கழுவுகிறான். பூஜை செய்து உள்ளத்தைக் கழுவுகிறான். நான் குறிப்பிடுவது சரியான-நல்ல இந்துவை.
இந்து சமுதாயம் மறந்து விட்ட நாகரிகத்தை நாம் நினைவு படுத்தியாக வேண்டும்.
நமது நாகரிகத்துக்கு ஒவ்வோர் அணுவிலும் உயர்ந்த நோக்கம் உண்டு.
அது தர்மத்தில் முளைத்தெழுந்த கர்மம்-காரியம். இந்து நாகரிகம் குழந்தை பிறந்தது முதல் சாகும்வரை அதற்கு வழி காட்டுகிறது…