இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து கோயில்களை, கோயில் சொத்துக்களைப் பராமரிக்க அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இத்துறையில் இருப்போர் மீது ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தத் துறை எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ, அதற்கு நேர்மாறாக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முறைகேடுகள், ஊழல் நிறைந்தத் துறையாக அது விளங்கி வருகிறது.
மக்களும், மன்னர்களும், செல்வந்தர்களும் வாரிவாரி கொடுத்த சொத்துக்களும், காணிக்கைகளும், கொள்ளையர்களின் கையில் சிக்கிய கதையாக போயுள்ளது. தோண்டத் தோண்ட, பத்மநாபபுறம் கோயிலைவிட வற்றாத செல்வத்தால் நிறைந்திருந்த தமிழகத் திருக்கோயில் சொத்துக்கள், கடலில் கொட்டியதுபோல ஆகிவிட்டது.
எந்தத் துறையிலும் இத்தகைய விபரீதத்தை காண முடியாது. பல அரசுத் துறை அதிகாரிகள் மீதும் புகார் வந்தால், லஞ்ச ஒழிப்புத் துறை, வருமான வரிச் சோதனை போன்றவற்றால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவை குற்ற பின்னணி கொண்டிருந்தால், கைது நடவடிக்கையையும் நீதிமன்றம் அனுமதிக்கின்றது. ஆனால், எந்தத் துறையிலும் ஊழல் செய்தவர்கள், லஞ்சம் பெற்றவர்கள், முறைகேடாக செயல்பட்டவர்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள் போன்றவர்களுக்கு ஆதரவாக ஊழியர் சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்ததில்லை. எல்லா அரசுத் துறைகள் ஊழியர்களும் சங்கம் வைத்துள்ளார்கள். குற்றம் சாட்டப்பட்ட நபர், அவரே, தான் நிரபராதி என்று நிரூபித்து விடுதலையாவதோ, அல்லது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தண்டனை பெறுவதோ நடைபெறுகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை, முறைகேட்டிற்காக விசாரிக்க அழைத்து சென்றபோதே இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது இந்த ஊழியர் சங்கம். மேலும், பா.ஜ.க. முக்கிய தலைவர் ஹெச். ராஜா, வேடசந்தூர் பொதுக்கூட்டத்தில் பேசியதை திரித்து, வதந்தியை பரப்பினர். இதற்காக எந்த அறிவிப்பும் செய்யாமல், அனுமதியும் பெறாமல் கோயில் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது சட்டவிரோத செயல். இதற்காகவே இவர்கள் மீது வழக்குப் போட்டிருக்க வேண்டும். மேலும் ஹெச். ராஜாவைக் கண்டித்து, நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அதற்காக கோயில் மண்டபங்களில் ஊழியர் சங்கத்தினர் தங்கவும், காலையில் குளித்து தயாராவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு யார் அனுமதி அளித்தனர்? அப்படி வந்தவர்கள், தங்கள் சொந்த காரியமாக விடுப்பு எடுத்துள்ளனர். சொந்த காரியம் என கூறிவிட்டு இப்படி நடந்துகொள்ளலாமா?
அதைவிட அவமானகாரமான விஷயம், உண்ணாவிரத பந்தலில் வைக்கப்பட்டிருந்த பாதாகையில் தமிழ்நாடு அறநிலையத் துறை என்று இருந்துள்ளது. அதில் `இந்து சமய’ என்ற வாசகம் இல்லை. அப்படியானால், இவர்கள் யாருக்காக பணி செய்கிறார்கள் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம். அந்த கூட்டத்தில் பேசிய பலரும் கோயிலை அழிக்க வேண்டும் என பேசி வருவர்கள். உதாரணமாக, திமுகவின் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழகத்தின் அருள்மொழி போன்றோர் அக்கூட்டத்தில் பேசியுள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை பாதுகாக்கும், பராமரிக்கும் பணியில் இல்லை, கோயிலை அழிக்கவே அவர்களுக்கு கோயில் வருமானத்திலிருந்து சம்பளம் பெறுகிறார்கள் என்பதைத் தான் இந்து முன்னணி பல ஆண்டுகளாக சுட்டிக்காட்டி வருகிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு இருக்கின்றனர். நாத்திக எண்ணம் கொண்டோர், அரசியல்வாதிகளுக்கு விசுவாசியாக இருக்கின்றனர். இவர்கள் எல்லாம், கோயில் சொத்துக்கள் கொள்ளைப் போக துணையிருக்கின்றனர். பக்திமானாக இருக்கும் சிலர் பேராசையாலோ அல்லது அச்சுறுத்தலாலோ, சிலை கடத்தல் முதல் ஊழல் வரை பல முறைகேட்டிற்குத் துணை போயிருக்கின்றனர்.
இந்துக்கள் விழிப்படைந்துவிட்டனர். வெகுண்டெழுந்து போராடத்துணிந்துவிட்டனர். கோயில் என்பது இறைவன் இருக்கும் வீடு. அதனை அரசியல் களமாக்கி, அழிக்கத் துடிப்போரை விரட்டி அடிக்கவும் தயங்கமாட்டார்கள். தமிழக அரசு, ஊழியர்களின் தீய நடத்தைக்காகவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க போராடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறையை கலைத்துவிட்டு, தற்காலிகமாக வக்ஃப் வாரியம் போல தனித்து இயங்கும் வாரியம் அமைத்து, அதன்பின், கோயில்கள், கோயில் சொத்துக்கள் பாதுகாக்க நிரந்தரமான தீர்வை ஏற்படுத்திட ஒரு குழுவை ஏற்படுத்தி நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்து முன்னணி தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)