Tag Archives: சதுர்த்தி 2020

திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

01.08.2020

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக தற்போது ஆகஸ்ட் 31 வரை தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்த சமயத்தில் முழுமுதற்க் கடவுள் விநாயகரின் சதுர்த்தி விழா வருகிறது. இது இந்துக்கள் அனைவரது வீட்டிலும் கொண்டாடப் படும் விழா . விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடவில்லை என்றால் தெய்வகுற்றம் கட்டாயம் ஏற்படும் என்பதும் மிகப் பெரும் நம்பிக்கை. கொரோனா நீங்க வேண்டும் என்றால் கட்டாயம் கடவுள் அனுக்கிரகம் தேவை.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்து முன்னணி பேரியக்கம் இந்த வருடம் கொரோனாவை விரட்டும் வகையில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை சிறப்பாக, அதே சமயம் எளிய முறையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடனும் கொண்டாட திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா ஊர்வலங்கள் இல்லாமல் எளிய முறையில் சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனாவிற்கான தமிழக அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்து கொண்டாடுவதென முடிவெடுத்துள்ளது.

கொரோனா காரணமாக பீதியிலுள்ள மக்கள் மன உளைச்சலில் உள்ளனர். பல தற்கொலைகள் இதன் காரணமாக நடந்துள்ளது குறிப்பிடத் தக்கது. தனக்கு ஏதாவது பாதிப்பு என்றால் மனிதன் கடவுளை நாடித்தான் தீர்வு காண்பான்.

ஆகவே விநாயகரிடம் முறையிட, கொரோனாவை விரட்ட, விழா சிறப்பாக நடத்த தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை நல்ல முறையில் செய்துகொடுக்கவேண்டும்.

மேலும் மக்கள் அவரவர் இல்லங்களில் குறைந்த பட்சம் மஞ்சள் பிள்ளையாரையாவது வைத்து விநாயகர் பெருமானை வழிபட்டு இந்த கொடிய காலகட்டம் மாறிட மனமார பிரார்த்தனை செய்திடவேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணிகளில்

காடேஸ்வராசி.சுப்பிரமணிம்

மாநிலத்தலைவர்