நீதித்துறையின் நடவடிக்கை மிகுந்த கவலை அளிக்கிறது – இராம.கோபாலன் அவர்களின் பத்திரிக்கை அறிக்கை 

நீதித்துறையின் நடவடிக்கை, நீதிபதிகளின் செயல்பாடு 

மிகுந்த கவலை அளிக்கிறது

1994ஆம் ஆண்டு இந்து முன்னணியின் மாநில தலைவர் அட்வகேட் ராஜகோபால் கொலைசெய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஐவர் சமீபத்தில் உச்சநீதி மன்றத்தால் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும். இவ்வழக்கில் நடுநிலையாளர்கள் மனதில் எழும் கேள்விகள் ஊடகத்தின் மூலம் தேசத்தின் முன் வைக்கிறோம்.

23 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதி மன்றம் இதில் தலையிட என்ன அவசியம் வந்தது?

இந்த வழக்கில் குற்றவாளிகள் என கீழ்க்கோர்ட் முதல் சென்னை உயர்நீதி மன்றம் வரை தண்டனை வழங்கி, தண்டனையை உறுதி செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்வதானால், எல்லா வழக்குகளையும் உச்சநீதிமன்றமே நேரில் விசாரிக்கலாமா?

23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த வழக்கை காவல்துறை விசாரிக்க முடியுமா? அப்படியே விசாரித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தினாலும் அதற்கான ஆதாரங்களை எப்படி திரட்டுவார்கள் என்பதை உச்சநீதி மன்ற நீதிபதிகள் கவனத்தில் கொண்டார்களா?

இந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்த கற்பக விநாயகம் உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகள் தரப்பில் வாதாடி விடுதலை வாங்கிக்கொடுத்துள்ளார். ஒரு கிரிமினல் குற்றவாளி, அதிலும் மத அடிப்படை பயங்கரவாதிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி வாதாடுவது, நீதிபதியின் மாண்பிற்கு ஏற்ற செயலா? இப்படி கிரிமனல் வக்கீலாக செயல்படுவதானால், இவரது நீதிபதிக்கான அரசு சலுகை, அரசின் நிதி உதவிகளை திரும்ப ஒப்படைப்பதுடன், இனி எந்த நிலையிலும் இவர் நீதிபதி அல்லது நீதியரசர் என்ற பெருமைமிகு குறியீட்டை இவரது பெயருக்கு முன் போட்டுக்கொள்ள அனுமதிக்கூடாது இல்லையா?

இவர் பணத்திற்காக குற்றவாளிகள் தரப்பில் வாதாடியிருப்பதால், இவர் நீதிபதியாக செயல்பட்டது குறித்த ஐயம் எழுகிறது. சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்த ஒருவர், பணத்திற்காக வாதாடுவாரேயானால், இதில் உள்நோக்கம் இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது.இவரால் தீர்ப்பு வழங்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்சநீதி மன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

மேலும், இனி இவரை ஓய்வு பெற்ற நீதிபதி என்ற மதிப்பில் சமூக பிரச்னைகளில் விசாரணை செய்ய கமிஷன் போடும்போது நியமித்துவிடக்கூடாது என மாநில, மத்திய அரசுகளை, உச்சநீதி மன்றத்தை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இந்த வழக்கில் இரண்டு கொலை குற்றவாளிகளுக்கு மத்திய அமைச்சராக இருந்த குர்ஷித் அலம்கான் வாதாடியிருக்கிறார். மத்திய அமைச்சராக பொறுப்பில் இருந்தவர், நடுநிலையாக செயல்படுவேன் என எடுத்துக்கொண்டு பதவி வகித்தவர், தற்போது பதவியில் இல்லாதபோது, குற்றவாளிகளுக்கு, அதிலும் கிரிமினல் குற்றவாளிகளுக்கு வாதிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அலம்கானின் செயல்பாடு, குற்றவாளிகள் முஸ்லீம்கள் என்பதால் வாதிடுகிறார் என்றால், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது இவரது நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் இதுவரை நூற்றுக்கணக்கனோர் ஈவுஇரக்கமின்றி இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். மதுரையில் தொடர்ந்து வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டும், குற்றவாளிகள்  கைது செய்யப்பட்டு வரும் நிலையில், குற்றவாளிகள் என நீதிமன்றங்களால் தண்டனைப் பெற்றவர்கள் நிரபராதி என விடுதலை ஆகும்போது, குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு இது ஊக்கம் கொடுப்பதாக இது அமையும் என எச்சரிக்கிறோம். 

மக்கள் நீதித்துறையின் மீது வைத்துள்ள நம்பிக்கை பொய்த்துவிட்டால், அது பெரும் ஆபத்தாக முடிந்துவிடும். நீதித்துறையின் நடவடிக்கை கண்ணிய குறைவாகவும், நீதிபதிகளின் பேச்சு, செயல்பாடு அவர்கள் வகிக்கும் பதவியின் மாண்பை குலைப்பதாகவும் இருந்து வருகிறது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நீதிமன்றத்தின் மீது மக்கள் பெரு நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், இன்றோ அது கேள்விக்குறியாகி வருகிறது என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மீது தமிழக அரசு காலதாமதப்படுத்தாமல் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *