Tag Archives: #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு

கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர்

26.10.20

நமது முன்னோர்கள் கோவில்கள் காலங்காலமாக இருக்கவே நிலங்களை, வீடுகளை எழுதித் தந்தார்கள்.

ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சீரழிந்து கிடப்பதைப்பற்றி கவலைப்படாத இந்து சமய அறநிலையத்துறை, அக்கோவிலுக்குச் சொந்தமான 35 ஏக்கர் புன்செய் நிலத்தை கலெக்டர் பெருந்திட்ட வளாகம் கட்ட 1,98,87,038/- கிரயம் செய்ய இருப்பதாகவும், ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்க பத்திரிகை விளம்பரம் செய்துள்ளது. இந்து முன்னணி இதற்குக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

அரசின் வழிகாட்டுதலின்படி சுமார் 100 கோடி தரவேண்டியதற்கு, 1.98 கோடியை நிர்ணயம் செய்துள்ளது பித்தலாட்டமான வேலை, சட்டவிரோதமான செயல்.

இந்த தொகை வருங்காலத்தில் காணாமல் போய்விடும். இந்த நிதி கண்டிப்பாக அந்த கோவில் நிர்வாகத்திற்கு பயன்படாது. கோயில் பராமரிப்பைப் பற்றி கவலைப்படாத தமிழ்நாடு இந்து சமய அறநிலயத்துறை, கோயில் நிலங்களை அரசுக்கு தாரை வார்க்க சேவகம் செய்கிறது.

இதனை எதிர்த்து அவ்வூரின் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மூலமாகவே இந்து முன்னணி ஆட்சேபணை கடிதங்களை அனுப்பி உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இன்னமும் அரசுக்கு சொந்தமாகாத அந்த இடத்தில் கட்டுமான பணிகளை அரசு செய்து வருவது சட்டவிரோதமானது, கண்டிக்கத்தக்கது.

எனவே, அரசுக்கு அந்த இடம் தேவை என்றால், அதனை எடுப்பதற்கு முன்பு, அதே மதிப்புள்ள, அதே பரப்பளவு உள்ள அரசு நிலம் அல்லது தனியார் இடத்தை வாங்கி, அதனை கோவில் பெயருக்கு அரசாங்கம் பதிவு செய்து தர வேண்டும்.
அப்படி செய்யாமல் இந்த நிலத்தை அரசிற்கு தாரை வார்ப்பது, அந்த சொத்தை அளித்தவர்கள் எந்த நோக்கத்திற்காக தந்தார்களோ அதற்கு எதிரானது. அது அவர்களுக்கு செய்யும் துரோகம். இதனை எதிர்த்து இந்து முன்னணி போராடும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.

சுமார் பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவிலை நிர்வகிக்காமல் கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்ய துணைபோகும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்த்தரமான செயலை இந்துக்கள் உணர்ந்து போராட முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி,
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(த. மனோகரன்)
மாநில செயலாளர்

கோவில்களின் நிதியைக் கொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள, அந்தந்தப் பகுதியில் உள்ள ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கிட வேண்டும்- வீரத்துறவி இராம. கோபாலன் அவர்கள் அறிக்கை

24.04.2020

இராம.கோபாலன் நிறுவன அமைப்பாளர் இந்துமுன்னணி சென்னை

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்பட 47 கோவில்களின் உபரி நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையின் முதன்மைச் செயலர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தெரியவருகிறது,

நமது கோவில்கள் பண்டைய காலம் முதல் மருத்துவ கூடங்களாகவும், பசி தீர்க்கும் மையங்களாகவும் செயல்பட்டு வந்துள்ளன. இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கோவில்களில் அன்னதான திட்டத்தை துவங்கிவைத்தார்கள்.

கொரானா தொற்று காரணமாக
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள
இந்த நேரத்தில் ஆலயங்களில் செயல்பட்டுவந்த அன்னதான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்காமல், இந்த அவசிய சேவையை இந்து அறநிலையத்துறை முடக்கி வைத்துள்ளது

அண்டை மாநிலமான ஆந்திராவில் தினசரி 1 லட்சம் பேருக்கு திருப்பதி கோவில் மூலமாக உணவு வழங்குவதாக கூறப்படுகிறது. இதேபோன்று புதுச்சேரியில் கோவில்களில் நடைபெற்று வந்த அன்னதான திட்டத்தை ஊரடங்கு நேரத்தில் தடையின்றி பொதுமக்களுக்கு சிறப்பாக கொண்டுபோய் சேர்க்கின்றார்கள். ஆனால் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை இதுபோன்ற சேவைகளை செய்ய முன்வராமல். காணிக்கையாக செலுத்திய நிதியினை பக்தர்களின் ஆலோசனையின்றி
கோவில் பணியாளர்கள், மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர்கள் ஒப்புதலுடன் அவசரகதியில் மடை மாற்றம் செய்வது கோவில்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்.

இந்த நெருக்கடி காலத்தில் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் சலுகை கொடுக்கப்படும் அதே நேரத்தில் இந்துகோவில் வருமானம் சுரண்டப்படுவது நியயாமா என்பதை அரசு சிந்திக்கவேண்டும்.

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் செயல்படுத்தபடும் அன்னதான திட்டங்களை விரிவுபடுத்தி கோவில்களின் சேவை மக்களுக்கு சென்றடைய அரசு வழிவகைசெய்ய வேண்டும்.

இந்து சமய நிறுவனங்கள் பட்டியலிட்டுள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருகோவில் உள்பட 47 கோவில்களின் உபரி நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில்

இராம. கோபாலன்

மத்திய தொல்பொருள் இலாகா கோவிலை கையகப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசோ,  மாநில அரசோ எதுவானாலும் இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

04.04.2020மத்திய தொல்பொருள் இலாகா கோவிலை கையகப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ எதுவானாலும் இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் – மாநிலத் தலைவர்அன்புடையீர் வணக்கம்.நேற்றைய தினம் மத்திய அமைச்சர் தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களை மத்திய அரசின் தொல்பொருள் இலாகா கையகப்படுத்தும் என்று கூறியிருக்கிறார் .இந்து முன்னணி துவக்க காலம் முதல் சொல்லி வருகின்ற 12 கோரிக்கைகளில் ஒன்று அரசு ஆலயத்தை விட்டு வெளியேறவேண்டும்.மேலும் தமிழகத்திலுள்ள கோயில்களை எல்லாம் ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் / ஐபிஎஸ் அதிகாரிகள், மடாதிபதிகள் கொண்ட ஒரு தனி சுதந்திரவாரியம் அமைத்து நிர்வகிக்க வேண்டும் என்பதே.இந்துக்களின் கோவில்களை தமிழக அரசின் ஊழல் மலிந்த இந்து சமய அறநிலைத்துறை நிர்வகிப்பதும், மத்திய அரசின் தொல்பொருள் இலாகாவிடம் செல்வதும் ஒன்றுதான்.அதனால் மத்திய அரசு தமிழக கோவில்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்.திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசு தமிழக கோவில்களை கையகப்படுத்தக் கூடாது என்று ஒரு அறிக்கை கொடுத்து இருக்கின்றார்.கடந்த 70 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு கோயில்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சுவாமி விக்கிரகங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளன. கோவிலுக்கு சொந்தமான சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் காணவில்லை. ஊழல்கள் தலைவிரித்து ஆடின.இத்தனை ஆண்டு காலமாக திமுகவும், திரு.ஸ்டாலின் அவர்களும் வாய்மூடி,கைகட்டி வேடிக்கை பார்த்தார்கள். காரணம் அறங்காவலர் என்ற பெயரில் திமுக கட்சிக்காரர்கள் சுகபோகமாக வாழ்ந்து வந்தார்கள்.இப்பொழுது மத்திய தொல்பொருள் இலாகா எடுத்துவிட்டால் இவர்கள் கட்சிக்காரர்கள் அறங்காவலர்களாக இருக்க முடியாது என்ற காரணத்தினால் திரு.ஸ்டாலின் அவர்கள் கோவில்களைப் பற்றி அறிக்கை தந்திருக்கிறார்.உண்மையிலே அவருக்கு கோவில் மீது அக்கறை இருக்குமானால் தமிழகத்தில் கொள்ளை போன விக்கிரகங்கள்,கோவில் சொத்துக்கள்,கிட்டத்தட்ட காணாமல் போன 3 ஆயிரம் கோவில்கள் இவற்றை கண்டுபிடிக்க குரல் கொடுப்பாரா? என்பது சாமானிய இந்துவின் கேள்வி.இந்துமுன்னணி கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்திலுள்ள கோவில்களுக்கும், மடங்களுக்கும் பாதுகாப்பாகவும், அநீதிகளை எதிர்த்து குரல் கொடுத்தும் வருகின்றது.அதேபோல மத்திய தொல்பொருள் இலாகா கோவிலை கையகப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ எதுவானாலும் இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் .சுதந்திர வாரியம் நிறுவ வேண்டும் என்பதே இந்து முன்னணி கோரிக்கை.தாயகப் பணியில்காடேஸ்வரா சுப்பிரமணியம்மாநிலத் தலைவர்

கோவில்களை அழிக்கும் தமிழக அரசின் சதித் திட்டம் – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கே கொடுப்பது கோவில்களை அழிக்கும் தமிழக அரசின் சதித் திட்டம் – இந்துமுன்னணி கண்டனம்.

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா செய்து கொடுக்கக் அனுமதிக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் 600 ஏக்கரா நிலங்கள் மட்டுமே கொடுக்கப் போவதாக தமிழக அரசு உயர் நீதி மன்றத்தில் வாதிட்டுள்ளது.

இது கோயில் நிலத்தை அபகரிக்கும் முயற்சி. மேலும் அரசின் இந்த முயற்சி சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவும் வகையில் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

ஏழைகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கவேண்டுமெனில் அரசுப் புறம்போக்கு நிலங்களை வழங்கலாம்.

மாறாக நம் முன்னோர்கள் கோவில் வழிபாடு சிறப்பாக நடக்கவேண்டும் என்பதற்காக தானம் கொடுத்த நிலத்தை அக்கிரமிப்பாளர்களுக்கு கொடுக்கலாமா? கோவில் நிலத்தை அழித்தால் வரும் காலத்தில் கோவில் அழிந்துபோகும்.

ஏற்கனவே பலமுறை இதைப்பற்றி தொடர்ந்து இந்துமுன்னணி அரசுக்கு எடுத்துக் கூறியும், அறிவுறுத்தியும் வந்துள்ளபோதும் பக்தர்களின் மனத்தை வேதனைபடுத்தும் வகையில் அரசு உயர்நீதி மன்றத்தில் இவ்வாறு கூரியுள்ளது மிகவும் வன்மையாக கண்டிக்கத்த தக்கது.

ஆகவே இந்த நிலைப்பாட்டை அரசு கைவிடவேண்டும் எனவும் , அரசாணையை ரத்து செய்யவேண்டும் எனவும் இந்துமுன்னணி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

அரசு மெத்தனம்- வழக்கின் ஆவணங்கள் காணவில்லை- தமிழக முதல்வருக்கு மாநில துணைத்தலைவர் கடிதம்

கோவில்களின் புராதான சிலைகளை , சொத்துக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான வைரவேல் உட்பட சிலைக்கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார் .

சிலைக்கடத்தல் தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், தமிழக அரசின் உள்துறை செயலாளர் அறிக்கை அளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

தமிழக அரசு ஹிந்து ஆலயங்ககளின் விஷயத்தில் மிகுந்த மெத்தனமாக நடந்து கொள்கிறது .

நேர்மையான போலீஸ் அதிகாரி பொன் . மாணிக்கவேல் அவர்களுக்கு பணி நீடிப்பு கொடுக்காமல் இருக்க காட்டப்பட்ட முக்கியத்துவம் தற்போது அந்த வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க காட்டவில்லை என்று தோன்றுகிறது .

இந்த ஆவணங்கள் காணாமல் போனதன் பின்னணியில் பல முக்கிய புள்ளிகள் இருப்பார்கள் என்றும் மிகப்பெரும் மாஃபியா கும்பலின் சதி உள்ளதாகவும் இந்து முன்னணி கருதுகிறது .

ஆகவே தமிழக அரசும் மாண்புமிகு முதல்வர் அவர்களும் தக்க கவனம் கொடுத்து கோவில்களின் புராதான சிலைகளை , சொத்துக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தாயகப் பணியில்

வி.பி.ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

இந்துமுன்னணி

இராம.கோபாலன் அறிக்கை- தமிழக அரசு, இந்து கோயில்களை பாழடிக்கிறது

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு

15-2-2020

பத்திரிகை அறிக்கை

தமிழக அரசு, இந்து கோயில்களை பாழடிக்கிறது,
சர்ச், மசூதிகளை பழுது பார்க்க நிதி ஓதுக்கீடு செய்கிறது..
அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டிக்கிறோம்..

தமிழக அரசின் பட்ஜெட்டில் சர்ச்க்கு 5 கோடியும், மசூதிக்கு 5 கோடியும் பழுதுபார்க்க ஒதுக்கியுள்ளது. இது முன்னர் 60 லட்சமாக இருந்ததாக சுட்டிக்காட்டுகிறது. தமிழக பட்ஜெட்டில் நான்கரை லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளது.

ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை ஏற்றி உள்ளது. இந்நிலையில் மசூதி, சர்ச் பராமரிப்பு என நிதியை தமிழக அரசு அறிவிக்க காரணம் என்ன?

இந்து கோயில்களின் சொத்துக்களைப் பட்டாபோட்டு கொடுக்கவும், உண்டியல் பணத்தை கொள்ளையடிக்கவும் துணைபோவதை இந்துக்கள் உணர வேண்டும்.

மசூதிக்கோ, சர்சுக்கோ வருகின்ற நிதி, வருமானம் எவ்வளவு என்பதுகூட தெரிந்துகொள்ளாமல், தமிழக அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

அதேசமயம், இந்து கோயில்களின் சொத்துக்களை தனது இரும்புப் பிடியில் வைத்துள்ள தமிழக அரசு, கோயில் நிலங்களை பட்டாப்போட்டு கொடுக்கவும், நாத்திகவாதி அண்ணாதுறையின் இறந்த நாளைக்கு சமபந்தி போஜனம் போன்றவற்றால் சீரழிக்கவும் செய்கிறது.

பல்லாயிரம் கோயில்கள் சீரழிந்து வருவதை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், கோயில் வருமானத்தை, நிர்வாக செலவினங்கள் என்ற பெயரில் சுரண்டி வருகிறது என்று, இந்து முன்னணி பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறது.

அரசு எடுத்துக்கொண்ட பின்னர், பத்தாயிரம் கோயில்களை காணவில்லை, பல லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் களவாடப்பட்டிருக்கிறது.

பல கோடி ரூபாய் சொத்து மதிப்புகள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இறைவன் திருமேனிகள், பஞ்சலோக விக்கிரகங்கள், ஆபரணங்கள் கொள்ளைபோயுள்ளன. இதற்கெல்லாம் துணைபோனவை தான் திமுக, அதிமுக கட்சிகள். கோயிலை அழித்து, இந்து சமய நம்பிக்கைகளை சீர்குலைக்கும் பணியைத்தான் செய்து வருகின்றன. பத்தாயிரத்திற்கும் அதிகமான கோயில்கள் சிதலமடைந்து கேட்பாரற்று அநாதைகளாக கிடக்கின்றன. 5,000க்கும் அதிகமான கோயில்களில் விளக்கெரிய எண்ணைகூட இல்லாமல் இருண்டு கிடக்கின்றன. சில ஆயிரம் கோயில்களில் கிடைக்கும் அபரிதமான வருமானத்தை அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் சேர்ந்து கொள்ளையடித்து பங்கு போட்டு வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறையில் கிறிஸ்தவர்கள் பணிபுரிகிறார்கள். இப்படியே போனால், நாளை கோயில்களில் உள்ள திருமேனிகளை அகற்றிவிட்டு, சர்ச்சாக, மசூதிகளாக தமிழக அரசே மாற்றிக்கொடுத்துவிடும் என அஞ்சுகிறோம்.

அப்போதும், இந்த சொரணையற்ற இந்து சமுதாயம், திராவிட அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்து, நமது தொன்மையான இந்து கலாச்சாரத்தை, இந்து இறையாண்மையை, இந்து மத நம்பிக்கைகளை அழித்துக்கொள்ளப்போகிறதா? அப்படி இருப்பது, நாம் நம் முன்னோர்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா? என எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழக அரசு ஆலயத்தை விட்டு வெளியேற்றவும், ஆலயத்தையும், ஆலய சொத்துக்களையும் பாதுகாக்கவும் வலியுறுத்த இந்து சமுதாயத்தை, ஆன்மிக அமைப்புகளை, ஆதினங்கள், மடாதிபதிகள், ஆன்மீகப் பெரியோர்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தமிழக அரசும், தமிழக அரசியல்கட்சிகளும் இதுபோல் ஓட்டு வங்கி அரசியலுக்கு இரட்டை நிலைப்பாட்டு எடுப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

அறநிலையத்துறையே பொருளாதார தீண்டாமையை உடனே நிறுத்து – இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் V.P. ஜெயக்குமார் அறிக்கை

அறநிலையத்துறையின் திருக்கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு கட்டணம் வாங்குவது என்பது இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை ! அதுவும் அதிக காசு கொடுப்பவர்களுக்கு ஒரு வசதியும், காசு கொடுக்க முடியாத ஏழைகளுக்கு ஒரு எந்த வசதியின்மையும் என்பது மட்டரகமான செயல்பாடு !

இது அரசாங்கமும் அறநிலையத்துறை செய்கின்ற அநியாயம் ! அட்டூழியம் ! அக்கிரமம் !

மேலும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி கடந்த பல வருடங்களாக இந்து முன்னணி போராடி வரும் சூழ்நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல இப்பொழுது திருச்செந்தூர் அறநிலைத்துறை 250 ரூபாய் தரிசனகட்டணம் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்டும் இலை விபூதி பிரசாதம் கொடுப்பதாக அறிவித்துள்ளது .

இது இந்துக்களை ஏமாற்றும் கீழ்த்தரமான செயலாகும் . இதை உடனே திருச்செந்தூர் அறநிலையத்துறை தடுத்து நிறுத்த வேண்டும் .

இந்த பொருளாதார தீண்டாமை இந்துக்களை பிளவுபடுத்தி இந்துக்கள் உள்ளேயே ஒரு வெறுப்பு வேற்றுமையை உருவாக்கும்சதி செயலாகும் .

உடனே இதை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்து முன்னணி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது .

அறநிலையத்துறையின் இந்த கொடுமையான செயல்திட்டத்தை ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் கண்டிக்க கூட முன்வராதது இந்துக்களை அவமானப்படுத்தும் செயலாகும் !

இந்த கேடுகெட்டதனம் உடனே தடுத்து நிறுத்தப்பட்டாவிட்டால் திருச்செந்தூர் அறநிலையத்துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தை இந்து முன்னணி நடத்தும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் . ஆகவே தமிழக அரசும் அற நிலைய துறையும் உடனே இந்த பொருளாதார தீண்டாமையை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்து முன்னணி கோருகிறது.

தாயகப் பணியில்

V P ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

திருடனுக்கு விருது வழங்குகிறதா? தமிழக அரசு! – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

காடேஸ்வரா சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்
இந்துமுன்னணி
திருப்பூர்

31.10.19

பத்திரிகை அறிக்கை

திருடனுக்கு விருது வழங்குகிறதா? தமிழக அரசு! – கோவில் நிலங்களை பட்டா போட்டு வழங்கும் அரசின் முடிவுக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்து இருந்தது. அதில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு, அதற்கான பட்டா வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்துமுன்னணி பேரியக்கம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாநில செயற்குழுவில் கண்டன தீர்மானம் இயற்றி அப்போதே அதனை குறிப்பிட்ட அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பியது.

தற்போது அதே அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், மீண்டும் தமிழக அரசு கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா போட்டு தருவதாக வாக்குமூலம்( affidavit) தாக்கல் செய்துள்ளது.
இதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
இது திருடனுக்கு விருது வழங்குவது போல கேவலமான செயல் . ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவித்து அவர்களை அரசே அங்கீகரித்தது போல ஆகிவிடும்.

கோவில்களில் பூஜைகள், திருவிழாக்கள் தடையின்றி நடைபெற நமது முன்னோர்கள் கோவில்களுக்கு நிலங்களை தானமாக தந்து, அதன் வருமானத்தினை கோவில்களுக்கு பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்தனர் .

அந்த கோவில் நிலங்களை, சொத்துக்களை பாதுகாக்க அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்து சமய அறநிலையத்துறை .

கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களை அகற்றி, நிலங்களை மீட்டு, தண்டனை வாங்கித் தருவது தான் சரியான நடவடிக்கை .ஆனால் தற்போது நேர்மாறாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பெரும்பான்மையான ஆக்கிரமிப்பாளர்கள் அரசியல் கட்சியினர் என்பதாலும், அவர்கள் தங்களது பினாமிகளை வைத்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவதால் அரசு அவர்களை திருப்திப்படுத்த முயல்கிறதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது.
மேலும் உள்ளாட்சித் தேர்தலை கணக்கில்கொண்டு அரசியல் நடத்தும் முயற்சியை அரசு மேற்கொள்கிறதோ? என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் கோவில்களுக்குச் சொந்தமான 5.25 லட்சம் ஏக்கர் நிலங்களில் 1லட்சம் ஏக்கர் நிலங்கள் காணாமல் போய்விட்ட நிலையில், அரசின் இந்த நிலைப்பாடு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கோவில்களை அழிக்கக்கூடிய இந்த செயலால் பக்தர்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர் .அரசின் இந்த செயலுக்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர் .

ஆகவே அரசு இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வாக்குமூலத்தை(affidavit) திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

மேலும் இந்த அடாத செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பக்தர்கள், ஆன்மீக அன்பர்களை ஒன்றிணைத்து மாவட்டம்தோறும் வருகின்ற 4 .11. 19 – திங்கட்கிழமை அன்று ஆட்சேபனை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிட இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.

அதனைத் தொடர்ந்தும் அரசாணையை அரசு ரத்து செய்யாத பட்சத்தில் இந்து முன்னணி மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை பக்தர்களுடன் சேர்ந்து முன்னெடுக்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .

தெய்வீக பணியில்

காடேஸ்வரா.சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம்,  கவலை அளிக்கிறது.. 

இந்து முன்னணி, தமிழ்நாடு

59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
19-7-2019
பத்திரிகை அறிக்கை
நேற்று அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம்,
கவலை அளிக்கிறது..
அத்திரவரதர் தரிசன ஏற்பாடுகள் குறித்து, கடந்த ஞாயிறு அன்று இந்து முன்னணி சார்பாக, ஒரு கடிதத்தை முதல்வரின் பார்வைக்கு அனுப்பிவைத்தோம். அதன் பிறகும் எந்தவித நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் செய்யாமல், பத்திரிகையாளர்களை அழைத்து வாய்பந்தல் போட்டது.
48 நாட்கள் நடக்கும் ஒருவைபத்திற்கு ஏற்ப நிர்வாக செயல்படவில்லை. நேற்று நான்கு பக்தர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்கள்., இது மிகுந்த கவலை அளிக்கிறது. அவர்களது ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம்.
இது குறித்து விரிவாக பேச வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் மேம்போக்காக கேள்வியை கேட்டதும், அதற்கு தமிழக முதல்வரின் சாதாரண பதிலும் அதிர்ச்சியை அளிக்கிறது.
திருப்பதியில் வருடந்தோறும் தரிசனம் நடக்கிறது. இதற்கு தினமும் சராசரியாக 70,000 பக்தர்கள் வருகிறார்கள். ஆனால், காஞ்சியில் 48 நாட்கள் தான் தரிசனம். அதனால், லட்சக்கணக்கில் தானே வருவார்கள் என்பதுகூட அரசுக்குத் தெரியாதா? கும்பமேளாவிற்குக் கோடிக்கணக்கில் மக்கள் வருகிறார்கள். அதுவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது. அத்திவரதரோ 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தருகிறார் எனும்போது சிந்தித்து, அதற்கேற்ற ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டாமா?
மாவட்ட கலெக்டர், வயோதிகர்கள், கர்ப்பிணி பெண்கள் தரிசனத்திற்கு வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார் என தமிழக முதல்வர் சட்டசபையில் கூறியிருப்பது, எத்தனை அலட்சியமான பதில்.
மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படவில்லை.
பேருந்து நிறுத்தத்திலிருந்து ஊருக்குள் வரவும் திரும்பிப்போகவும் மக்கள் படாதபாடு பட வேண்டியுள்ளது. உள்ளூர் பஸ் வசதி போதவில்லை. ஆட்டோக்கள் அடிச்சவரைக்கும் லாபம் என கட்டணத்தை உயர்த்தி வாங்குகிறார்கள். இது மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியுமா? தெரியாதா?
வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் ஏற்பாடுகூட இல்லை. வரதரை தரிசிக்கும் அறையில் போதுமான காற்றோட்டம் இல்லை. அங்கு மின்விசிறி, காற்று வெளியேற்ற மின்சாதனமும் இல்லை. இத்தனை பிரச்னைகளுக்கு இடையில் பக்தர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி லட்சக்கணக்கில் வந்து தரிசனம் செய்து செல்லுகிறார்கள்.
மேலும் இதுபோன்ற அசம்பாவிதம் மீண்டும் நடைபெறாமல் இருக்க தமிழக முதல்வர் நேரிடையாக தலையிட்டு, தகுந்த ஏற்பாடுகளை செய்துத்தர அக்கறை காட்ட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா ?

நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா ?

உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு இந்துமுன்னணி வருத்தம்

சிலை கடத்தல் குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் மகாதேவன் மற்றும் நீதியரசர் ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது

அப்போது நீதியரசர்கள் சாமி சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் கோவில்களை அரசு மூடிவிடலாமே என கருத்து தெரிவித்ததாக நாளிதழில் இன்று செய்தி வெளியாகி உள்ளது

நீதியரசர்களின் இந்த கருத்து மிகுந்த வருத்தத்திற்குரியது ஆகும்.

சிலை கடத்தல் வழக்கு உயர்நீதிமன்ற கண்காணிப்பினால் தான் நேர்மையாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெறுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு வருமானம் கிடைக்கிறது அப்படி இருக்கும் போது சாமி சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் தமிழக அரசு கோவில்களை மூடி விடலாமே என கேள்வி எழுப்பியுள்ளர்.

இந்து கோவில்களை தமிழக அரசு பராமரிக்க பாதுகாக்க தவறியதை நீதிமன்றம் சுட்டி காட்டியுள்ளது மிகச்சரியானது. அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

ஆனால் அதற்காக கோவில்களை மூடிவிடலாமே என்ற கருத்து ஏற்புடையதல்ல.

ஏற்கெனவே தமிழக அரசு கட்டுபாட்டிலுள்ள பல கோவில்கள் பாழைடைந்து சிதிலமடைந்து மூடப்பட்டுள்ளது.

இந்து கோவில்கள் அனைத்தும் மன்னர்களாலும் மக்களாலும் கட்டப்பட்டுள்ளதே தவிர அரசாங்கத்தால் அல்ல. அதை மூடுவதற்கு அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

சொல்லப்போனால் அரசு கோவில்களை தமிழக அரசு ஆக்கிரமித்து தன் கட்டுபாட்டில் வைத்துள்ளது.

எனவை தமிழக அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும். அதை இந்து ஆன்மீக குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறலாமே தவிர கோவில்களை மூடலாமே என்ற நீதியரசர்களின் கேள்வி மிகுந்த வருத்தத்திற்குரியது ஆகும்.

அரசின் இயலாமைக்காக இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கலாமா ?

எதிர்காலத்தில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கோவில்களை இழுத்து மூடுவதற்கு நீதிமன்றமே வழிகாட்டுவது போல் ஆகிவிடும்

கோவில்களை மூடலாமே என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு இந்துமுன்னணி சார்பில் வருத்தத்தை பதிவு செய்கிறோம்

V.P.ஜெயக்குமார்
மாநில துணைத்தலைவர்
இந்துமுன்னணி