Monthly Archives: October 2020

கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர்

26.10.20

நமது முன்னோர்கள் கோவில்கள் காலங்காலமாக இருக்கவே நிலங்களை, வீடுகளை எழுதித் தந்தார்கள்.

ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சீரழிந்து கிடப்பதைப்பற்றி கவலைப்படாத இந்து சமய அறநிலையத்துறை, அக்கோவிலுக்குச் சொந்தமான 35 ஏக்கர் புன்செய் நிலத்தை கலெக்டர் பெருந்திட்ட வளாகம் கட்ட 1,98,87,038/- கிரயம் செய்ய இருப்பதாகவும், ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்க பத்திரிகை விளம்பரம் செய்துள்ளது. இந்து முன்னணி இதற்குக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

அரசின் வழிகாட்டுதலின்படி சுமார் 100 கோடி தரவேண்டியதற்கு, 1.98 கோடியை நிர்ணயம் செய்துள்ளது பித்தலாட்டமான வேலை, சட்டவிரோதமான செயல்.

இந்த தொகை வருங்காலத்தில் காணாமல் போய்விடும். இந்த நிதி கண்டிப்பாக அந்த கோவில் நிர்வாகத்திற்கு பயன்படாது. கோயில் பராமரிப்பைப் பற்றி கவலைப்படாத தமிழ்நாடு இந்து சமய அறநிலயத்துறை, கோயில் நிலங்களை அரசுக்கு தாரை வார்க்க சேவகம் செய்கிறது.

இதனை எதிர்த்து அவ்வூரின் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மூலமாகவே இந்து முன்னணி ஆட்சேபணை கடிதங்களை அனுப்பி உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இன்னமும் அரசுக்கு சொந்தமாகாத அந்த இடத்தில் கட்டுமான பணிகளை அரசு செய்து வருவது சட்டவிரோதமானது, கண்டிக்கத்தக்கது.

எனவே, அரசுக்கு அந்த இடம் தேவை என்றால், அதனை எடுப்பதற்கு முன்பு, அதே மதிப்புள்ள, அதே பரப்பளவு உள்ள அரசு நிலம் அல்லது தனியார் இடத்தை வாங்கி, அதனை கோவில் பெயருக்கு அரசாங்கம் பதிவு செய்து தர வேண்டும்.
அப்படி செய்யாமல் இந்த நிலத்தை அரசிற்கு தாரை வார்ப்பது, அந்த சொத்தை அளித்தவர்கள் எந்த நோக்கத்திற்காக தந்தார்களோ அதற்கு எதிரானது. அது அவர்களுக்கு செய்யும் துரோகம். இதனை எதிர்த்து இந்து முன்னணி போராடும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.

சுமார் பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவிலை நிர்வகிக்காமல் கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்ய துணைபோகும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்த்தரமான செயலை இந்துக்கள் உணர்ந்து போராட முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி,
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(த. மனோகரன்)
மாநில செயலாளர்

இந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

23.10.2020

கடந்த 16.10.2020 அன்று பெரியார் tv என்ற யூ ட்யூப் சானலில் காணொளி வெளியானது . அதில் 26.09.2020 அன்று வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு காணொளி மூலம் பெரியாரிய தேசவிரோத அமைப்புகள் மூலமாக நடைபெற்ற பெரியாரும் இந்திய அரசியலும் என்ற நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. திருமாவளவன் இந்து மதத்தினுடைய மனுதர்மத்தில் இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று கூறப்பட்டுள்ளதாக பேசியுள்ளார்.

இந்து மதத்தை இழிவு படுத்தும் நோக்கில் ஆங்கிலத்திலும், தமிழிலும் இந்து பெண்களை விபச்சாரிகள் என்று அவர் வேண்டுமென்றே திட்டமிட்டு கூறியுள்ளார். இந்த செயல் இந்துக்கள் மத்தியில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தொடர்ந்து இந்து தர்மத்தை, இந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கின்றார். பிற மதங்களைப் பற்றி எவ்வித கருத்தையும், எப்போதும் இவர் சொன்னது கிடையாது. அப்படியெனில் இவர் யாரோ ஒரு சிலரை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே இவ்வாறு பேசுகிறார் என்பது உறுதியாகிறது. இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

இதே போல ஒரு தொடர்ந்து பேசி வருவதை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் கண்டிக்க வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனுடன் யாரும் கூட்டணி வைக்க கூடாது. அப்படி கூட்டணி வைப்பவர்களுக்கு எதிராக இந்துக்கள் வாக்களிக்க வேண்டும் .

அதேபோல இவர் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக பதவி ஏற்கும் பொழுது பதவிப்பிரமாணம் செய்து கொண்டபடி நடந்து கொள்ளவில்லை. இந்து மதத்தின் மீது மிகப் பெரும் வெறுப்பை காண்பிக்கிறார். அதனால் அரசியல் சாசனப்படி இவருடைய நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க இவருக்கு அருகதை இல்லை.எனவே இவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மேதகு ஜனாதிபதி அவர்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
.

என்றும் தாயகப் பணியில்

காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

சமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்

14.10.2020

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்தில் திருமங்கலங்குறிச்சி‌ ஊராட்சிக்கு உட்பட்ட ஓலைகுளம் கிராமத்தில் இருதரப்பினருக்கு இடையில் (ஆடு சம்பந்தமாக) பிரச்சனை எனத் தகவல் வந்தது .

இந்தத் தகவல் கிடைத்ததும் சந்தர்ப்ப வாத அரசியல் கட்சிகளும், ஜாதிக் கட்சி தலைவர்களும் பிரச்சினையை ஊதி பெரிதாக்கி ஆதாயமடைய நினைத்தனர்
ஊடகங்களும் தங்கள் பங்குக்கு அதில் விளம்பர விளையாட்டை நடத்தினர்.

பிரச்சினை என்றால் இரு தரப்பையும் சந்தித்து பேசி அதை சீர் செய்ய வேண்டும். ஆனால் வந்த அரசியல்வாதிகள் உட்பட அத்தனை பேரும் தங்களுக்கு எது ஆதாயமோ அதை மட்டுமே செய்தனர்.

இந்நிலையில் இதில் உண்மை என்ன என்பதை கண்டு அறிய இந்துமுன்னணி தீர்மானித்தது.

இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் திரு. V.P.ஜெயக்குமார் அவர்கள் உண்மை நிலவரம் கண்டறிய நேரில் சென்றார்.

பாதிக்கப்பட்டவர் பால்ராஜ் என்பவர் . அவரது மகன் கருப்பசாமி.

தகப்பனார் அங்கு இல்லாத காரணத்தால் மகன் கருப்பசாமியிடம் பேசினோம்.

“எங்கள் ஊரில் கோவில் கொடை , விழா மற்றும் சுடுகாடு அனைத்தும் ஒன்றுதான்.
சாதி மற்றும் அரசியல் கட்சிக் கொடிகள் ஊரில் கிடையாது”, என்றார்.

ஊராட்சி மன்றத் தலைவர் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

பாதிக்கப்பட்ட பால்ராஜ் அவர்களின் அண்ணன் திரு.தங்கபாண்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர்.

இரண்டு‌ பேரையும் ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் சந்தித்தோம். அவர்கள் ,”இந்த சம்பவம் எங்க ஊருக்கு ஒரு திருஷ்டி” எனக் கூறினார்கள்.

இந்த பிரச்சினையை இத்துடன் ‌முடிவுக்கு கொண்டு வருவதுடன், இதுபோல சம்பவம் இனி எங்கள் பகுதியில் நடை பெறாது என்று உறுதி படக் கூறினார்கள்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவரின் மனைவியிடம் பேசிய போது, “எங்கள் வீட்டிற்கு அனைத்து சமுதாய மக்களும் சொந்த வீட்டிற்கு வந்து செல்வது போல் வருவார்கள்.இன்றும் எங்கள் வீட்டு தோட்டத்தில் பத்துபேர் வேலை செய்கின்றார்கள்.
எவ்வித மன பேதமும் இல்லாமல் ஒற்றுமையாக உள்ளதாக” ஊராட்சி மன்ற தலைவர் மனைவி அவர்கள் கூறிய விதம் எங்களுக்கு நல்ல நம்பிக்கை கொடுத்தது.

ஒன்றாகக் கூடிவாழும் மக்களிடம் திட்டமிட்டு பிரிவினை உருவாக்க நினைக்கும் அரசியல்வாதிகளின் சுயநல முகத்தை உணர்த்திவிட்டு எக்காலத்திலும் இந்துக்கள் பிரியக்கூடாது. ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதை கூறி, இந்துமுன்னணி என்றும் உடனிருக்கும் என்ற உறுதிமொழி அளித்து வந்தனர் பொறுப்பாளர்கள்.

இந்து முன்னணி சார்பில் பார்வையிட்டு பேசவந்த இந்து முன்னணி மாநில துணைத் தலைவருடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி,
ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் T.K.R.ராமச்சந்திரன் உடன் சென்றனர்.

இந்துக்களின் நலன் காக்கும் பணியில் என்றும் இந்துமுன்னணி முன்னணியில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் நிகழ்வு இது.

கார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர்

15.10.2020

தமிழகத்தில் காவல்துறை சிறுபான்மையினரின் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கும் அவலம் தொடர்ந்து நடக்கிறது.

சமூக வளைதளங்களிலும், பொதுக்கூட்டங்களிலும், இந்து சமய நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தியதன் பேரில் கொடுத்த புகாரை வாங்கி வைத்துக்கொண்டு, காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

ஆனால், முஸ்லீம் அமைப்புகளின் செயல்பாட்டை கேலிச்சித்திரமாக வரைந்த திரு. வர்மா என்பவரை கைது செய்கிறது காவல்துறை.

தமிழகத்தில் இந்துக்களுக்கு மட்டும் கருத்துரிமை மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

இந்துக்களை கேவலப்படுத்தியும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசிய திராவிடர் கழக வீரமணி, கிறிஸ்தவ பாதிரிகள் மோகன் சி. லாசரஸ், எஸ்றா சர்குணம், தடா ரஹீம் போன்ற பலர் மீது தொடுத்த வழக்கை விசாரணை அளவில்கூட எடுக்காத காவல்துறை, இன்று (15.10.2020) விடியற்காலை கார்டூனிஸ்ட் வர்மாவை மீண்டும் கைது செய்துள்ளது.

கோவையில் ஈவிரக்கமற்ற வகையில் குண்டு வைத்து, பல நூறு பேர் உடல் சிதறி இறக்கவும், பல நூறு பேர் உடல் ஊனமாகி நடைபிணமாக வாழவும், காரணமான இஸ்லாமிய மதவெறியன் பாஷாவை விடுதலை செய்ய வலியுறுத்தி போஸ்டர் போடும் அளவிற்கு தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இருக்கிறது.

சென்னை புழல் முதல் கோவை சிறை வரை சிறைத் துறை அதிகாரிகளை இஸ்லாமியர்கள் தாக்கியதை நியாயப்படுத்தவும், பொதுத் தளத்தில் காவல்துறை அதிகாரிகளின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தவும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. இங்கெல்லாம் காவல்துறை முணுமுணுக்கக்கூடவில்லை.

கறுப்பர் கூட்டம் தற்போது குருஜி என்ற பெயரில் மீண்டும் இந்து சமய நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதை எதிர்த்து புகார் கொடுத்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்ததன் மூலம், தைரியமாக கருத்து தெரிவிக்கும் இந்துக்களை முடக்க நினைக்கிறது காவல்துறை. இது ஜனநாய விரோதமானது. கருத்துத் தெரிவிப்பதை தடுக்க நினைக்கும் காவல்துறையின் செயல்பாட்டை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

உடனடியாக கார்டூனிஸ்ட் வர்மாவை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில்



T.மனோகர்

மாநில செயலாளர்


மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

13.10.2020

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயார் தவசாயி அம்மாள், கடந்த ஒரு வாரகாலமாக சேலம் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு, நேற்று இரவு 1.30 மணியளவில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தோம்.

தாயாரை இழந்து வாடும் தமிழக முதலமைச்சருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் இந்து முன்னணி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தவசாயி அம்மாள் அவர்கள் ஆன்மா நற்கதியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்