Tag Archives: அத்திவரதர்

இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம்,  கவலை அளிக்கிறது.. 

இந்து முன்னணி, தமிழ்நாடு

59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
19-7-2019
பத்திரிகை அறிக்கை
நேற்று அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம்,
கவலை அளிக்கிறது..
அத்திரவரதர் தரிசன ஏற்பாடுகள் குறித்து, கடந்த ஞாயிறு அன்று இந்து முன்னணி சார்பாக, ஒரு கடிதத்தை முதல்வரின் பார்வைக்கு அனுப்பிவைத்தோம். அதன் பிறகும் எந்தவித நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் செய்யாமல், பத்திரிகையாளர்களை அழைத்து வாய்பந்தல் போட்டது.
48 நாட்கள் நடக்கும் ஒருவைபத்திற்கு ஏற்ப நிர்வாக செயல்படவில்லை. நேற்று நான்கு பக்தர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்கள்., இது மிகுந்த கவலை அளிக்கிறது. அவர்களது ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம்.
இது குறித்து விரிவாக பேச வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் மேம்போக்காக கேள்வியை கேட்டதும், அதற்கு தமிழக முதல்வரின் சாதாரண பதிலும் அதிர்ச்சியை அளிக்கிறது.
திருப்பதியில் வருடந்தோறும் தரிசனம் நடக்கிறது. இதற்கு தினமும் சராசரியாக 70,000 பக்தர்கள் வருகிறார்கள். ஆனால், காஞ்சியில் 48 நாட்கள் தான் தரிசனம். அதனால், லட்சக்கணக்கில் தானே வருவார்கள் என்பதுகூட அரசுக்குத் தெரியாதா? கும்பமேளாவிற்குக் கோடிக்கணக்கில் மக்கள் வருகிறார்கள். அதுவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது. அத்திவரதரோ 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தருகிறார் எனும்போது சிந்தித்து, அதற்கேற்ற ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டாமா?
மாவட்ட கலெக்டர், வயோதிகர்கள், கர்ப்பிணி பெண்கள் தரிசனத்திற்கு வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார் என தமிழக முதல்வர் சட்டசபையில் கூறியிருப்பது, எத்தனை அலட்சியமான பதில்.
மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படவில்லை.
பேருந்து நிறுத்தத்திலிருந்து ஊருக்குள் வரவும் திரும்பிப்போகவும் மக்கள் படாதபாடு பட வேண்டியுள்ளது. உள்ளூர் பஸ் வசதி போதவில்லை. ஆட்டோக்கள் அடிச்சவரைக்கும் லாபம் என கட்டணத்தை உயர்த்தி வாங்குகிறார்கள். இது மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியுமா? தெரியாதா?
வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் ஏற்பாடுகூட இல்லை. வரதரை தரிசிக்கும் அறையில் போதுமான காற்றோட்டம் இல்லை. அங்கு மின்விசிறி, காற்று வெளியேற்ற மின்சாதனமும் இல்லை. இத்தனை பிரச்னைகளுக்கு இடையில் பக்தர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி லட்சக்கணக்கில் வந்து தரிசனம் செய்து செல்லுகிறார்கள்.
மேலும் இதுபோன்ற அசம்பாவிதம் மீண்டும் நடைபெறாமல் இருக்க தமிழக முதல்வர் நேரிடையாக தலையிட்டு, தகுந்த ஏற்பாடுகளை செய்துத்தர அக்கறை காட்ட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

இராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்

14.07.19
பத்திரிகை அறிக்கை

வரலாற்று சிறப்புமிக்க அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்..
நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார் அத்தி வரதர். அவரை தரிசிக்க சாதாரண பொது மக்கள் முதல் பாரதத்தின் முதல் குடிமகன் வரை பல முக்கிய பிரமுகர்களும் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தினசரி சுமார் ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது, கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் இதுவரை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளார்கள்.

இதுபோல, கடந்த வருடம் உத்திர பிரதேச மாநிலத்தில் கும்பமேளா நடைபெற்றது. மிகச் சிறந்த ஏற்பாடுகளை அந்த மாநில அரசு செய்திருந்ததை கண்ணாரக் கண்டோம். அங்கு ஏற்பாடு செய்த அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு, அதிவிரைவாக இங்கும் அதுபோன்ற ஏற்பாடுகளை செய்யலாம்.

அத்தி வரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வரும் பக்தர்களுக்கு அவசியமான வசதிகள் செய்து தருவதில் குறைபாடு உள்ளது என்பதை தமிழக முதல்வரின் கவனத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே,

1. தேவையான அளவிற்கு மொபைல் டாய்லெட் வசதி, மற்றும் அங்காங்கே குடிநீர் வசதி செய்து தர வேண்டும். வரிசையில் நிற்பவர்களுக்கு குடிநீர் தர ஏற்பாடு. (வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.)

2. தரிசனத்திற்கு நிற்பவர்களுக்கும், ஆங்காங்கே நிற்பவர்களுக்கும் தேவையான பந்தல் அமைக்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் பலர் மயக்கமடைகிறார்கள்.

3. வரிசையில் நிற்பவர்கள் பசியாறிட, பிஸ்கெட் போன்ற சிறு உணவுகள் விற்பனைக்காவது ஏற்பாடு செய்யலாம். அல்லது சேவை நிறுவனங்கள் மூலம் பிரசாதமாக வினியோகம் செய்யச் சொல்லலாம்.

4. தரிசன வரிசையில் போய், கோயில் உள் வரிசை வரும்போது, சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ளதுபோல மூன்று வரிசையாக தரிசிக்க ஏற்பாடு செய்தால், காலதாமதம் வெகுவாக குறையும், விரைவாக, அதிகமான பக்தர்கள் தரிசிக்க வசதி ஏற்படும்.

5. மருத்துவர்கள் குழுவை ஏற்பாடு செய்தும், வயதானவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்ால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அந்தந்த பகுதிகளில் ஆம்புலன்ஸ் வசதியும் அவசியம்.

6. வயதானவர்கள், நோயாளிகள் தரிசினம் செய்ய வேண்டும் என்ற பக்தியில் வருகிறார்கள். அவர்களுக்கும், கைக்குழந்தையோடு வருபவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் உடனடியாக செல்வதற்கான பேட்டரி கார் வசதி, அழைத்து செல்ல தன்னார்வ தொண்டர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் வரவதற்கும், போவதற்கும் ஏற்பாடு தேவையான அளவில் இருப்பது அவசியம்.

7. தன்னார்வ தொண்டர்களை இணைத்து முழு சேவைக்கான ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.

இவை தவிர, ஒரு குழு அமைத்து, அவ்வவ்போது ஏற்படும் குறைபாடுகளை களைந்து, சிறப்பான ஏற்பாடுகளை செய்துதந்து, அத்தி வரதரின் பேரருளையும், தமிழக மக்களின் அன்பையும் தாங்கள் பெற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.