இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
3-2-2018
பத்திரிகை அறிக்கை
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து இந்த சமய அறநிலையத்துறையின் நிர்வாக சீர்கேட்டிற்கு எடுத்துக்காட்டாகும். மீனாட்சியின் திருக்கோயில் யுனஸ்கோவால் உலக கலை பொக்கிஷமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதை புலனாய்வுத் துறை அடிக்கடி எச்சரித்து வருகிறது. அப்படியிருக்கையில் கோயில் வழியில் கடைகளை வைத்து வியாபாரத்தலமாக மாற்றியது எந்த வகையில் நியாயம்? தீ விபத்து நடந்தால் எப்படி தடுப்பது என்பதற்குக்கூட எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை என்பதை பார்க்கும்போது, இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் சீர்கேட்டினை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்துக்களின் ஆலயச் சொத்துக்களை பராமரிக்க, பாதுகாக்கத்தான் இந்து சமய அறநிலையத்துறை நிறுவப்பட்டது. ஆனால், எந்த நோக்கத்திற்காக இது துவக்கப்பட்டதாக தமிழக அரசாங்கம் கூறியதோ அந்த நோக்கமே இன்று சிதைவு பட்டுவிட்டது. கோயில் நிலங்கள், வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து எந்த தகவலும் இந்து சமய அறநிலையத்துறையிடம் இல்லை. மேலும் இத்துறை எடுத்துக்கொண்டதற்குப் பிறகு பல கோயில்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது எந்த நடவடிக்கையும் அரசோ, இந்து சமய அறநிலையத்துறையோ தடுக்கவில்லை. கோயில் குளங்கள், மேலும் நூற்றுக்கணக்கான வருட கோயில்கள் கூட ஆக்கிரமிப்பு, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இடிக்க உத்திரவிடும்போது, அவற்றைப் பாதுகாக்கும் செயலிலும் அத்துறை அதிகாரிகள் ஈடுபடுவதில்லை.
காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் உற்சவர் சிலை செய்த விஷயம் முதல் ஏராளமான ஊழல், சிலை, ஆபரணங்கள் திருட்டுகள், முறைகேடுகள் முதலியவற்றில் கோயிலை பாதுகாக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே முறைகேடில் ஈடுபட்டு வழக்குகளை சந்திக்கும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். எனவே, இந்து சமய அறநிலையத்துறையை உடனடியாக கலைக்க தமிழக அரசு உத்திரவிட வேண்டும். கோயில்களை, கோயில் சொத்துக்களை நிர்வகிக்க தனித்து இயங்கும் வாரியத்தை ஏற்படுத்த தமிழக அரசு முன் வரவேண்டும்.
இந்து கோயில்கள், இந்து சமுதாயத்தின் சொத்து, ஆன்மீக கேந்திரங்கள். கோயில் அழிந்தால், நமது பாரம்பரியம், பழக்க வழக்கம், வரலாறு, கலை நுணுக்கம், கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு, இலக்கியம் எல்லாம் அழிந்துபோகும். எனவே, கோயில்களைக் காக்க இந்து சமுதாயம் போராட வேண்டிய நேரமிது. இந்து சமய அறநிலையத்துறையை ஆலயத்தை விட்டு வெளியேற்றி, நமது கோயில்களை காக்க இந்துக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்.
நமது கோயில், நமது உரிமை, இதனை மீட்டெடுக்க வேண்டியது ஒவ்வொரு இந்துவின் கடமை. மதச்சார்பற்ற அரசுக்கு கோயிலில் என்ன வேலை? மசூதி சொத்து முஸ்லீம்களிடமும், சர்ச் சொத்து கிறிஸ்தவர்களிடம் இருக்கிறது. அவற்றினை மேம்படுத்த, பராமரிக்க அரசு பொது நிதியிலிருந்து கோடிக்கணக்கில் நிதியை தருகிறது. ஆனால், இந்துகளின் கோயில் பணத்தில் தனக்கு வருவாயை பெருக்கிக்கொள்வதுடன், கொள்ளையடிக்கவும் துணைபோகிறது! வரும் வருவாயில் பங்கு போடுகிறது தமிழக அரசு. அதற்கு ஏதுவாக அரசியல்வாதிகளை அறங்காவலர்களாக நியமிக்கிறது!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தைத் தடுக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்யாத கோயில் நிர்வாகத்தினர் மீது தக்க நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். கோயில் பாதுகாப்பு கருதி இனி எந்த கோயில் உள்ளும் எந்தவிதமான வியாபார கடைகள் அமைப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. கோயில் நிர்வாகத்திலிருந்து, தமிழக அரசு வெளியேற வேண்டும் என்றும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)