வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..

2.10.18
சபரிமலை ஐயப்பன் கோயிலில் எந்த வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்ற உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு..
இந்த நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..
சபரிமலை ஐயப்பன் கோயில், பாரதத்தின் பழம்பெருமை வாய்ந்த கோயில்களில் ஒன்று. இதற்கு வரலாறு, புராணகால சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன. இது தொன்றுதொற்று வரும் பாரம்பர்யம். காட்டிற்கும், மலைக்கும் நடுவில் அமைந்துள்ள கோயில் இது. சுவாமி ஐயப்பன் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவர். ஐயப்பனுக்கு விரதம் இருந்து வந்து வணங்குவது என்பது பல நூறு ஆண்டுகளாக தொன்றுத்தொட்டு நடைபெற்று வரும் வழிபாட்டு முறை. கோயிலின் தாத்பர்யம் பாலினப் பாகுபாடு ஏற்படுத்துகிறது என்பது முரண்பட்ட பார்வை. பெண்கள் 10 வயதிற்கு முன்பும், 50 வயதிற்கு பிறகும் ஐயப்பனைத் தரிசிப்பதை, யாரும் தடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, தென் தமிழ்நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ஐயப்பனுக்குக் கோயில் இருக்கிறது, இன்னும் சொல்லப்போனால், பல கோயில்களில் தனி சன்னதியும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படி பல நூறு கோயில்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் வழிபாட்டு முறையே பெரும்பாலான ஐயப்பன் கோயில்களிலும் நடத்தப்படுகின்றன. அங்கெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை. வழிபட விரும்புவோர் மற்ற எந்த ஐயப்பன் கோயிலிலும் சென்று வழிபட முடியும்.
எல்லா வயது பெண்களும் இக்கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். பாலின பாகுபாடு கூடாது என்று வழக்குத் தொடுத்தவர் ஒரு முஸ்லீம், யாருடைய விருப்பத்திற்காக இந்த வழக்கை தொடுத்தார்? என்பது ஒவ்வொருவரின் மனதிலும் எழும் கேள்வியாக இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட பெண்கள்கூட இவ்வழக்கிலிருந்து விலகிவிட்டனர். இது பொதுநல வழக்கு என்றாலும், ஒரு பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள் இல்லாமல், சம்பந்தப்படாதவரின் கருத்திற்காக அடுத்தவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைப்பது என்பது வெற்று அரசியல் என்றே பார்க்க முடியும்.
இந்த வழக்கை விசாரித்த நான்கு ஆண் நீதிபதிகள் ஒரு தீர்ப்பையும், பெண்மணியான நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஒரு தீர்ப்பையும் கூறியிருக்கிறார். உண்மையில் பெண் நீதிபதி அவர்களின் தீர்ப்பே இந்த விஷயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம், அவர் தீர்ப்பில் தெரிவித்துள்ள கருத்து மிகவும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமும்கூட. மத வழிபாட்டில் பாகுபாடு எனக் கூறுவது சரியல்ல. இந்திய சாசனம் தந்துள்ள வழிபாட்டு உரிமையில் உச்சநீதி மன்றம் தலையீட முடியாது என்பன போன்ற அவர் கூறிப்பிட்டுள்ளவை மிகவும் கவனிக்கத்தக்கது. அதுமட்டுமல்ல, ஒரு பெண் நீதிபதி, தனது தீர்ப்பில் துல்லியமாக குறிப்பிட்டுள்ளது, பெண்கள் வழிபாட்டு உரிமை சம்பந்தமானது. எனவே, உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை தானே மறு ஆய்வு செய்ய வேண்டும்.
கட்டுப்பாடே இருக்கக்கூடாது என நீதிமன்றம் கூற முடியாது. எந்த இடத்திற்கும் ஒழுங்கு, கட்டுப்பாடு, வரன்முறை என்பது இருக்கிறது. உதாரணமாக, நீதிபதி முன்பு கைநீட்டி பேசவதோ, சத்தமாக பேசுவதையோகூட நீதிமன்றம் அனுமதிப்பதில்லையே ஏன்? நீதிபதியும் மனிதர்தானே? என்று முறைதவறி நடப்பேன் என ஒருவர் முனைந்தால், நீதிமன்றத்தின் மாண்பு குலைந்துபோகாதா? ஒருவரின் உடல் மொழி அது, அதனை எப்படி நீதிபதி கட்டுப்படுத்துவார்? அது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் விஷயம் என பேசினால் விதண்டாவாதமாகத்தானே பார்க்கமுடியும்? அதுபோலத்தான் வழிபாட்டில் கட்டுப்பாடு என்பதை, பாகுபாடு என எடுத்துக்கொண்டு பேசுவதும் என்பது பொதுமக்களின் கருத்தாகும். சமய வழிபாட்டில் சட்டத்தின் பார்வைகொண்டு தீர்ப்பு சொல்வது தவறான முன் உதாரணமாகிவிடும்.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் மக்களின் நம்பிக்கையை இழந்துவருவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. கடைசி தீர்வாக மக்களால் கருதப்பட்டவை நீதிமன்றங்கள். ஆனால், இப்போதோ, மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் முதல் இடமாக அது மாறிவருவது கவலை அளிக்கிறது. மக்கள், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையை இழப்பது பெரும் தீங்காகிவிடும்.
இதனால் தான், பொது மக்கள் ஆங்காங்கே, ஐயப்பன் வழிபாடு சம்பந்தமான தீர்ப்பிற்கு தங்களின் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் கோயில்களில் வழிபாடு நடத்தியும், பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகிறார்கள்.
பக்தர்கள் இந்தத் தீர்ப்பிற்கு தங்களது ஆட்சேபணையைத் தெரிவிக்கும் விதத்தில் கோயில்களில் தீபம் ஏற்றி பொது பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம். ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்ற ஐயப்ப குருசாமிகள் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைத்திட பக்தர்களை ஒருங்கிணைத்து நமது சமய உணர்வினை வெளிப்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
கேரள மாநில அரசும், மத்திய அரசும், இந்திய குடியரசு தலைவரும் இவ்விஷயத்தில் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தார்மீக ரீதியில், மக்களின் சமய உணர்வுகளை மதித்துத் தீர்வு காணவேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *