பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு- வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை

9-1-2018
பாவை நோன்பு மாதமாகிய மார்கழி மாதத்தில், திருப்பாவை இயற்றிய, ஆழ்வார்களில் ஒருவராகிய ஆண்டாள் நாச்சியாரை கொண்டாட ராஜபாளையம் திருக்கோயிலில் விழா நடைபெற்றது. இவ்விழாவானது, பாரம்பர்யமிக்க தினமணி நாளிதழ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி. இதில் கலந்துகொண்டு பேசிய, வைரமுத்து,  ஆண்டாள் ஒரு தாசி என பேசியது பக்தர்களின் மனங்களை புண்படுத்தும் செயல். இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. வயிற்று பிழைப்பிற்காக தமிழ் மொழியை பேசி திரியும் வைரமுத்துவிற்கு, ஆண்டாள் நாச்சியாரைப் பற்றி பேச அருகதை உண்டா? நிச்சயம் கிடையாது. இதுபோன்ற அவதூறான கருத்தினை பேசிட எது இவருக்கு துணை நிற்கிறது, எது காரணம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இப்படி இவர் பேசிய இடம் திராவிட கழகத்தின் கூட்டமும் இல்லை, அது நாத்திக மேடையும் இல்லை.. அப்படியிருக்க இதுபோன்ற பண்பாட்டு மேடையில் இவரை பேச அழைத்து வந்தவர்களுக்கு கிடைத்த பரிசு தான் இவர் கூறிய கருத்து.
தமிழகத்தில் மட்டுமல்ல, இம்மாதத்தில் உலக முழுவதும் தமிழ் சமுதாயம் ஆண்டாளின் திருப்பாவை விழா கொண்டாடப்பட்டு வருவதை காண்கிறோம்.
ஔவையாரும், ஆண்டாளும் தமிழ் சமுதாயத்திற்கு செய்துள்ள சேவைக்கு, உலகம் உள்ள அளவும் தமிழர்களாகிய நாம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.
இந்துக்கள் தங்களை உணர்ந்துவிட்டார்கள். இதுபோன்ற நச்சு கருத்துகளுக்கு பதிலடி கொடுப்பார்கள்.  வைரமுத்து, தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இல்லையேல் அவரது கருத்திற்கு உரிய பதிலை அவருக்கு புரியும் மொழியில் மக்கள் அளிக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதை நினைவூட்டுகிறோம்.
தமிழுக்கும் பண்பாட்டிற்கும் சேவையாற்றி வந்தது தினமணி நாளிதழ். அதன் ஆசிரியர் திரு. வைத்தியநாதன் அவர்கள், வைரமுத்துவின் கீழ்த்தரமான கருத்தினை வெளியிட்டு, தமிழுக்கு துரோகம் செய்துள்ளதையும் கண்டிக்கிறோம்.
நாத்திக கூட்டமல்ல, இது இந்து விரோத கூட்டம்
திராவிடர் கழகத்தின் திருச்சி கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் மகள் கனிமொழி, திருப்பதி ஏழுமலையானைப் பற்றி விமர்சித்துள்ளார். இவரது பேச்சேல்லாம் கருப்பு சட்டை சிரூடையில், மேடைக்கு முன்னால் நிற்கும் சிலரின் கைத்தட்டலுக்காக இருக்கலாம்.
ஆனால், இவரது கருத்திற்கு இவரது தாய்கூட ஏற்கமாட்டார்கள் என்பது அவருக்கே தெரியும்.  2ஜி வழக்குத் தீர்ப்புக்கு முன்னர் எத்தனை கோயிலுக்குச் சென்று நேர்த்தி செய்தார்கள் என்ற பட்டியலும் இருக்கிறது.
கனிமொழி ஓன்று அரசியல்வாதியாக இருக்கட்டும், இல்லையேல் பகுத்தறிவு என்ற பெயரில் இந்து விரோத கருத்துக்களை பரப்பும் செயலை செய்யட்டும். இந்து விரோத கருத்தை கூறிக்கொண்டு செயல்படுவது, அவர், தான் ஏற்றுக்கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவி பிரமாணத்திற்கு எதிரானது என்பதை புரிந்துகொள்ளட்டும்.
உலக நாத்திக கூட்டமெனக்கூட்டிய திராவிடர் கழக வீரமணி, அதனை மூடநம்பிக்கையையே வியாபாரமாக நடத்தும் கிறிஸ்தவ மதப்போதகர் எஸ்றா சற்குணத்தை வைத்து துவக்கியதிலிருந்தே இது கடவுள் மறுப்பு கூட்டம் இல்லை, இந்து மத விரோதக் கூட்டம் என்பது உறுதியாகிறது.
கனிமொழி, இதே கருத்தை மற்ற மத நம்பிக்கையின் மீது கூறுவாரா? திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் தன்மானமுள்ள இந்துக்களே, `இப்படிப்பட்ட அறிவார்ந்த கருத்துகளை நீங்கள் ஏன் வேற்று மதங்களைப் பற்றியும் ஒரு விஷயத்திலாவது பேச கூடாது?’ எனக் கேளுங்கள். அப்படி தப்பித்தவறி பேசினால் என்ன நடக்கும் என்பதை அவர்கள் வாயாலேயே புரிய வையுங்கள்.  ஒன்று அவர்களது இந்துவிரோத செயல்பாட்டை மாற்றுங்கள், இல்லையேல் தன்மானத்தோடு, சுயமரியாதையோடு திமுகவைவிட்டு வெளியேறுங்கள் என திமுகவில் உள்ள இந்துத் தொண்டர்களிடம் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *