சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று அபூர்வமான ஆராய்ச்சிகள் நடக்கும்போது பல பேர் வலைதளங்களில் பதிவிட்டார்கள் -“தீவிரவாதிக்கு மதம் இருக்க முடியாது; தீவிரவாதி செலுத்தப்பட்டவன்; அவனுக்கு எண்ணங்கள் இல்லை, உணர்ச்சிகள் இல்லை, சரி-தவறு என்கிற பேதங்கள் இல்லை. அவன் வில்லில் இருந்து எய்தப்பட்ட அம்பு’ – என்று.
‘நாடியா முராட்’ போல…
சரியாக மூன்று வருஷம் முன்பு – 2016-ஆம் ஆண்டு மே மாதம், நாடியா முராட்-அமால் க்ளூனி சந்திப்பு நடந்தது. இருவரும் பெண்கள் என்பதைத் தாண்டி எந்த ஒற்றுமையும் இல்லாதவர்கள். இரு வேறு துருவங்கள்.
அமால் பிரமிக்க வைக்கிற பேரழகுப் பெண். சரியான உயரமும் விளம்பர மாடல்களின் உடல் அமைப்பும் கொண்டவர். அவர் அணியும் விலை உயர்ந்த ஆடைகளைப் பற்றிய தகவல்களைப் பகிர ஒரு இணையதளமே (“வெப்சைட்’) இருக்கிறது. ஆக்ஸ்போர்டு- இல் படித்து , நியூயார்க்கில் வழக்குரைஞர் தொழில் செய்யும் மாபெரும் பணக்காரப் பெண்.
இது போதாது என்று பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியை மணந்திருக்கிறார் (“யார் ஜார்ஜ் க்ளூனி என்று யோசிக்கிறீர்களா? – நம்ம “தல’ அஜித் மற்றும் நம் பிரபல நடிகர்களுக்கு “சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை’ சொல்லிக் கொடுத்த நடிகர், ஆஸ்கர் விருது பெற்றவர்). அமால் எங்கே போனாலும் ஆயிரம் பேராவது வந்து “ஆட்டோகிராப்’ கேட்பார்கள்.
நாடியா முராட்- யாராலும் கவனிக்கப்படாது கடந்து போகிறவர். ஏழை இராக்கியப் பெண். அதிகம் படிக்காதவர். சிறிய உடலமைப்பும், தலையைத் தூக்கி, கண்களைப் பார்த்துப் பேச முடியாத தயக்கமும் கொண்ட சிறு பெண்.
இந்த இரண்டு பேரும்தான் தீவிரவாதத்துக்கு எதிரான மாபெரும் போரை அறிவித்திருக்கிறார்கள்-இரண்டு தனி மனிதர்களாக இணைந்து!
இதன் பின்னணியைத் தெரிந்து கொள்ள நாடியாவின் வாழ்க்கையை நீங்கள் அறிய வேண்டும்.
இராக்கின் அழகான கிராமம் கோச்சோ. சிஞ்சார் என்கிற மலையின் பக்கத்தில் இருக்கிறது. “யஸீதி’ என்கிற மதத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் கிராம மக்கள். யஸீதிக்கள் மயில் வடிவில் பூமிக்கு ஒரு இறைத் தூதர் வந்தார் என்றும், அவர்தான் இந்த உலகுக்கு வண்ணங்களைத் தந்தார் எனவும் நம்பும் மக்கள். மயிலை வணங்குகிறவர்கள். சுற்றிலும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள். எல்லாரும் நேசமாய் வாழ்ந்தார்கள்-அந்தக் கிராமத்தை “ஐஎஸ்ஐஎஸ்’ தீவிரவாதிகள் ஒருநாள் சுற்றிவளைக்கும் வரை.
தீவிரவாதிகள் வந்தவுடன் ஆண்களும் பெண்களும் தனித் தனியாகப் பிரிக்கப் பட்டனர். 312 ஆண்கள் ஒரு மணி நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் நாடியாவின் 6 சகோதரர்களும் அடக்கம்.
பெண்களில் வயதான பெண்கள் தனியாகவும், இளம் பெண்கள் தனியாகவும் பிரிக்கப்பட்டனர். வயதான பெண்கள் உடனே கொல்லப்பட்டனர். நாடியாவின் அம்மா அப்போதுதான் இறந்திருக்க வேண்டும்.
இளம் பெண்கள் ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டு மோசூல் என்கிற நகரத்துக்குக் கொண்டு போகப்பட்டனர்-துப்பாக்கி முனையில். தன் குடும்பத்தில் ஏழு பேரை இழந்த நாடியாவுக்கு அழுவதற்கு நேரம் இல்லை அப்போது.
அன்று மோசூல் முழுவதும் “ஐஎஸ்ஐஎஸ்’ கட்டுப்பாட்டில் இருந்தது. அழைத்துவரப்பட்ட இளம் பெண்கள் ஏலம் விடப்பட்டனர் பாலியல் அடிமைகளாக… நாடியாவை ஏலத்தில் எடுத்தவன் ராட்சஸன் போல இருந்தான். அழுதாள் நாடியா-கொஞ்சம் சின்னவனாக இருந்த இன்னொருவனைத் தன்னை ஏலத்தில் எடுக்கச் சொல்லி. அவன் காலில் விழுந்து கதறினாள்.
எந்த ஓர் உயிரும், ஒரு வாழ்வும் இதைவிட கீழான நிலைக்குப் போக முடியாது என்று ஒரு புள்ளி உண்டா? உண்டென்றால் அன்று நாடியா அந்தப் புள்ளியில்தான் இருந்தாள்.
அந்த இரவில்தான் அவளுடைய உண்மையான தண்டனை ஆரம்பித்தது.
கிட்டத்தட்ட 90 நாள்கள். ஒரு பெண்ணின் உடலையும் மனதையும் ஆன்மாவையும் சுட்ட தீவிரவாதிகளின் கோர நடனம் அங்கே நடந்தது. கை மாறி மாறி ஏலத்தில் விடப்பட்ட நாள்கள். இரவா, பகலா என அறியாத பயங்கர நாள்கள். தப்பிக்க நினைத்தால் கொடும் தண்டனைகள் கொடுக்கப்பட்ட நீண்ட நாள்கள்.
ஒரு முறை, நெடுஞ்சாலையில் இருக்கும் டோல் பூத்தில் அடைக்கப்பட்டாள் நாடியா. சுற்றிப்போகும் வாகனங்களின் அதிர்வுக்கும், மோசூல் நகரின் தகிக்கும் பாலைவன வெப்பத்துக்கும் நடுவே, போகும் வரும் வண்டியில் இருப்பவர்கள் எல்லாம் அந்தச் சிறிய இடத்திற்குள் வந்து… போக…
சிதறிய ரத்தத்துக்கும் குமட்டி குமட்டி எடுத்திருந்த வாந்திக்கும் இடையே கிடந்தது அந்தப் பெண் உடல்.
கடைசியாக ஏலத்தில் எடுத்தவன் சாவின் விளிம்பில் இருந்த நாடியாவிடம் அறிவித்தான்-நாளை அவளை சிரியாவுக்கு கூட்டிப் போய் அங்கே ஏலத்தில் விடப்போவதாக…எழக்கூட முடியாமல் இருந்தவளை வீட்டில் வைத்து விட்டு கதவைப் பூட்டாமல் போனான் அவன் – சாகப் போகிறவளால் எப்படி தப்பிக்க முடியும் என்று…
உயிரின் கடைசித் துளி வாழும் இச்சை-அதுதான் நாடியாவுக்கு எழுந்து நிற்கும் சக்தியைக் கொடுத்திருக்க வேண்டும். எழுந்து வீட்டின் பின்னே வந்தாள். ஏழடி உயர “காம்பவுண்ட்’ சுவர் கொண்ட வீடு அது. 90 நாள்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருந்த 19 வயது சின்னஞ்சிறு பெண் நாடியா அந்த ஏழடிச் சுவரைத் தாண்டிக் குதித்தாள். அவள் உயரம் நாலடி சில அங்குலங்கள்தான்!
அப்புறம்…? அப்புறமென்ன…இரண்டரை மணி நேரம் இருட்டில் நடந்து, ஏதோ ஒரு வீட்டின் கதவைத் தட்டி அடைக்கலம் கேட்டு, அவர்கள் “ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்புக்கு எதிரானவர்கள் என்பதால் அவர்களால் காப்பாற்றப்பட்டு , எஞ்சியிருந்த ஒரே ஒரு அண்ணனைச் சந்தித்து, அகதிகள் முகாமில் வாழ்ந்து, தன்னைப்போல போர் அடிமைகளாய் “ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பினால் சிறை பிடிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்ற முடிவு எடுத்து, அமால் க்ளூனியைச் சந்தித்து, அவரின் உதவியுடன் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்குப் போய், தனக்கும் மற்ற பெண்களுக்கும் நேர்ந்ததைப் பேசி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி-பெண்களை அழிக்கும் “ஐஎஸ்ஐஎஸ்’ தலைமைக்கு எதிரான சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறாள் நாடியா. 2018-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவளும் அவள்தான்.
பரிசு பெற்றதற்கான பாராட்டுகளை ஏற்க நேரம் இல்லாமல் அவளும் அமால் க்ளூனியும் தொடர்ந்து தங்கள் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள்.
நாடியாவின் வாழ்க்கையை நினைக்கும் போதெல்லாம் எனக்கு அந்தச் சுவரைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது. அதன் அருகில் நின்று கொண்டு நாடியாவிடம் கேட்கவேண்டும் – “அந்த ஏழடிச் சுவரை நோக்கி ஓடும்போது என்ன நினச்சுக்கிட்டிங்க நாடியா?’
துரத்தப்படும் எல்லாருக்கும் அப்படி ஒரு சுவர் உண்டு. “ஏழடிச் சுவரைத் தாவிக் குதிக்க நாலடி உயரம் போதும்’ என்கிற புதிய பெளதிக விதிகள் பாதிக்கப்பட்டவர்களால் படைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
எது அமாலயும் நாடியாவையும் இணைத்தது? இரு வேறு உலகங்களைச் சேர்ந்த இரு பெண்கள் . ஒருத்தி பாதிக்கப்பட்டவள். இன்னொருத்தி பாதுகாப்பின் உச்சத்தில் வாழுகிறவள். “பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு முகம் உண்டு’ என்று எழுத்தாளர் அம்பை சொல்லுவார்.
“அவர்களுக்கென்று ஒரு குரல் உண்டு. அவர்களின் கைகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த முகத்தின் கண்களுக்கு கீழே இருக்கும் கரு வளையங்களை வருட வேண்டும்…’
அமால் அதைத்தான் செய்திருப்பார். அப்புறம்தான் அவர்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு போவதைப் பற்றிப் பேசியிருப்பார்கள்…
எனக்கும் அப்படிச் செய்ய வேண்டும் போல இருக்கிறது. புல்வாமாவில் இறந்த வீரர்களின் மனைவிகளின் கைகளை, குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் கைகளை, நியூஸிலாந்து கிறைஸ்ட்சர்ச் மசூதிகளில் தன் இனியவர்களை இழந்த பெண்களின் கைகளை, கொழும்பில் சிதறிய உடல்களின் அருகே அமர்ந்து கதறியழும் பெண்களின் கைகளை, இன்னமும் சிரியாவிலும் இராக்கிலும் பாலியல் அடிமைகளாய் விற்கப்படும் பெண்களின் கைகளை…
தீவிரவாதிக்கு மதம் உண்டா? எனக்குத் தெரியாது, ஆனால், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதம் இல்லை…உண்மையில் அவர்களுக்கு எதுவுமே இல்லை.
நாம் நம் கைகளை நீட்டினால் பிடித்துக்கொள்ள அவர்களுக்கு விரல்கள் மட்டும் உண்டு.