Tag Archives: temples

இராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்

14.07.19
பத்திரிகை அறிக்கை

வரலாற்று சிறப்புமிக்க அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்..
நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார் அத்தி வரதர். அவரை தரிசிக்க சாதாரண பொது மக்கள் முதல் பாரதத்தின் முதல் குடிமகன் வரை பல முக்கிய பிரமுகர்களும் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தினசரி சுமார் ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது, கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் இதுவரை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளார்கள்.

இதுபோல, கடந்த வருடம் உத்திர பிரதேச மாநிலத்தில் கும்பமேளா நடைபெற்றது. மிகச் சிறந்த ஏற்பாடுகளை அந்த மாநில அரசு செய்திருந்ததை கண்ணாரக் கண்டோம். அங்கு ஏற்பாடு செய்த அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு, அதிவிரைவாக இங்கும் அதுபோன்ற ஏற்பாடுகளை செய்யலாம்.

அத்தி வரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வரும் பக்தர்களுக்கு அவசியமான வசதிகள் செய்து தருவதில் குறைபாடு உள்ளது என்பதை தமிழக முதல்வரின் கவனத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே,

1. தேவையான அளவிற்கு மொபைல் டாய்லெட் வசதி, மற்றும் அங்காங்கே குடிநீர் வசதி செய்து தர வேண்டும். வரிசையில் நிற்பவர்களுக்கு குடிநீர் தர ஏற்பாடு. (வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.)

2. தரிசனத்திற்கு நிற்பவர்களுக்கும், ஆங்காங்கே நிற்பவர்களுக்கும் தேவையான பந்தல் அமைக்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் பலர் மயக்கமடைகிறார்கள்.

3. வரிசையில் நிற்பவர்கள் பசியாறிட, பிஸ்கெட் போன்ற சிறு உணவுகள் விற்பனைக்காவது ஏற்பாடு செய்யலாம். அல்லது சேவை நிறுவனங்கள் மூலம் பிரசாதமாக வினியோகம் செய்யச் சொல்லலாம்.

4. தரிசன வரிசையில் போய், கோயில் உள் வரிசை வரும்போது, சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ளதுபோல மூன்று வரிசையாக தரிசிக்க ஏற்பாடு செய்தால், காலதாமதம் வெகுவாக குறையும், விரைவாக, அதிகமான பக்தர்கள் தரிசிக்க வசதி ஏற்படும்.

5. மருத்துவர்கள் குழுவை ஏற்பாடு செய்தும், வயதானவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்ால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அந்தந்த பகுதிகளில் ஆம்புலன்ஸ் வசதியும் அவசியம்.

6. வயதானவர்கள், நோயாளிகள் தரிசினம் செய்ய வேண்டும் என்ற பக்தியில் வருகிறார்கள். அவர்களுக்கும், கைக்குழந்தையோடு வருபவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் உடனடியாக செல்வதற்கான பேட்டரி கார் வசதி, அழைத்து செல்ல தன்னார்வ தொண்டர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் வரவதற்கும், போவதற்கும் ஏற்பாடு தேவையான அளவில் இருப்பது அவசியம்.

7. தன்னார்வ தொண்டர்களை இணைத்து முழு சேவைக்கான ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.

இவை தவிர, ஒரு குழு அமைத்து, அவ்வவ்போது ஏற்படும் குறைபாடுகளை களைந்து, சிறப்பான ஏற்பாடுகளை செய்துதந்து, அத்தி வரதரின் பேரருளையும், தமிழக மக்களின் அன்பையும் தாங்கள் பெற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இராம.கோபாலன் அறிக்கை- தேர்தல் கமிஷனும், காவல்துறையும் திராவிட கழக கி. வீரமணியின் அடாவடி பேச்சை வேடிக்கை பார்க்கலாமா?

இராம கோபாலன் நிறுவன அமைப்பாளர்

பத்திரிகை அறிக்கை

தேர்தல் கமிஷனும், காவல்துறையும் திராவிட கழக
கி. வீரமணியின் அடாவடி பேச்சை வேடிக்கை பார்க்கலாமா?

நேற்று (4.4.2019) திருச்சி கீரைக்கடை பகுதியில் திருச்சி பாராளுமன்றம் திமுக கூட்டணியை ஆதரித்து, திராவிட கழக நடத்திய பொதுக்கூட்டத்தில் தி.க.வின் பொறுப்பாளர் அன்புக்கரசு, அந்த அமைப்பின் தலைவர் கீ. வீரமணி, திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் ஆகியோர் இந்து தெய்வமான கிருஷ்ணரை அவதூறாக, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தோட சம்பந்தப்படுத்தி, பக்தர்களின் மனங்கள் புண்படும்படி பேசியதை அடுத்து, இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக திரண்டு, ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதனை பொறுக்கமுடியாமல், திராவிட கழகத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். காவல்துறை வேடிக்கை பார்த்ததோடு, வழக்கும்போல் இரு தரப்பிலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது.

திராவிட கழக வீரமணி இரு வாரங்களுக்கு முன்னர், சென்னையில் அவரது அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் இதே போன்று பேசினார். அது சமூக வளைதளங்களிலும், தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் வெளியானதை அடுத்து, இந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் பல காவல்துறை அலுவலகங்களிலும் புகார் மனு கொடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. ஆனால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே, முகமது நபியை பற்றி இணையதளத்தில் வந்த செய்தியை பகிரப்பட்டபோது, பாய்ந்து வந்து இதே காவல்துறை வழக்கு பதிவு செய்து கல்யாணராமன் என்பவரை சிறையில் அடைத்தது. ஆனால், திராவிட கழகத்தின் தலைவர் பேசியதற்கு எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. இப்படி காவல்துறை பாரபட்சமாக நடப்பது வெட்கக்கேடானது.

தேர்தல் நடத்தை விதிமுறையில் தெளிவாக, மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதும், புண்படுத்தி பேசுவதும் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும்போது, ஏன் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்கவும், இதுபோல் தொடர்ந்து பேசி வரும் திராவிட கழகத்திற்கு அனுமதியும் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அனுமதி வழங்குகிறார்கள்? என்பது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், திமுகவின் தலைவர் ஸ்டாலின், தங்கள் கட்சி எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என்று பேசினார். அதனை அக்கட்சியின் தலைவர்கள் பலரும் தேர்தல் பரப்புரையில் பேசினர். ஆனால், திராவிட முன்னேற்றக்கழகம் திருந்தாத கட்சி. திராவிட கழகத்திற்கு மேடை அமைத்து, இந்து தெய்வங்களை, நம்பிக்கைகளை கொச்சை படுத்துவதை வேடிக்கை பார்க்கும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கு, இந்துக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்துக்கள் விழிப்படைந்துவிட்டார்கள். இவர்களின் கேவல புத்திக்கு தேர்தலில்தான் தகுந்த பாடம் புகட்டவேண்டும். அரசியல்வாதிகளுக்கு ஓட்டு எனும் ஆயுதத்தால் தண்டிக்கும் போதுதான், இனி ஒரு காலமும் இந்துக்களின் நம்பிக்கைகளை, தெய்வங்களை கொச்சை படுத்தும் துணிவு வராது.

எனவே, திமுக கூட்டணியில் இருக்கும் தன்மானமுள்ள, சுயமரியாதை உள்ள, தெய்வ நம்பிக்கை உள்ள இந்துக்கள் அக்கட்சியின் தலைவர்களுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தங்கள் மதத்தை குறித்து தவறான கருத்து தெரிவித்தால், அந்த கட்சியின் தலைமைக்கு எதிராக குரல் கொடுக்கவும் தயங்குவதில்லை. இந்துக்கள் அடிமைகளோ, சூடு சொரணை அற்றவர்களோ அல்ல என்பதை இந்த தேர்தல் நேரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியில் உள்ள இந்துக்களும், அவர்தம் குடும்பத்தாரும், தெய்வ நம்பிக்கை உள்ளவர்களும் இதனைக் கண்டிக்க முன்வரவேண்டும்.

எனவே, வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுகவின் கூட்டணிக்கு இந்துக்கள் ஓட்டு எனும் சக்தியால் புத்தி புகட்டுவோம். தேர்தல் சுமுகமாக, அமைதியாக நடைபெறுதை சீர்குலைக்கவே திக, திமுக கூட்டு சதி செய்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. இந்து தெய்வமான கிருஷ்ண பரமாத்வாவை கேவலப்படுத்தி பேசிய வீரமணி கும்பல் மீது தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அந்த அமைப்பின் தேர்தல் பரப்புரைக்கு உடனடியாக முற்றிலுமாக தடை விதிக்கவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

பெருமைமிகு ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வழிபாடு..

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் ஊதியூரில் உள்ள கொங்கன சித்தர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
பின்பு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, அருகில் உள்ள செட்டி தம்பரான் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலையையும் வழிபட்டார்.

கொங்கன சித்தர் – இவர் 18 சித்தர்களில் ஒருவராவார். இவர் ஊதியூர் மலையில் சுமார் 800 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு திருப்பதி சென்று ஜீவசமாதி அடைந்தார் என கூறப்படுகிறது. இவர் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலை நிறுவி வழிபட்டு வந்துள்ளார். இக்கோயிலுக்கு மிக அருகாமையில் இவர் தியானம் செய்த குகை உள்ளது. அங்கு செல்லும் அனைத்து பக்தர்களும் இந்த குகையை பார்த்து விட்டு செல்கின்றனர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு கசாயம் கொடுக்கபடுகிறது. இந்த கசாயம் பல நோய்களுக்கு நிவாரணி எனவும் கூறப்படுகிறது.

ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி – இக்கோயில் பழனியில் உள்ள தெண்டாயுதபாணி கோயிலுக்கு நிகரான சக்தி பெற்றதாகும். இது முகலாயர் ஆட்சி காலத்தில் மிகவும் பிரபலமானதாக திகழ்ந்ததாகவும், திப்பு சுல்தான் என்ற முகலாய மன்னன் வேலாயுத சுவாமி திருவுருவச்சிலையின் தலை, கை , கால்களில் வெட்டியதாகவும், இதனால் கோபமுற்ற சித்தர்கள் திப்புசுல்தானை நீ இந்த சிலையை எப்படி வெட்டினாயோ அதுபோலவே எத்தை முறை வெட்டினாயோ அத்தனை மாதங்களில் இறப்பாய் என சாபம் கொடுத்ததாகவும் அதுபோலவே திப்புசுல்தான் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று இந்த கோயிலில் அந்த வெட்டுப்பட்ட சிலை உள்ளது. இந்த கோயிலுக்கு சுமார் 1200 ஏக்கர் நிலமும் உள்ளது.

செட்டி தம்பிரான் – இவர் கொங்கன சித்தரின் சீடராவார். இவர் சுமார் 800 ஆண்டுகள் ஊதியூர் மலையில் வாழ்ந்ததாகவும் பின்பு தியான நிலையிலேயே ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் இவர் தியானம் செய்த குகையை பக்தர்கள் வழிபட்டு கொண்டுள்ளனர். அக்குகைக்குயிலிருந்து கொங்கன சித்தர் குகைக்கும் பழனியில் உள்ள போகர் தியானம் செய்யும் குகைக்கும் சுரங்க பாதை உள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன்

17-11-2018
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி மலையேறி கொண்டிருந்த இந்து ஐக்கிய வேதிகா (கேரள இந்து முன்னணி) தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், இருமுடி கட்டியாகிவிட்டது என்றால், அவர்கள், எந்தத் தடைகளையும் தாண்டி சபரிமலை நோக்கி நடை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது மரபு. கேரள இந்து ஐக்கிய வேதிகா தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள், இருமுடி எடுத்து நடைபயணமாக சபரிமலை சென்று கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் மரக்கூட்டம் எனும் பகுதியில் வைத்து கைது செய்துள்ளது கேரள காவல்துறை. இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 13 பேரும் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசே காரணம். இது தனி மனித சுதந்திரத்தையும், மத வழிபாட்டு உரிமையையும் பறிக்கும் செயல். இந்து சம்பிரதாயத்தைக் கேவலப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளால் மக்கள் கொந்தளித்துபோய் உள்ளனர். இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சபரிமலையின் புனிதம் காக்க நடைபெறும் போராட்டம், ஜனநாயக ரீதியாலானது. இந்த மக்கள் போராட்டத்தை முடக்க கம்யூனிஸ்ட் கட்சி நினைக்கிறது. இதற்காக, தீய நோக்கமும், தகாத செயல்பாடும் கொண்ட பெண்கள் இவர்கள் எனத் தெரிந்தும், அவர்களை சபரிமலைக்கு கொண்டு செல்ல முனைப்பு காட்டுகிறது. இது பக்தர்களின் மனங்களை புண்படுத்தி, சபரிமலை புகழைக் கெடுக்க நடக்கும் சர்வதேச சதி!
எல்லா வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மக்கள், பக்தர்கள் ஏற்கவில்லை. இது பாலின பாகுபாடு இல்லை என்றும், இந்தத் தீர்ப்பு மத வழிபாட்டில் தலையிடும் செயல் எனவும், மேல் முறையீடு (சீராய்வு) மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான சீராய்வு மனு என்பதால், உச்சநீதி மன்றம், தனது தீர்ப்பினை நிறுத்தி(ஸ்டே) வைக்க ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். இதுதான் நியாயமான செயல்பாடாகும்.
கிராமத்தில் ஒரு கதை உண்டு, ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரியாக இருந்தான். அந்த கிராமத்தில் அவன் வைத்ததே சட்டம் என்று செயல்பட்டான். ஒரு பெண் குற்றம் இழைத்ததாக பழி சுமத்தி, அவளை வீதியில் நிர்வாணமாக அழைத்து செல்ல உத்திரவிட்டான். அமைதியான கிராமத்தினர் அவனுக்கு முடிவு கட்ட நினைத்தனர். அவனுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தனர். கிராமத்தினர் அனைவரும், வீதியின் இருபுறமும் நிற்போம். அந்தப் பெண்ணை அழைத்து செல்லும்போது அனைவரும் நமது கண்களை மூடிக்கொள்வோம். அவனது கூலிப்படை அப்பெண்ணை வேண்டுமானால் நிர்வாணப்படுத்தலாம், நமது கண்களை திறக்க வைக்க முடியாது என்று கூறி செயல்பட்டனர். கிராமத்தினரின் அமைதியான இந்த செயல்பாட்டால், அந்த கொடுங்கோலன் வெட்கி தலைகுனிந்து, கிராமத்தைவிட்டே ஓடிபோனான் எனக் கூறுவார்கள். அதுபோலத்தான், பக்தர்கள் ஜனநாயக வழியில், அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்கின்றனர். ஆனால், இடதுசாரி கட்சிகளும், இடதுசாரி சார்பு ஊடகங்களும் அறப்போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்த தொடர்ந்து இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்கமாட்டோம் என கேரள மாநில அரசாங்கமும், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளும் நடந்துகொள்வது ஆபத்தானது. மக்கள் உணர்வுகளை மதிக்க மறுக்கின்ற அரசை, மக்கள் ஜனநாயக ரீதியாக தூக்கி எறிவார்கள் என்பது நிச்சயம்.
பல லட்சம் மக்கள், பல இன்னல்களை சந்தித்த போதும் தொடர்ந்து உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அறப்போராட்டம் நடத்தி வருவதை கருத்தில் கொண்டு, உச்சநீதி மன்றம் உடனே தனது தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது.
கேரள நீதிமன்றம் தலையிட்டு, கைது செய்யப்பட்ட திருமதி. சசிகலா டீச்சர் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய, கேரள மாநில அரசிற்கு உத்திரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சில மாதங்களாக கேரளாவில் நடைபெற்று வரும் அசாதாரணமான சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் விதத்தில் இருப்பதை கவனத்தில் கொண்டு, கேரள உயர்நீதிமன்றம் மற்றும் மாநில கவர்னர் ஆகியோர் பொது அமைதியை ஏற்படுத்தவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் மாநில அரசு செயல்பட அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

ரதயாத்திரை துவங்கியது

#இலட்சம்_குடும்ப_யாகத்திருவிழா

இன்று புறப்பட்டது..
வீரலட்சுமி ரதம்..
மஹாலட்சுமி ரதம்..
கோமாதா ரதம்..
சிவபார்வதி ரதம்..

இந்துமுன்னணி நிறுவனர் திரு.இராம.கோபாலன் அவர்கள் துவக்கிவைக்க..
துவங்கியது
யதயாத்திரை..

#இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் டிசம்பர் 23,24,25 ஆகிய தேதிகளில்
#கஜபூஜை,
#108அஸ்வ_குதிரை_பூஜை, #1008கோபூஜை,
#மீனாட்சிதிருக்கல்யாணம்,
#ஆண்டாள்திருக்கல்யாணம் ஆகிய ஆன்மீக வைபவங்கள் நடைபெற உள்ளன.

இந்த மூன்று நாள் பெருவிழாவின் முத்தாய்பாக மகாலட்சுமியின் 16 அம்சங்கள் மற்றும் மகாலட்சுமி மகாவிஷ்ணுக்கான #சோடஷமஹாலட்சுமிமஹாயாகம் 24 அன்று துவங்கி 25 ஆகிய இரண்டுநாட்கள் தொடர் யாகமாக நடைபெறவுள்ளது.
இதற்கான 360 அடி நீளம் 60 அடி அகலம் 4 அடி உயரத்தில் பிரம்மாண்டமான யாக குண்ட மேடை தயாராகிறது.

இதில் 17 பிரம்மாண்ட ஹோம குண்டங்கள் நிர்மானிக்கப்படுகின்றன. வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத இந்த யாகத்தில் பங்கு கொள்வது மிகப்பெரும் புண்ணியம்.

இந்த மாபெறும் நிகழ்ச்சியில் பெருவாரியான மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதர்காக மகாயாக விளக்க நான்கு #மஹாலட்சுமிரதம் கோவை காந்திபார்க் அருகில் 13/11/2018 இன்று காலை 10 மணியலவில் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நான்கு ரதங்கலும் கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி ஆகிய மாவட்டங்கலுக்கு மகாயாக பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளது.

அதுசமயம் மஹாயாக வேள்விகுண்டம் அமைத்திட 1.5 லட்சம் செங்கற்களும் யாகத்திற்கு சுத்தமான பசு நெய்யையும் வரக்கூடிய ரதத்தில் வழங்கிடவும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்

மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆன்மீக வைபவத்தில் நமது குடுபத்தோடு கலந்து கொண்டு மஹாலட்சுமியின் பரிபூர்ண அருள் பெறும்படி இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது…

வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..

2.10.18
சபரிமலை ஐயப்பன் கோயிலில் எந்த வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்ற உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு..
இந்த நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..
சபரிமலை ஐயப்பன் கோயில், பாரதத்தின் பழம்பெருமை வாய்ந்த கோயில்களில் ஒன்று. இதற்கு வரலாறு, புராணகால சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன. இது தொன்றுதொற்று வரும் பாரம்பர்யம். காட்டிற்கும், மலைக்கும் நடுவில் அமைந்துள்ள கோயில் இது. சுவாமி ஐயப்பன் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவர். ஐயப்பனுக்கு விரதம் இருந்து வந்து வணங்குவது என்பது பல நூறு ஆண்டுகளாக தொன்றுத்தொட்டு நடைபெற்று வரும் வழிபாட்டு முறை. கோயிலின் தாத்பர்யம் பாலினப் பாகுபாடு ஏற்படுத்துகிறது என்பது முரண்பட்ட பார்வை. பெண்கள் 10 வயதிற்கு முன்பும், 50 வயதிற்கு பிறகும் ஐயப்பனைத் தரிசிப்பதை, யாரும் தடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, தென் தமிழ்நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ஐயப்பனுக்குக் கோயில் இருக்கிறது, இன்னும் சொல்லப்போனால், பல கோயில்களில் தனி சன்னதியும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படி பல நூறு கோயில்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் வழிபாட்டு முறையே பெரும்பாலான ஐயப்பன் கோயில்களிலும் நடத்தப்படுகின்றன. அங்கெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை. வழிபட விரும்புவோர் மற்ற எந்த ஐயப்பன் கோயிலிலும் சென்று வழிபட முடியும்.
எல்லா வயது பெண்களும் இக்கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். பாலின பாகுபாடு கூடாது என்று வழக்குத் தொடுத்தவர் ஒரு முஸ்லீம், யாருடைய விருப்பத்திற்காக இந்த வழக்கை தொடுத்தார்? என்பது ஒவ்வொருவரின் மனதிலும் எழும் கேள்வியாக இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட பெண்கள்கூட இவ்வழக்கிலிருந்து விலகிவிட்டனர். இது பொதுநல வழக்கு என்றாலும், ஒரு பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள் இல்லாமல், சம்பந்தப்படாதவரின் கருத்திற்காக அடுத்தவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைப்பது என்பது வெற்று அரசியல் என்றே பார்க்க முடியும்.
இந்த வழக்கை விசாரித்த நான்கு ஆண் நீதிபதிகள் ஒரு தீர்ப்பையும், பெண்மணியான நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஒரு தீர்ப்பையும் கூறியிருக்கிறார். உண்மையில் பெண் நீதிபதி அவர்களின் தீர்ப்பே இந்த விஷயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம், அவர் தீர்ப்பில் தெரிவித்துள்ள கருத்து மிகவும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமும்கூட. மத வழிபாட்டில் பாகுபாடு எனக் கூறுவது சரியல்ல. இந்திய சாசனம் தந்துள்ள வழிபாட்டு உரிமையில் உச்சநீதி மன்றம் தலையீட முடியாது என்பன போன்ற அவர் கூறிப்பிட்டுள்ளவை மிகவும் கவனிக்கத்தக்கது. அதுமட்டுமல்ல, ஒரு பெண் நீதிபதி, தனது தீர்ப்பில் துல்லியமாக குறிப்பிட்டுள்ளது, பெண்கள் வழிபாட்டு உரிமை சம்பந்தமானது. எனவே, உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை தானே மறு ஆய்வு செய்ய வேண்டும்.
கட்டுப்பாடே இருக்கக்கூடாது என நீதிமன்றம் கூற முடியாது. எந்த இடத்திற்கும் ஒழுங்கு, கட்டுப்பாடு, வரன்முறை என்பது இருக்கிறது. உதாரணமாக, நீதிபதி முன்பு கைநீட்டி பேசவதோ, சத்தமாக பேசுவதையோகூட நீதிமன்றம் அனுமதிப்பதில்லையே ஏன்? நீதிபதியும் மனிதர்தானே? என்று முறைதவறி நடப்பேன் என ஒருவர் முனைந்தால், நீதிமன்றத்தின் மாண்பு குலைந்துபோகாதா? ஒருவரின் உடல் மொழி அது, அதனை எப்படி நீதிபதி கட்டுப்படுத்துவார்? அது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் விஷயம் என பேசினால் விதண்டாவாதமாகத்தானே பார்க்கமுடியும்? அதுபோலத்தான் வழிபாட்டில் கட்டுப்பாடு என்பதை, பாகுபாடு என எடுத்துக்கொண்டு பேசுவதும் என்பது பொதுமக்களின் கருத்தாகும். சமய வழிபாட்டில் சட்டத்தின் பார்வைகொண்டு தீர்ப்பு சொல்வது தவறான முன் உதாரணமாகிவிடும்.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் மக்களின் நம்பிக்கையை இழந்துவருவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. கடைசி தீர்வாக மக்களால் கருதப்பட்டவை நீதிமன்றங்கள். ஆனால், இப்போதோ, மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் முதல் இடமாக அது மாறிவருவது கவலை அளிக்கிறது. மக்கள், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையை இழப்பது பெரும் தீங்காகிவிடும்.
இதனால் தான், பொது மக்கள் ஆங்காங்கே, ஐயப்பன் வழிபாடு சம்பந்தமான தீர்ப்பிற்கு தங்களின் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் கோயில்களில் வழிபாடு நடத்தியும், பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகிறார்கள்.
பக்தர்கள் இந்தத் தீர்ப்பிற்கு தங்களது ஆட்சேபணையைத் தெரிவிக்கும் விதத்தில் கோயில்களில் தீபம் ஏற்றி பொது பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம். ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்ற ஐயப்ப குருசாமிகள் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைத்திட பக்தர்களை ஒருங்கிணைத்து நமது சமய உணர்வினை வெளிப்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
கேரள மாநில அரசும், மத்திய அரசும், இந்திய குடியரசு தலைவரும் இவ்விஷயத்தில் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தார்மீக ரீதியில், மக்களின் சமய உணர்வுகளை மதித்துத் தீர்வு காணவேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை- இந்து சமய அறநிலையத்துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது

இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து கோயில்களை, கோயில் சொத்துக்களைப் பராமரிக்க அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இத்துறையில் இருப்போர் மீது ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தத் துறை எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ, அதற்கு நேர்மாறாக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முறைகேடுகள், ஊழல் நிறைந்தத் துறையாக அது விளங்கி வருகிறது.
மக்களும், மன்னர்களும், செல்வந்தர்களும் வாரிவாரி கொடுத்த சொத்துக்களும், காணிக்கைகளும், கொள்ளையர்களின் கையில் சிக்கிய கதையாக போயுள்ளது. தோண்டத் தோண்ட, பத்மநாபபுறம் கோயிலைவிட வற்றாத செல்வத்தால் நிறைந்திருந்த தமிழகத் திருக்கோயில் சொத்துக்கள், கடலில் கொட்டியதுபோல ஆகிவிட்டது.
எந்தத் துறையிலும் இத்தகைய விபரீதத்தை காண முடியாது. பல அரசுத் துறை அதிகாரிகள் மீதும் புகார் வந்தால், லஞ்ச ஒழிப்புத் துறை, வருமான வரிச் சோதனை போன்றவற்றால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவை குற்ற பின்னணி கொண்டிருந்தால், கைது நடவடிக்கையையும் நீதிமன்றம் அனுமதிக்கின்றது. ஆனால், எந்தத் துறையிலும் ஊழல் செய்தவர்கள், லஞ்சம் பெற்றவர்கள், முறைகேடாக செயல்பட்டவர்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள் போன்றவர்களுக்கு ஆதரவாக ஊழியர் சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்ததில்லை. எல்லா அரசுத் துறைகள் ஊழியர்களும் சங்கம் வைத்துள்ளார்கள். குற்றம் சாட்டப்பட்ட நபர், அவரே, தான் நிரபராதி என்று நிரூபித்து விடுதலையாவதோ, அல்லது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தண்டனை பெறுவதோ நடைபெறுகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை, முறைகேட்டிற்காக விசாரிக்க அழைத்து சென்றபோதே இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது இந்த ஊழியர் சங்கம். மேலும், பா.ஜ.க. முக்கிய தலைவர் ஹெச். ராஜா, வேடசந்தூர் பொதுக்கூட்டத்தில் பேசியதை திரித்து, வதந்தியை பரப்பினர். இதற்காக எந்த அறிவிப்பும் செய்யாமல், அனுமதியும் பெறாமல் கோயில் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது சட்டவிரோத செயல். இதற்காகவே இவர்கள் மீது வழக்குப் போட்டிருக்க வேண்டும். மேலும் ஹெச். ராஜாவைக் கண்டித்து, நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அதற்காக கோயில் மண்டபங்களில் ஊழியர் சங்கத்தினர் தங்கவும், காலையில் குளித்து தயாராவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு யார் அனுமதி அளித்தனர்? அப்படி வந்தவர்கள், தங்கள் சொந்த காரியமாக விடுப்பு எடுத்துள்ளனர். சொந்த காரியம் என கூறிவிட்டு இப்படி நடந்துகொள்ளலாமா?
அதைவிட அவமானகாரமான விஷயம், உண்ணாவிரத பந்தலில் வைக்கப்பட்டிருந்த பாதாகையில் தமிழ்நாடு அறநிலையத் துறை என்று இருந்துள்ளது. அதில் `இந்து சமய’ என்ற வாசகம் இல்லை. அப்படியானால், இவர்கள் யாருக்காக பணி செய்கிறார்கள் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம். அந்த கூட்டத்தில் பேசிய பலரும் கோயிலை அழிக்க வேண்டும் என பேசி வருவர்கள். உதாரணமாக, திமுகவின் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழகத்தின் அருள்மொழி போன்றோர் அக்கூட்டத்தில் பேசியுள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை பாதுகாக்கும், பராமரிக்கும் பணியில் இல்லை, கோயிலை அழிக்கவே அவர்களுக்கு கோயில் வருமானத்திலிருந்து சம்பளம் பெறுகிறார்கள் என்பதைத் தான் இந்து முன்னணி பல ஆண்டுகளாக சுட்டிக்காட்டி வருகிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு இருக்கின்றனர். நாத்திக எண்ணம் கொண்டோர், அரசியல்வாதிகளுக்கு விசுவாசியாக இருக்கின்றனர். இவர்கள் எல்லாம், கோயில் சொத்துக்கள் கொள்ளைப் போக துணையிருக்கின்றனர். பக்திமானாக இருக்கும் சிலர் பேராசையாலோ அல்லது அச்சுறுத்தலாலோ, சிலை கடத்தல் முதல் ஊழல் வரை பல முறைகேட்டிற்குத் துணை போயிருக்கின்றனர்.
இந்துக்கள் விழிப்படைந்துவிட்டனர். வெகுண்டெழுந்து போராடத்துணிந்துவிட்டனர். கோயில் என்பது இறைவன் இருக்கும் வீடு. அதனை அரசியல் களமாக்கி, அழிக்கத் துடிப்போரை விரட்டி அடிக்கவும் தயங்கமாட்டார்கள். தமிழக அரசு, ஊழியர்களின் தீய நடத்தைக்காகவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க போராடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறையை கலைத்துவிட்டு, தற்காலிகமாக வக்ஃப் வாரியம் போல தனித்து இயங்கும் வாரியம் அமைத்து, அதன்பின், கோயில்கள், கோயில் சொத்துக்கள் பாதுகாக்க நிரந்தரமான தீர்வை ஏற்படுத்திட ஒரு குழுவை ஏற்படுத்தி நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்து முன்னணி தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

விநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்

இராம கோபாலன், நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு

பத்திரிகை அறிக்கை

விநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி
எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை
பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்..

விநாயகர் பெருமான் முழுமுதற்கடவுள், அவரது அருளைப் பெற விநாயகர் சதுத்தியை உலகம் எங்கும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். விநாயகர் பெருமான் தமிழ்நாட்டின் செல்ல கடவுள். தமிழகத்தின் மூளை முடுக்குகளிலும், தெரு முக்கிலும், ஆற்றங்கரை ஓரத்திலும் எங்கும் வியாபித்திருப்பவர் விநாயகர். எங்கும் காணமுடியாத சிறப்பு இதுவாகும்.

அதுபோல தமிழ்நாட்டில் எழுதத் துவங்குவோர் எல்லோரும் முதலில் பிள்ளையார் சுழி எனும் எழுத்திற்கு அவசிமான சுழி (பூஜ்யம்), வளைவு, கோடு என இவற்றை உகாரம், அகராம், மகாரம் என்ற மூன்று சேர்த்து போடும் உ எனும் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவது என்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது.

நல்ல காரியம் ஒருவர் ஆரம்பித்து வெற்றிகரமாக நடக்கும்போது, மக்கள், இந்த நல்லகாரியத்திற்கு இவர்தான் பிள்ளையார் சுழி போட்டவர் என்ற சொல்வாடையிலிருந்து, விநாயகரில் துவங்கப்படும் எந்த காரியமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருவது புலானாகிறது.

தமிழகத்திற்கும் விநாயகருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. தமிழையும், அறத்தையும் வளர்த்த ஔவையார், நம்பியாண்டார் நம்பி போன்றோருக்கு அருள்புரிந்தவர் விநாயகர். தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர், காவிரியை கமண்டலத்தில் அடைத்து வைத்தபோது, காக்கை வடிவில் வந்து தட்டிவிட்டு, காவிரி தமிழகத்திற்கு பெருக்கெடுத்து ஓட வைத்தவர் பிள்ளையார். ஷ்ரீரங்கநாதர் தமிழகத்தில் எழுந்தருளி அருள்வதற்கு விநாயகரின் லீலையே காரணம் என பல ஆன்மிக சம்பவங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி திருவிழாவை ஊர் திருவிழாவாக, தெரு விழாவாக மாற்றி இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தும் பணியை 34 ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் துவக்கியது. இன்று தமிழகம் எங்கும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு, சுமார் 30,000 ஊர்வலங்கள் நடைபெற்று வருகிறது. இதன் நோக்கம், இந்து சமுதாயத்தில் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் களைந்து சமுதாய ஒற்றுமை ஏற்பட வேண்டும், இந்து சமய நம்பிக்கை வலிமைபெற வேண்டும் என்பதே.

இந்து சமுதாய ஒற்றுமை, எழுச்சி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை தமிழகம் எங்கும் கொண்டாடிட விநாயகர் பெருமான் நல்லருள் துணை நிற்கட்டும். தமிழக மக்கள் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று சிறப்பாக வாழ விநாயகர் சதுர்த்தி திருநாளில் எல்லாவல்ல விநாயகப் பெருமானின் கருணையை வேண்டுகிறேன்.

சிலை திருட்டு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றும் எண்ணத்தை தமிழக அரசே கைவிடுக – வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை

இராம கோபாலன்

நிறுவன அமைப்பாளர்

இந்து முன்னணி, தமிழ்நாடு

59, ஐயா முதலித் தெரு,

சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.

தொலைபேசி: 044-28457676

2-8-2018

பத்திரிகை அறிக்கை

திரு. பொன். மாணிக்கவேல், ஐ.ஜி. அவர்களை, சென்னை உயர்நீதி மன்றம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்குத் தலைமைக்கு நியமித்து, முழுமையான விசாரணை மேற்கொள்ளவும், அவருக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கிடவும் அறிவுறுத்தியிருந்தது.

அதன் பிறகு, பொன் மாணிக்கவேல் அவர்களின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்தன. இதுவரை 1204 சுவாமி சிலைகள் திருடு போனது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் 56 சிலைகள் கண்டெடுக்கப்பட்டநிலையில் இவை எந்த கோயில் சிலைகள் என்பதைகூட உறுதி செய்ய முடியாத நிலையில் கோயில் நிர்வாகம் உள்ளது. காரணம் சிலைகள் காணமல்போனபோது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்ற கேள்வி எழும் என்ற பயம் காரணமாகவே நிர்வாகம் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், புதிதாக செய்யப்பட்டுள்ள பஞ்சலோக திருமேனிகளில் சுமார் 7000ஆம் திருமேனிகள் போலியானவை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்கள், கூடுதல் ஆணையர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய மரகதலிங்கங்கள் காணாமல் போயிருக்கின்றன.

இப்படி தோண்ட தோண்ட பூதாகாரமாக எழும் முறைகேடுகள், ஊழல்கள் ஆகியன மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் அவர்கள் மீது பக்தர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு பொன் மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லை, எனவே, சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற உயர்நீதி மன்றத்தில் மனு செய்துள்ளது.

விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றாலோ, திறம்பட கையாளவில்லை என்றாலோ சி.பி.ஐ. விசாரணை கேட்கலாம். இந்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் விரைவாக வெளிவந்துகொண்டுள்ள நிலையில், வழக்கை நீர்த்துப்போகவும், இழுத்தடிக்கவும், திசைதிருப்பவும் சி.பி.ஐ. விசாரணையை தமிழக அரசு கேட்கிறது என்பதை பாமரனும் புரிந்துகொள்ள முடியும்.

தமிழக எதிர்க்கட்சியான திமுக, இதனைக் கண்டிக்க முன் வரவில்லை. காரணம், இந்தக் குற்றச் செயல்கள் திமுக தலைமையிலான அரசு இருந்தபோதும் நடைபெற்றது வெளிச்சத்திற்கு வர இருக்கிறது என்பதாலேயே அக்கட்சி மௌனம் சாதிக்கிறது.

தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறீர்கள். இவ்வழக்கு சரியான திசையில் போய் கொண்டிருப்பதை, இவ்விசாரணையை முடக்கவோ, தொய்வு அடையவோ செய்தால், மக்கள் தங்கள் மீதுதான நம்பிக்கை இழப்பார்கள். எனவே, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரும் மனுவை திரும்பப் பெற கேட்டுக்கொள்கிறோம்.

இறைவன் திருமேனி செய்ததில் நடைபெற்ற முறைகேட்டிற்காக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டபோது, இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் சங்கம் அலுவலகத்திற்கு உள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தியது. இப்போது இவ்வழக்கை நீர்த்துபோக செய்ய தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணை கேட்பதை இச்சங்கம் வரவேற்றுள்ளது. இதிலிருந்தே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இம்முறைகேட்டில் ஈடுபட்டு இந்து ஆலயங்களை சீரழித்தது என்பதை ஒப்புக்கொள்வதுபோல் இருக்கிறது.

இதனால் தான், இந்து முன்னணி, உலக அளவில் ஊழல், முறைகேட்டில் முதலிடத்தில் இருப்பது இந்து சமய அறநிலையத்துறை என்றும், அத்துறையை ஆலயத்தைவிட்டு வெளியேற்றி, இந்து கோயில்களை இந்துக்களே நிர்வகிக்கத் தனித்து இயங்கும் வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கோருகிறது.

தமிழக அரசு சிலை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோருவதை ஏற்க முடியாது. இந்தக் கோரிக்கையை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கக்கூடாது என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. தொடர்ந்து பொன் மாணிக்கவேல் அவர்கள் விசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனைப் பெற்றுத்தந்திட வேண்டும். களவாடப்பட்ட அனைத்து இறைவன் திருமேனிகளும் கண்டுபிடித்து மீட்கப்பட வேண்டும்.

இந்தப் புனிதமான திருப்பணிக்கு திரு.பொன். மாணிக்கவேல் அவர்களுக்கு இந்து முன்னணி துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு. பொன் மாணிக்கவேல் அவர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து, இந்த விசாரணை முழுமையாக நிறைவேற அரசும், நீதிமன்றமும் ஆவண செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

துணிச்சலுடனும், திறமையுடனும் செயல்பட்டு வரும் திரு. பொன். மாணிக்க வேல் அவர்களுக்கு ஆன்மிக பக்தர்கள் அனைவரும் தார்மீக ஆதரவை நல்கிட வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

நன்றி,

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

வையம்பட்டி – கிறித்தவ வெறியர்களால் நின்று போன தலித் மக்கள் கோவில் திருவிழாவை நடத்திக் காட்டிய இந்துமுன்னணி

16.7.18

திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் ஆவாரம்பட்டி எனும் சிறிய கிராமம் உள்ளது.

இங்கு மதம் மாறிய (வன்னிய) கிருஸ்துவர்கள் சுமார் 600 குடும்பங்களும், தலித் இந்துக்கள் 36 குடும்பத்தினரும் உள்ளனர்.

எட்டு ஆண்டுகள் முன்பு
தலித் சமுதாய மக்கள் வழிபடும் காளியம்மன் கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்து நோன்பு சாட்டினார்கள்.
ஆனால் கிருஸ்துவர்கள் அவர்களின் கொடிக்கம்பத்தை இந்துகோயில் முன்புறமாக விஷமத்தனமாக வேண்டுமென்றே நட்டனர்.
அதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக
பிரச்சினை இருந்து வருகிறது.
தலித் இந்துக்கள் வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்றனர் .
ஆனாலும் திருவிழா நடைபெறும் போது சர்ச் வழியாக மேளதாளம் அடித்து செல்ல கிருஸ்துவர்கள் தடைசெய்தனர் இதற்கு
காவல் துறையினர் ஆதரவாக இருந்தனர்.
இது தொடர்கதை ஆனது .

இந்த ஆண்டு இந்துமுன்னணி பொறுப்பாளர்களிடம் இந்த பிரச்சினை வந்தது.

இந்துமுன்னணி கொடி கட்டி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இரவு சாமிகரகம் பாலிக்க சென்றபோது கிறிஸ்தவ மத வெறியர்கள் விழாவிற்கு கட்டப்பட்டிருந்த மைக்செட், பேனர் , ஆட்டோ கண்ணாடி, வே ன்கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

கலவரத்தை அடுத்து இந்து முன்னணி களத்தில் இறங்கியது .
ஆர் டி ஒ , காவல் கண்காணிப்பாளர் , டி எஸ் பி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அவர்கள் முழுமையாக பாதுகாப்பு தர உறுதி கூறினர்.
இரண்டு நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .
தற்போது அந்த ஊரில் இந்து முன்னணி கிளைக் கமிட்டி போடப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மதமாற்ற வெறிபிடித்த கும்பலின் திமிர் அடக்கப்பட்டது.