பொள்ளாச்சியில் பெண்களை திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
அதில் சம்பந்தப்பட்ட ஒருவரும் தப்பிக்க விடக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்ததை இன்று இந்து முன்னணி 20.3.2019 புதன் கிழமை நடத்தியது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்:
* தமிழகத்தை அதிர வைத்துள்ள பொள்ளாச்சி சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட்டு, அதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.
* பெண்கள் வன்கொடுமையைத் தடுக்க காவல்துறை, நீதிமன்றம் துணை நிற்க வேண்டும். மனிதாபிமானமற்ற குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுப்பது, மக்களிடையே நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கையை குலைய வைக்கிறது.
* ஊடகம் முதலானவை, குற்றவாளிகளுக்கு எதிராக புகார் கொடுப்போரின் ஆதாரங்களை வெளியிடுவது, குற்றவாளியை காப்பாற்றுகின்ற முயற்சி மட்டுமல்ல, வழக்கை திசைத்திரும்பும் செயலும்கூட. இதுபோல் பாதிக்கப்பட்டு, புகார் கொடுத்தால், நாமும் சமூகத்தால் கேவலப்படுத்தப்படுவோம் எனப் புகார் அளிக்க முன்வரக்கூடாது என்ற பயத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. தங்களது டி.ஆர்.பி. ரேட் உயர்வதற்காக இதுபோல கீழ்த்தரமாக செயல்படுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பள்ளிகளில், கல்லூரிகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை என்ற நிலை நீடிக்கிறது. உதாரணமாக, சேலம் ஓமலூர் பாத்திமா பள்ளி மாணவி சுகன்யா கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை! இதுபோல பல உதாரணங்கள் இருக்கின்றன!
* சின்னத்திரை, சமூக ஊடகங்கள் சமூக சீரழிவிற்கு வித்திடுகின்றன. அவற்றை முழுமையாக சென்சார் (தணிக்கை) செய்ய வேண்டும். சினிமா சென்சார், முன்போல இப்போது இல்லை, கடுமையான வரன்முறையை ஏற்படுத்த வேண்டும்.. மோசமான கருத்தை வெளியிடும் சினிமா பாடல்களை தடை செய்ய வேண்டும்.
* கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் காதலர் தினம், முத்தபோராட்டம் போன்றவற்றை நீதிமன்றம், காவல்துறை துணிவோடு தடுத்து நிறுத்த வேண்டும். இவற்றை எதிர்த்து மக்கள் போராட முன் வர வேண்டும்.
* பள்ளிகள், கல்லூரிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தி, மாணவர்களை நல்வழி படுத்த தமிழக அரசு கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தி, கலவரத்தை ஏற்படுத்த, ஆயுத போராட்டத்திற்கு பிரச்சாரம் செய்யும் நகர்புற நக்ஸல்களையும், கிறிஸ்தவ என்.ஜீ.ஓக்களையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
* சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும், மேலும் அதில் தொடர்புடையவர்கள் பற்றி விசாரணையை முடுக்கி விட்டது மட்டுமல்ல, உடனடியாக சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றியது. எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததை அடுத்து தமிழக அரசு சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றி துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது.
* பொள்ளாச்சியில் பெண்களை வன்கொடுமைப்படுத்தி சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறை, சிபிஐக்கு பூரண ஒத்துழைப்புக்கொடுத்த தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.