Daily Archives: June 21, 2018

வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
21-6-2018
பத்திரிகை அறிக்கை
சென்னை வடபழனியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு வேங்கீஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான திருக்குளத்தை தனியாருக்கு தாரை வார்த்து, அதனை வணிக வளாகமாக மாற்றினர். இதனை எதிர்த்து தமிழகத்தின் முதல்வராக இருந்த திரு. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக இந்து முன்னணி தொடர்ந்து பல்வேறு போராடங்களை நடத்தி வருகிறது. நமது கோரிக்கைக்கு, முதல்வர்களும், அறநிலையத்துறை அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியாளர்களும் பல்வேறு ஆணைகளை பிறப்பித்தப்போதிலும், அங்கு ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன. இன்று அந்த இடத்தில் சிறிய அளவிலான ஒரு குழி மட்டுமே இருக்கிறது.
இந்தப் பிரச்னையை சட்ட ரீதியாக தீர்க்க, சென்னை உயர்நீதி மன்றத்திற்கு கொண்டு சென்றவர் தியாகி நெல்லை ஜெபமணி அவர்களின் குமாரர் திரு. மோகன்ராஜ் அவர்கள். காவல்துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர், தனது தந்தையைப்போல சமூக நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறார். அவரது அளப்பரிய முயற்சியால், அந்த இடம் நீர் நிலை என, அதனை மீட்டெடுக்க இந்து சமய அறநிலையத்துறை, பொதுப் பணித்துறை, வட்டாட்சியர், காவல்துறை ஆகிய துறைகள் சேர்ந்து செயல்பட நீதிபதி அவர்கள் உத்திரவிட்டுள்ளார். திரு. மோகன் ராஜ் அவர்களுக்கு இந்து முன்னணி மனதார பாராட்டுகிறது.
நீதிமன்றங்கள், ஆலயச் சொத்துக்களை ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது எனவும், திருக்குளங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கி, அதனை நடைமுறைப்படுத்த ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.
இத்தகைய நல்லதொரு தீர்ப்பிற்குப் பிறகாவது, இந்து சமய அறநிலையத்துறை அந்தத் திருக்குளத்தை மீட்டெடுக்க உடனடியாக செயலாற்ற வேண்டும். அத்திருக்குளம் மீண்டும் உயிர்பெற்று எழ இந்து முன்னணி தொடர்ந்து பாடுபடும். சிவ பக்தர்கள் மற்றும் வடபழனியைச் சுற்றியுள்ள பக்தர்கள் அனைவரும் இந்த நற்பணி முழுமைபெற ஒத்துழைக்கவும், போராடவும் முன் வரவேண்டும். அத்தனை பெரிய சாலையில் ஓடும் மழை நீர் திருக்குளத்தில் சேமிப்பதன் மூலம் நீர் ஆதாரம் பெருகி நமது தண்ணீர் தேவை என்றென்றும் பூர்த்தி அடையும் என்ற சுயநலத்திற்காகவாவது ஆதரவு தெரிவிக்க இந்து முன்னணி சார்பாக வேண்டுகிறேன்.
இந்த வெற்றி சிவனருளால் ஏற்பட்டது. திருக்குளத்தைக் காப்பது, சிவத் தொண்டாக கருதி பாடுபட்ட அனைவருக்கும் சிவனருள் கிடைக்க பிரார்த்தனை செய்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
இராம கோபாலன்