இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
16-2-2016
பத்திரிகை அறிக்கை
கிறிஸ்தவர்களைத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகளும் அத்துமீறுகின்றன. தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்ற சனிக்கிழமை(13.2.2016) அன்று சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் முன்பு தவ்ஹீத் ஜமாத் எனும் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கோயிலுக்கு வழிபட வந்த பக்தர்களிடம் கையில் தாங்கள் வைத்திருந்த செல்போன் மூலமும், `மனிதனுக்கேற்ற மார்க்கம்’ என்று நூலை இலவசமாகக் கொடுத்தும் இஸ்லாமிய மதப்பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். `நீங்கள் கோயில் முன்பு மதப்பிரச்சாரம் செய்வது நியாயமா? இதுபோல் மசூதிக்கு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வருபவர்களிடம் செய்தால் ஏற்பீர்களா?’ என்று அவர்களிடம் பேசிய வயதான இந்துப் பெண்மணி கேட்டதற்கு, `ஓ செய்யலாமே!’ என்று கூறியுள்ளனர்.
ஒரு வாதத்திற்கு இதனை ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்வோம். திருவல்லிக்கேணி மசூதி முன்பு இந்துக்கள் மதப் பிரச்சாரம் செய்வதை அந்த மசூதியைச் சேர்ந்தவர்கள் ஏற்கிறார்களா? என்பது தெரிய வேண்டும். அப்படி ஏற்பதாக இருந்தால் ஏன் மசூதி வழியே பொது சாலையில் விநாயகர் ஊர்வலம் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்?
கோயில் வாசலில் வந்து மதப்பிரச்சாரம் செய்வதை கண்டுகொள்ளாத காவல்துறை, மசூதி வழியே பொது வீதியில் ஊர்வலம் செல்வதற்குக்கூட தடைவிதிப்பது எந்தவிதத்தில் நியாயம்?
இந்துக்களின் பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு. கிறிஸ்தவர்கள் மதப் பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தி வருவதை காவல்துறை நன்கு அறியும். இந்நிலையில் முஸ்லீம் அமைப்புகள் மதப்பிரசுரம் தருவது, மதமாற்ற வேலையில் ஈடுபடுவது மேலும் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறோம்.
அரசியல் சாசனம், ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த மதத்தை பின்பற்றவும், அவர்கள் மதத்தினரிடையே பரப்பவும் உரிமை அளிக்கிறது. ஒருவர் மற்ற மதத்தினரிடையே போய் பிரச்சாரம் செய்ய எந்த அதிகாரமும் யாருக்கும் வழங்கவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது சட்டத்திற்கு புறம்பான செயல்.
மதப்பிரச்சாரம், மதமாற்றம் என்பது நாடு பிடிக்கும் அன்னிய சக்திகளின் சதி. இதற்கு வெளிநாட்டினரின் நிதி உதவியே காரணமாக உள்ளது என்பதே அதன் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
சமீபத்தில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தவ்ஹீத் ஜமாத் திருச்சியில் நடத்தியது. அல்லாவிற்கு இணை கற்பிக்க கூடாது என்று, இந்து கடவுள்கள் திருவுருவங்களைப் போட்டு நீக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியிருந்தனர். தவ்ஹீத் ஜமாத் முக நூலிலும், தவ்ஹீத் ஜமாத் சார்பில் சாலையில் வைத்த பேனர்களிலும் இந்துக்களின் நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்தி, அதனை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று வெளியிட்டிருந்தார்கள். அது சம்பந்தமாக இந்து முன்னணி சார்பில் காவல்துறையிடம் புகார்கள் அளிக்கப்பட்டது. காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. ஷிரிக் ஒழிப்பு என்பது உலக அளவில் பயங்கரவாதத்தை வளர்க்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கொள்கை, அதன் ஒரு செயல்பாடு, திட்டம். இதனைத் தான் தவ்ஹீத் ஜமாத் செயல்படுத்துகிறது.
தமிழகத்தில் உள்ள புராதான கோயில்களுக்குப் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதை மத்திய அரசின் புலனாய்வுத் துறையால் சென்ற மாதத்தில் கூட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பழம்பெருமை வாய்ந்த கோயில்கள் முன்பு மதப்பிரச்சாரம் செய்வதை காணும் போது, இவர்களின் நோக்கம் மதமாற்றமும், புராதான கோயில்களை அழிப்பதற்கான நோட்டமாகவும் இருக்கலாம் என தமிழக காவல்துறைக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதனை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் மக்கள் விழிப்புடன் செயல்பட்டு, பயங்கரவாதத்தையும், மதமாற்ற மோசடிகளையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. தமிழக அரசும், காவல்துறையும் செயலிழந்து நிற்கும் நிலையில் மக்கள் சக்தியால் மட்டுமே தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள இயலும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)