இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
19-7-2019
பத்திரிகை அறிக்கை
நேற்று அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம்,
கவலை அளிக்கிறது..
அத்திரவரதர் தரிசன ஏற்பாடுகள் குறித்து, கடந்த ஞாயிறு அன்று இந்து முன்னணி சார்பாக, ஒரு கடிதத்தை முதல்வரின் பார்வைக்கு அனுப்பிவைத்தோம். அதன் பிறகும் எந்தவித நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் செய்யாமல், பத்திரிகையாளர்களை அழைத்து வாய்பந்தல் போட்டது.
48 நாட்கள் நடக்கும் ஒருவைபத்திற்கு ஏற்ப நிர்வாக செயல்படவில்லை. நேற்று நான்கு பக்தர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்கள்., இது மிகுந்த கவலை அளிக்கிறது. அவர்களது ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம்.
இது குறித்து விரிவாக பேச வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் மேம்போக்காக கேள்வியை கேட்டதும், அதற்கு தமிழக முதல்வரின் சாதாரண பதிலும் அதிர்ச்சியை அளிக்கிறது.
திருப்பதியில் வருடந்தோறும் தரிசனம் நடக்கிறது. இதற்கு தினமும் சராசரியாக 70,000 பக்தர்கள் வருகிறார்கள். ஆனால், காஞ்சியில் 48 நாட்கள் தான் தரிசனம். அதனால், லட்சக்கணக்கில் தானே வருவார்கள் என்பதுகூட அரசுக்குத் தெரியாதா? கும்பமேளாவிற்குக் கோடிக்கணக்கில் மக்கள் வருகிறார்கள். அதுவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது. அத்திவரதரோ 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தருகிறார் எனும்போது சிந்தித்து, அதற்கேற்ற ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டாமா?
மாவட்ட கலெக்டர், வயோதிகர்கள், கர்ப்பிணி பெண்கள் தரிசனத்திற்கு வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார் என தமிழக முதல்வர் சட்டசபையில் கூறியிருப்பது, எத்தனை அலட்சியமான பதில்.
மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படவில்லை.
பேருந்து நிறுத்தத்திலிருந்து ஊருக்குள் வரவும் திரும்பிப்போகவும் மக்கள் படாதபாடு பட வேண்டியுள்ளது. உள்ளூர் பஸ் வசதி போதவில்லை. ஆட்டோக்கள் அடிச்சவரைக்கும் லாபம் என கட்டணத்தை உயர்த்தி வாங்குகிறார்கள். இது மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியுமா? தெரியாதா?
வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் ஏற்பாடுகூட இல்லை. வரதரை தரிசிக்கும் அறையில் போதுமான காற்றோட்டம் இல்லை. அங்கு மின்விசிறி, காற்று வெளியேற்ற மின்சாதனமும் இல்லை. இத்தனை பிரச்னைகளுக்கு இடையில் பக்தர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி லட்சக்கணக்கில் வந்து தரிசனம் செய்து செல்லுகிறார்கள்.
மேலும் இதுபோன்ற அசம்பாவிதம் மீண்டும் நடைபெறாமல் இருக்க தமிழக முதல்வர் நேரிடையாக தலையிட்டு, தகுந்த ஏற்பாடுகளை செய்துத்தர அக்கறை காட்ட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)