Tag Archives: deepavali

காவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்

தீபாவளியன்று பட்டாசு வேண்டிக்க சில கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது. அதை நடைமுறை படுத்தும் விதத்தில் தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசு வெடித்த ஆயிரகணக்கானோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதனை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி சார்பில் காவல்துறை ஆணையர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது

கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது .தமிழகம் முழுக்க பண்டிண்டியை ஒட்டி கடைவீதிகளிலும், முக்கிய பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்று மக்கள் கூடும் இடங்களில் காவல்துறை ஆனது மிகச்சிறந்த பாதுகாப்பையும் முன்னேற்பாடுகளையும் செய்து மக்களுக்கு உதவியிருக்கின்றது இதற்காக தமிழக காவல்துறைக்கு ஹிந்து முன்னணியின் சார்பில் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதேசமயத்தில் இந்த ஆண்டு தமிழகம் முழுக்க 2179 நபர்கள் மீது தீபாவளி பண்டிகை அன்று தடையை மீறி பட்டாசு வைத்ததாக கூறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இதற்கு,உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை காரணம் காட்டி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தீபாவளி பண்டிகை ஆனது பாரம்பரியமாக பட்டாசுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விஷயத்தில் சரியான வழிகாட்டுதலும் விதிமுறைகளும் பொது மக்களை சென்றடையும் முன்பே காவல்துறை இவ்வளவு விரைந்து நடவடிக்கை எடுத்திருப்பது வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.

தமிழகத்தில் பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் இன்னும் பல ஆண்டுகளாக அமல் படுத்தப்படாமல் இருக்கின்ற சூழ்நிலையில், தீபாவளி பண்டிகையன்று மக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதிலே அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது இந்துக்களுடைய பண்டிகைகள் காலத்திலே ஒரு நெருக்கடியை ஏற்படுத்துகின்ற செயலாக இருக்கின்றது.

அதிலும் குறிப்பாக சிறுவர்கள் பட்டாசு வெடித்தால் அவரிடம் இருந்து பறிமுதல், அவர்கள் மீதோ அல்லது அவர்கள் பெற்றோர் மீது வழக்கு என்பது மிகவும் அதிர்ச்சிக்குள்ளான ஒரு செயலாக இருக்கின்றது.

ஏற்கனவே பல நீதிமன்ற தீர்ப்புகள் விதிக்கப்பட்டிருந்தாலும் கூட, உதாரணமாக முல்லைப்பெரியாறு ,காவிரி நீர், மசூதிகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி அகற்றவேண்டும் இதுபோன்ற பல தீர்ப்புகள் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் ஆறுமாத சிறைத்தண்டனை ஆயிரம் ரூபாய் அபராதம் என்று ஹிந்துக்களை மிரட்டுகின்ற விதத்திலே பத்திரிக்கை அறிக்கைகள் வெளியிட்டிருப்பதும் நடவடிக்கைகளில் போர்க்கால வேகம் காட்டுவது ஹிந்து விரோத மனப்பான்மை கொண்ட ஒருசில அதிகாரிகளின் செயலாக இது இருக்கும் என்று இந்து முன்னணி கருதுகின்றது

ஆகவே தங்களுடைய மேலான கவனத்திற்கு இந்த விஷயத்தை நாங்கள் கொண்டு வருகிறோம். தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழகம் முழுக்க தங்களுடைய பண்டிகையின்போது சந்தோசமாக பட்டாசு வெடித்து கொண்டாடிய இந்துக்கள் மீது போடப்பட்டு இருக்கக்கூடிய வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சந்திப்பின் போது மாநில அமைப்பாளர் பக்தன் ஜி மற்றும் மாநில பொறுப்பாளர்கள் இருந்தனர்.

தீபாவளி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம்

திருப்பூரில் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது.

ஒரு புறம் கள்ள காதலுக்கு ஆதரவாகவும்
இயற்கைக்கு எதிரான ஒரினச்சேர்க்கைக்கு
ஆதரவாக தீர்ப்பு கொடுத்து எய்ட்ஸ் நோய் வருவதை ஊக்கப்படுத்திவிட்டு..

மறுபுறம் தீபாவளிக்கு வருடத்தில் ஒரு நாள்
பட்டாசு வெடித்தால் சூற்றுச்சூழல் பாதிக்கப்படும் என தீர்ப்பு சொன்னால் இது நியாயமாக இருக்காது..

இந்து பண்டிகைகளை குறிவைத்து அழிக்க சர்வேச சதி நடப்பதாக இந்து முன்னணி கருதுகிறது.

மசூதிகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டதை இந்த ஆட்சியாளர்களால் ஏன் அமல்படுத்த முடியவில்லை..? தீபாவளிக்கு மட்டும் அவசர அவசரமாக கைது நடவடிக்கை ஏன்..?

பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் இல்லை என்றால் ஆட்சியாளர் வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்து முன்னணி இந்து சமுதாயத்தின் மீது
நடக்கும் தாக்குதலை வேடிக்கை பார்க்காது..
இதற்கு எதிராக தமிழகத்தில் இந்து முன்னணி முன்னின்று போராட்டங்களை நடத்தும்.

உச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை

24-10-2018
ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக கருதப்பட்டு வருவது நீதிமன்றங்கள்.  அப்படி நீதிமன்றத்தை அணுகியபோது, மக்களின் உணர்வுகளையும், பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் அறிந்து தீர்ப்பு கூறிய உயர்ந்த நீதிபதிகள் இருந்துள்ளனர்.
ஆனால், சமீப காலங்களில் அடுத்து அடுத்து வந்த தீர்ப்புகளான, ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது, தகாத உறவு குற்றமில்லை என்றது, ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்பது உள்பட பல தீர்ப்புகள் இந்துக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. இப்படிப்பட்ட தீர்ப்புகள் இந்த நாட்டின் பண்பாட்டை, கலாச்சாரத்தை சீர்குலைத்துவிடும் என்ற அச்சம் பெரும்பாலான மக்களிடம் எதிரொலிக்கிறது என்பது, மறுக்க முடியாத உண்மை.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பது குறித்த தீர்ப்பு நேற்று வந்துள்ளது. தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும். அதே சமயம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய நாட்களில் இரவு 11.55 மணியிலிருந்து 12.30 மணி வரை வெடிக்கலாம். இப்படிப்பட்ட தீர்ப்புக்குக் காரணம், ஒன்று இவ்வழக்கை எதிர்த்து வாதாடிய வழக்கறிஞர்கள் சரியாக கையாளவில்லை, அரசு வழக்கறிஞர்கள் மக்களின் கருத்தை, பாரம்பரியமாக தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்கள் குறித்து முறையாக நீதிபதிக்கு எடுத்துக் கூறவில்லை? அல்லது மாண்புமிகு நீதியரசர்களாக இருப்பவர்களுக்கு இந்நாட்டு மக்களின் உணர்வுகளை அறியாத வெளிநாட்டினரா? என்ற கேள்விகள் எழுகின்றன!
கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தினங்களில், நள்ளிரவில் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது, அவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்தே என்றால், இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி திருநாளில் அதிகாலை நேரத்திலும் பட்டாசு வெடிக்க அனுமதித்திருக்க வேண்டாமா? கண்டிப்பாக தீபாவளி இரவு நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை! ஒரு மதத்தின் நம்பிக்கையை ஏற்போம், பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்ற இரட்டை நிலைப்பாடு, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிடும். மக்களின் கடைசி நம்பிக்கையாக இருந்த நீதிமன்றங்கள் இன்று, அவநம்பிக்கையின் முதலிடமாக மாறுவது ஆபத்தானது என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது.
கிறிஸ்தவ மதத்தின் கோட்பாட்டிலோ, கிறிஸ்தவ நாடுகளிலோ கூட நள்ளிரவில் பட்டாசு வெடிப்பது என்பது கிடையாது. சமீப காலமாகத்தான் இவ்வழக்கம் கிறிஸ்தவர்களிடம் ஏற்பட்டு வருகிறது. அதற்கு மதிப்பளித்த உச்சநீதி மன்றம், கலியுகத்திற்கு முந்தைய யுகத்தில் தோன்றிய நரகாசுர வதம் பற்றியும், அவனின் சம்ஹாரமான – அரக்கனின் அழிவை அப்போதிலிருந்து மக்கள் கொண்டாடி வருவதையும் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை?!
ஒவ்வொரு ஆண்டும், பட்டாசு குறித்து தவறுதலான கருத்துகள் பரப்பட்ட வருகின்றன. ஏதோ ஒரு வகையில் வழக்கு போடப்பட்டு வருகிறது.. குழந்தை தொழிலாளர்கள் பட்டாசு தொழிலில் உள்ளனர் அதனால் பட்டாசு வாங்குவதைத் தவிர்ப்போம், காசைக் கரியாக்கலாமா?, புகை இல்லாத தீபாவளி, கிரீன் பட்டாசு என்பன போன்ற கருத்துக்கள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன.  கிறிஸ்தவ பள்ளிகளில், தீபாவளி கொண்டாட மாட்டோம் என மாணவர்களை சபதம் செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள். சில வெளிநாட்டு கம்பெனிகள் இதனை விளம்பரமாக பரப்புகிறது. இவ்வாறு நடப்பதெல்லாம் ஒரு திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. கடந்த ஆண்டு பாரதத்தின் தலைநகரமான டெல்லியில் பட்டாசு விற்கத் தடையில்லை, கொண்டு வர தடை என நீதிமன்றம் கூறியது வேடிக்கையாக இருந்தது!
இவை, பட்டாசு தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கி, மீண்டும் சிவகாசி போன்ற தமிழகத்தின் கடைக்கோடி நகரங்களை பாலைவனமாக்க நடக்கும் சதியோ என்ற கவலை நமக்கு வருகிறது.
ஒரிரு நாட்கள் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுகிறது என்றால், வருடம் முழுவதும் பூச்சி கொல்லி மருந்து, கொசு மருந்து, பெட்ரோல், டீசல் புகை எனும் நச்சு மருந்தால், காற்று மாசு சூழ்ந்து வருவது குறித்து ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை? இவற்றோடு ஒப்பிடும்போது, பட்டாசு புகையால் வரும் மாசு குறைவு, நன்மை அதிகம் என்ற உண்மை நன்கு விளங்கும்.
எனவே, உச்சநீதி மன்றம், பட்டாசு வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாடுகளை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சியை உடனே எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. நமது பாரம்பரிய விழாக்கள், பண்டிகைகள் குறித்து போடப்படும் வழக்குகளில் இன்னமும் அரசு வழக்கறிஞர்கள் அதிக கவனம் கொடுத்து வாதாடி மக்களின் உணர்வுகளை, உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். வருகின்ற தீபாவளி திருநாள் எந்தவித இடர்பாடும் இல்லாமல் மக்கள் கொண்டாட, இந்து முன்னணி இயக்கம், மக்களை ஒருங்கிணைத்து ஜனநாயக வழியில் போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
 என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)