இந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .
திருச்சி மாநகரில் கீரைக்கடை பகுதியில் நேற்று திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸின் திருநாவுக்கரசரை ஆதரித்து திராவிடர் கழகத்தினர் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர் .அந்த கூட்டத்தில் இந்துக்கள் போற்றி வணங்கும் தெய்வமான ஸ்ரீ கிருஷ்ணரை அவமதித்து திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அன்புக்கரசு, ஆரோக்கியராஜ் ஆகியோர் கேவலமாக பேசி உள்ளனர் .
இந்த சம்பவம் அங்கு உள்ள இந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது.
இதை தட்டிக்கேட்ட இந்துமுன்னணி ஊழியர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் திராவிடர் கழகத்தின் குண்டர் படை.
பலத்த காயமடைந்த சிலர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் மீது பொய் வழக்கை பதியச் சொல்லி கட்டாயப் படுத்தி தற்போது 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .
இந்த சம்பவம் மிக மிக கண்டனத்திற்குரியது. பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கு, பிணையில் எடுப்பதற்கு இந்து முன்னணி அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
தேர்தல் பிரச்சாரத்தில் எந்த மதத்தின் நம்பிக்கைகளையும் கேவலப்படுத்தி பேசக்கூடாது, எந்த மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தக் கூடாது என்பது நடைமுறையில் உள்ள விதிகள்.
ஆனால் தொடர்ந்து திராவிடர் கழகத்தை சார்ந்த கி. வீரமணி மற்றும் அவரது கட்சியினர் இந்து மதத்தை, இந்து தெய்வங்களை மட்டுமே திட்டமிட்டு மிக மிக கேவலமாக பேசி வருகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கிருஷ்ண பகவான்தான் காரணம் என்பதைப் போல சித்தரிக்கின்றனர்.
தகாத வயதில் திருமணம் செய்து கொண்ட பெரியார், 3 க்கும் மேற்பட்ட மனைவி, துணைவிகளை வைத்துள்ள பல திராவிட பாரம்பரிய அரசியல்வாதிகள் , தமிழகத்தில் நடக்கின்ற அனைத்து பாலியல் வன்முறைகளுக்கும் காரணமாக இருக்கமுடியாதா?
இவர்கள் இஸ்லாமிய மதத்தையோ, கிறிஸ்தவ மதத்தையோ விமர்சிக்க முடியுமா?
இவர்களுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணரை பேச அருகதை இருக்கிறதா??
திட்டமிட்ட முறையில் மத ரீதியான தேர்தல் பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்லும் திமுக கூட்டணி கட்சிகளின் நடவடிக்கைகளை
தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனிக்க தவறி விட்டது .
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் நடத்தப்பெறும் இந்தப் பிரச்சாரம் தமிழகத்தின் மாண்பை அமைதியை குறைக்கக்கூடிய செயல் .
இதுபோன்ற கேவலமான பிரச்சார யுத்தியை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்ற திமுக கூட்டணியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.
திமுக கூட்டணி கட்சியினரை எதிர்த்து தமிழகத்தில் ஹிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்து முன்னணி அவர்களை தோற்கடிக்கும் .
இனிவரும் காலங்களில் இந்து மதத்தை, இந்து தெய்வங்களை, பாரம்பரியத்தை, நம்பிக்கைகளை சீர்குலைக்கும் யாரையும் இந்து முன்னணி சும்மா விடாது.
மக்களை ஒன்றுபடுத்தி மிகப்பெரிய ஹிந்து விழிப்புணர்வு மாற்றத்தை ஏற்படுத்தும்.
தேர்தல் ஆணையம் நடத்தை விதிகளை மீறிய திருச்சி திமுக கூட்டணியினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைது செய்யப்பட்டுள்ள இந்துமுன்னணி ஊழியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இந்துமுன்னணி கேட்டுக் கொள்கிறது.