Tag Archives: #கோவில்வருமானம்

கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர்

26.10.20

நமது முன்னோர்கள் கோவில்கள் காலங்காலமாக இருக்கவே நிலங்களை, வீடுகளை எழுதித் தந்தார்கள்.

ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சீரழிந்து கிடப்பதைப்பற்றி கவலைப்படாத இந்து சமய அறநிலையத்துறை, அக்கோவிலுக்குச் சொந்தமான 35 ஏக்கர் புன்செய் நிலத்தை கலெக்டர் பெருந்திட்ட வளாகம் கட்ட 1,98,87,038/- கிரயம் செய்ய இருப்பதாகவும், ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்க பத்திரிகை விளம்பரம் செய்துள்ளது. இந்து முன்னணி இதற்குக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

அரசின் வழிகாட்டுதலின்படி சுமார் 100 கோடி தரவேண்டியதற்கு, 1.98 கோடியை நிர்ணயம் செய்துள்ளது பித்தலாட்டமான வேலை, சட்டவிரோதமான செயல்.

இந்த தொகை வருங்காலத்தில் காணாமல் போய்விடும். இந்த நிதி கண்டிப்பாக அந்த கோவில் நிர்வாகத்திற்கு பயன்படாது. கோயில் பராமரிப்பைப் பற்றி கவலைப்படாத தமிழ்நாடு இந்து சமய அறநிலயத்துறை, கோயில் நிலங்களை அரசுக்கு தாரை வார்க்க சேவகம் செய்கிறது.

இதனை எதிர்த்து அவ்வூரின் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மூலமாகவே இந்து முன்னணி ஆட்சேபணை கடிதங்களை அனுப்பி உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இன்னமும் அரசுக்கு சொந்தமாகாத அந்த இடத்தில் கட்டுமான பணிகளை அரசு செய்து வருவது சட்டவிரோதமானது, கண்டிக்கத்தக்கது.

எனவே, அரசுக்கு அந்த இடம் தேவை என்றால், அதனை எடுப்பதற்கு முன்பு, அதே மதிப்புள்ள, அதே பரப்பளவு உள்ள அரசு நிலம் அல்லது தனியார் இடத்தை வாங்கி, அதனை கோவில் பெயருக்கு அரசாங்கம் பதிவு செய்து தர வேண்டும்.
அப்படி செய்யாமல் இந்த நிலத்தை அரசிற்கு தாரை வார்ப்பது, அந்த சொத்தை அளித்தவர்கள் எந்த நோக்கத்திற்காக தந்தார்களோ அதற்கு எதிரானது. அது அவர்களுக்கு செய்யும் துரோகம். இதனை எதிர்த்து இந்து முன்னணி போராடும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.

சுமார் பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவிலை நிர்வகிக்காமல் கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்ய துணைபோகும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்த்தரமான செயலை இந்துக்கள் உணர்ந்து போராட முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி,
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(த. மனோகரன்)
மாநில செயலாளர்

கோவில்களின் நிதியைக் கொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள, அந்தந்தப் பகுதியில் உள்ள ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கிட வேண்டும்- வீரத்துறவி இராம. கோபாலன் அவர்கள் அறிக்கை

24.04.2020

இராம.கோபாலன் நிறுவன அமைப்பாளர் இந்துமுன்னணி சென்னை

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்பட 47 கோவில்களின் உபரி நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையின் முதன்மைச் செயலர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தெரியவருகிறது,

நமது கோவில்கள் பண்டைய காலம் முதல் மருத்துவ கூடங்களாகவும், பசி தீர்க்கும் மையங்களாகவும் செயல்பட்டு வந்துள்ளன. இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கோவில்களில் அன்னதான திட்டத்தை துவங்கிவைத்தார்கள்.

கொரானா தொற்று காரணமாக
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள
இந்த நேரத்தில் ஆலயங்களில் செயல்பட்டுவந்த அன்னதான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்காமல், இந்த அவசிய சேவையை இந்து அறநிலையத்துறை முடக்கி வைத்துள்ளது

அண்டை மாநிலமான ஆந்திராவில் தினசரி 1 லட்சம் பேருக்கு திருப்பதி கோவில் மூலமாக உணவு வழங்குவதாக கூறப்படுகிறது. இதேபோன்று புதுச்சேரியில் கோவில்களில் நடைபெற்று வந்த அன்னதான திட்டத்தை ஊரடங்கு நேரத்தில் தடையின்றி பொதுமக்களுக்கு சிறப்பாக கொண்டுபோய் சேர்க்கின்றார்கள். ஆனால் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை இதுபோன்ற சேவைகளை செய்ய முன்வராமல். காணிக்கையாக செலுத்திய நிதியினை பக்தர்களின் ஆலோசனையின்றி
கோவில் பணியாளர்கள், மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர்கள் ஒப்புதலுடன் அவசரகதியில் மடை மாற்றம் செய்வது கோவில்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்.

இந்த நெருக்கடி காலத்தில் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் சலுகை கொடுக்கப்படும் அதே நேரத்தில் இந்துகோவில் வருமானம் சுரண்டப்படுவது நியயாமா என்பதை அரசு சிந்திக்கவேண்டும்.

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் செயல்படுத்தபடும் அன்னதான திட்டங்களை விரிவுபடுத்தி கோவில்களின் சேவை மக்களுக்கு சென்றடைய அரசு வழிவகைசெய்ய வேண்டும்.

இந்து சமய நிறுவனங்கள் பட்டியலிட்டுள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருகோவில் உள்பட 47 கோவில்களின் உபரி நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில்

இராம. கோபாலன்