26.10.20
நமது முன்னோர்கள் கோவில்கள் காலங்காலமாக இருக்கவே நிலங்களை, வீடுகளை எழுதித் தந்தார்கள்.
ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சீரழிந்து கிடப்பதைப்பற்றி கவலைப்படாத இந்து சமய அறநிலையத்துறை, அக்கோவிலுக்குச் சொந்தமான 35 ஏக்கர் புன்செய் நிலத்தை கலெக்டர் பெருந்திட்ட வளாகம் கட்ட 1,98,87,038/- கிரயம் செய்ய இருப்பதாகவும், ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்க பத்திரிகை விளம்பரம் செய்துள்ளது. இந்து முன்னணி இதற்குக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
அரசின் வழிகாட்டுதலின்படி சுமார் 100 கோடி தரவேண்டியதற்கு, 1.98 கோடியை நிர்ணயம் செய்துள்ளது பித்தலாட்டமான வேலை, சட்டவிரோதமான செயல்.
இந்த தொகை வருங்காலத்தில் காணாமல் போய்விடும். இந்த நிதி கண்டிப்பாக அந்த கோவில் நிர்வாகத்திற்கு பயன்படாது. கோயில் பராமரிப்பைப் பற்றி கவலைப்படாத தமிழ்நாடு இந்து சமய அறநிலயத்துறை, கோயில் நிலங்களை அரசுக்கு தாரை வார்க்க சேவகம் செய்கிறது.
இதனை எதிர்த்து அவ்வூரின் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மூலமாகவே இந்து முன்னணி ஆட்சேபணை கடிதங்களை அனுப்பி உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இன்னமும் அரசுக்கு சொந்தமாகாத அந்த இடத்தில் கட்டுமான பணிகளை அரசு செய்து வருவது சட்டவிரோதமானது, கண்டிக்கத்தக்கது.
எனவே, அரசுக்கு அந்த இடம் தேவை என்றால், அதனை எடுப்பதற்கு முன்பு, அதே மதிப்புள்ள, அதே பரப்பளவு உள்ள அரசு நிலம் அல்லது தனியார் இடத்தை வாங்கி, அதனை கோவில் பெயருக்கு அரசாங்கம் பதிவு செய்து தர வேண்டும்.
அப்படி செய்யாமல் இந்த நிலத்தை அரசிற்கு தாரை வார்ப்பது, அந்த சொத்தை அளித்தவர்கள் எந்த நோக்கத்திற்காக தந்தார்களோ அதற்கு எதிரானது. அது அவர்களுக்கு செய்யும் துரோகம். இதனை எதிர்த்து இந்து முன்னணி போராடும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.
சுமார் பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவிலை நிர்வகிக்காமல் கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்ய துணைபோகும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்த்தரமான செயலை இந்துக்கள் உணர்ந்து போராட முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி,
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(த. மனோகரன்)
மாநில செயலாளர்