16-4-2019
பத்திரிகை அறிக்கை
ஜனநாயகத்தின் திருவிழாவான பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு பெற்ற கட்சிகளின் ஆட்சி நடைபெற்றுள்ளது. ஆனால், அந்த 55 ஆண்டுகள் செய்த வளர்ச்சி நடவடிக்கைகளைக் காட்டிலும் அதிகமாக, கடந்த 5 ஆண்டு ஆட்சி செய்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து காட்டி சாதனை புரிந்துள்ளது. அனைத்து துறைகளிலும் மாபெரும் வெற்றியும், பெருமித உணர்வும் ஏற்பட வழிவகை செய்துள்ளதை ஒவ்வொரு இந்தியனும் உணர முடிகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் புதிய வரியோ, வரி விகிதம் கூட்டப்படவோ இல்லை, அத்தியாவசியமான பொருட்களின் விலைகள் கட்டுக்குள் இருக்க மத்திய அரசின் நடவடிக்கையே காரணம். அதேசமயம், தேசத்தின் வருமானம் பெருகியுள்ளது. இதிலிருந்து சிறந்த நிர்வாகம் எது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஜனநாயகத்தின் பலமே நமது வாக்குரிமை, இதனை
சுயலாபத்திற்காகவோ, பணத்திற்கோ, பொருளுக்கோ ஆசைப்பட்டு இழந்துவிடக்கூடாது. ஒவ்வொருவரும், தமது வாக்குரிமையை செலுத்த வேண்டும். அது ஜனநாயகத்தின் புனித கடமையாக எண்ணி செயல்பட வேண்டும். நோட்டா -விற்கு வாக்களிக்கக்கூடாது. இது ஜனநாயகத்தை குலைத்துவிடும். காலையிலேயே வாக்குச்சாவடி சென்று வாக்குரிமையை செலுத்தி ஜனநாயகத்திற்கு வலு சேர்ப்போம்.
ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதி மன்றத் தீர்ப்பை பயன்படுத்தி, ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் நாத்திகவாதிகளையும், இஸ்லாமிய, கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களையும் போலீஸ் துணையோடு அழைத்து சென்று ஐயப்பனின் வழிபாட்டை சீர்குலைக்க இடதுசாரிகள் முயன்றன. இதற்கு தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணி கட்சிகள் துணை நின்றன என்பதை இந்துக்கள் மறக்க வேண்டாம்.
மேலும், திராவிடர் கழக வீரமணி, இந்துக்களின் வழிபாட்டிற்குரிய கிருஷ்ணரை கேவலப்படுத்தி தேர்தல் பரப்புரையில் பேச மேடை அமைத்து கொடுத்தது திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள். வருகின்ற 18ஆம் தேதி ஐயனின் 18ஆம் படியை அவமதித்தவர்களுக்கு தகுந்த பாடத்தை, வாக்கு எனும் ஆயுதத்தால் ஜனநாயக வழியில் பதிலடி கொடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இந்தியாவின் அனைத்து மக்களும் முன்னேற திட்டம் வகுத்து செயல்படுத்தியவரும், உலக நாடுகளில் இந்தியாவின் பெருமையை உணர செய்தவர் திரு. நரேந்திர மோடி. அவரது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக உட்பட அதன் கூட்டணி கட்சிகளுக்கு உரிய சின்னத்தில் நமது வாக்கினைச் செலுத்துவோம். தேசத்தின் நலன் காத்திட, மீண்டும் மோடி பிரதமராகி நாட்டை வலிமையானதாக, வளமானதாக ஆக்கிட தமிழக மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் வாக்களிக்கக் கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)