தாணு லிங்க நாடார்
- 17-2-1915 அன்று கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி கிராமத்தில் பிறந்தார்.
- இளமைப் பருவத்திலேயே இந்து உணர்வு மிக்கவராகத் திகழ்ந்தமையால் 1938 ஆம் ஆண்டு கேரள இந்து மிஷன் உபத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1943 ஆம் ஆண்டு காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ஐயா அவர்கள் பின்னர் அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1944 ஆம் ஆண்டு இராணுவ அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- சட்டப்படிப்பை முடித்த ஐயா அவர்கள் 1946 ஆம் ஆண்டு நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் சேர்ந்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்தார்.
- 1946 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்கத்தில் உறுப்பினரானார்.
- 1947 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்க ஐவர் போராட்டகுழுவில் ஒருவரானார்.
- 1948 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்ற உறுப்பினராக தென்தேடுக்கபபட்டு, மூன்றாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
- 1951 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த போது ஒரு பிரிவின் தலைவரானார்.
- 1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உபத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
- 1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்றத்தில் பனம்பள்ளி கோவிந்தமேனன் முதல்வராக இருந்த போது, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக மூன்று ஆண்டுகள் பணி செய்தார். அந்த வேளையில் நாகர்கோவில் நகர் மன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார்
- 1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார்.
- 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றினார்.
- 1962 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
- 1964 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு ஐந்தாண்டு காலம் பணியாற்றினார்.
- 1971 ஆம் ஆண்டு குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் நிலவிய கிறிஸ்தவ மதவெறி அதிகார போக்கைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதுடன், 14-2-1982 வரை பொது வாழ்விலிருந்தும் விலகி இருந்தார்.
- 14-3-1982 அன்று மண்டைக்காடு மதகலவரம் தொடர்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கூட்டிய சமாதானக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்.
- 16-3-1982 அன்று கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணியின் தலைவராக பொறுப்பேற்றார்.
- 1982 ஆம் ஆண்டு இறுதியில் தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவராக மாநில அமைப்பாளர் வீரத்துறவி இராமகோபாலன் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
- 13-2-1983 அன்று நாகர்கோவில் நடைபெற்ற இந்து ஒற்றுமை எழுச்சி மாநாட்டிற்கும் ஊர்வலத்திற்கும் அரசு விதித்த தடையை மீறி ஊர்வலம் சென்று கைதாகி பாளையங்கோட்டை சிறையில் 27 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.
- 1984 ஆம் ஆண்டு இந்துக்களின் உரிமை காக்க மண்டைகாடு கடலில் குளிப்பதற்கு ஊர்வலமாக சென்றார்.
- 1984 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்துக்களுக்கு புத்துணர்ச்சி அளித்தார்.
- 13-7-1987 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மூஞ்சிறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் பைபிள் கொடுத்த செயலைக் கண்டித்தும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். மறுநாள் தலைமை ஆசிரியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
- 2-10-1987 அன்று நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விஜயதசமி விழாவில் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றும் பெருமை பெற்றார்.
- 1988 ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் ஹெட்கோவார் நூற்றாண்டு விழா செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
- 3-10-1988 அன்று திருநெல்வேலி மாவட்டம் ஏரலில் நடந்த டாக்டர் ஜி நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் சித்தரகுப்தன் எனது ஏட்டை புரட்டிக் கொண்டிருக்கிறான். எனவே இளைஞர்களே தேசப் பணியாற்ற வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தவாறு மேடையிலேயே காலமானார்.