திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றுள்ளது.
இந்த மாநாட்டின் நோக்கமானது சமுதாயத்தில் ஜாதி துவேஷத்தை, இந்துமத வெறுப்பை உருவாக்குவதாக உள்ளது.
சனாதனம் என்ற வார்த்தைக்கு தொன்மையான என்ற அர்த்தம் உண்டு. ஆனால் அதை அடிப்படைவாதம் என்று கூறி , மாற்றத்தை விரும்பாத ஒரு தர்மம் என்றும் கருத்து சுதந்திரம் வழங்காத தர்மம் என்றும் கூறியுள்ளார். உண்மையில் விரும்பியவர்கள் விரும்பியதை பின்பற்றவும், கடவுளே இல்லை என்றுகூட கூறுவதற்கு சுதந்திரமும், இன்னும் சொல்லபோனால் யாரொருவர் எந்த வழிபாட்டு முறைகளையும் கடைபிடிப்பதற்கான சர்வ சுதந்திரத்தையும் வழங்கியிருப்பது சனாதனம். ஒருபோதும் எதையும் வெறுத்தது இல்லை.
மூட நம்பிக்கைகளை பரப்புவது சனாதனம் என்று கூறுகிறார். ஆனால் சனாதன தர்மத்தில் ஒவ்வொரு விஷயமும் அறிவியல் பூர்வமானது என்று பல அறிஞர்கள் ஆய்ந்து கூறியுள்ளதை ஏற்க மறுக்கிறார். உதாரணமாக மாதவிடாய்க் காலங்களில், கர்ப காலங்களில் பெண்களை ஒதுக்கிவைப்பதை கடைபிடித்து பெண்களுக்கு சம உரிமை வழங்காத பழமைவாதம் கொண்டது சனாதனம் என்கிறார். மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் உடல் , மன ரீதியிலான உளைச்சல்களுக்கு தக்க ஓய்வு தரப்படவேண்டும் என்பது மருத்துவ ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள விஷயம், இன்றைய சூழலில் பெண்கள் தக்க பாதுகாப்புடன் அவற்றை சமாளித்து சமுதாயத்தின் அத்தனை துறைகளைளிலும் கோலோச்சுகிறார்கள். பெண்களை எப்போதும் மேன்மைப்படுத்தி சீராட்டி வருவது சனாதனம் தான். டெலிபோனிலோ, கடிதத்திலோ தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை பெண்களை வெறும் போகப் பொருளாக சித்தரிக்கும் நடைமுறை என்பதையோ, முத்தலாக் பிரச்சினையில் பெண்களுக்கு சமநீதி வழங்கப்படவில்லை என்பதையோ கூற திருமாவளவன் முன்வருவாரா?
அதே சமயம் மூடத்தனங்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக செயல்பட்டு குருடன் பார்கிறான்,செவிடன் கேட்கிறான் , முடவன் நடக்கிறான் என்று பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட்டு மதமாற்றத்தில் ஈடுபடும் வியாபாரிகளைப் பற்றி இவர் வாய் திறக்கவேயில்லை.
வர்ணாச்ரம தர்மத்தின் அடிப்படையில் வசிப்பிடங்கள் தனிதனி என்று பேதத்தை ஏற்படுத்தியுள்ளது சனாதனம் என்று பொய் பிரசாரத்தை கூறுகிறார். உண்மையில் இன்று நகரங்களின், பெரு நகரங்களின் நிலை என்ன? யாரும் யாருடைய ஜாதியையும் பற்றி கவலைப்படாது அப்பார்ட்மென்ட்களில் வசிக்கும் நிலை உள்ளது.
அதேபோல குலத்தொழிலை ஆதரிப்பது சனாதன தர்மம் என்கிறார். வேதம் தொகுத்த வியாசர் மீனவர் என்பதும், ராமாயணம் வழங்கிய வால்மீகி வேடர் குலம் என்பதையும், நாயன்மார்கள் ஆழ்வார்களில் உள்ள பல ஜாதியினரை பலரும் வணங்குகின்றனர் என்பதை சுலபமாக மறந்துவிட்டார்.
உண்மையில் நடிகன் மகன் நடிகனாவதும் , அரசியல்வாதி மகன் அரசியல்வாதியாவதும் தான் இன்றைய குலத் (குடும்பத்) தொழில் ஆக உள்ளது. அவர்களுடன் கூட்டணி பேசி அரசியல் ஆதாயம் தேடும் திருமாவளவன் சனாதன தர்மத்தைப் பற்றி பேசும் அருகதை அற்றவர்.
குழந்தை திருமணம், விதவை மறுமணம், உடன்கட்டை ஏறுதல் ஆகியவை சனாதனம் பின்பற்றச் சொல்லும் நடைமுறை என்கிறார். ஆனால் அரசியல்வாதிகள் தங்களது தொண்டர்களை தீக்குளிக்கச் செய்யும் கொடூரம் தவிர இன்று இவைகளெல்லாம் நடைமுறையில் இல்லை என்பதும் சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இவைகளை கடைபிடிப்பதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. உண்மையில் காலத்துக்கு தக்க மாற்றங்களை ஏற்று அதனை நடைமுறைப் படுத்தியுள்ளது சனாதன தர்மம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் சனாதனம் உறுதியாக உள்ளது.
திருமாவளவனின் இந்த பிதற்றல்களை உற்றுநோக்கும் பொது இவர் திட்டமிட்ட ரீதியில் ஹிந்து விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தெளிவாகிறது. இதற்காக சிலரிடம் இவர் கைக்கூலி பெறுகிறாரோ என்று இந்துமுன்னணிக்கு சந்தேகிக்கிறது.
இவர் இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் வேண்டுமென்றே ஜாதி கலவரத்தை, மத வெறுப்பை உருவாக்கி குளிர் காய நினைக்கிறார் என்பது தெளிவு.
இந்துமதத்தில் ஜாதி வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. இறைவனின் அவதாரத்திலும், திருவிளையாடல்களிலும் இவை நிலை நிறுத்தப்பட்டுள்ளன. நமது ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும், துறவிகளும், சித்தர்களும் ஜாதி வேறுபாடுகளை களைவதிலே முன்னோடியாக இருந்தனர். ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் பணத்திற்கும், பதவிக்கும், அரசியல் ஆதாயத்திற்காகவும் ஜாதி வேறுபாடுகளை தூண்டிவிட்டு ஜாதி அரசியல் செய்கின்றனர். திருமாவளவன் அவர்கள் இத்தகைய ஆதாயம் தேடக்கூடியவராக இருப்பாரோ என் இந்துமுன்னணி கருதுகிறது.
ஆகவே இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டால், அவரோடு சேர்ந்து இந்துமத துவேசங்களை பரப்பி குளிர்காய நினைப்பவர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அனைவரின் கபட வேடத்தை இந்துமுன்னணி பட்டி தொட்டி தோறும் கொண்டு சென்று இந்துக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தக்க பதிலடி கொடுக்கும் என்பதை இந்துமுன்னணி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.