Tag Archives: ஜூன் 10

கோவிலை திறக்க வலியுறுத்தி ஜூன் 10 – ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை போராட்டம் – மாநிலத் தலைவர் அறிக்கை

08.06.2020
வணக்கம்.
ஆலயங்களை வழிபாட்டிற்கு உடனடியாக திறக்க வேண்டுமென்று வலியுறுத்தி ஜூன் 10 -ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை செய்யும் போராட்டம்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை

ஒரு மிகப்பெரிய, நீண்ட ஊரடங்கு காலத்திற்குப் பின் தற்போது மத்திய, மாநில அரசுகளால் படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், மத்திய அரசாங்கம் ஜூன் எட்டாம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்களை திறக்க அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் பல மாநிலங்களில் ஆலயங்கள் வழிபாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளன.

ஆனால் தமிழகத்தில் திரு, எடப்பாடியார் அரசு மட்டும் வழிபாட்டுத் தலங்களை திறக்காமல் உள்ளது. சமீபத்தில் நடந்த அனைத்து மத பிரதிநிதிகளின் கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று பக்தர்கள் நினைத்தனர். அதுவும் நடக்கவில்லை.

ஆலயங்களைத் திறந்தால் கொரானா பரவிவிடும் என்று அச்சமா? என்று பார்த்தோம். ஆனால் ஆலயங்களைவிட அதிகமாக கொரானா பரவக் காரணமாக இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளுக்கு, பல்வேறு வகையான தொழில்களுக்கு, பல்வேறு வகையான மக்கள் கூடும் இடங்களுக்கு குறிப்பாக டாஸ்மாக் போன்றவற்றிற்கு அரசாங்கம் விலக்கு அளித்திருக்கிறது. அவைகள் செயல்பாட்டுக்கும் வந்திருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் மக்கள் நீண்ட நாட்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்து வெளியில் வரும்பொழுது ஒரு மனத் தெளிவு கிடைக்கின்ற வகையிலே ஆலயங்களை நாடி இறைவனிடம் வேண்டுதல் என்பது இயல்பான ஒரு விஷயம்.

ஆனால் திரு. எடப்பாடியார் அரசு மக்கள் மனத் தெளிவிற்கு வழிவகுக்காமல், வழிபாட்டுக்கு தடைவிதித்து இருக்கின்றது. வழிபாட்டுத் தலங்களை விட வேகமாக பரவ வாய்ப்பு இருக்கும் இடங்களுக்கு எல்லாம் தளர்வுகளை தாராளமாக அளித்துள்ள அரசு ஏன் வழிபாட்டுத்தலங்கள் விஷயத்தில் மட்டும் அடம்பிடிக்கிறது? என்று தெரியவில்லை .

ஒருவேளை திரு.எடப்பாடியார் அரசாங்கம் தமிழகத்திலே கடவுள் மறுப்புக் கொள்கையை அமல்படுத்த வேண்டும், மக்கள் மனதிலே கொஞ்சம் கொஞ்சமாக பக்தி மார்க்கத்தை அகற்றவேண்டும், ஆலயம் செல்லுகின்ற பழக்கத்தை குறைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுகிறதோ? என்ற இந்து முன்னணி சந்தேகிக்கிறது.

கடந்த மே 26 ம் தேதி இந்து முன்னணி சார்பில் ஆலயங்களை திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் மனுக்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன. ஆனால் இவை எதற்கும் திரு.எடப்பாடியார் அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.

இதை கண்டித்து “கோவில்களை திறக்க வேண்டும்” என்ற கோரிக்கையை அரசாங்கத்திற்கு வலிமையாக கொண்டு சேர்க்கும் வகையில் வருகின்ற ஜூன் 10 ம்தேதி புதன்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்கள் முன்பும், பொது மக்களையும் ஒன்றிணைத்து இந்து முன்னணி சார்பில் ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனைப் போராட்டம் நடைபெறும்.

தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. இந்த ஆன்மீக பூமியிலே ஆன்மீகத்தை இழுத்து பூட்ட நினைக்கின்ற எடப்பாடியார் அரசு தவறை உணர்ந்து மனம் திருந்தி வழிபாட்டுத் தலங்களை உடனடியாக திறக்க வேண்டுமென்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

வணக்கம்
தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்