17-11-2018
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி மலையேறி கொண்டிருந்த இந்து ஐக்கிய வேதிகா (கேரள இந்து முன்னணி) தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், இருமுடி கட்டியாகிவிட்டது என்றால், அவர்கள், எந்தத் தடைகளையும் தாண்டி சபரிமலை நோக்கி நடை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது மரபு. கேரள இந்து ஐக்கிய வேதிகா தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள், இருமுடி எடுத்து நடைபயணமாக சபரிமலை சென்று கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் மரக்கூட்டம் எனும் பகுதியில் வைத்து கைது செய்துள்ளது கேரள காவல்துறை. இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 13 பேரும் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசே காரணம். இது தனி மனித சுதந்திரத்தையும், மத வழிபாட்டு உரிமையையும் பறிக்கும் செயல். இந்து சம்பிரதாயத்தைக் கேவலப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளால் மக்கள் கொந்தளித்துபோய் உள்ளனர். இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சபரிமலையின் புனிதம் காக்க நடைபெறும் போராட்டம், ஜனநாயக ரீதியாலானது. இந்த மக்கள் போராட்டத்தை முடக்க கம்யூனிஸ்ட் கட்சி நினைக்கிறது. இதற்காக, தீய நோக்கமும், தகாத செயல்பாடும் கொண்ட பெண்கள் இவர்கள் எனத் தெரிந்தும், அவர்களை சபரிமலைக்கு கொண்டு செல்ல முனைப்பு காட்டுகிறது. இது பக்தர்களின் மனங்களை புண்படுத்தி, சபரிமலை புகழைக் கெடுக்க நடக்கும் சர்வதேச சதி!
எல்லா வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மக்கள், பக்தர்கள் ஏற்கவில்லை. இது பாலின பாகுபாடு இல்லை என்றும், இந்தத் தீர்ப்பு மத வழிபாட்டில் தலையிடும் செயல் எனவும், மேல் முறையீடு (சீராய்வு) மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான சீராய்வு மனு என்பதால், உச்சநீதி மன்றம், தனது தீர்ப்பினை நிறுத்தி(ஸ்டே) வைக்க ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். இதுதான் நியாயமான செயல்பாடாகும்.
கிராமத்தில் ஒரு கதை உண்டு, ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரியாக இருந்தான். அந்த கிராமத்தில் அவன் வைத்ததே சட்டம் என்று செயல்பட்டான். ஒரு பெண் குற்றம் இழைத்ததாக பழி சுமத்தி, அவளை வீதியில் நிர்வாணமாக அழைத்து செல்ல உத்திரவிட்டான். அமைதியான கிராமத்தினர் அவனுக்கு முடிவு கட்ட நினைத்தனர். அவனுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தனர். கிராமத்தினர் அனைவரும், வீதியின் இருபுறமும் நிற்போம். அந்தப் பெண்ணை அழைத்து செல்லும்போது அனைவரும் நமது கண்களை மூடிக்கொள்வோம். அவனது கூலிப்படை அப்பெண்ணை வேண்டுமானால் நிர்வாணப்படுத்தலாம், நமது கண்களை திறக்க வைக்க முடியாது என்று கூறி செயல்பட்டனர். கிராமத்தினரின் அமைதியான இந்த செயல்பாட்டால், அந்த கொடுங்கோலன் வெட்கி தலைகுனிந்து, கிராமத்தைவிட்டே ஓடிபோனான் எனக் கூறுவார்கள். அதுபோலத்தான், பக்தர்கள் ஜனநாயக வழியில், அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்கின்றனர். ஆனால், இடதுசாரி கட்சிகளும், இடதுசாரி சார்பு ஊடகங்களும் அறப்போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்த தொடர்ந்து இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்கமாட்டோம் என கேரள மாநில அரசாங்கமும், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளும் நடந்துகொள்வது ஆபத்தானது. மக்கள் உணர்வுகளை மதிக்க மறுக்கின்ற அரசை, மக்கள் ஜனநாயக ரீதியாக தூக்கி எறிவார்கள் என்பது நிச்சயம்.
பல லட்சம் மக்கள், பல இன்னல்களை சந்தித்த போதும் தொடர்ந்து உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அறப்போராட்டம் நடத்தி வருவதை கருத்தில் கொண்டு, உச்சநீதி மன்றம் உடனே தனது தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது.
கேரள நீதிமன்றம் தலையிட்டு, கைது செய்யப்பட்ட திருமதி. சசிகலா டீச்சர் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய, கேரள மாநில அரசிற்கு உத்திரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சில மாதங்களாக கேரளாவில் நடைபெற்று வரும் அசாதாரணமான சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் விதத்தில் இருப்பதை கவனத்தில் கொண்டு, கேரள உயர்நீதிமன்றம் மற்றும் மாநில கவர்னர் ஆகியோர் பொது அமைதியை ஏற்படுத்தவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் மாநில அரசு செயல்பட அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)