இராம கோபாலன், நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
12-4-2019
பத்திரிகை அறிக்கை
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்..
நாடு நலம்பெற்று சிறந்து விளங்க பிரார்த்தனை செய்வோம்..
நமது நாட்டில் இருவகை காலக்கணக்குகள் நடைமுறையில் உள்ளன. இவை இரண்டும் வானியியல் முறையில், அறிவியல் பூர்வமானது. அதில் ஒன்று சந்திரனை மையமாகக்கொண்டது, அந்த வருடத் துவக்கத்தை யுகாதி எனக் கொண்டாடுகிறோம். அடுத்து, சூரியனின் சுற்றை மையமாகக் கொண்டது, அதுவும் பாரதத்தின் பல பகுதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நமது தமிழகம், அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பின்பற்றுகிறோம். அதனைத்தான் நாம், தமிழ்ப் புத்தாண்டு என தமிழ்நாட்டில் கூறுகிறோம்.
புத்தாண்டு தினத்தில் குடும்பத்தோடு கோயிலுக்கு செல்வது, பெரியோர்களிடம் ஆசி பெறுவது நமது பழக்கம். காரணம், வருடம் முழுவதும் சிறப்பானதாக அமையவும், நேர்மறை எண்ணங்களை வளப்படுத்தவும் நமது முன்னோர்கள் ஏற்படுத்திய வழிமுறை இது.
ஆங்கிலப் புத்தாண்டு, கேளிக்கைகளில் ஈடுபட்டு, கூத்தடிப்பது. இது நாகரிகம் என்ற பெயரில் பண்பாடற்ற முறையில் கொண்டாடப்படுவதை நாம் காண்கிறோம். அது அவர்கள் வழி. ஆங்கில வருட காலக்கணக்கில், அறிவியலுக்கு பொருந்தாத பல விஷயங்கள் இருந்தாலும், கிறிஸ்தவர்கள், உலகின் பல பகுதிகளை ஆக்கிரமித்ததின் விளைவாக இது பல நாடுகளிலும் திணிக்கப்பட்டது. இதனை நமது வருங்கால சமுதாயத்திற்கு புரிய வைக்க வேண்டியது நமது கடமை.
வருகின்ற புத்தாண்டிற்குப் பிறகு, நமது தேசத்தின் ஜனநாயகத் திருவிழா, அதாவது பாராளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. இந்தத் தேர்தலில் நமது நாட்டில் வளமான ஆட்சியை நடத்தி காட்டி, தேசத்திற்கு பெருமை சேர்த்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஆட்சி தொடரவும் புத்தாண்டு தினத்தில் நாம் அவசியம் பிரார்த்தனை செய்வோம். நாடும் நாமும், நமது குடும்பத்தினர் எல்லோரும் நன்றாக வாழ இறைவனை பிரார்த்தனை செய்வோம்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)