Tag Archives: #ஹிந்துமதம்

ஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

மக்கள் நீதி மையம் கட்சியினுடைய தலைவராக இருக்கக் கூடிய திரைப்பட நடிகர் கமலஹாசன் அவர்கள் நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பொழுது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஹிந்து என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

திரு கமலஹாசன் அவர்கள் தன்னுடைய அரசியல் எவ்வளவு அபாயகரமாக இருக்கும் எவ்வளவு மதவெறி கொண்டதாக இருக்கும் தான் முன்னெடுக்க கூடிய அரசியல் வகுப்புவாத மதவாத அரசியல் என்பதை வெட்டவெளிச்சம் போட்டு நேற்று காட்டியுள்ளார்.

முஸ்லிம்கள் அதிகமாக கூடி இருக்கக்கூடிய இடத்தில் அவர்களுடைய ஓட்டுக்களை கவர வேண்டும் என்பதற்காக சம்பந்தமே இல்லாமல் முதல் தீவிரவாதி ஹிந்து என்று பிதற்றியுள்ளார்.

திரு கமலஹாசன் அவர்கள் தன்னுடைய விஸ்வரூபம் படத்திற்காக அனுபவித்த பிரச்சினைகளை மறந்துவிட்டார் போலும்.

நவகாளிப் படுகொலைகளில் ஹிந்துப் பெண்கள் 10 ஆயிரம் பேர் கற்பழிக்கப்பட்டதை மறந்து விட்டாரா? அந்த வரலாறு அவருக்கு தெரிந்த ஒன்று ,ஆனால் கேவலமாக அரசியல் செய்ய வேண்டி பேச வேண்டாத ஒரு விஷயத்தை பேசக் கூடாத இடத்தில் பேசி தனது அரசியல் முதிர்ச்சி இன்மையை காட்டியிருக்கின்றார் திரு கமல்ஹாசன்.

இப்படி பிதற்றி ஹிந்து சமுதாயத்தை கேவலப்படுத்தியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேற்கொண்டு அவர் பிரச்சாரத்தில் இதுபோன்று தொடர்ந்து இந்து விரோத கருத்துகளை சொல்லாமல் இருப்பதற்கு தேர்தல் கமிஷன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .

திரு கமலஹாசன் அவர்களுடைய இந்த தவற்றை உணர்ந்து உடனடியாக மன்னிப்பு கேட்டு தான் செய்த தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என இந்து முன்னணி எச்சரிக்கின்றது.

மேலும் இதுபோன்று கமலஹாசன் தொடர்ந்து ஹிந்து மத துவேஷத்தில் பிரச்சாரம் செய்தால் அவரை ஹிந்து முன்னணி மிகக் கடுமையாக எதிர்த்து அவர் செல்லும் இடங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு உள்ளாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்

கமலஹாசன் வரலாறு தெரியாதவர் அல்ல விவரம் தெரிந்த அவர் இவ்வாறு பேசியிருப்பது தனக்கு ஒரு மலிவான விளம்பரம் தேட வேண்டி தான் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று ஹிந்து முன்னணி கருதுகின்றது .

இன்றைக்கு அரசியல் வெளிச்சம் தன் மீது படவேண்டும் என்று சொன்னால் அவருக்கு ஹிந்து சமுதாயத்தின் உடைய நம்பிக்கைகளை பழிப்பது ஹிந்து கடவுளை தூற்றுவது ஹிந்துக்களை கேவலமாகப் பேசுவது என்பது ஒரு வாடிக்கையான விஷயம் ஆகிவிட்டது குட்டக் குட்டக் குனிந்து கொண்டிருக்க ஹிந்துக்கள் இளித்தவாயர்கள் அல்ல ஹிந்துக்கள் ஒன்றுதிரண்டு இதுபோன்ற அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்க கற்பிக்கின்ற சூழ் நிலை உருவாகிவிட்டிருக்கிறது.

இதனுடைய விளைவை ஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக சந்திக்க வேண்டி வரும் என்று இந்து முன்னணி எச்சரிக்கின்றது.

வீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு  ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..

16-4-2019
பத்திரிகை அறிக்கை
ஜனநாயகத்தின் திருவிழாவான பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு பெற்ற கட்சிகளின் ஆட்சி நடைபெற்றுள்ளது. ஆனால், அந்த 55 ஆண்டுகள் செய்த வளர்ச்சி நடவடிக்கைகளைக் காட்டிலும் அதிகமாக, கடந்த 5 ஆண்டு ஆட்சி செய்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து காட்டி சாதனை புரிந்துள்ளது. அனைத்து துறைகளிலும் மாபெரும் வெற்றியும், பெருமித உணர்வும் ஏற்பட வழிவகை செய்துள்ளதை ஒவ்வொரு இந்தியனும் உணர முடிகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் புதிய வரியோ, வரி விகிதம் கூட்டப்படவோ இல்லை, அத்தியாவசியமான பொருட்களின் விலைகள் கட்டுக்குள் இருக்க மத்திய அரசின் நடவடிக்கையே காரணம். அதேசமயம், தேசத்தின் வருமானம் பெருகியுள்ளது. இதிலிருந்து சிறந்த நிர்வாகம் எது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஜனநாயகத்தின் பலமே நமது வாக்குரிமை, இதனை
சுயலாபத்திற்காகவோ, பணத்திற்கோ, பொருளுக்கோ ஆசைப்பட்டு இழந்துவிடக்கூடாது. ஒவ்வொருவரும், தமது வாக்குரிமையை செலுத்த வேண்டும். அது ஜனநாயகத்தின் புனித கடமையாக எண்ணி செயல்பட வேண்டும். நோட்டா -விற்கு வாக்களிக்கக்கூடாது. இது ஜனநாயகத்தை குலைத்துவிடும். காலையிலேயே வாக்குச்சாவடி சென்று வாக்குரிமையை செலுத்தி ஜனநாயகத்திற்கு வலு சேர்ப்போம்.
ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதி மன்றத் தீர்ப்பை பயன்படுத்தி, ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் நாத்திகவாதிகளையும், இஸ்லாமிய, கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களையும் போலீஸ் துணையோடு அழைத்து சென்று ஐயப்பனின் வழிபாட்டை சீர்குலைக்க இடதுசாரிகள் முயன்றன. இதற்கு தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணி கட்சிகள் துணை நின்றன என்பதை இந்துக்கள் மறக்க வேண்டாம்.
மேலும், திராவிடர் கழக வீரமணி, இந்துக்களின் வழிபாட்டிற்குரிய கிருஷ்ணரை கேவலப்படுத்தி தேர்தல் பரப்புரையில் பேச மேடை அமைத்து கொடுத்தது திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள். வருகின்ற 18ஆம் தேதி ஐயனின் 18ஆம் படியை அவமதித்தவர்களுக்கு தகுந்த பாடத்தை, வாக்கு எனும் ஆயுதத்தால் ஜனநாயக வழியில் பதிலடி கொடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இந்தியாவின் அனைத்து மக்களும் முன்னேற திட்டம் வகுத்து செயல்படுத்தியவரும், உலக நாடுகளில் இந்தியாவின் பெருமையை உணர செய்தவர் திரு. நரேந்திர மோடி. அவரது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக உட்பட அதன் கூட்டணி கட்சிகளுக்கு உரிய சின்னத்தில் நமது வாக்கினைச் செலுத்துவோம். தேசத்தின் நலன் காத்திட, மீண்டும் மோடி பிரதமராகி நாட்டை வலிமையானதாக, வளமானதாக ஆக்கிட தமிழக மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் வாக்களிக்கக் கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

இராம.கோபாலன் அறிக்கை- தேர்தல் கமிஷனும், காவல்துறையும் திராவிட கழக கி. வீரமணியின் அடாவடி பேச்சை வேடிக்கை பார்க்கலாமா?

இராம கோபாலன் நிறுவன அமைப்பாளர்

பத்திரிகை அறிக்கை

தேர்தல் கமிஷனும், காவல்துறையும் திராவிட கழக
கி. வீரமணியின் அடாவடி பேச்சை வேடிக்கை பார்க்கலாமா?

நேற்று (4.4.2019) திருச்சி கீரைக்கடை பகுதியில் திருச்சி பாராளுமன்றம் திமுக கூட்டணியை ஆதரித்து, திராவிட கழக நடத்திய பொதுக்கூட்டத்தில் தி.க.வின் பொறுப்பாளர் அன்புக்கரசு, அந்த அமைப்பின் தலைவர் கீ. வீரமணி, திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் ஆகியோர் இந்து தெய்வமான கிருஷ்ணரை அவதூறாக, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தோட சம்பந்தப்படுத்தி, பக்தர்களின் மனங்கள் புண்படும்படி பேசியதை அடுத்து, இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக திரண்டு, ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதனை பொறுக்கமுடியாமல், திராவிட கழகத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். காவல்துறை வேடிக்கை பார்த்ததோடு, வழக்கும்போல் இரு தரப்பிலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது.

திராவிட கழக வீரமணி இரு வாரங்களுக்கு முன்னர், சென்னையில் அவரது அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் இதே போன்று பேசினார். அது சமூக வளைதளங்களிலும், தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் வெளியானதை அடுத்து, இந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் பல காவல்துறை அலுவலகங்களிலும் புகார் மனு கொடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. ஆனால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே, முகமது நபியை பற்றி இணையதளத்தில் வந்த செய்தியை பகிரப்பட்டபோது, பாய்ந்து வந்து இதே காவல்துறை வழக்கு பதிவு செய்து கல்யாணராமன் என்பவரை சிறையில் அடைத்தது. ஆனால், திராவிட கழகத்தின் தலைவர் பேசியதற்கு எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. இப்படி காவல்துறை பாரபட்சமாக நடப்பது வெட்கக்கேடானது.

தேர்தல் நடத்தை விதிமுறையில் தெளிவாக, மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதும், புண்படுத்தி பேசுவதும் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும்போது, ஏன் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்கவும், இதுபோல் தொடர்ந்து பேசி வரும் திராவிட கழகத்திற்கு அனுமதியும் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அனுமதி வழங்குகிறார்கள்? என்பது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், திமுகவின் தலைவர் ஸ்டாலின், தங்கள் கட்சி எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என்று பேசினார். அதனை அக்கட்சியின் தலைவர்கள் பலரும் தேர்தல் பரப்புரையில் பேசினர். ஆனால், திராவிட முன்னேற்றக்கழகம் திருந்தாத கட்சி. திராவிட கழகத்திற்கு மேடை அமைத்து, இந்து தெய்வங்களை, நம்பிக்கைகளை கொச்சை படுத்துவதை வேடிக்கை பார்க்கும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கு, இந்துக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்துக்கள் விழிப்படைந்துவிட்டார்கள். இவர்களின் கேவல புத்திக்கு தேர்தலில்தான் தகுந்த பாடம் புகட்டவேண்டும். அரசியல்வாதிகளுக்கு ஓட்டு எனும் ஆயுதத்தால் தண்டிக்கும் போதுதான், இனி ஒரு காலமும் இந்துக்களின் நம்பிக்கைகளை, தெய்வங்களை கொச்சை படுத்தும் துணிவு வராது.

எனவே, திமுக கூட்டணியில் இருக்கும் தன்மானமுள்ள, சுயமரியாதை உள்ள, தெய்வ நம்பிக்கை உள்ள இந்துக்கள் அக்கட்சியின் தலைவர்களுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தங்கள் மதத்தை குறித்து தவறான கருத்து தெரிவித்தால், அந்த கட்சியின் தலைமைக்கு எதிராக குரல் கொடுக்கவும் தயங்குவதில்லை. இந்துக்கள் அடிமைகளோ, சூடு சொரணை அற்றவர்களோ அல்ல என்பதை இந்த தேர்தல் நேரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியில் உள்ள இந்துக்களும், அவர்தம் குடும்பத்தாரும், தெய்வ நம்பிக்கை உள்ளவர்களும் இதனைக் கண்டிக்க முன்வரவேண்டும்.

எனவே, வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுகவின் கூட்டணிக்கு இந்துக்கள் ஓட்டு எனும் சக்தியால் புத்தி புகட்டுவோம். தேர்தல் சுமுகமாக, அமைதியாக நடைபெறுதை சீர்குலைக்கவே திக, திமுக கூட்டு சதி செய்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. இந்து தெய்வமான கிருஷ்ண பரமாத்வாவை கேவலப்படுத்தி பேசிய வீரமணி கும்பல் மீது தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அந்த அமைப்பின் தேர்தல் பரப்புரைக்கு உடனடியாக முற்றிலுமாக தடை விதிக்கவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

தேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தில் தேர்தல் சின்னம் வரையப்பட்டு இருப்பதாக கோவிலின் அடிப்படை விதிகளை மீறி, வழிபாட்டு உரிமையை பறிக்கும் வண்ணம் தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர் .

இந்த செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

தேர்தலுக்கு என ஒதுக்கப்பட்டு இருக்கக்கூடிய சின்னங்களில் பல அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் சின்னமான ‘கை’ இல்லாத செயல் எதுவும் இல்லை, கையை வெட்டி விட முடியாது .

ஆம் ஆத்மியின் சின்னமான ‘தொடப்பக்கட்டை’ அன்றாடம் பயன்படுத்தப்படுகிறது அதை ஒதுக்க முடியாது.

மக்கள் நீதி மையத்தின் ‘டார்ச்லைட்’ சின்னத்தை இனி கடைகளில் விற்கக்கூடாது என்று கூறமுடியாது.

சூரியன் உதிக்கிறது, மறைகிறது எனவே சூரியனே மறைந்து விடு! உதிக்காதே!! என்று கூறமுடியாது.

‘இரட்டை இலை’ எங்கெங்கு காணினும் இருக்கும், மரங்களை எல்லாம் வெட்டிவிட முடியாது .

இன்று கோவிலில் நடந்திருக்கக் கூடிய இந்த செயல் மிகமிக கேலிக்குரியது மாத்திரமல்ல, ஹிந்துக்களை நோக்கி திட்டமிட்டு நடத்தப்பட்டு இருக்கின்ற ஒரு தாக்குதல் என்று கூட சொல்லலாம்.

கோவிலுக்குள் தெய்வங்கள் வீற்றிருப்பது குறிப்பாக பெண் தெய்வங்கள் வீற்றிருப்பது தாமரைப் பூவில் தான்.ஆகவே தாமரைப்பூ என்பது கோவில்களின் பல இடங்களில் கோல வடிவமாகவோ, சிற்ப வடிவிலோ காணலாம்.

எனவே இதை தேர்தல் சின்னம் என்று கூறி நடவடிக்கை என்பது முட்டாள்தனத்தின் உச்சகட்டம்.

மேலும் ஆலயத்திற்குள் யாரும் தேர்தல் பிரச்சாரம் செய்வதில்லை, எனவே ஆலயத்திற்குள் சென்று அந்த அங்கு போடப்பட்டிருந்த கோலத்தை அழிக்க சொல்வது என்பது வழிபாட்டு உரிமைகளை தடுக்கக் கூடிய ஒரு விஷயம்.

இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது .

தேர்தல் நல்ல முறையில் நடக்க வேண்டும், நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. அதே சமயத்தில் இதுபோல முறையற்ற நடவடிக்கைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்யாதிருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு  இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன்

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
12-3-2019
பத்திரிகை அறிக்கை
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்து முன்னணி ஜனநாயக வழியில் செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு சில கோரிக்கைளை முன் வைத்துள்ளது. அவற்றை ஏற்று தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக தரும் அரசியல் கட்சியை இந்து முன்னணி ஆதரிக்கும். இந்து முன்னணியின் கோரிக்கைகளை பத்திரிகையாளர்கள் பார்வைக்கு இத்துடன் அனுப்பி உள்ளோம்.
இந்து சமுதாயத்தின் நியாயமான கோரிக்கைகளை ஊடகத்தில் வெளியிட்டு, தேர்தலில் அவை வாக்குறுதிகளாக, அரசியல் கட்சிகள் ஏற்றிட உதவிட ஊடக நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் இந்து முன்னணியின் கோரிக்கைகள் :
ஆலயங்கள் பாதுகாத்திட..
புராதனமான கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள், இறைவன் திருமேனிகள், அரிய கட்டிட கலைகள், நமது ஆயிரமாயிரம் ஆண்டு வரலாற்றிற்குச் சாட்சியாக இருக்கும் கல்வெட்டுகள் முதலானவற்றை, வழிபாட்டுடன் கூடிய பாதுகாப்பு திட்டத்தை வகுக்க வேண்டும்.
இயற்கை விவசாயம் முன்னுரிமை வழங்குக..
பசுஞ்சாண உரம், இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.
நாட்டுப் பசு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தருக..
நாட்டுப் பசுவை பாதுகாக்கவும், நாட்டு பசு இனம் பெருகிடவும் கவனம் கொடுக்க வேண்டும். மாட்டிறைச்சி ஏற்றுமதியையும், மாட்டுத்தோல் பொருட்களையும் தடை செய்ய வேண்டும். தோல் தொழிற்சாலைகளால் ஆறுகள், நிலத்தடி நீர் நாசமாகிறது. அதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, நிலத்தடி நீர் பாழாவதுடன், மர்ம நோய்கள் பரவுகின்றன. எனவே, மாமிச ஏற்றுமதி, தோல் பொருட்கள் ஆகியவற்றைத் தடை செய்ய நடவடிக்கை தேவை.
இந்துக்களும் சேவை மையங்கள், கல்வி நிலையங்கள் நடத்திட அனுமதி.. சலுகை..
சிறுபான்மையினர், அவர்கள் மதத்தை பரப்பிடவும், மதத்தின் பெயரால் சேவை மையங்களும், கல்வி நிலையங்களும் நடத்திடவும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. கல்வி துறையும் எந்தவித கட்டுப்பாடுமின்றி அனுமதி வழங்குகிறது. ஆனால், பெரும்பான்மையான இந்துக்களுக்கு இச்சலுகைகள் மறுக்கப்படுகின்றன. இந்த பாகுபாட்டை நீக்கி, இந்து சமுதாயத்தை, சமயத்தை பாதுகாத்திட, வளர்த்திட சேவை மையங்கள் நடத்திடவும், கல்வி நிறுவனங்கள் நடத்திடவும் அனுமதி அளித்திட வேண்டும். உரிய உதவித் தொகை, வரி சலுகை முதலானவையும் வழங்கிட வேண்டும்.
இந்து விரோத தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்றவற்றின் மீது நடவடிக்கை..
தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் தொடர்ந்து திட்டமிட்டு இந்து விரோத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இதனை தடுக்க நடவடிக்கைத் தேவை.
குடும்ப உறவுகளை கெடுத்தும், கலாச்சார சீரழிகளை ஏற்படுத்தியும் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி மெகா தொடர்களுக்கு தணிக்கை (சென்ஸார்) அவசியம். மதுக்குடிக்கும் காட்சிகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.
பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்..
எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. போன்ற இஸ்லாமிய அமைப்புகள் கொலை முதலான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக அந்த அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அந்த அமைப்புகள் தடை செய்யப்படவில்லை., அவர்களுக்கு உதவியவர்கள், குற்றவாளிகளை பாதுகாத்தவர்கள், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, முற்றிலும் பயங்கரவாதம் ஒழிக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஊடக கருத்துரிமையை ஒழுங்குப்படுத்த வேண்டும்..
பொய்யுரை விவாதங்கள், தவறான தகவல்களைப் பரப்பும் தொலைக்காட்சி ஊடகத்திற்கும், சமூக ஊடகத்திற்கும் சட்ட கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும். கருத்துரிமை என்ற பெயரில் பொய்யான தகவல்கள், தேசவிரோத கருத்துக்கள் பரப்புவதையும், சமூக விரோத நிகழ்ச்சிகள் நடத்துவதையும் தடுக்க சட்டம் கொண்டுவந்து, கடுமையான நடவடிக்கைகள் மூலம் சமூக பொறுப்புணர்வோடு செய்திகள், கருத்துக்கள், விவாதங்கள் நடைபெற வழிகாண வேண்டும்.
தேச விரோத கருத்தை பரப்பும் பொதுக்கூட்டங்கள், பொது நிகழ்ச்சிக்குத் தடை..
தேசவிரோத கருத்துக்களை பரப்புகின்ற நகர்புற நக்ஸல் அமைப்புகளையும், பயங்கரவாத ஆதரவு அமைப்புகளையும் நாடு முழுவதும் களைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பொருளாதாரத்தை சீர்குலைக்கும் போக்கை மாற்றுக..
பட்டாசு, நெசவு போன்ற உள்ளூர் தொழில்களை முடக்கும் போக்கு அதிகரித்துள்ளது. உள்ளூர் தொழில்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தீபாவளி, ஜல்லிக்கட்டு, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து பண்டிகைகளை திட்டமிட்டு ஏதேதோ காரணம் கூறி சீர்குலைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
மதமாற்றத்தை தடை செய்க..
மதமாற்றம் தேசிய அபாயம். இந்துக்களை குறிவைத்து நடத்தப்படும் மதமாற்றத்தை தடுக்க வேண்டும். ஆசைகாட்டி, அச்சுறுத்தி மதமாற்றுவதைத் தடுக்க தேசிய அளவில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
நீர் நிலைகள், மலைகள், மழைக் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்..
நீர் நிலைகள், மலைகள், காடுகள் முதலானவை இறைரூபமாக பார்க்கப்பட்டதால் தான் இது நாள் வரை அவை இருக்கின்றன. சமீபகாலமாக கிறிஸ்தவ மிஷனரிகள் இவற்றை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன. அதுபோல காடுகள், சதுப்பு நிலங்கள் முதலானவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றவும் உறுதியான நடவடிக்கை தேவை.
தேசத்தின் வளர்ச்சியை தடுக்கும் தேசவிரோத கும்பல் மீது தகுந்த நடவடிக்கை..
தவறான பிரச்சாரத்தின் மூலம் பொது மக்களைக் குழப்பி, தேசத்தின் வளர்ச்சியை தடுக்க நகர்புற நக்சல் மற்றும் என்.ஜி.ஓ.க்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இவர்களை ஒடுக்க உறுதியான சட்ட நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
ஆன்மீக நம்பிக்கையை காத்திடக..
ஐயப்பன் கோயிலில் வழிபாட்டில் தேவையில்லாமல் தலையீட்டு உச்சநீதி மன்றம் தீர்ப்பு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தை தனது அரசியல் ஆதாயத்திற்காக கேரள இடதுசாரி அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டுள்ளது. பக்தர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டும், ஐயப்ப வழிபாட்டில் ஆண், பெண் பாலின பாகுபாடு இல்லை என்பதை எடுத்துக் கூறியும், நெடுங்காலமாக இருந்து வரும் ஐதீகத்தை காத்திட உரிய நடவடிக்கையை சட்ட ரீதியாக எடுக்க ஆவண செய்ய வேண்டும்.
ஆன்மீக யாத்திரைக்கு சலுகை வழங்குக..
நாடு நெடுகிலும் இந்துக்கள் யாத்திரை சென்று வருவது தொன்றுதொட்டு நடைபெறும் ஆன்மிக நிகழ்வு. இதன் மூலம் பாரதத்தின் இறையாண்மை, ஒற்றுமை உணர்வு பலப்படுகிறது. எனவே, ஆன்மீக யாத்திரைக்கு சலுகைகள் வழங்கிடவும், பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரவும் முன் வர வேண்டும்.
பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்றிட நடவடிக்கை..
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஓரினசேர்க்கை குற்றம் இல்லை என்றும், ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமண செய்துகொள்ளலாம் என்றும், தகாத உறவு தவறில்லை என்றும் நமது பாரத பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கு எதிரான வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கி உள்ளது. இது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை மாற்ற, சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு, நமது பாரம்பரிய பண்பாடு, நாகரிகம் காத்திட ஆவண செய்ய வேண்டும்.
கல்வியில்..
அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழியும், தேசிய மொழியான இந்தி மொழியும் கற்பிக்க தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட வேண்டும். அத்துடன், ஆரம்பக் கல்வி கட்டாயம் தாய்மொழியில் அமைந்திட வேண்டும்.
ஒவ்வொரு நாளும், யோகா, விளையாட்டு மற்றும் நன்னேறிக் கல்வி வகுப்பும் பள்ளிகளில் இடம் பெற வேண்டும்.
மருத்துவ கல்லூரி நுழைவு தேர்வில் (நீட் தேர்வில்) இந்தியாவிலேயே அதிக இடங்களில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதே சமயம், அதன் பலனை எல்லோரும் பெற்றிட, விருப்பம் உள்ள மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு முதலே, இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
பள்ளியிலேயே தொழில் கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும்.
சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் கல்வி உதவித்தொகை போல, ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கிட வேண்டும்.
இந்து முன்னணி, வைக்கும் இக்கோரிக்கைகள் குறித்த
உங்களின் மேலான பதிலை உடனே எதிர்பார்க்கிறோம்.
நன்றி, நல்வாழ்த்துகள்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

பயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை

ிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உள்ள இந்து சமுதாயங்களின் தலைவர்களை மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ் அவர்கள் நேரில் சந்தித்து பேசினார்.

திருபுவனம் ராமலிங்கம் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், காஷ்மீர் மாநிலத்தில் CRPF வீரர்கள் மீது நடைபெற்ற இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் போன்ற விபரீத நிகழ்ச்சிகள் நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் சவால். ஆகவே வேறுபாடுகள் மறந்து இந்து என்ற அடிப்படையில் ஒன்று திரள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த இரண்டு சம்பவங்கள் அனைத்து தரப்பினருக்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடியில் இந்து சொந்தங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என அப் பெரியவர்கள் உறுதி கூறினர்.

திமுகவில் இருக்கும் தன்மானமும்,  சுயமரியாதை உள்ள இந்துக்கள் அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை

திமுக திருந்தாத கட்சி, திமுகவில் இருக்கும் தன்மானமும்,

சுயமரியாதை உள்ள இந்துக்கள் இதனை உணர்ந்து, அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்..
திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின், நேற்று ஒரு இஸ்லாமிய திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு, இந்துக்களின் வேள்வி திருமண சடங்கை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார், திமுக திருந்தவே திருந்தாது என்பதை இவரது பேச்சு வெளிப்படுத்துகிறது.
திமுகவின் தலைவராக இருந்தவரும், ஸ்டாலினின் தந்தையுமான கருணாநிதி, ரம்ஜான் நோன்பு கஞ்சி குடித்துவிட்டு, இஸ்லாத்தை புகழ்ந்து பேசியிருக்கலாம். ஆனால், அங்குபோய் இந்துக்களின் பழக்க வழக்கங்களை கேலி செய்து புண்படுத்துவார். அந்த வழியில், தற்போது ஸ்டாலின் செயல்பட்டுள்ளார்.
ஈவெரா காலம், கருணாநிதி காலம் மாதிரி இப்போது இந்து சமுதாயம் இல்லை என்பதை திமுகவிற்கு இந்து முன்னணி தெரிவித்துக்கொள்கிறது. இந்து என்றால் திருடன் என்று பேசிய கருணாநிதி மீதான வழக்கு இன்னமும் நிலுவையில் தான் இருக்கிறது. அதனை எதிர்கொள்ளாமல் என்னவெல்லாம் சாமாதானமாக பேசினார் கருணாநிதி என்பதை இந்து சமுதாயம் மறக்கவில்லை. திமுகவில் இருக்கும் சுயமரியாதையும் தன்மானமும் உள்ள இந்துக்கள் சூடு சொரணையோடு வாழ வேண்டுமானால், ஸ்டாலின் பேச்சிற்குக் கண்டனத்தை தெரிவிக்க வேண்டுகிறோம்.
தமிழ் இலக்கியங்கள் ஐவகை திருமணங்களை குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கியங்களிலும், புராணங்களிலும் வேள்வி திருமண சடங்கு உள்ளது. அது அறிவியல் பூர்வமான சடங்கு. அதே சமயம் பலவகையான திருமண சடங்குகள் இந்து சமுதாயத்தில் இருக்கிறது. இதனை எல்லாம் இந்து திருமண சட்டம் ஏற்றும் கொண்டுள்ளது. திருமணத்தை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்த ஒரு நபரும் இந்து சமுதாயத்தில் குறிக்கீடு செய்ய முடியாது. அவரவர் சமுதாய வழக்கத்தை அவரவர் குடும்பமே முடிவு செய்கிறது.
திமுக தலைவர் நடத்தும் திருமண சடங்கான, திருமண விழாவை எழவு வீடாக நினைத்து தனது சொந்த கருத்தையும், கட்சி அரசியலையும் புகுந்தும் அநாகரிக திருமணமும் இந்து திருமணத்தின் படிதான் நடந்து வருகிறது. கிறிஸ்தவ, முஸ்லீம் சமுதாய திருமணங்களில் திமுக தலையீடவும் முடியாது, அந்த மதங்கள் அதற்கு இடமும் தருவதில்லை. அங்குபோய் கலந்துகொள்ளலாம், அந்த அளவு மட்டுமே திமுக தலைவருக்கு அவர்கள் அனுமதி அளிப்பார்கள். திருமணத்தை நடத்துவது பாதிரியார், முல்லா மௌல்வி போன்றோர் தான்.
இஸ்லாமிய திருமண வரவேற்பு விழாவிற்கு போனதற்கு, திமுகவின் பாணியில் அங்கு இல்லாத நிக்காஹ் செய்து கொண்ட தம்பதிகளை வாழ்த்திவிட்டு, பிரியாணி சாப்பிட்டுவிட்டு வந்திருக்க வேண்டும். அங்கு போய் இந்து திருமணங்களைப் பற்றி கேவலமாக பேசியிருப்பது ஸ்டாலின், திமுகவை இந்து விரோத கட்சியாக கொண்டு செல்லவே விரும்புகிறார் என்பதை காட்டுகிறது.
கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் அவரவர் மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தினால், வெகுண்டெழுகிறார்கள். ஆனால் இந்துக்கள் அமைதியாக இருப்பதால் கோழைகளாக நினைத்து, ஸ்டாலின் போன்றவர்கள் நடந்துகொள்கிறார்கள்.
அரசியல் கட்சி என்பது அனைவருக்கும் பொதுவானதாக, அனைத்து சமூகத்தையும் மதித்து செயல்பட வேண்டும், கருத்து தெரிவிக்க வேண்டும். திமுக திருந்தாத கட்சி, அதன் இறுதி அத்தியாயத்தை எழுதவே ஸ்டாலின் இதுபோல் நடந்துகொள்கிறார் என கருதுகிறோம்.
திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. ஸ்டாலின் தனது பேச்சிற்கு இந்து சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கோருகிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

தனியார் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிலத்தை மீட்காமல் விடமாட்டோம்- இந்து முன்னணி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் பகுதியில் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

அந்த கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் ஊதியூர் கிராமத்தை சுற்றி உள்ள கிராமங்களில் அமைந்துள்ளன.

இதில் ஊதியூர் மலைக்கு அருகே உள்ள 98 ஏக்கர் கோவில் நிலத்தை தனியார் பால் நிறுவனம் ஆக்கிரமித்து அதில் தொழிற்ச்சாலை கட்டியுள்ளனர்.

இதை அறிந்த இந்து முன்னணியினர் தனியார் பால் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடந்தனர்

நேற்று இந்து முன்னணியினர் ஊதியூரில் கோவிலில் வழிபாடு நடத்த முடிவு செய்தனர் அதை அறிந்த தனியார் பால் நிறுவனத்தினர் அங்கு உள்ள திமுக நிர்வாகிகள் சிலரிடம் பெரிய அளவில் பணத்தை கைமாற்றி உள்ளனர் அவர்கள் ஒரு நபருக்கு 500 ரூபாய் வரை கொடுத்து இந்து முன்னணியினருக்கு எதிராக கோசம் எழுப்ப ஆட்களை திரட்டி கோவில் முன்பு காத்திருந்தனர்.

இதனை அறிந்த காவல்துறையினர் அங்கு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க 200 க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் கோவிலை சுற்றி பாதுகாப்பிற்காக குவிக்கபட்டனர்.

இந்து முன்னணியினர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு வரும்பொழுது தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் கோசம் எழுப்ப ,

இந்து முன்னணி தலைவர் அந்த மக்களிடம் பேசினார் அப்பொழுது அவர் கூறுகையில் (நாங்கள் உங்களுக்காக தான் போராடுகிறோம் , உங்கள் கோவில் நிலத்தை மீட்க தான் நாங்கள் நினைக்கிறோம் , நமது கோவில் நிலத்தில் அந்நிய நிறுவனம் வருவது நமக்கு நல்லதல்ல அந்த நிறுவனம் நிலத்தடி நீரை உறுஞ்சி நமது விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் , பணம் கொடுத்தால் உங்கள் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளவனுக்கு ஆதரவாக இப்படி கோசம் எழுப்புவீர்களா ? என்று பல கருத்துக்களை கூறினர் )

அவர் பேசிக்கொண்டிருக்கும் போது அவரை அவமதிக்கும் வகையில் திமுக நிர்வாகிகள் சிலர் தகாத வார்த்தைகளில் பேசினர்

தனியார் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிலத்தை மீட்காமல் விடமாட்டோம் என்று இந்து முன்னணியினர் கூறியுள்ளனர்

இந்த சம்பவம் பற்றி அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டபோது அனைவரும் இந்து முன்னணியினரின் செயல்பாட்டிற்கு ஆதரவாகவே கருத்துக்களை கூறினர்.

கொங்கு பகுதிகளில் இந்து முன்னணி அசுர பலத்துடன் வளர்ந்து வருகிறது என்பது இந்த சம்பவத்தின் மூலம் உறுதியாகிறது.

ரதயாத்திரை துவங்கியது

#இலட்சம்_குடும்ப_யாகத்திருவிழா

இன்று புறப்பட்டது..
வீரலட்சுமி ரதம்..
மஹாலட்சுமி ரதம்..
கோமாதா ரதம்..
சிவபார்வதி ரதம்..

இந்துமுன்னணி நிறுவனர் திரு.இராம.கோபாலன் அவர்கள் துவக்கிவைக்க..
துவங்கியது
யதயாத்திரை..

#இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் டிசம்பர் 23,24,25 ஆகிய தேதிகளில்
#கஜபூஜை,
#108அஸ்வ_குதிரை_பூஜை, #1008கோபூஜை,
#மீனாட்சிதிருக்கல்யாணம்,
#ஆண்டாள்திருக்கல்யாணம் ஆகிய ஆன்மீக வைபவங்கள் நடைபெற உள்ளன.

இந்த மூன்று நாள் பெருவிழாவின் முத்தாய்பாக மகாலட்சுமியின் 16 அம்சங்கள் மற்றும் மகாலட்சுமி மகாவிஷ்ணுக்கான #சோடஷமஹாலட்சுமிமஹாயாகம் 24 அன்று துவங்கி 25 ஆகிய இரண்டுநாட்கள் தொடர் யாகமாக நடைபெறவுள்ளது.
இதற்கான 360 அடி நீளம் 60 அடி அகலம் 4 அடி உயரத்தில் பிரம்மாண்டமான யாக குண்ட மேடை தயாராகிறது.

இதில் 17 பிரம்மாண்ட ஹோம குண்டங்கள் நிர்மானிக்கப்படுகின்றன. வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத இந்த யாகத்தில் பங்கு கொள்வது மிகப்பெரும் புண்ணியம்.

இந்த மாபெறும் நிகழ்ச்சியில் பெருவாரியான மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதர்காக மகாயாக விளக்க நான்கு #மஹாலட்சுமிரதம் கோவை காந்திபார்க் அருகில் 13/11/2018 இன்று காலை 10 மணியலவில் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நான்கு ரதங்கலும் கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி ஆகிய மாவட்டங்கலுக்கு மகாயாக பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளது.

அதுசமயம் மஹாயாக வேள்விகுண்டம் அமைத்திட 1.5 லட்சம் செங்கற்களும் யாகத்திற்கு சுத்தமான பசு நெய்யையும் வரக்கூடிய ரதத்தில் வழங்கிடவும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்

மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆன்மீக வைபவத்தில் நமது குடுபத்தோடு கலந்து கொண்டு மஹாலட்சுமியின் பரிபூர்ண அருள் பெறும்படி இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது…

காவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்

தீபாவளியன்று பட்டாசு வேண்டிக்க சில கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது. அதை நடைமுறை படுத்தும் விதத்தில் தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசு வெடித்த ஆயிரகணக்கானோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதனை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி சார்பில் காவல்துறை ஆணையர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது

கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது .தமிழகம் முழுக்க பண்டிண்டியை ஒட்டி கடைவீதிகளிலும், முக்கிய பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்று மக்கள் கூடும் இடங்களில் காவல்துறை ஆனது மிகச்சிறந்த பாதுகாப்பையும் முன்னேற்பாடுகளையும் செய்து மக்களுக்கு உதவியிருக்கின்றது இதற்காக தமிழக காவல்துறைக்கு ஹிந்து முன்னணியின் சார்பில் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதேசமயத்தில் இந்த ஆண்டு தமிழகம் முழுக்க 2179 நபர்கள் மீது தீபாவளி பண்டிகை அன்று தடையை மீறி பட்டாசு வைத்ததாக கூறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இதற்கு,உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை காரணம் காட்டி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தீபாவளி பண்டிகை ஆனது பாரம்பரியமாக பட்டாசுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விஷயத்தில் சரியான வழிகாட்டுதலும் விதிமுறைகளும் பொது மக்களை சென்றடையும் முன்பே காவல்துறை இவ்வளவு விரைந்து நடவடிக்கை எடுத்திருப்பது வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.

தமிழகத்தில் பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் இன்னும் பல ஆண்டுகளாக அமல் படுத்தப்படாமல் இருக்கின்ற சூழ்நிலையில், தீபாவளி பண்டிகையன்று மக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதிலே அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது இந்துக்களுடைய பண்டிகைகள் காலத்திலே ஒரு நெருக்கடியை ஏற்படுத்துகின்ற செயலாக இருக்கின்றது.

அதிலும் குறிப்பாக சிறுவர்கள் பட்டாசு வெடித்தால் அவரிடம் இருந்து பறிமுதல், அவர்கள் மீதோ அல்லது அவர்கள் பெற்றோர் மீது வழக்கு என்பது மிகவும் அதிர்ச்சிக்குள்ளான ஒரு செயலாக இருக்கின்றது.

ஏற்கனவே பல நீதிமன்ற தீர்ப்புகள் விதிக்கப்பட்டிருந்தாலும் கூட, உதாரணமாக முல்லைப்பெரியாறு ,காவிரி நீர், மசூதிகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி அகற்றவேண்டும் இதுபோன்ற பல தீர்ப்புகள் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் ஆறுமாத சிறைத்தண்டனை ஆயிரம் ரூபாய் அபராதம் என்று ஹிந்துக்களை மிரட்டுகின்ற விதத்திலே பத்திரிக்கை அறிக்கைகள் வெளியிட்டிருப்பதும் நடவடிக்கைகளில் போர்க்கால வேகம் காட்டுவது ஹிந்து விரோத மனப்பான்மை கொண்ட ஒருசில அதிகாரிகளின் செயலாக இது இருக்கும் என்று இந்து முன்னணி கருதுகின்றது

ஆகவே தங்களுடைய மேலான கவனத்திற்கு இந்த விஷயத்தை நாங்கள் கொண்டு வருகிறோம். தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழகம் முழுக்க தங்களுடைய பண்டிகையின்போது சந்தோசமாக பட்டாசு வெடித்து கொண்டாடிய இந்துக்கள் மீது போடப்பட்டு இருக்கக்கூடிய வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சந்திப்பின் போது மாநில அமைப்பாளர் பக்தன் ஜி மற்றும் மாநில பொறுப்பாளர்கள் இருந்தனர்.