Tag Archives: தேர்வு பயம்

ஹயக்ரீவர் பூஜை- தேர்வெழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பூஜை – இந்து அன்னையர் முன்னணி சாதனை

இந்துமுன்னணி பேரியக்கத்தின் பெண்களின் அணியான இந்து அன்னையர் முன்னணி தமிழகத்தில் மிக சிறப்பான வகையில், ஆன்மீகத்தின் மூலம் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது .

தற்சமயம் தேர்வு காலத்தில் மாணவர்களுக்கு தேர்வு எழுதும் பயம் நீங்க வேண்டும், மனவலிமை ஏற்பட வேண்டும், தன்னம்பிக்கை உருவாக வேண்டும், எதையும் சந்திக்கின்ற ஆற்றல் பெருகவேண்டும் என்பதற்காக ஹயக்ரீவர் பூஜை அனைத்து பள்ளிகளிலும், குறிப்பாக அனைத்து கிராமப்புறங்களில் நடத்தி வருகிறது .

சமீபகாலமாக தேர்வில் தோல்வியுற்றால் விபரீத முடிவை எடுக்கின்ற மாணவர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த ஹயக்ரீவர் பூஜை மாணவர்களுக்கு மிகப் பெரும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தந்து வருகின்றது .

தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் இடங்களுக்கு ( பள்ளியில், கிராமங்களில்) மேல் அன்னையர் முன்னணி பெண்கள் ஹயக்ரீவர் பூஜை நடத்தியுள்ளனர் .

வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகமாகும் என்று இன்று அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்வி என்பது நம்முடைய தர்மத்தில் வழிபாடோடு சேர்ந்தது என்பதை இந்த பூஜைகள் நிரூபிக்கின்றன.

கல்வித்துறையில் சில அதிகாரிகளின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது – இந்துமுன்னணி

29.02.2020

சி.பரமேஸ்வரன்
மாநில பொதுச் செயலாளர்

கல்வித்துறையில் சில அதிகாரிகளின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது..

பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு நம்பிக்கை, மன உறுதி, படிப்பில் ஆர்வம், வெற்றி தோல்வியை ஏற்றுக்கொண்டு முன்னேறும் மனநிலையை ஏற்படுத்த பல்வேறு வகையான பூஜைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர் ஹோமம் மற்றும் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜையில் வைத்து வழிபட்ட காப்புக் கயிறுகள் (ரட்சை) மாணவர்களுக்கு கைகளில் காட்டுவதற்காக வழங்கப்படுவது வழக்கம்.

சில பள்ளிகளில், மாணவர்கள் கட்டியிருந்த (ரட்சை) காப்புக் கயிறை மற்றும் திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து வருவதை கண்டித்து, அவற்றை அகற்றியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு செய்வது மாணவர்களின் தன்னம்பிக்கை, மன உறுதியை குலைத்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு பயத்திலும், தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களில் சிலரும் தற்கொலை செய்துகொள்வதை காண்கிறோம்.

இவற்றிற்குத் தீர்வாகத்தான் இந்த வழிபாட்டு முறை நடத்தப்பெற்று வருகிறது.

இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளில், மாணவர்களிடம் நல்ல மாற்றமும் தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்பட்டுள்ளதை உறுதியாகக் கூற முடியும். ஆன்மிக நம்பிக்கை என்பது அறிவியல் பூர்வமானதும், மனோதத்துவ முறையிலானதும் ஆகும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. செங்கோட்டையன் அவர்கள் மாணவர்களிடம் உள்ள

சமய நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். அதை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

அதுபோல, சமீபத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவரும், சமய சின்னங்களை அகற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை மூலம் எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளார்.

எனவே, மத காழ்ப்புணர்ச்சியோடும், வெறுப்போடும் செயல்பட்டு, மாணவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தாயகப் பணியில்

சி.பரமேஸ்வரன்
மாநில பொதுச் செயலாளர்