காடேஸ்வரா சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்
இந்துமுன்னணி
திருப்பூர்
31.10.19
பத்திரிகை அறிக்கை
திருடனுக்கு விருது வழங்குகிறதா? தமிழக அரசு! – கோவில் நிலங்களை பட்டா போட்டு வழங்கும் அரசின் முடிவுக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்து இருந்தது. அதில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு, அதற்கான பட்டா வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
இந்துமுன்னணி பேரியக்கம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாநில செயற்குழுவில் கண்டன தீர்மானம் இயற்றி அப்போதே அதனை குறிப்பிட்ட அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பியது.
தற்போது அதே அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், மீண்டும் தமிழக அரசு கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா போட்டு தருவதாக வாக்குமூலம்( affidavit) தாக்கல் செய்துள்ளது.
இதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
இது திருடனுக்கு விருது வழங்குவது போல கேவலமான செயல் . ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவித்து அவர்களை அரசே அங்கீகரித்தது போல ஆகிவிடும்.
கோவில்களில் பூஜைகள், திருவிழாக்கள் தடையின்றி நடைபெற நமது முன்னோர்கள் கோவில்களுக்கு நிலங்களை தானமாக தந்து, அதன் வருமானத்தினை கோவில்களுக்கு பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்தனர் .
அந்த கோவில் நிலங்களை, சொத்துக்களை பாதுகாக்க அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்து சமய அறநிலையத்துறை .
கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களை அகற்றி, நிலங்களை மீட்டு, தண்டனை வாங்கித் தருவது தான் சரியான நடவடிக்கை .ஆனால் தற்போது நேர்மாறாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பெரும்பான்மையான ஆக்கிரமிப்பாளர்கள் அரசியல் கட்சியினர் என்பதாலும், அவர்கள் தங்களது பினாமிகளை வைத்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவதால் அரசு அவர்களை திருப்திப்படுத்த முயல்கிறதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது.
மேலும் உள்ளாட்சித் தேர்தலை கணக்கில்கொண்டு அரசியல் நடத்தும் முயற்சியை அரசு மேற்கொள்கிறதோ? என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் கோவில்களுக்குச் சொந்தமான 5.25 லட்சம் ஏக்கர் நிலங்களில் 1லட்சம் ஏக்கர் நிலங்கள் காணாமல் போய்விட்ட நிலையில், அரசின் இந்த நிலைப்பாடு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கோவில்களை அழிக்கக்கூடிய இந்த செயலால் பக்தர்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர் .அரசின் இந்த செயலுக்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர் .
ஆகவே அரசு இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வாக்குமூலத்தை(affidavit) திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
மேலும் இந்த அடாத செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பக்தர்கள், ஆன்மீக அன்பர்களை ஒன்றிணைத்து மாவட்டம்தோறும் வருகின்ற 4 .11. 19 – திங்கட்கிழமை அன்று ஆட்சேபனை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிட இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.
அதனைத் தொடர்ந்தும் அரசாணையை அரசு ரத்து செய்யாத பட்சத்தில் இந்து முன்னணி மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை பக்தர்களுடன் சேர்ந்து முன்னெடுக்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
தெய்வீக பணியில்
காடேஸ்வரா.சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்