இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
16-8-2018
பத்திரிகை அறிக்கை
சிறந்த தேச பக்தரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், வழிகாட்டியுமாக விளங்கிய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் இறைவனடியை அடைந்தார். அவரது சீர்மிக செயலாற்றல், சிந்தனையால் பாரத தேசம் உலகப் புகழ் பெற்றது. வாஜ்பாய் அவர்களின் ஆட்சிகாலம் பாரத தேசத்தின் அடையாளத்தை பெருமைக் கொள்ளத்தக்க வகையில் இருந்தது.
பொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றி, ஏவுகணை, ராக்கெட் சோதனை, பரம் கம்யூட்டர் என பலவகையிலும் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றவர்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைத்த தங்க நாற்கரசாலை திட்டம் மூலம், தரமான சாலை போக்குவரத்தை ஏற்படுத்தினார்.
ஒவ்வொரு சிறு கிராம சாலைகளையும் மேம்படுத்தி, நகரங்களுடன் இணைத்து நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழி கண்டவர். இப்படி எண்ணற்ற சாதனைகளை நடத்திய அவரது ஆட்சி காலம் பாரதத்தின் பொற்காலம் எனலாம்.
கார்கில் போர் வெற்றியின் மூலம் மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் பாரத தேசத்தின் வலிமைமீது அபரா நம்பிக்கையை ஏற்படுத்தியவர்.
பாராளுமன்ற விவாதங்களின் மூலம் ஜனநாயகத்திற்கு வலு சேர்த்தவர். சிறந்த ஜனநாயகவாதியான அவர், அனைத்து அரசியல் கட்சியினரையும், இராணுவ வீரர்களையும், விஞ்ஞானிகளையும், சாதனையாளர்களையும் அரவணைத்துப் போற்றியவர்.
அவரை இழந்து வாடும் அவரது உறவினர்கள், நண்பர்கள், மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர்களுக்கும் இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
வாஜ்பாய் அவர்களின் ஆன்மா நற்கதியடைய, இந்து முன்னணியின் சார்பில் தமிழகத் திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தும், பொது இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)