Monthly Archives: March 2020

கோவில்களை அழிக்கும் தமிழக அரசின் சதித் திட்டம் – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கே கொடுப்பது கோவில்களை அழிக்கும் தமிழக அரசின் சதித் திட்டம் – இந்துமுன்னணி கண்டனம்.

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா செய்து கொடுக்கக் அனுமதிக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் 600 ஏக்கரா நிலங்கள் மட்டுமே கொடுக்கப் போவதாக தமிழக அரசு உயர் நீதி மன்றத்தில் வாதிட்டுள்ளது.

இது கோயில் நிலத்தை அபகரிக்கும் முயற்சி. மேலும் அரசின் இந்த முயற்சி சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவும் வகையில் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

ஏழைகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கவேண்டுமெனில் அரசுப் புறம்போக்கு நிலங்களை வழங்கலாம்.

மாறாக நம் முன்னோர்கள் கோவில் வழிபாடு சிறப்பாக நடக்கவேண்டும் என்பதற்காக தானம் கொடுத்த நிலத்தை அக்கிரமிப்பாளர்களுக்கு கொடுக்கலாமா? கோவில் நிலத்தை அழித்தால் வரும் காலத்தில் கோவில் அழிந்துபோகும்.

ஏற்கனவே பலமுறை இதைப்பற்றி தொடர்ந்து இந்துமுன்னணி அரசுக்கு எடுத்துக் கூறியும், அறிவுறுத்தியும் வந்துள்ளபோதும் பக்தர்களின் மனத்தை வேதனைபடுத்தும் வகையில் அரசு உயர்நீதி மன்றத்தில் இவ்வாறு கூரியுள்ளது மிகவும் வன்மையாக கண்டிக்கத்த தக்கது.

ஆகவே இந்த நிலைப்பாட்டை அரசு கைவிடவேண்டும் எனவும் , அரசாணையை ரத்து செய்யவேண்டும் எனவும் இந்துமுன்னணி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

ஹயக்ரீவர் பூஜை- தேர்வெழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பூஜை – இந்து அன்னையர் முன்னணி சாதனை

இந்துமுன்னணி பேரியக்கத்தின் பெண்களின் அணியான இந்து அன்னையர் முன்னணி தமிழகத்தில் மிக சிறப்பான வகையில், ஆன்மீகத்தின் மூலம் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது .

தற்சமயம் தேர்வு காலத்தில் மாணவர்களுக்கு தேர்வு எழுதும் பயம் நீங்க வேண்டும், மனவலிமை ஏற்பட வேண்டும், தன்னம்பிக்கை உருவாக வேண்டும், எதையும் சந்திக்கின்ற ஆற்றல் பெருகவேண்டும் என்பதற்காக ஹயக்ரீவர் பூஜை அனைத்து பள்ளிகளிலும், குறிப்பாக அனைத்து கிராமப்புறங்களில் நடத்தி வருகிறது .

சமீபகாலமாக தேர்வில் தோல்வியுற்றால் விபரீத முடிவை எடுக்கின்ற மாணவர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த ஹயக்ரீவர் பூஜை மாணவர்களுக்கு மிகப் பெரும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தந்து வருகின்றது .

தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் இடங்களுக்கு ( பள்ளியில், கிராமங்களில்) மேல் அன்னையர் முன்னணி பெண்கள் ஹயக்ரீவர் பூஜை நடத்தியுள்ளனர் .

வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகமாகும் என்று இன்று அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்வி என்பது நம்முடைய தர்மத்தில் வழிபாடோடு சேர்ந்தது என்பதை இந்த பூஜைகள் நிரூபிக்கின்றன.

தினமலர் குடும்பத்தின் தாய் திருமதி. சுப்புலட்சுமி அவர்கள் மறைவிற்கு அஞ்சலி – மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா அறிக்கை

29.02.2020

காடேஸ்வரா.சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

பத்திரிகை அறிக்கை

தினமலர் குடும்பத்தின் தாய் திருமதி. சுப்புலட்சுமி அவர்கள் மறைவிற்கு அஞ்சலி

இந்துமுன்னணி மண்டல பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தமிழகத்தின் முன்னோடி
பத்திரிக்கையான தினமலர் நாளிதழின் பங்குதார் தெய்வத் திரு. ராகவன் அவர்களின் மனைவியும், ஆசிரியர்
ஆர் . ராமசுப்பு , வெளியீட்டாளர் ஆர்ஆர் . கோபால் ஆகியோரின் தாயாருமான திருமதி.சுப்புலட்சுமி அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது .

பத்திரிகைத் துறையில் பெரும் மலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு மாபெரும் நிறுவனத்தின் தாயாக, குடும்பத்தின் தலைவியாக, வழிகாட்டியாக விளங்கியவர் .

பலருக்கும் பல்வித உதவிகளை, நல்லாசிகளை வழங்கிய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது .

அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் , அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் .

மேலும் இந்துமுன்னணி பேரியக்கத்தின் மண்டல பொதுக்குழு கூட்டம் மார்ச் முதல் தேதியில் காரைக்குடி மற்றும் மணப்பாறை ஆகிய பகுதிகளில் நடைபெறும். அதில் மறைந்த திருமதி. சுப்புலட்சுமி அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தாயகப் பணியில்

சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

வெகுண்டெழுந்த கிராம பொதுமக்கள் – இந்து பொதுமக்கள் கூட்டமைப்பு

வெகுண்டெழுந்த கிராம பொதுமக்கள்…

திருப்பூர் அருகே உள்ள மங்கலத்தில் குடியுரிமை எதிர்ப்பு போராட்டம் எனக் கூறிக்கொண்டு தினந்தோறும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தி இந்து கடவுள்களை மிக கேவலமாகவும், இழிவுபடுத்தி பேசியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் நடந்து வருகிறார்கள். மேலும் வெளியூரிலிருந்து வரும் நபர்கள் அப்பகுதி வாழ் மக்களின் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியும் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

அப்பகுதி கிராம மக்கள் – மங்கலம், கணியம்பூண்டி இடுவாய், புத்தூர் வேலாயுதம்பாளையம், வேலம்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென இன்று மாலை நாலு மணிக்கு மலைக்கோவிலில் கூடி மேற்படி சட்ட விரோத அராஜக போக்கை கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மங்கலம் காவல் நிலையத்திற்கு சுமார் 300 பேர் சென்று புகார் மனு கொடுத்துள்ளார்கள்.

மேலும் அக்கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து “இந்து பொதுமக்கள் கூட்டமைப்பு “ என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அதன்மூலம் மங்கலத்தில் நடைபெறும் அனைத்து சட்ட விரோத தேசத்துரோக நடவடிக்கைகளையும் கண்டித்து மக்களைத் திரட்டி போராட உள்ளதாக உள்ளனர்.

இந்து பொதுமக்கள் கூட்டமைப்பு.