Daily Archives: March 7, 2018

பொது மக்கள் மீது வன்முறை,பெட்ரோல் குண்டு வீச்சு..  இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
7-3-2018
பத்திரிகை அறிக்கை
பொது மக்கள் மீது வன்முறை,பெட்ரோல் குண்டு வீச்சு..
இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது..
ஜனநாயகத்தில், கருத்திற்கு எதிர் கருத்து தெரிவிப்பது என்பதைத் தாண்டி வன்முறையை தூண்டி, தமிழகத்தில் பொது அமைதியை கெடுக்கும் தீய சக்திகளின் கை ஓங்கி வருகிறது. இப்படி பேசுகிறவர்கள், மனிதம், மனித உரிமை பற்றியும், ஜனநாயகம், பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து சுதந்திரம் பற்றியும் பேசுவது வேடிக்கையானது!
நேற்று இரவு கோவையில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார்கள். இன்று காலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் அருகில் நடந்து சென்ற வயோதிகர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டவர்களின் பூணூல், குடுமியை அறுத்து, அவர்களை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியிருக்கிறார்கள். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்கள், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்த அளவு பாதுகாக்கப்படுகிறது என்பதற்கு உதாரணங்களாக இருக்கின்றன.
இத்தகைய மனிதாபிமானமற்ற கொடூர செயல்கள், தமிழகத்தை ஐம்பது ஆண்டுகள் பின்னுக்கு கொண்டு செல்கிறது.
இத்தகைய நடவடிக்கைகளை, எந்த அரசியல் கட்சியும் கண்டிக்கவில்லை. அப்படியானால், ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தமிழகத்தில் வன்முறையைக் கட்டவழித்துவிட திட்டமாக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அதற்கான ஒத்திகையாகக்கூட இது நடந்திருக்கலாம். காரணம், தமிழக ஆட்சியின் கைப்பிடி தளர்ந்துள்ளதை பயன்படுத்திக்கொள்ள எல்லோரும் முயலுகிறார்கள். அதில் ஒரு பகுதிதான், பிரிவினைவாத, பயங்கரவாதத்தை அரவணைக்கும் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் நடவடிக்கைகளாக இருக்கின்றன.
எனவே, இதுபோன்ற சமூக விரோத செயல்களை செய்பவர்களை, காவல்துறை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாவி மக்கள் மீது நடந்த தாக்குதலுக்கும், பெட்ரோல் பாம் போன்ற ஆயுத கலாச்சாரத்திற்கும் முடிவு கட்ட வேண்டும் என தமிழக அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)