Daily Archives: December 14, 2017

காவல்துறை அதிகாரி திரு. பெரிய பாண்டியன் அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலி – வீரத்துறவி

பத்திரிகை அறிக்கை
குற்றவாளியை பிடிக்க சென்று பலியான காவல்துறை அதிகாரி
திரு. பெரிய பாண்டியன் அவர்களுக்கு
இதயபூர்வமான அஞ்சலி..
கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்து தப்பிய குற்றவாளிகளைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திரு. பெரிய பாண்டியன் அவர்கள், குற்றவாளிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை அளிக்கிறது. அவருடன் சென்ற கொளத்தூர் ஆய்வாளர் திரு. முனிசேகர் அவர்கள் காயமடைந்துள்ளார்.
எந்த மாநிலம் ஆனாலும், குற்றவாளிகளை பாதுகாப்போர் தேச விரோதிகள் தான். குற்றவாளிகளைப் பிடித்து விசாரணை நடத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பதும், திருட்டுப்பொருட்களை மீட்பதும் காவல்துறை அதிகாரிகள் கடமை. காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
இதனை ஊடகங்களும், நடுநிலை அரசியல் கட்சிகளும் கண்டிக்க முன் வரவேண்டும். இதுவே, ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் ஒரு குற்றவாளியை தனது தற்காப்பிற்காக சுட்டதாகக் கூறியபோது, மனிதபிமானம் பேசியவர்களே, காவல்துறை ஆய்வாளர் உயிரும் மனித உயிர்தானே? ஏன் மவுனம் காக்க வேண்டும். தமிழகத்திலும் குற்றவாளிகள் காவல்துறை அதிகாரிகளை தாக்குவதும், கொலை மிரட்டல் விடுப்பதும் தொடர்ந்துதான் வருகிறது. புழல் சிறை முதல் ஆம்பூர் முதலான பல சம்பவங்களில் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் யாரும் இதுவரை வாய் திறந்து கண்டிக்க முன் வரவில்லை என்பது வருத்தமான விஷயம். குற்றவாளியை பாதுகாக்கும் ஒரு வன்முறை கூட்டம், சிறையில் இருக்கும் பயங்கரவாதிகள் காவல்துறை அதிகாரிகளை கண்மூடித்தனமாக தாக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதைவிட கொடுமை, இதனை காவல்துறை உயர் அதிகாரிகளோ, மாநில அரசோ கவலையோடு அணுகி, தீர்வு காண முற்படுவதில்லை என்பதுதான்.
சட்டம் அதன் கடமையை செய்ய வேண்டும் என்பது சரி. அதே சமயம், குற்றவாளிகளுக்கு மனித உரிமை பேசப்போய் தான் குற்றவாளிகள் தைரியமாக இதுபோன்ற பயங்கரவாத செயல்களை செய்யவும் துணிகிறார்கள்.
குற்றவாளிகளையும், அவர்களுக்கு துணை நிற்போரையும் ஈவுரக்கமின்றி உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் நடக்காது.
கடமையை செய்ய சென்று பலியான திரு. பெரிய பாண்டியன் அவர்கள் ஆன்மா நற்கதி அடைய இந்து முன்னணி எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கொளத்தூர் காவல்துறை ஆய்வாளர் திரு. முனிசேகர் அவர்கள் விரைந்து குணமடைய தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இரு காவல்துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உரிய இழப்பிடு வழங்கவும், இது போல் இனிமேல் நடவாமல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய உதவிகளை காவல்துறை அதிகாரிகளுக்கு எல்லா மாநில அரசுகளும் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)