செயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை.

தமிழ் இலக்கியங்களை கொச்சைப்படுத்த சதி செய்யும் திருச்சி செயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக்குழ ரத்து செய்ய வேண்டும்..

தமிழ் தமிழ் என்று அரசியல் நடத்தும் அமைப்புகள், கட்சிகள்

இதனை பகிரங்கமாக கண்டிக்க முன் வரவேண்டும்..
திருச்சி செயிண்ட் சோசப் தன்னாட்சி கல்லூரி பன்னாட்டு கருத்தரங்கம் பற்றிய குறிப்பைப் பார்த்து அதிர்ந்தேன். தமிழ் இலக்கியங்கள் பெண் வன்கொடுமை, பெண் அடிமைத்தனம் என பறைசாற்ற கிறிஸ்தவ மிஷனரிகள் முயற்சி இது.
தமிழ் மிகப்பழமையான மொழி, இலக்கியம், இலக்கணம் என அனைத்து வகையிலும் சிறந்த மொழி. கிறிஸ்து பிறந்ததாகக் கூறப்படுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முந்தையது தமிழ் மொழி. இதன் தொன்மையை திருவள்ளுவர் ஆண்டு என சிறுமைப்படுத்தின திராவிட இயக்கங்கள். அதன் தொடர்ச்சியாக, பல்வேறு வகையில் மதமாற்றத்திற்கு துணைபோகவே, தமிழ் இலக்கியங்களைக் கீழ்த்தரமாக விமர்சனமும் செய்தனர்.
இருந்தும், தமிழ் மொழியின் சிறப்பு, இலக்கிய பெருமையை இன்றும் உலகம் போற்றி வருகிறது. ஔவையார் முதல் பல பெண் புலவர்கள், இலக்கியங்கள் படைத்து, தமிழுக்குச் சிறப்பு சேர்த்துள்ளனர்.
இதனையெல்லாம் வஞ்சகமாக மக்கள் மனங்களில் இருந்து நீக்கிட, சைவத்தை, வைணவத்தை கிறிஸ்தவ மதத்தோடு சம்பந்தப்படுத்திட முயற்சி எடுத்தனர். திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூல் என மக்களை மயக்க போலி ஓலைச்சுவடிகள் தயாரிக்க 1980களில் பல லட்சம் கொடுத்த விவகாரம் வெளிவந்ததை இந்த தலைமுறையினர் அறிந்திருக்கமாட்டார்கள்.
தொல்காப்பியம் முதல் அகநானாறு, புறனாநூறு என பல இலக்கியங்களை கொச்சைப்படுத்தி நச்சு கருத்தை பரப்ப நடைபெற்ற முயற்சிக்கு அதிமுக கட்சி பிரமுகரும், தமிழக அமைச்சர் உயர்திரு. மாஃபா. பாண்டியராஜன் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, கல்லூரியின் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உள்நுழையும் என்றும், இதுபோன்ற கொச்சைப்படுத்தும் கருத்துக்களுடன் கூடிய கருத்தரகங்கள் இனிமேலும் நடக்காமல் பார்த்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். உடனடியாக இந்தப் பிரச்னையின் தாக்கம் அறிந்து பதிலடி கொடுத்தும், நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ள தமிழக அமைச்சர், மற்றும் அரசை இந்து முன்னணி மனதார பாராட்டுகிறது.
கால்டுவேல், பெஸ்கி (வீரமாமுனிவர்), ஜி.யு.போப் ஆகிய இவர்கள் கிறிஸ்துவத்தை பரப்ப, தமிழ் வேடம்போட்டு ஏமாற்றினர். இதில் ஏமாந்த தமிழ் வியாபாரிகள், மக்களையும் ஏமாற்றி, ஆங்கில கான்வென்ட் கலாச்சாரை கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தி, தமிழ் பண்பாட்டை சீர்குலைக்க சிகப்பு கம்பளம் விரித்தனர். இன்று தமிழ் வழி கல்வி என்பது ஏட்டளவில் கூட இல்லை. இதற்கெல்லாம் காரணம் ஆங்கில கான்வெண்ட் நடத்தும் கிறிஸ்தவ மிஷனரிகளின் கெட்ட நடவடிக்கைதான்.
இதன் தொடர்ச்சியாகவே இந்தப் பன்னாட்டு கருத்தரங்கை, இந்து முன்னணி பார்க்கிறது. தமிழ், தமிழ் என்று பேசி அரசியல் செய்யும் கட்சிகள், அமைப்புகள் ஒவ்வொன்றும், இந்த சதி செயலை கண்டிக்க முன் வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இது குறித்து கண்டிக்காதவர்கள், தமிழை, தமிழின் பெருமையை கெடுக்கத் துணைபோகிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில், டிசம்பர் 4, 5 தேதிகளில் நடத்துவதாக இருந்த கருத்தரங்கம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சமயம் வேறு, மொழி வேறு, இலக்கியம் வேறு என்பது பாரதத்தில் கிடையாது. ஒவ்வொரு மொழியும், இலக்கியமும் இந்து சமயத்தோடு பின்னி பிணைந்தது. இதனை வேறுபடுத்தவும், இலக்கியங்களை கீழ்மைப்படுத்தவும், அதன் மூலம் மதத்துவேஷத்தை ஏற்படுத்தவும் திருச்சி செயிண்ட் சோசப் தன்னாட்சி கல்லூரி முனைந்துள்ளது. இதற்காக, அக்கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மேதகு கவர்னர், மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவிற்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அனுப்பியுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *