ஒன்றியத்துக்கு 50 பேர்- கொரோனா பேரிடர் சேவைப் பணிகளுக்கு இந்துமுன்னணி தயார் மாநிலத் தலைவர் காடேஸ்வரா

கொரோனா பேரிடர் சேவைப் பணிகளுக்கு இந்துமுன்னணி தயார்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய அரசும், தமிழக அரசும் மிகச் சிறப்பாக போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது .

பாரதப் பிரதமர், தமிழக முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்துமுன்னணி மனதார பாராட்டுகிறது.

144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள இந்த முக்கிய காலகட்டத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க பலதரப்பட்ட முயற்சிகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் மக்கள் பால், காய்கறி , மளிகை, மருந்துகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருகிறார்கள். அதுவே பல சமயங்களில் பெரிய கூட்டமாக மாறுகிறது.

எனவே இதைத் தடுப்பது மிக மிக அவசியமாகிறது.
தனிமைப் படுத்திக் கொள்ளுதல் என்ற உத்தரவை கடை பிடிக்க வேண்டியது மிக அவசியமாக உள்ளதால், நாமாக எதையாவது செய்து அது மேலும் சிக்கலை உண்டாக்கக் கூடாது என்பதை இந்துமுன்னணி இயக்கம் கவனத்தில் கொண்டுள்ளது.

அதே சமயம் அரசே இத்தகைய சூழலில் அனைத்தையும் செய்துவிட முடியாது. ஆகவே மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையிலும், இதற்கான அரசின் திட்டங்களை செயல்படுத்தும் வகையிலும் , மாநிலம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் தன்னார்வலர்களைக் கொண்டு இத்தகைய சேவைப் பணிகளை அரசின் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செய்திட இந்துமுன்னணி பேரியக்கம் தயாராக உள்ளது.

தேசத்தின் நலன் காக்க, மக்கள் நலன் காக்க அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து சேவைகள் புரிய அரசின் அனுமதி கோரி மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது .
எங்களது சேவையை அரசு பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என ஊடகங்களின் வாயிலாக இந்துமுன்னணி கோரிக்கை விடுக்கிறது.

தமிழக மக்கள் பாரம்பரிய நடைமுறைகளை கடைபிடிப்பதில் எப்போதும் முன்னோடியானவர்கள். இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் அந்த நடைமுறைகள் மிகக் கட்டாயமாக கடைபிடிப்பது நல்லது.

சாணம் , மஞ்சள் நீர், வேப்பிலை கொண்டு வாசல் தெளித்து கோலம் போட்டு அதில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வேப்ப எண்ணெய் தீபத்தை வீட்டு வாசலிலும் , வீட்டினுள்ளும் ஏற்றி நமது வீட்டை , சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இவை மிகுந்த பலனைத் தரும் என்று ஆன்மீகப் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் ஏப்ரல் 2-ம் தேதி ஸ்ரீ ராமநவமி வருகிறது. ஆகவே ஸ்ரீ ராமநவமி துவங்கி தினந்தோறும் வீடுகளில் இவைகளைக் கடைபிடிப்பதோடு, அன்றிலிருந்து தினசரி மாலை ஆறு மணிக்கு குடும்பத்தோடு சேர்ந்து அமர்ந்து 21 தடவை ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெயராமா மந்திரத்தை சொல்லவேண்டும் .
லட்சக்கணக்கானோர் இந்த நாம ஜெபம் சொல்லும் போது, கொரோனாவை எதிர்த்து போராடும் மக்களுக்கும் , அரசுக்கும் , சேவைப் பணியாற்றிடும் அனைவருக்கும் மிகப் பெரிய ஆன்ம பலத்தை, நம்பிக்கையை தரும். ராம நாமம் ஜென்ம ரக்ஷக மந்திரம், ஆகவே மக்கள் அனைவரும் இந்த ராம நாம ஜெபத்தை செய்திட வேண்டும் எனவும் ஊடகங்களின் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

தாயகப் பணியில்காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *